தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மறக்கப்பட்ட மாமனிதர் குமரப்பா - பாமயன்


(சென்ற இதழ்த் தொடர்ச்சி)

குமரப்பா அரசு அதிகாரத்தின் குவியலைக் கொண்ட நடுவப்படுத்தப்பட்ட அமைப்பாக இருக்கக் கூடாது, பரவல்மயமான குறைந்த அதிகாரங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றார். வேலையின் தன்மையானது கடுமையைக் குறைத்து முழுமையாக உழைப்பாளியின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் இருக்க வேண்டும். முந்தைய பொருளியல் சிந்தனையாளர்கள் வேலையைப் பிரித்துக் கொடுத்து திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்ய வைத்தால் பொருளாக்கம் அதிகரிக்கும் என்றனர். ஆனால் அதில் எந்தவிதமான ஈடுபாடும், படைப்பாற்றல் திறனும் இருக்காது என்பது குமரப்பாவின் ஆழமான கருத்து. தனது ஏன் சிற்றூர் இயக்கம் (why the village movement) என்ற நூலில் இதை விளக்குகிறார். இதை காந்தியப் பொருளியிலின் கொள்கை அறிக்கை என்றே கூறலாம். காந்தியின் எண்ணங்களுக்கு இலக்கண வடிவம் கொடுத்து காந்தியப் பொருளியல் என்றே குமரப்பா அழைத்தார். என்னிடம் வரும்போதே குமரப்பா அணியமாகிவிட்டிருந்தார் (ready made) என்று காந்தி கூறியுள்ளார். ஆனாலும் தனது தலைவருக்கு சற்றும் பிறழாது தனது ஆய்வுகள் யாவற்றையும் காந்தியப் பொருளியல் என்றே அழைத்தார். ஆக குமரப்பாயியல் என்பது காந்தியப் பொருளியல் என்று ஆகிவிடுகிறது.

குமரப்பாவின் ஆய்வுகளில் முத்தாய்ப்பானது ‘மன்னுமைப் பொருளியம்’ (Economy of Permanence); இது இன்றைய உலகிற்கான கருத்தியலாக உள்ளது. சூழலியல் சீர்கேடுகளும், இயற்கை வளங்களின் பற்றாக்குறையும், அழிமானமும் உருவாகியுள்ள இச்சூழலில் பசுமைச் சிந்தனையை முன்வைத்த பெரும் மேதையாக குமரப்பா திகழ்கிறார். எந்த ஒரு பொருளாக்க முறையும் இயற்கையின் சுழற்சியில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் புறம்பாகப் போகும்போது பெரும் தொல்லைகள் உருவாகும்.

அவர் கூறுகிறார்: நிலக்கரி, கன்னெய்(பெட்ரோல்), இரும்பு, செம்பு தங்கம் ஆகியவற்றை பெரிதும் சார்ந்து இன்றைய உலகம் உள்ளது. இவை ஒரு குறிப்பிட்ட அளவே இருக்கக்கூடியவை, குறைந்தகாலத்திற்கு மட்டுமே கிடைக்ககூடியவை. ஆனால் ஆற்றில் ஓடும் நீரும், காட்டில் வளர்ந்துகொண்டு இருக்கும் மரமும் தொடர்ச்சியாகக் கிடைக்கக் கூடியவை. இவை மன்னியமானவை அதாவது நிரந்தரமானவை, தொடர்ந்து மக்களுக்குக் கிடைக்கக்கூடியவை.

கன்னெய் (பெட்ரோல்) வளம் பெருமளவு இருந்த காலத்திலேயே அதன் போதாமையைப் பற்றிச் சிந்தித்தவர் குமரப்பா. இவருக்கு புதுப்பிக்கக்கூடிய வளங்களைப் பற்றியும், புதுப்பிக்க இயலாத வளங்களைப் பற்றியும் (renewable and non-renewable resources) தெளிவான பார்வை இருந்துள்ளது. இவர் இதை தேக்கப் பொருளியம் என்றும் ஓட்டப் பொருளியம் என்றும் பிரிக்கிறார். அதுமட்டுமல்ல சூழலைக் கெடுக்காத வளர்ச்சி அமைதி கொடுக்கும்; அவ்வாறு இல்லாமல் வரைமுறையற்று இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தால் முடிவற்ற போட்டி, குழப்பம் மற்றும் உலகப்போர்களுக்கே வழிவகுக்கும்.

சூமேக்கர் எழுதிய சிறியதே அழகு (small is beautiful) என்ற நூலில் குமரப்பாவின் சிந்தனைகளை விளக்கியுள்ளார். ஆனால் அவர் புத்தவியப் பொருளியல் என்ற தலைப்பின் கீழ் குமரப்பாவின் கருத்துகளைப் பேசியுள்ளார். குமரப்பாவைப் பொருத்த அளவில் அவர் கிறித்தவராக இருந்தபோதிலும் தனது பொருளியல் கொள்ளைகளையில் எந்த மதத்தையும் முன்னிறுத்தவில்லை. உடலுக்குள் சரியான முறையில் எடுத்துக் கொள்ளப்படும் உணவு எவ்வாறு உடலை வளர்த்தெடுக்கின்றதோ அதேபோல வேலையின் தன்மையும் மதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால் மிக உயரிய பயனைக் கொடுக்கும் என்று குமரப்பா விளக்குகிறார். மாந்தனிடத்தில் இருக்கும் விலங்குத்தன்மை அகன்று உயிரிய பண்புகளும் உச்சமட்ட உழைப்பின் பயன்களும் கிட்டும். பெரும்பாலான கருத்துகளை குமரப்பாவிடம் இருந்து கையாளும் சூமேக்கர் அவரைத் தனது நூலின் ஒரே இடத்தில் மட்டும் குறிப்பிடுகிறார்.

(ஆசிரியர் குறிப்பு: பாமய‌னின் இக்கருத்து ஏற்புடையதல்ல. குமரப்பாவிற்கு முன்னரே தோரோ, டோல்ஸ்டோய், ஜான் ரஸ்கின் போன்றோர் தற்சார்புப் பொருளியல் மற்றும் சூழல்கேடு பற்றித் தெளிவாக உணர்ந்தும் எழுதியும் உள்ளனர்.அதற்காகத் தோரோவின் கருத்துக்களைக் குமரப்பா எடுத்துரைத்து விட்டு அவரைப் பற்றி எழுதவே இல்லை என்று சொல்லுதல் சரி அல்ல. மெய்காணும் நம் தேடலில், நம்மவர், அந்நியர் என்ற பிரிவினைகள் பொருளற்றவை. மெய்ப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், எம்மொழியிற் கேட்பினும் அதை ஈர்த்துக் கையாளுவதே அறிவின் பணி. இதை யார் கூறினார் என்று பிரித்தாய்வதால் இழப்பு நமக்கே).

குமரப்பா தனது பொருளியல் கோட்பாடுகளை விளக்க வரும்போது ஐந்துவகையான மாதிரிகளை முன்வைக்கிறார். ஒட்டுண்ணிப் பொருளியம், கொள்ளைப் பொருளியம், முனைவுப் பொருளியம், கூட்டிணக்கப் பொருளியம், தொண்டுப் பொருளியம் என்று வரிசைப்படுத்தி ஒவ்வொன்றின் தன்மைகளைக் குறிப்பிடுகிறார். உழைக்கும் மக்களிடம் இருந்து உறிஞ்சிக் கொழுக்கும் முறை முதல் வகையாகும். பல கொடுங்கோன்மை அரசுகள் இதைச் செய்து வந்தன. அதைப் போலவே கொள்ளைப் பொருளிய முறை மக்களிடம் கடும் வன்முறையைப் பயன்படுத்தி அவர்களது உழைப்பைச் சுரண்டுவதாகும். இந்த இரண்டிலும் வன்முறை மிகக் கடுமையாக இருக்கும். முனைவுப் பொருளியம் என்பது சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு யார் ‘திறமையாளர்களோ’ அவர்கள் செல்வத்தைத் திரட்டிக் கொள்ளும்முறை. பல மக்களாட்சி நாடுகளில் இது நடைமுறையாக உள்ளது. கூட்டிணக்கப் பொருளியம் முற்றிலும் பகிர்வை அடிப்படையாகக் கொண்டது. தேனீக்கள் எவ்வாறு தனக்காக மட்டும் உழைக்காமல் தனது கூட்டமைப்பில் உள்ள யாவருக்காகவும் உழைக்கின்றது. பொதுவுடமைச் சிந்தனையாளர்கள் இம்மாதிரியான முறையையே கனவு கண்டார்கள். இறுதியாக உள்ளது பிறருக்காக உழைப்பது. தனது தேவைகளைக் குறைத்துக்கொள்வது. தன்னார்வ வறுமை இதன் அடிப்படை. காந்தி தனது தேவைகளை பெரிதும் குறைத்துக் கொண்டார். இந்தியாவின் கடைசி ஏழைக்கு மின்சாரம் கிடைத்த பின்பே தனது குடிசைக்கு மின்சாரம் வர வேண்டும் என்றார்.

இந்த முறை மாந்தனின் பண்பாட்டு வளர்ச்சியை, மிக உயர்ந்த சான்றாண்மையை, அடிப்படையாகக் கொண்டது. வள்ளுவர் இதை செந்தண்மை என்று கூறுகிறார். உயர்ந்த விழுமியங்களை உள்ளடக்கியது. பொருளை உருவாக்குபவர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் இடையில் அறம் இருக்க வேண்டும். பட்டினப்பாலை என்ற சங்க இலக்கியம் ‘கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது’ என்று தனது கருத்தைப் பதிவு செய்கிறது. இப்படிப்பட்ட அறத்தை, விழுமியத்தை வலிறுத்துகிறார் குமரப்பா. இன்று மிகப் பரவலாகப் பேசப்படும் உணவுத் தொலைவு (Food Miles) சூழலியல் மாசுபாட்டுக்கு காரணமாக இருப்பதை அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது இந்தியாவில் விளைவிக்கப்படும் தேயிலை அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்படும்போது அதற்காக செலவிடப்படும் எரிபொருள் மாசுபாட்டை உருவாக்கும். எனவே அந்தந்தப் பகுதியில் விளைவிக்கப்படும் பொருள்கள் அங்கேயே நுகரப்பட வேண்டும். இந்தக் கருத்துக்கு முன்னோடி குமரப்பா அவர்களே என்றால் மிகையாகாது. உள்ளூர்மயம் என்பதை மிகவும் அழுத்தமாக பரிந்துரைக்கிறார் குமரப்பா. இன்றைய உலகமயம் என்ற பன்னாட்டு வணிகமயத்திற்கு மாற்றாக அவர் கூறிய உள்ளூர்மயம் (localisation) மிக இன்றியமையாதது.

நிலத்தைப் பொருத்த அளவில் நீர், காற்றைப்போல பொதுவானதாக இருக்க வேண்டும் என்பது குமரப்பாவின் கருத்து. உழுபவர்களுக்கு நிலத்தை உரிமையாக்குவது இவரது அடிப்படை நோக்கமாக இருந்தது. இவரது தலைமையில் 1948ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிலச்சீர்திருத்தக் குழுவில் இவர் கொடுத்த பரிந்துரைகள் மிக முற்போக்கானவை. ஆனால் இவை முறையாக நிறைவேற்றப்படாதது குறித்து மிகுந்த மன வருத்தம் அடைந்தார். குத்தகை முறையை நீக்கி உழுபவர்கள் நேரடியாக நிலத்தில் இருந்து கிடைக்கும் பயனைப் பெற வேண்டும். ஆனால் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தும் இதன் சாரம் நீர்த்துப்போகச் செய்து, உழுபவர்களின் கைகளுக்கு நிலம் போவது கைநழுவிப் போனது. குமரப்பாவை இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக ஆக்க வேண்டும் என்று காந்தி விரும்பினார், ஆனால் அது நடக்கவே இல்லை. கெடுவூழாக காந்தியின் மறைவு மிக வேகமாக 1948ஆம் ஆண்டிலேயே நடந்தேறிவிட்டது. வேளாண்மையில் வேதி உரங்களின் வரைமுறையற்ற பயன்பாட்டை அன்றே எதிர்த்தார் குமரப்பா. இவரது மறைவுக்குப் பின்னர் வெளியான ராய்ச்சல் கார்சனின் ‘மௌன வசந்தம்’ பூச்சிகொல்லிகளின் தீமைகளை விரிவாகக் கூறியது. இவரது நூலகத் தொகுப்பில் ருடால்ஃப் ஸ்டெய்னரின் உயிரித்துனைமப் பண்ணையம் (biodynamic farming) பற்றி நூல் இருந்துள்ளது. உழவர்கள் தற்சார்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதில் குமரப்பா அழுத்தமாக இருந்துள்ளார். உழவர்களின் கைகளில் வேதியுரங்களைக் கொடுப்பது அடிமுட்டாள்தனம் (sheer folly) என்று எழுதினார். (Gram Udyog Patrika 9(9),9(10), September and October 1947)

வேளாண்மை என்பது தொழிற்சாலைமயப்படுத்தப்பட்டதன்று. அது வாழ்தொழில் முறையானது (Industry vs Occupation) என்றார். உணவுப் பொருள் விளைச்சலில் அதிகம் கவனம் செலுத்துவது, மண்ணை மட்கு உரம், தொழுவுரம் இவற்றால் செழிப்பூட்டுவது என்று வேளாண்மைக்கான திட்டத்தை முன்வைத்தார். அதுமட்டுமல்ல மக்களுக்கான ஊட்டம் மிக்க உணவை உருவாக்கக் கூடிய சாகுபடித் திட்டத்தை பரிந்துரைந்தார் என்பதைப் பார்க்கும்போது அவரது நெடிய ஆழமான பார்வை வியக்க வைக்கிறது. இதை அவர் சமத்துவ சாகுபடி (Balanced Cultivation) என்று குறிப்பிட்டார். குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கான தவசங்கள், பருப்புகள், காய்கறிகள், பால் இவற்றை உள்ளடக்கிய 2800 கலோரியைக் கொடுக்கும் வகையிலான சாகுபடியும் அவர்களுக்குத் தேவையான துணியைத் தரக்கூடிய அளவிலான பருத்தியும் விளைவிக்க வேண்டும் என்று விவரித்தார். அதுமட்டுமல்ல பண்ணையாளரின் விருப்பத்திற்கான சாகுபடிக்கு மாற்றாக உள்ளூர் மக்களின் தேவைக்கான சாகுபடியே வேண்டும் என்றார். கியூபாவில் முதலில் ஒட்டுமொத்தமாக கரும்பை விளைவித்ததும் பின்னர் கடும் நெருக்கடியைச் சந்தித்து இப்போது பரவல்மயப்படுத்தப்பட்ட ‘குமரப்பா பாணி’ வேளாண்மையில் ஈடுபட்டு சிக்கலில் இருந்து மீண்டதையும் நாம் அறிவோம். இவரது கணக்குப்படி ஆளொன்றிற்கு 14 செண்ட் பரப்பளவில் போதுமான உணவை விளைவித்துக்கொள்ள முடியும்.

பரவல்மயப்பட்ட பொருளாக்கமுறைதான் இந்தியாவிற்கு ஏற்றது என்பதை அறிவியல் வகையில் குமரப்பா விளக்கினார். செல்வம் = உழைப்பாளிகள் + முதலீடு (W = E + M ). செல்வ வளம் உழைப்பாளிகளின் உழைப்பாலும் அதில் போடப்படும் முதலீடு கருவிகள் இதர ஏந்துகளாலும் உருவாவது. இந்தியாவைப் பொருத்த அளவில் E அதிகம் ஆனால் M குறைவு. எனவே திட்டமிடும்போது அதிக அளவில் உழைப்பாளிகள் (E) ஈடுபடுத்தப்படுவதொடு குறைந்த அளவு முதலீடும் எந்திரங்களும் (M) பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். இன்று பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்து சில ஆயிரம் பேர்களுக்கு வேலைதரும் போக்கு உள்ளது. அதற்காக அவர் பெரும்பாடுபட்டார். அனைத்திந்திய சிற்றூர் தொழில்கள் இணையத்தை (All India Village Industries Association) ஏற்படுத்தி அதில் செயலராக இருந்து பணியாற்றினார். இதன் தலைவராக காந்தி இருந்தார். இதில் இவர் எண்ணற்ற ஆராய்ச்சிகளைச் செய்து பொருள்களை உருவாக்கினார். மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தாவில் மகன்வாடி என்ற இடத்தில் அவரது ஆய்வுகள் நடந்தன. சேவாகிராம ஆசிரமத்தில் காந்திக்காக கட்டப்பட்ட வீட்டைவிடவும் மிக எளிமையாக குறைந்த விலையில் (அன்றைய மதிப்புப்படி 150 ரூபாயில்) கட்டியுள்ள வீடு இன்றும் உள்ளது. மண்ணெண்ணைக்கு மாற்றாக தாவர எண்ணெயில் எரியும்படியான விளக்கு, எளிமையாக நெல் அரைக்கும் திரிகைகள், பந்துபொறுத்திகள் (ball bearings) இணைக்கப்பட்ட மாட்டுவண்டி என்று எத்தனையோ கண்டுபிடிப்புகள். இதை அவர் தனது கிராம உத்யோக் பத்திரிகா இதழில் வெளியிட்டும் வந்தார். இவரது நூல்கள் யாவும் கையால் செய்யப்பட்ட தாளில் அச்சானது என்பதோடு இன்றைய தாள்களின் தரத்திற்கு சற்றும் குறைவின்றி அவை இருந்தன என்பதைப் பார்த்தால் வியப்பு மேலிடுகிறது.

(அடுத்த இதழில் முடியும்)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org