ஊழலின் உட்பக்கம்
பொருளியலில், “வாடகை வேட்டல்” (rent-seeking) என்றொரு சொல் உண்டு. இதன் பொருள், ஒரு நிறுவனமோ, குழுவோ, தனிநபரோ சமுதாயத்திற்கு எந்த வித மறுநன்மையும் செய்யாமல் தன்னலமாகப் பொருள், பணம் பெறத் தன் ஆற்றலைச் செலுத்துவது. 'நாடுகளின் வளம்' என்ற நூலை எழுதிய ஆடம் ஸ்மித், வருவாயை லாபம், கூலி மற்றும் வாடகை என்ற மூன்றாய்ப் பிரித்தார். இதில் கூலி என்பது உற்பத்திக்கான செலவுகளையும், வாடகை என்பது நிலம், நீர், ஆற்றல் போன்றவற்றிற்கு செய்யப்படும் செலவாகவும், லாபம் என்பது முதலுக்கும், முனைவுக்கும் ஆன ஊதியமாகவும் கொள்ளப்படுகிறது. வாடகை வேட்டல் என்பது வளங்களின்மேல் ஆளுமை செலுத்துதலும் அதற்கான திரைமறைவு வேலைகளையும் குறிக்கிறது. லாபம் வேட்டல் என்பது விற்போர் , வாங்குவோர் இருவருக்கும் பயன்படும் செயல். வாடகை வேட்டலோ ஒருபக்கப் பயனை மட்டுமே அளிக்கக் கூடியது. எதிர்நன்மை எதையும் அளிக்காதது.
மக்களின் வருமானம்
(இந்திய விவசாயிகளின் பொருளாதார பின்புலம் என்ற தலைப்பில் ஆக்ஸ்போர்டு கையேடுக்குக் குமரப்பா எழுதியளித்ததில் ஒரு பகுதி)
கிராம இயக்கம் எதற்காக? (Why the Village Movement) என்ற நூல்; அத்தியாயம் .
தமிழில் அமரந்தா
தேசிய வருமானத்தை அளவிடவும், அதன்வழி தனிநபர் வருமானத்தை அளவிடவும் பின்னர் அதனைக்கொண்டு இதுபோன்று கண்டறியப்பட்ட பிற நாடுகளின் மக்கள் வரும்படியோடு ஒப்பிடவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமீபத்தில் பிரிட்டனின் கீழ் இந்தியாவின் தேசிய வருமானம் குறித்து அறிக்கையை பேராசிரியர் வீ.கே.ஆர்.வி.ராவ் அளித்துள்ளார். இதன்படி தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ 62 மட்டுமே. சிலவகை அளவீடுகளுக்கு இத்தகைய கணக்குகள் பயன்படும் என்றாலும் கிராமப்புற உண்மை நிலையை சித்தரிப்பதில் இவை முற்றிலும் தவறாகவே உள்ளன. இதுபோன்ற கணக்குகளை முன்வைப்பதில் பல போதாமைகள் இருப்பதென்னவோ உண்மைதான். கிடைத்துள்ள புள்ளி விவரங்களில் பாதுகாப்பின்மையும் நம்பகமின்மையும், கணக்கீட்டு முறையின் சமமின்மையும் சராசரியை எட்ட, மிகப் பரந்த நிலப்பரப்பை ஆய்வுக்குட்படுத்துவதும் இந்தக் கணக்கின்மீது அளவற்ற நம்பிக்கை வைப்போரை ஏமாற்றிவிடக்கூடும். இவ்வகைக் கணக்கீடு, மாத வருவாய் ரூபாய் ஐந்து என்ற முடிவுக்கு வருகிறது. ஆனால் உயிர்வாழத் தேவையான சரிவிகித உணவு போதுமான அளவுக்கு கிடைக்க வேண்டுமானால் இந்த வருமானம் போதவே போதாது. பிறகு துணிமணிக்கும், வசிக்க நிழலுக்கும் எங்கே போவது?