தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம் - தமிழில் அமரந்தா

பந்தயக் குதிரைகளும் வெள்ளை யானைகளும் - தமிழில் அமரந்தா

[ வெகுமக்களுக்கான தன்னாட்சி ” என்ற தொகுப்பில் இருந்து… ]

ஒரு காலத்தில் இங்கிலாந்தில் குதிரைகள்தான் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கின. அந்நாட்களில் குதிரைகளை மேன்மையாக உருவாக்குவதில் மக்களுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. 'மன்னர்களின் விளையாட்டு' என்று கருதப்பட்ட குதிரைப் பந்தயத்திற்கும் மக்கள் நல்வாழ்விற்கும் நேரடித் தொடர்பிருந்தது. இப்போதோ குதிரைப் பந்தயம் என்பது சூதாடிகளுக்கும் சோம்பேறிகளுக்குமான விளையாட்டாகி விட்டது. நம் நாட்டு மகாராஜா ஒருவர் கொள்ளை, கொள்ளையாக இங்கிலாந்தில் இருக்கும் பந்தயக் குதிரைகளுக்காகச் செலவிடுகிறார் என்று செய்தித் தாள்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற நியாயமற்ற ஆடம்பரச் செலவுகளைத் தடுத்து நிறுத்த வழியே இல்லையா? திப்பு சுல்தான் போன்ற கடமை மறவாத நம் நாட்டின் மன்னர்கள், கால்நடை வளர்ப்பைத் தம் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர். இன்றளவும் மைசூர்க் கால்நடைகளின் மேன்மையான நிலைக்குத் திப்பு சுல்தானின் வள்ளல்தன்மையே காரணம். மோர்வியின் இன்றைய மகாராஜாவிற்கும் அவரது மாட்டுப் பண்ணையின்மேல் அபாரமான ஈடுபாடு உள்ளது.

அதிகாரம் இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் வசம் உள்ளதால், குதிரைப் பந்தயம் சட்டத்திற்குப் புறம்பானது என்று தடை செய்யப் படும் என்று எதிர்பார்ப்பது தவறா? அதிகமான பொருட்செலவில் பராமரிக்கப்ப்ட்டு வரும் பந்தய மைதானங்களை உழுது, மக்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களை விளைவிக்கப் பயன்படுத்துவார்களா? கால்நடை வளர்ப்பிற்குரிய கவனம் அளிக்கப் படுமா? உணவு, உடை, வீட்டு வசதி, கல்வி, மருத்துவ வசதி ப்பொன்ற பிரச்சினைகளுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் அரசுகள் எப்படித் தீர்வு காணப் போகின்றன என்றறிய‌ மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.புதிய அமைச்சர்கள் தீர்வுக்கான சூட்சுமக் கயிறுகளை இயக்கக் கற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தன்னல‌வாதிகள் மக்கள் நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய வெள்ளை யானைகளை முன்னிறுத்தி அமைச்சர்களின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

பீகாரின் சிந்திரி மாவட்டத்தில், பத்தரைக் கோடி ரூபாய் செலவில் உரத் தொழிற்சாலைகளை நிறுவ வெளி நாட்டிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் இறக்குமதி செய்யப் படுகின்றன என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஒரு சில பிராந்திய அரசுகளின் அருளால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டிராக்டர்களும் இறக்குமதி ஆக‌ப்போகின்றன. ஜவுளி ஆலைகள், வனஸ்பதித் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள் ஆகியவை மாகாண அர‌சுகளின் ஆதரவில் காளான்களைப் போல அங்கங்கே முளைத்து வருகின்றன. மேற்சொன்ன ஆலைகளுக்கு, 'இதற்கு முன்பிருந்த இடைக்கால அரசே உரிமம் அளிக்க ஒப்புதல் அளித்திருந்தது' என்று சாக்குச் சொல்வது முறையல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இந்த ஆலைகள் தேவைதானா என்று நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு ஏதேனும் முயற்சி செய்திருக்கிறார்களா? அதை விட்டுவிட்டு இந்த ஆலைகளின் திறப்பு விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் எல்லாம் காற்று வீசும் திசைக்குத் திரும்பும் காற்றாடிகளைப் போல் அல்லவா இருக்கிறார்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் தங்கள் கொள்கைகளை வெளிப்படையாக மக்கள் முன்னம் ஏன் இன்னமும் வைக்கவில்லை ? அப்பொழுதுதானே இதைவிட மோசமான எவற்றையெல்லாம் நாம் எதிர்நோக்க வேண்டி வரும் என்று நமக்குப் புலப்படும்?

எந்த சமூகக் கொள்கையை நடைமுறைப் படுத்துகிறோம் என்ற தெளிவே அமைச்சர்களுக்கு இல்லையென்றால், அவர்கள் தங்கள் பதவியை விட்டு விலகுவதுதான் அவர்களுக்கும் நல்லது; அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நல்லது. வேறு வேலையில்லாத போது பொழுதுபோக்கிற்காக கிராமப்புற மறுகட்டமைப்புப் பற்றிப் பேசுவதும் , மற்ற நேரங்களில் சிறிதளவு சொந்த லாபத்திற்காகச் சுரண்டல்வாதிகளுடன் கமுக்கமாய்க் கைகோர்த்துக் கிராமப்புறங்களை அழிக்கவும் தயங்காத இவர்களால் எந்தப் பயனுமில்லை!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org