தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

களவு போகும் கானகச் செல்வம் - ராம்பாலா

செஞ்சந்தன மரம்…உலகமயமாக்கலின் 'உபயத்தால்' நம் நாட்டவர்கள் ஒருவரை ஒருவர் மாய்த்துகொள்ள தூண்டும் ஒரு கொள்ளையின் கதை!

செஞ்சந்தன மரத்தை கடத்திகொண்டிருந்த கடத்தல்காரர்கள் சிலர், ஆந்திர மாநிலத்தின் வன அலுவலர்கள் இருவரை கொலை செய்துள்ளதாகவும், மற்றொருவரை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநில முதல்வர், இந்த கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டு தனிப்படை அமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களிலும், திருப்பதி கோயில் அமைந்துள்ள (pterocarpus santlinus) சேஷாசலம் மலை தொடர்ச்சியிலும், மற்றும் இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், சீனாவின் சில இடங்களிலும் மட்டுமே சந்தன வேங்கை அல்லது செஞ்சந்தனம் என்று தமிழகத்தில் அழைக்கப்படும், red sanders என்கின்ற மரம் வளர்ந்து வந்தது.

இப்போது பல இடங்களிலும் அழிந்துவிட்ட படியால், இந்த மரம் ஆந்திரமாநிலத்தில் திருப்பதியை சுற்றியுள்ள மலை பிரதேசங்களில் மட்டுமே பெரும்பாலும் உள்ளது. ரக்த சந்தனம் என்று தெலுங்கிலும், மலையாளத்திலும் அழைக்கப்படும் இந்த மரம், ஆயுர்வேதத்தில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. முகத்தழகு, மற்றும் முகப்பரு அகற்றுவதற்கும், உடலைக் குளுமையாக வைத்திருக்கவும், இந்த மரத்தின் பட்டை மற்றும் கிளை பலவடிவங்களில் பயன்படுவதாக சில கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக இந்த செஞ்சந்தன கட்டையை கொண்டு பலவிதமான கைவினைப் பொருட்களைத் தயாரித்து வந்தவர்கள் சீனர்கள். அவர்கள் நாட்டில் 200 வருடங்களுக்கு மேலாக, இந்த மரத்தினால் செய்யப்பட்ட மேஜை, நாற்காலி, பெட்டி போன்ற பொருட்களை அரசர்கள் குடும்பம் மட்டுமே உபயோகித்து வந்தது. சீன மொழியில், “சிடான்” என்று அழைக்கப்பட்டுவரும் இந்த மரத்தை அரச மரம் என்று கூட அவர்கள் கூறி இந்தமரத்தால் ஆன பொருட்களை, மிகப்பெரிய அளவில் மதித்து வந்தார்கள். இன்றும் கூட சீனாவில் சிடான் மரத்தால் ஆன பொருட்கள், 300 முதல் 3000 டாலர்கள் (ரூ. 18,000 முதல் 1,80,000 ) வரை விற்கப்படுகின்றன.

மற்ற இடங்களில் மறைந்து விட்ட இந்த மரத்தைத் தற்போது, தேடித் தேடி சீனர்கள் கடத்தி கொண்டுள்ளார்கள். இப்போது இந்த மரம் ஆந்திர தமிழக எல்லையில் உள்ள திருப்ப‌தி மலைத்தொடர்களில் உள்ள கடப்பா மற்றும் சித்தூர் சிறு நகரங்களை ஒட்டி உள்ள வனப்பகுதியில் மிக அதிகமாக உள்ளது (உலகத்தில் வேறு எங்கும் இந்த மரம் இல்லை என்றே கூட சில ஆவணங்கள் தெரிவிக்கின்றன). இங்குதான் இந்த கடத்தல் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்தவண்ணம் உள்ளத்து. ஏறத்தாழ 8 அடி உயரம் வரை முழுமையாக வளரக்கூடிய இந்த மரம், மிகவும் அடர்த்தியான ஒரு மரமாக கருதப்படுகின்றது, நீரில் மூழ்கக்கூடிய இந்த மரம், மிகவும் எளிதில் வளரக்கூடியதில்லை, முழு வளர்ச்சிக்கு, இந்த மரம் 300 வருடங்கள் தாக்கு பிடிக்கவேண்டும். இதனாலேயே, மருத்துவ குணம் கொண்ட இந்த மரம் நமது நாட்டின் 'பாதுகாக்கவேண்டிய மூலிகை' என்கிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

சீன தேசத்தார் ஏன் இந்த அளவிற்கு இந்த செஞ்சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்? திருப்பதியில் வனப்பகுதியில் கடத்தப்பட இருந்த, மீட்கப்பட்ட, சிவப்பு சந்தன மரத்திற்கு 1000 கிலோவிற்கு 50 லட்சம் ருபாய் கொடுத்து சீன வியாபாரி ஒருவர் வாங்கிக்கொள்ள தயாராய் இருப்பதாகவும், இதற்காக அவர் தங்களை அணுகியதாகவும், வனத்துறை அதிகாரிகளே தெரிவித்துள்ளனர். சீன சந்தையில், 1000 கிலோவிற்கு 2 கோடி வரை விலை கொடுத்து வாங்க மக்கள் தயாராய் இருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கின்றது.

இதன் உண்மை நோக்கம் வெறும் அழகு பொருட்களோ அல்லது மருந்துக்கோ அல்ல, ஆனால், இதை கொண்டு சீன அரசாங்கம், வேறு ஏதோ தயாரிக்கின்றதாக யூகித்து நமது வனத்துறை அதிகாரி ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். உண்மையில் இது அணு உலை மற்றும் அணுசக்தித் துறையில் எந்த விதமான உபயோகம் இருந்தாலும், இந்தக் கடத்தலை, 'தேசிய பாதுகாப்பு' என்ற பெயரில் நாம் பாதுகாக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக, இந்தியாவின் பல மாநிலங்களிலும் சீன நாட்டவர்கள் சிறு சிறு மர‌க்கடைச‌லாகவும், பெரிய அளவிலும் கூட, இந்த மரத்தை விமானம் மூலம் கடத்தி கொண்டு செல்ல முயற்சித்த போது, பிடிபட்டுள்ளனர்.

ஜூன் மாதம், மும்பையில் 370 கிலோ செஞ்சந்தன மரக்கட்டையை சில சீன பிரயாணிகள் கடத்த முயற்சித்த போது, விமான நிலையத்தில் பிடிபட்டனர்.

ஜூலை மாதம், ஹைதராபாதில் 4000 கிலோ, விமான நிலையத்தின் அருகில் இருந்த ஒரு கிடங்கில் இருந்து கைப்பற்றப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே மாதத்தில், டில்லியில் சீன நாட்டவர் சிலர், 700 கிலோ, செஞ்சந்தன கட்டைகளைத் தங்கள் பைகளில் மறைத்து எடுத்து செல்ல முயற்சித்த போது, விமான நிலையத்தில் கைதாகினர்.

செப்டெம்பர் மாதம், கேரளாவில் 1450 கிலோ சிவப்பு சந்தன கட்டைகள் பறிமுதலாயின, இவை குஜராத்திலிருந்து முண்ட்ரா துறைமுகம் வழியாக சீனாவிற்கு அனுப்புவதற்காக கிடங்கியில் வைக்கப்பட்டிருந்தன.

அக்டோபர் மாதம், சித்தூரில் 15 லட்சம் பெறுமானமுள்ள கட்டைகள் பரிமுதலாகியதாக செய்திகள் வந்தன.

நவம்பர் மாதம், 3 சீனர்கள் கொச்சி விமான நிலையத்தின் வாயிலாக 80 கிலோ செஞ்சந்தன‌ கட்டைகளையும், சென்னையில் 2 சீனர்கள் 27 கிலோ செஞ்சந்தன‌ கட்டைகளையும் கடத்த முயற்சித்தனர், அல்லது முயச்சியில் பிடிபட்டனர். பிடிபடாமல் எவ்வளவு பேர் தப்பித்துச் சென்றுள்ளார்கள் என்று நாம் வேறு கணக்கு இட வேண்டியுள்ளது.

டிசம்பர் (சென்ற‌ மாதம்), மிக அதிக அளவில், டில்லி விமான நிலையத்தில் ஒரே சமயத்தில் 7000 கிலோ சிவப்பு சந்தன கட்டைகள் கடத்த முயற்சித்தபோது, பிடிபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியில் அக்டோபர் மாதத்தில், இதே கிடந்குள்ள பகுதியில், மேலும் 6700 கிலோ செஞ்சந்தன‌ மரம் பிடிபட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

கடத்தல்கள் பெரிய அளவில் நடந்தாலும், ஏனோ, கைதாகும் நபர்கள் வெறும் தரகர்களாகவும், கூலிகளாகவும் இருக்கின்றனர். இதுவரை, ஒரு முறை மட்டுமே ஒரு பெரிய வியாபாரி பிடிபட்டதாக செய்திகள் வந்தது. இப்போது கூட, இரண்டு அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட பிறகும், ஆந்திர முதல்வர், ஒரு குழுவை நியமிப்பதாகவும், அதிக ஆயுதங்கள் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார், ஆனால், தேவைப்படுவது ஒரு தீவிர ஆய்வு.

தமிழக எல்லை பகுதியில் இந்த மிகப்பெரிய கடத்தல் நடைபெறுவது நாம் அறிய வேண்டிய ஒரு விஷயமாக, அழிந்து வரும் காடு மற்றும் மூலிகை மரங்களின் தொகையை கவலையோடு நோக்கவேண்டும் என்பது ஒரு புறம் இருக்க, சீனர்கள் இவ்வளவு பகிரங்கமாக இந்த கடத்தலை செய்வதன் காரணத்தை ஆராயவேண்டிய மற்றொரு முக்கிய பொறுப்பும் நமது அரசாங்கத்திற்கு உள்ளது.

இதனோடு, தமிழக அரசாங்கம் மற்றொரு சமூக பிரச்சினையாகவும் இந்த தொடர்ந்து வரும் கடத்தலை நோக்க வேண்டி உள்ளது - இந்த கடத்தலின் மிக அபயாகரமான வேலையாக உள்ள, மரம் வெட்டுதலில் பெரும்பாலும், தமிழகத்தின் பழங்குடியினர் வசித்து வரும், கல்வராயன் மலை மற்றும் ஜவ்வாது மலை சேர்ந்த மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிருந்து பலமுறை, கடத்தல்காரர்களால், வாகனங்களில் அழைத்து செல்லப்படும், பழங்குடி மக்கள், காடுகளில் 8 முதல் 10 நாட்கள் தங்கியிருந்து, மரத்தை வெட்டி, அதனை கொண்டுவந்து சில ஊர்களில் சேர்த்தால், அவர்களுக்கு, ரொக்கமாக, ஒரு கிலோவிற்கு இவ்வளவு என்கின்ற கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்படும்.

தங்கள் வாழ்வாதாரம் ஒருபுறம் உலகமயமாக்கலால் அழிக்கப்பட்டு வரும் வேளையில், இந்த பழங்குடியினர் வேறு வேலைகள் தேடி நகரங்களுக்கு குடிபெயர்வதை யாரும் ஆச்சரியமாக பார்க்க வாய்ப்பில்லை. ஆனால், இந்த பழங்குடியினர், தாங்கள் மதிக்கும் ஒரு மரத்தை, தாற்காலிக பண வரவிற்காக‌, மொத்தக் காட்டையும் அழிக்க முற்பட்டிருப்பதை பார்க்கும்போது, அவர்களை எந்த அளவிற்கு நாம் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளி விட்டோம் என்று உணர முடிகிறது. ஒவ்வொரு முறை இவர்கள் காட்டிற்கு செல்லும்போதும், 200 பேர் வரை திரண்டு செல்கின்றனர். இங்குள்ள உள்ளூர் கடவுள்களளின் கோயில்கள் பல ஊர்களில் சமீபமாக புதிய வர்ணங்கள் பூசியும், செப்பனிடப்பட்டும் வருகின்றன!

இப்போது இந்த பழங்குடி “கூலி” மக்கள், வனத்துறைக் காவலர்களைத் தாக்கவும், கொல்லவும் துணிந்திருப்பது மற்றுமொரு சமூக சீர்கேட்டைச் சித்தரிக்கின்றது. இவர்கள் வனத்துறை அதிகாரிகளைத் தங்கள் எதிரிகளாகப் பார்க்கின்றார்கள், தாங்கள் 20000 ரூபாய்க்காகக் கடத்திவரும் 100 கிலோ கட்டை எங்கு போகின்றது, யாருக்கு இதனால் என்ன பயன் என்று இவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இந்த கட்டையின் உலக சந்தை விலை குறித்தும் இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், இவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து, இந்தக் கடத்தல் வேலையில், பலமுறை 10 நாட்கள் வரை நடந்து, சோறு தண்ணி கூட இல்லாமல் கஷ்டப்பட்டு “சம்பாதி”ப்பதாக நினைக்கின்றார்கள்.

சில இடங்களில் வனத்துறை அதிகாரிகளே இவர்களுக்கு உடந்தையாகவும், முக்கியமான கடத்தல் புள்ளிகளாகவும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அத்தகைய தருணத்தில், இந்த பழங்குடியினரின் பரிதாபம் இன்னமும் மோசம், இவர்கள் கஷ்டப்பட்டு காட்டை அழித்துவிட்டு காசும் கிடைக்காமல், உதைவாங்கி, சிலபேர் கை கால் உடைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து வெளியே சொல்ல முடியாமல் அமைதியாக மீண்டும் வாழக்கை துவங்கவேண்டிய நிர்பந்தம்.

ஆனால், பெரும்பாலும், இவர்கள் தப்பிவந்து, ஒரு பைக் வாங்குவதற்காகவோ அல்லது வீடு கட்டுவதற்காகவோ இந்தக் காசைப் பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள், இல்லையேல், குடித்து அதையும் வீணாக்கிவிட்டு மீண்டும் வேறெங்கேனும் மொத்தமாக இது போன்ற திருட்டு வேலை கிடைக்குமா என்று யோசிக்கத் துவங்குவார்கள்.

  • இவர்களை, வண்டி வைத்து காட்டிற்கு இட்டு செல்பவர்கள் யார்?
  • இவர்களால் காட்டிலிருந்து கொண்டுவரப்படும் கட்டைகள் எவ்வாறு அங்கிருந்து வெளியே வருகின்றது?
  • இத்தகைய பெரிய அளவில் கூலி ஆட்களை பகிரங்கமாக நூற்றுக் கணக்கில் எவ்வாறு இவர்களால் ஒரு திருட்டு வேலைக்காக வேலைக்கு அமர்த்த இயல்கிறது?
  • வன அதிகாரிகளின் எல்லைக் காவலை கடந்து எவ்வாறு இந்த கட்டைகள் நகரங்களுக்கு வருகின்றன?
  • இவற்றை சீன தேசத்தவர்கள் நகரங்களில் எங்கு சென்று வாங்குகின்றனர் (அ) அவர்களுக்கு கொடுக்கப்படுகின்றது?
  • இதில் யாருக்கெல்லாம் பங்கு உள்ளது?
  • இந்த கிடங்குகளை, கட்டைகள் வைக்கக் கொடுப்பவர்கள் யார்?அவர்கள், இவ்வளவு பெரிய அளவில் சீனாவிற்கு இந்தக் கட்டையை கடத்தக் காரணம் என்ன?
  • இதுவரை சீன தேசத்து அதிகாரிகளிடம் இதை குறித்து, இந்தியா எந்த விதத்திலேயாவது துப்பறிய முயற்சித்துள்ளதா?
  • உலக சந்தையில் இவ்வளவு விலை கிடைக்குமானால்,ஏன் இந்த சந்தனக்கட்டை, அரசாங்கமே, விற்பனை செய்ய கூடாது?

இத்தகைய பல கேள்விகள் நிச்சயமாக எழுப்பபடவேண்டும். ஆனால், இவ்வளவு நடத்தப்பட்டும் ஒரு கொள்ளையை, ஏனோ, மத்திய மாநில அரசுகள் உன்னிப்பாக கவனித்து, தீவிரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே தோன்றுகின்றது.

References:

01. http://www.ndtv.com/article/south/kiran-reddy-orders-probe-into-murder-of-forest-officials-in-tirupati-459051
02. http://www.ptinews.com/news/4236794_Two-forest-officials-killed-by-red-sander-smugglers.html
03. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/redsand-smugglers-kill-two-forest-officials-near-tirupati/article5462787.ece
04. http://uae.makeupandbeauty.com/benefits-red-sandalwood-skin/
05. http://www.zitantique.com/about.html
06. http://www.ejfrankel.com/exhibtext.asp?exhibID=52
07. http://www.ebay.com/bhp/zitan
08. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/china-using-red-sanders-for-atomic-energy/article3720336.ece
09. http://www.business-standard.com/article/pti-stories/red-sanders-seized-from-3-chinese-nationals-113112300684_1.html
10. http://news.xinhuanet.com/english/china/2013-11/18/c_132898346.htm
11. http://articles.timesofindia.indiatimes.com/2013-12-10/delhi/45032876_1_smuggling-customs-wood

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org