தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நாப்பிளக்கப் பொய்யுரைத்து - ராம்


தமிழில் - ராம்

‘நமது குழந்தைகளை, உணவு மற்றும் பானங்களின் தீய விளம்பரத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும்’ என்ற தலைப்பில் ‘உலக சுகாதார நிறுவனம்’ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. விளம்பரங்களின் தீங்கினைக் குறித்த முதல் அறிக்கை அல்ல இது, பல காலமாக, அறமில்லாத வர்த்தக வளர்ச்சியையும், அதனை மக்கள் மத்தியில் சேர்க்கும் விளம்பரதாரர்களின் சூழ்ச்சியையும், சமூக விழிப்புணர்வு உள்ள பலரும் எதிர்த்துவருவது நாம் அறிந்ததே. ஆனாலும் மக்களால் மதிக்கக்கூடிய, அரசாங்கங்களின் எண்ணங்களையும், கொள்கைகளையும் மாற்றக்கூடிய உலக சுகாதார நிறுவனம் இத்தகைய ஒரு அறிக்கையை இந்த தருணத்தில் வெளியிட்டுள்ளது நாம் அனைவரும் கவனிக்க வேண்டியது. அப்படி என்ன காரணங்களால், இந்த நிறுவனம் விளம்பரங்களை, “தீமை” பயக்ககூடியவையாகத் தெரிவிக்கிறது?

இந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, விளம்பரப்படுத்தப் படும் குழந்தைகளுக்கான உணவு மற்றும் பானங்களில், பெரும்பாலானவை, குழந்தைகளின் உடல்நலத்திற்குத் தேவைக்கு அதிகமான அளவில் உப்பும், சர்க்கரையும், கொழுப்புச்சத்தும் கொண்டவை என்று தெரிவிக்கின்றது. அதாவது, உணவைக் குறித்த 65% க்கும் அதிகமான விளம்பரங்கள் இத்தகைய தவறான உணவுகளைத்தான் விற்கின்றன. இதைத்தான் இந்த நிறுவனம், “தீயன” என்று உணர்த்துகிறது.

இன்றய சூழலில், குழந்தைகளின் உண்ணும் பழக்கம் உலகமெங்கும் ஊடகங்களில் வாயிலாக, விளம்பரங்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்த நிறுவனம் தெரிவிக்கின்றது. குழந்தைப் பருவத்திலேயே, இத்தகைய தாக்கத்தினால் அவர்கள் தவறான உணவை உட்கொள்ளுவராயின், அவர்கள் வளர்நதபின்னர் இந்த பழக்கத்தினால் தொடர்ந்து உடல்நலத்திற்க்கு ஒவ்வாத உணவுகளை உட்கொண்டு, பிற்கால சந்ததியினர் அதிக அளவில் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளதாகவும், இதற்காகவே இந்த அறிக்கையை வெளியிட்டதாகவும், அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

உலக அளவில் அந்தந்த நாட்டின் அரசாங்கங்கள் இதற்கான முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்தை வலியுறுத்தி இந்த உலக சுகாதார நிறுவனம், இதற்கான ஐரோப்பிய‌ முயற்சிகளை முன்மாதிரியாக தெரிவிக்கிறது. ஐரோப்பாவில், உணவின் தரத்துடன் அதனுடைய சத்தளிக்கும் தன்மையையும் உணவு உற்பத்தியாளர்கள் இனிமேல் விஞ்ஞானரீதியில் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், அதனைக்கொண்டு விளம்பரங்களைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் ஒரு முனைவை நார்வே போன்ற 28 நாடுகள் முன்வைத்துள்ளன. இவை அனைத்தும் பெரிய கும்பணிளை, அவர்களது விளம்பரங்களில் சுயகட்டுபாடு ஏற்படுத்தும்படியும் கேட்டுக்கொண்டுள்ளன. ஆனால் இந்த அறிக்கையை பார்க்கும்பொழுது அத்தகைய கோரிக்கை எந்தப் பயனையும் அளிக்கவில்லை என்றே தோன்றுகின்றது.

இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு விச‌யம் என்னவென்றால், இவர்கள் பேசும் இந்த “உணவு மற்றும் பானங்கள்” விளம்பரம் எவ்வளவு அகன்ற வீச்சுடையது என்பது. உலக அளவில், “பதப்படுத்தப்பட்ட உணவு”, மற்றும், “மதிப்புக்கூட்டப்பட்ட உணவு” வகைகளைத்தான் பெரும்பாலும் விளம்பரங்களை கொண்டு விற்கக தேவைப்படுகின்றது. இந்த வருடத்தின் உலக அளவிலான இத்தகைய உணவுவகைகளின் ஒட்டுமொத்த சந்தை அளவு, 7.6 ட்ரில்லியன் டாலர்கள் என ஒரு கணக்கு தெரிவிக்கின்றது (ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்; சுமார் 6 கோடி கோடி இந்திய ரூபாய்!). இதற்கான விளம்பரத்திற்கான ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனத்தின் வருடாந்திர நிதி ஒதுக்கீடு, 3.9 மில்லியன் டாலர்கள் ( 24 கோடி ரூபாய் - ஒவ்வொரு நிறுவனத்தின சராசரி நிதி ஒதுக்கீடு )என்று மற்றொரு ஆவணம் தெரிவிக்கின்றது. அதாவது இன்று உலகத்தின் அனைத்து உணவு வகைகளையும் விற்று லாபம் பார்க்ககூடிய நிலையில் உள்ள முக்கிய நிறுவனங்களும் அதன் கீழ் இயங்கும் இதர நிருவனங்களும் சேர்ந்து 400 மில்லியன் டாலர் பெருமானமுள்ள ஒரு தொழிலை நடத்திவருகின்றனர். அந்த தொழில்தான் “விளம்பரம்”.

சரி நாம் ஏன் இந்த தொழிலை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்?

இன்று நமது தொலைகாட்சிகளில், வருடாவருடம் 10% அளவிற்கு விளம்பரம் செய்ய்யும் நேரம் வளர்ந்து வருவதாக ஒரு கணக்கீடு தெரிவிக்கின்றது! ஒரு வருடத்திற்க்கு சராசரியாக 18000 மணி நேரம் விளம்பரத்திற்க்கு இத்தகைய தொலைகாட்சிகளில் நடப்பதாக மற்றொரு கணக்கீடு தெரிவிக்கின்றது. அமெரிக்காவில் ஒரு நபர் சராசரியாக ஒரு நாளுக்கு 3000 விளம்பரங்களை நுகர்வதாக ‘story of stuff’ என்னும் குறும்படம் தெரியப்படுத்துகிறது. நம்முடைய நிலை நிச்சியமாக இந்த இலக்கிலிருந்து தொலை தூரத்தில் இல்லை. நமது மக்களும் இன்று மிகப்பெரிய அளவில் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்ளத்துவங்கிவிட்டதன் காரணிகளை ஆராய்ந்தோமேயானால், விளம்பரத்தின் பாதிப்பு அதில் நிச்சயமாக அடங்கும்.

“23 முக்கிய ஊட்டச்சத்துக்கள்” கொண்ட “உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு இன்றியமையாத பானம்” என்று ஒரு நாளுக்கு 100 முறை விளம்பரத்தை பார்த்த எந்தத் தாயும் கடைக்கு செல்லும் பொழுது அந்த பானத்தை கண்டு தன் குழந்தைக்கு வாங்க யோசிக்காமல் இருக்க முடியாது. ஆனால் அந்தத் தாயை யாரேனும், “உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு இன்றியமையாத 23 முக்கிய ஊட்டச்சத்துக்கள் யாவை?” என்று வினவினால் நிச்சயமாக யாருக்கும் தெரியாது. தெரிந்தாலும் அது அந்த பானத்தின் குறிப்பிடப்பட்ட 23 ஊட்டச்சத்துக்கள் ஆகாது.

நம்மைச் சுற்றிப் பல பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்குப் பதப்படுத்தப்பட்ட பால் தூள் முதல், “பாலின் சக்தி” கொண்ட பிஸ்கெட்டுகள் வரை அனைத்தையும் இன்று விளம்பரத்தை கண்டு மயங்கியே கொடுக்கின்றனர் என்பது உண்மை. இதைவிடக் கொடுமை, நமது குழந்தைகளைக் கடைக்கு இட்டு சென்று பெருமையாக, “உனக்கு என்ன வேண்டுமோ வாங்கிக்கோ” என்று தங்கள் அறியாமையை வெளிக்காட்டும் பெற்றோர்கள். அந்தக் குழந்தை காலை முதல் மாலை வரை தொலைகாட்சிகளிலும், இதர ஊடகங்களிலும் கண்டும், கேட்டும் வரும் உணவுப்பண்டகளையும், பானங்களையும் தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எங்கெல்லாம் எதற்கெல்லாம் நமது மக்கள் பொட்டல உணவை ஈடாக்குகின்றனர் என்று பார்த்தால் விந்தையாக உள்ளது!

நமது நாட்டிலும் பல விளம்பரங்கள் நுகர்வோரிடம் தவறான‌ தகவல்களைத் தருவதாக‌ பல நிறுவனங்களின் மேல் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

  1. கெல்லாக்ஸ் மக்காச் சோளம் காலைச் சிற்றுண்டி உணவு – இதனை உட்கொண்டால் யாவரும் மிகவும் ஒல்லியாகவும், திடமாகவும் இருப்பார்கள் என்று நம்பும்படியாக புனைந்து இந்த அமெரிக்க கும்பணியின் உணவுப்பொருள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
  2. கொம்பிளான் – இதனை உட்கொண்ட மாத்திரத்திலேயே, குழந்தைகள் இரு மடங்கு அதிகமாக வளர்ச்சி அடைவார்கள் என்று நம்பும் விதத்தில் தவறாக இந்த பானத்தின் பெட்டியிலுள்ள சித்திரம் தெரியப்படுத்துகின்றது.
  3. கொம்பிளான் மெமரி – இந்த பானத்தின் மற்றொரு வடிவமான மெமரி, இதனை குடித்தால் குழந்தைகளுக்கு நல்ல படிப்புவரும் என்று மக்களைத் தவறுதலாக எண்ணவைக்கும் விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  4. பூஸ்ட் – இந்தப் பானத்தை பருகினால், குழந்தைகளுக்கு 3 மடங்கு அதிக சக்தி உருவாகும் என்று தவறுதலாக எண்ணவைக்கும் விதத்தில் இதன் அட்டை சித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. இதுபோல் இன்னமும் பல பொருட்கள் விளம்பரதாரர்களால் தவறுதலாகவும், மிகைப்படுத்தியும், வேண்டுமென்றே திசைதிருப்புவதாகவும் அமைந்துள்ளது.

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு (Food Safety and Security Act) சட்டத்தின் 24ஆம் விதியின் கீழ் –

  1. எந்த ஒரு பொருளும் விற்பனையைப் பெருக்குவதற்காக நுகர்வோருக்குத் தவறான மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளை அளிக்கக்கூடாது
  2. படங்களின் வாயிலாகவோ, அல்லது, சொற்களின் வாயிலாகவோ, எந்த ஒரு பொருளின் விற்பனையிலும் அத்தகைய தவறான அல்லது தவறாக புரிந்து கொள்ளும்விதத்தில் எந்த விளம்பரமும் அமையக்கூடாது
  3. ஒரு பொருளின் தேவையைக் குறித்தோ அல்லது அதன் பயனைக் குறித்தோ தவறாகவும், மிகைப்படுத்தியும் எந்த விதமான செய்தியும் விளம்பரத்தின் மூலம் அளிக்க‌க்கூடாது
  4. அப்பொருளின் தரத்தைக‌க் குறித்த விஞ்ஞானரீதியில் நிரூபிக்கப்படாத, இயலாத எந்த ஒரு பயனையும் பரைசாற்றக்கூடாது

இத்தகைய சட்டங்கள் இருந்தாலும், இவற்றின் அமலாக்கம் மிகவும் கேலமான நிலையில் இருப்பதால், எந்த ஒரு பொருளை விற்பவனும் அளவிற்கு அதிகமாகப் பொய்களை வீசி, மக்களை முட்டாளாக்கி, விளம்பரத்தின் மூலம் தங்கள் பொருட்களின் வியாபாரத்தைப் பெருக்குவது எளிதாக‌ உள்ளது.

சமீபத்தில் வெளிவந்த ஒரு அறிக்கை, அத்தகைய உலகளாவிய 93 கும்பணிகளின் முதலாளிகளிடம் “மக்கள் உங்கள் பண்டங்களில் எதனை எதிர்பார்க்கின்றார்கள்?” என்ற கேள்விக்கு அளித்த பதில் ஆச்சிரியமாக உள்ளது – அவர்களின் கூற்றின்படி, “எளிமை”, “தனித்தன்மை”, “வீட்டிற்கு வெளியே நுகரக்கூடியவை” போன்ற கூறுகள் மிக முக்கியமானவை என்று தெரியவருகின்றது! கொடுமை என்னவென்றால், “அண்மை அல்லது உள்ளூர்” மற்றும் “தோட்டத்திலிருந்து நேராக” வரும் பண்டங்களை மக்கள் பெரிதாக விரும்புவதாக இவர்கள் கருதவில்லை!

உலகிலேயே மிக அதிக அளவில் இளைஞர்களும், குழந்தைகளும் வசிக்கும் நாடாக பெருமை கொள்ளும் இந்தியாவின் நுகர்வோர் தொகை வளர்ச்சியை உலக நாடுகளில் உள்ள எல்லாவிதமான பண்ட உற்பத்தியாளர்களும் நாக்கில் நீர்விட்டுக்கொண்டு நோக்குவதாக சமீபத்தில் நமது பிரதமர் தெரிவித்தார். உண்மைதான், அவர்களில் சிலர் தங்கள் தரமற்ற பொருட்களை இந்தியர்கள் தலையில் எந்தப் பொய்யையாவது சொல்லிக் கட்டிவிட வேண்டும் என்று எண்ணுவது அவர்களது பேராசையாக இருக்கலாம், ஆனால் அவர்களிடமிருந்து நமது மக்களை காக்க வேண்டிய கடமை நம்முடைய‌து.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org