தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மண் பயனுற வேண்டும் - உழவன் பாலா


பல மாத இடைவெளிக்குப் பின், இவ்விதழில் மண்வீடு கட்டும் தொழில்நுட்பங்களை மீண்டும் ஆராய்வோம். இது வரை நாம் பார்த்ததைச் சுருக்கமாய் நினைவு கொள்வோம்:

மண்ணால் வீடு கட்டும் ஐந்து விதமான தொழில்நுட்பங்களைப் பட்டியலிட்டோம். . இவ்வைந்தும் வருமாறு:

  1. மிதிமண் சுவர் - Cob
  2. அச்சுமண் சுவர் - Adobe (அடோபி)
  3. திமிசுமண் சுவர் - Rammed Earth
  4. அழுத்தக்கல் சுவர் - Compressed Earth Blocks
  5. படல்மண் சுவர் - Wattle and Daub

1. மிதிமண் சுவர்

மிதிமண் சுவர் என்பது மண்ணை தகுந்த உறுதிப்பொருட்களுடன் தயார் செய்தபின் அதை உருண்டைகளாக உருட்டி ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கிச் சுவர் செய்வது. களிமண் அதிகமுள்ள தஞ்சை மாவட்டத்தில் இம்முறையில் கட்டிய பற்பல வீடுகள் இன்றும் உள்ளன. இதற்கு ஏன் மிதிமண் என்ற பெயர்? மண்ணை முதலில் தரையில் கொட்டி வட்ட வடிவமாகச் செய்து அதனுள் நீரையும் அரைத்த சுண்ணாம்பு, கிளிஞ்சல் போன்ற உறுதிப்பொருட்களையும் சேர்த்து வேலையாட்கள் காலால் மிதிப்பார்கள். இவ்வாறு தொடர்ந்து மிதித்துப் புளிக்க வைத்த மண்ணை, நெல் உமி, கருக்காய், சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட வைக்கோல் இவற்றுடன் கலந்து பிசைந்து உருண்டைகள் உருட்டி அவற்றை அடுக்கிச் சுவர் செய்வது இதன் தொழில்நுட்பம். எளிமையானதும் எளிதில் தெரிந்து கொள்ளக் கூடியதுமான தொழில்நுட்பம் இது. வட்ட வடிவக் கட்டிடங்களுக்கு மிக உகந்தது. மிதிமண் சுவர் கொண்டு அதிக உயரமான கட்டிடங்கள் கட்டுவது கடினம். நம் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்ட தொழில்நுட்பம் இதுதான்.

2. அச்சுமண் சுவர்

அச்சுமண் என்பது மண்தேர்வு செய்தபின் அதை ஒரு அச்சில் வார்த்துப் பின் வெயிலில் உலர்த்தி செங்கல்கள் போல் செய்து அவற்றை வைத்து வீடு கட்டுவது. இது மெக்சிகோ நாட்டில் பாரம்பரியமாக இருக்கும் தொழில்நுட்பம். இதனை அடோபி (adobe) என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் இத்தொழில்நுட்பம் முன்பு செல்வந்தர்களின் வீடு கட்டப் பயன் படுத்தப் பட்டிருக்கிறது.” பச்சை மண் செங்கல்” என்றும் இதனை அழைப்பார்கள். இதில் இரண்டு மாடிக் கட்டிடங்கள் எளிதாய்க் கட்டலாம்.

3. திமிசுமண் சுவர்

இதுதான் மண்தொழில் நுட்பங்களிலேயே மிகவும் வலுவானது. உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் இதனால் ஆனதுதான். இம்முறையில் , நேர்த்தி செய்யப்பட்ட மண்ணை மரம் அல்லது இரும்புச் சட்டங்களுக்குள் இட்டு அம்மண் தன் உயரத்தில் பாதி ஆகும் வரை திமிச வேண்டும். அதன் பின்னர் அந்தச் சட்டத்தைக் கழற்றி சுவற்றின் அடுத்த இடத்திற்கு மாற்றி அதை மண் நிரப்பி திமிச வேண்டும். சுவற்றின் மூலைகளுக்கு “ட ” வடிவ அச்சுக்களும், இரண்டு சுவர்கள் இணையுமிடத்தில் ”+” வடிவ அச்சுக்களும் பயன்படுத்த வேண்டும். திமிசு மண் சுவர்கள் பார்க்க மிகுந்த நளினமாகவும், கரையான், பூரான் போன்ற பூச்சிகளால் புக முடியாதபடியும் உள்ளவை. காலத்தை வெல்லும் கட்டிடக் கலை என்பதற்கு மிகச் சிறந்த சான்று இம்முறைதான்.நன்றாய்த் திமிசிய மண்சுவர் கடப்பாரை பட்டால் வெண்கலம் மோதுவது போல் “ணங் டங்” என்று ஓசை எழுப்பும். செம்மண்ணிற்கு ஏற்ற தொழில்நுட்பம் இது. ஆனால் மிகுந்த நேரமும் ஆற்றலும் தேவைப்படும் முறை இது.

4. அழுத்தக்கல் சுவர்

இது அச்சுமண் போன்ற தொழில் நுட்பம் - ஆனால் அச்சில் மண்ணை வெறுமே நிரப்பாமல், திமிசு மண் போல் அதை அச்சில் வைத்து அழுத்துவது இம்முறையின் சிறப்பு. ஆரோவில் போன்ற இடங்களில் 5% சிமென்ட் உறுதிப்பொருளாய்க் கலந்து அழுத்தக்கல்கள் தயரிக்கிறார்கள். அதற்கான கையியங்கி இயந்திரங்களும் விற்கிறார்கள். இவை பார்க்க ஒரே சீராக அழகாக இருக்கும். நல்ல வலுவுள்ள இவற்றைக்கொண்டு மூன்று மாடி வரை கட்டிடங்கள் கட்டலாம்.

5. படல்மண் சுவர்

படல்மண் என்பது மூங்கிற்படல் அல்லது தட்டி போன்ற பொருளை சுவற்றின் ஒழுங்கிற்குக் கட்டி விட்டு அதன் இருபுறமும் பிசையும் பதத்தில் உள்ள ஈரமண்ணை வேகமாக அடிப்பது. அதன் பின்னர் அவற்றைக் கையாலோ மணியாசுக் கட்டையாலோ தடவி சமன் செய்து விட்டால் அழகான சுவர் உருவாகி விடும். இம்முறை மேற்கு வங்கம், வங்க தேசம் போன்ற வெள்ளத் தாக்கம் அதிகம் உள்ள இடங்களுக்கும், நில நடுக்கம் அதிகம் தாக்கக் கூடிய இடங்களுக்கும் மிக ஏற்றது.

கூரையின் முக்கியத்துவம்

மண்சுவர் வீடு கட்டுமுன்னர் நாம் எந்த வகையான கூரையைப் பயன்படுத்தப் போகிறோம் என்று தெளிவாய் முடிவு செய்து விட வேண்டும். இதைப் பொறுத்தே மற்ற அங்கங்கள் அமைக்க வேண்டும். இரண்டு தள (மாடி) வீடு கட்டுவதானால் முதல் தளத்தின் கூரை ஒட்டாக (கான்க்ரீட்) இருப்பதே நன்று. ஒரு தள வீடாயின் ஓடு, கீற்று, ஒட்டு என்று மூன்று விதங்களின் நாம் கூரை அமைக்கலாம். ஒட்டுக் கூரை மிகுந்த ஆற்றல் தேவையை உள்ளடக்கி இருப்பதால், நாம் கட்டும் வீட்டின் பாதியைக் கீழ்த் தளத்திலும், மீதியை மேல் தளத்திலும் அமைத்தால் வீட்டின் ஆற்றல் தேவையும், சூழல் சுவடும் குறையும்.

நம் தமிழ்நாட்டின் தட்பவெட்ப நிலையில் (தட்பம் எங்கே; குறை வெப்பம், மித வெப்பம், அதி வெப்பம் என்ற மூன்றுதான் நம் தட்ப வெட்பம்!) மற்ற உத்திகளான தகரம், ஆஸ்பெஸ்டாஸ் போன்றவை குளிருள்ள மலைப் பகுதிகளைத் தவிர வேறு இடங்களுக்கு ஏற்றதல்ல. மேலும், வீடு நமக்கு எதற்குத் தேவை என்றால், மழை, வெய்யிலில் இருந்து பாதுகாக்கவும், பொருட்களைப் பாதுகாக்கவும் எல்லாவற்றிற்கும் மேல், எலி, பெருச்சாளி, பாம்பு, கரப்பான், தேள் போன்றவற்றிலிருந்து நம்மையும் நம் உணவுப் பொருட்களையும் பாதுகாக்கவுமே! நான் பேட்டி கண்ட வரையில் இல்லாள் எனப்படும் குடும்பத் தலைவிகள் ஒட்டு வீட்டை விரும்புவது இந்த உயிரினங்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே. இதுதவிரப் பெரும்பாலோர் வீடு கட்டுவது தங்கள் பொருள் வசதியைப் பறைசாற்றவும், உறவினர்கள், நண்பர்கள் போன்றோரை விருந்தோம்பவுமே.(தற்சார்பு வாழ்வியலுக்குக் கௌரவம் தேடுதல் எதிரியே என்று சாட்சி மாய்ந்து,மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கையில் நாம் இந்தக் கோணத்தில் சிந்திக்க வேண்டியதில்லை!).

இது தவிர மனைக்கட்டின் மண்வாகைப் பொறுத்தும் சில முடிவுகள் எடுக்க வேண்டும். களிமண்ணும், வண்டலும் நிறைந்த எங்கள் காவிரிப் பாசனப் பகுதியில், ஒட்டு வீடு கட்டுவதென்றால், வீட்டின் அஸ்திவாரச் செலவு கட்டிடத்தின் 8-10% ஆகி விடும். இங்கு கருங்கல் இயற்கையாய்க் கிடைக்காததாலும், வெள்ள அபாயம் இருப்பதாலும் கான்கிரீட் அஸ்திவாரமே சிறந்தது. மலைப்பாங்கான கோவை, திருநெல்வேலி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் கருங்கல் அண்மையில் கிடைப்பதால் Random Rubble எனப்படும் கருங்கல் அஸ்திவாரம் ஏற்றது. இங்கு அஸ்திவாரச் செலவும் அதிகம் ஆகாது. எனவே வேளாண்மையைப் போலவே, வீடுகட்டுதலும் அவ்வச் சூழலுக்கு ஏற்ப மாறக் கூடியது.

இட வசதி உள்ளவர்கள் (வசதி கெடுமுன் கிராமம் சேர்ந்தவர்கள்) ஒரு தள வீடு கட்டுவதே சாலச்சிறந்தது. இதில் நாம் ஒட்டுக்கூரையை முழுவதும் புறக்கணித்து விடலாம்!

ஓட்டுக் கூரையிலும் இரண்டு விதமான ஓடுகள் புழக்கத்தில் உள்ளன - கையோடு எனப்படும் அரை வளைய ஓடுகள்; ரயில் ஓடு, சீமை ஓடு அல்லது மங்களூர் ஓடு என்று அழைக்கப்படும் சமமான ஓடுகள். இதில் கையோடு தயாரிப்பு இப்போது (எனக்குத் தெரிந்த வரையில்) அடியோடு நின்று விட்டது. பழைய வீடுகளைப் பிரித்து ஒட்டு வீடாக மாற்றும் இடங்களில் இவற்றை வாங்கலாம். சீமை ஓடு இன்றும் கிடைக்கிறது (விலை கடுமையாக இருப்பினும்). கையோடு குளிர்ச்சியானது. அதனுள் ஒரு குழல்போல் காற்று இடைவெளி இருப்பதால் வெப்பத்தை மிகவும் குறைக்கக் கூடியது. ஆனால் அந்த இடைவெளிகளில் எலி, பாம்பு, தேள் எல்லாம் சுகமாக வாசம் செய்ய வசதியாக இருப்பதால், கையோடு போட விரும்புவோர் அதற்கு அடியில் பலகை அல்லது ப்ளைவுட் போன்ற எதாவது ஒரு பாதுகாப்பைக் கைக் கொள்வது நல்லது. மேலும் கையோட்டின் இடைவெளிகளில் மர இலைகள், குப்பைகள் போன்றவை சேர்ந்து அடைத்துக் கொள்வதால் இக்கூரையை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஓட்டைப் பிரித்துச் சுத்தம் செய்து மீண்டும் அடுக்க வேண்டும். கடுமையான வெய்யிலில் சாய்ந்த கூரையில் ஒரு காலை முட்டி மடக்கி, ஒரு காலைச் சாய்த்து லாவகமாக அமர்ந்து கொண்டு இடுப்பு வலிக்க ஓடுகளை எடுத்து எடுத்து அடுக்க வேண்டும். இந்த வேலை மிகக் கடினமானது மட்டுமன்றி இப்போதுள்ள கொத்தனார்களுக்கு இத் தொழில்நுட்பம் தெரிய வாய்ப்பேயில்லை! 50 வயதுக்கு மேற்பட்ட , கிராமத்துக் கொத்தனார்களுக்கு மட்டுமே இத் தொழில்நுட்பம் நன்றாய்த் தெரிந்திருக்க‌ வாய்ப்பு உள்ளது.

சீமை ஓடு பூச்சி பொட்டுக்களிலிருந்து பாதுகாப்பானது. ஆனால் குளிர் காலத்தில் குளிராகவும், வேனல் காலத்தில் கடுமையான வெப்பமாகவும் இருக்கும். குறிப்பாகக் கோடை காலங்களில் பகல் முழுவதும் சூட்டை இழுத்துக் கொண்டு இவ்வோடுகள் இரவில் அச்சூட்டை மெதுவாய் வெளியிட்டு மிகவும் ஒவ்வாச் சூழலை ஏற்படுத்தும். சீமையோட்டில் வீடு கட்ட விரும்புவோர் பெரிய சன்னல்கள் வைத்துக் காற்றை உள்வாங்கிக் கொள்வது நல்லது. அதே போல் ரீப்பர் என்ற மரச்சாத்துக்களின் மேல் பலகையோ, அல்லது சமதள ஓடுகளையோ அடுக்கி அதன் மேல் சுருக்கி என்னப்படும் சுண்ணாம்பு+செங்கற்பொடிக் கலவையைப் பரப்பி அதன் மேல் சீமை ஓடுகளை அடுக்கிக் கூரை அமைத்தால் வெப்பம் தாக்குவதை மிகவும் குறைக்கலாம் என்பது இக்கட்டுரை ஆசிரியரின் கருத்து. இதைச் சரியாக ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும்.

இனி வரும் இதழில் கீற்றுக் கூரையையும் , அதனைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்களையும் பற்றிப் பார்ப்போம். அதன் பின்னர் சரியான கூரையைத் தேர்வு செய்தபின், அதற்கும், நம் சூழலுக்கும் ஏற்ற மண்சுவர் தொழில்நுட்பத்தையும் தேர்வு செய்வோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org