தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

தவிட்டுக் குருவி (அ) மஞ்சள் அலகு சிலம்பன் (அ) வெண்தலைச் சிலம்பன்

இம்மாதம் நாம் காணும் பறவை வீட்டுக் கொல்லைகளிலும், வயல் வெளிகளிலும் சாதாரணமாய்க் காணப் படும் சிலம்பன் இனத்தைச் சேர்ந்த தவிட்டுக் குருவி. White-headed babbler என்றும் Yellow billed Babbler என்றும் Turdoides affinis என்றும் அழைக்கப்படும். எதியோப்பியா, சூடான் நாடுகளைச் சேர்ந்தவேறு ஒரு வெண்தலைச் சிலம்பனும் உண்டு ( White-headed babbler or Cretzschmar's babbler, Turdoides leucocephala). இதனால் தற்காலப் பறவைப் பார்வையாளர்கள் மஞ்சள் அலகு சிலம்பன் இதனை என்றே அழைக்கின்றனர். நம் தவிட்டுக் குருவி தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் வசிப்பது. இதனை மிக அழகான இதன் பொன்மஞ்சள் அலகைக் கொண்டு அறியலாம்.

காணுமிடம்:

தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படும். இயற்கை சூழ், பசுமையான‌ இடங்களில் வசிக்கும்.நெல் வயல்களில் மிக அதிகமாகக் காணலாம்.

தோற்றம்:

மைனாவை விடச் சற்றுச் சிறியதாக இருக்கும். உடல் தவிட்டு நிறத்திலும், அலகு பொன்மஞ்சள் ஆகவும், தலை வெள்ளையாகவும் இருக்கும்; உடலின் அடிப்பகுதி வெளிறி இருக்கும். இறகுகளில் கரும் கோடுகள் தவிட்டுடன் கலந்து மிக அழகான ஒரு ஓவியம்போல் இருக்கும்.

உணவு

கொத்தித் திரியும் அந்தக் கோழியைப் போல், புழு, பூச்சிகள், மற்றும் வீட்டுக் குப்பைகளைச் சீந்தி உண்ணும்.எஞ்சிய தானியங்களை சுகமாய் உண்ணும்.

இனப்பெருக்கம்

கோடை காலத்திலும் (பங்குனி-ஆடி), மழைக்காலத்திலும் (ஐப்பசி-கார்த்திகை) இனப்பெருக்கத்தில் ஈடுபடும். குடும்ப உறுப்பினர் அனைவரும் கூடு கட்டுவதிலும், காப்பதிலும் ஈடுபடுவர்.

சிறப்புச் செய்தி

பாண்டி ஆடுவதை இப்பறவையிடம் கற்கலாம்! இறக்கை இருந்தும் அதிகம் பறக்காமல் தத்தித் ,தத்தியும் மிகச் சமீப தூரமே பறந்தும் சோம்பலின் நாயகனாய்த் திரியும் இக் குருவிக்கு “சோம்பேறிக் குருவி” என்றும் கிராமப்புறங்களில் பெயர் உண்டு. கூட்டமாக வாழும். ஒரு குடும்பத்தில் குறைந்தது ஏழு இருக்கும். சதா தொண, தொணவென்று பேசிக் கொண்டே இருப்பதால் ஆங்கிலத்தில் இவற்றை Babbler என்று அழைப்பார்கள். இந்தியில் “சாத்பாய்” (ஏழு சகோதரர்கள்) என்ற பெயர் உண்டு.

- நானூறு சதுர மீட்டருக்குள்ளேயே தன் வாழ்நாள் முழுதும் கழித்து விடும்! சிவகாசியில் நடத்திய ஒரு ஆய்வில் ஒரு சதுர கிலோமீட்டரில் சுமார் 55 பறவைகள் இருப்பதைக் கண்டனர்.

- மழைக்குயில் மற்றும் கொண்டைக் குயில்கள் இதன் கூட்டில் முட்டை இட்டு விடும். மழைக்குயிலின் குஞ்சு இளமையில் தவிட்டுக் குருவியைப் போலவே இருப்பதால், இக்குருவிகள் பாவம் தன் குஞ்சென்று நம்பி வளர்க்கும். தீராப் பசி கொண்ட குயிற்குஞ்சுக்கு இவை தேடித் தேடி உணவளிப்பதைப் பார்க்கச் சற்று வலிக்கத்தான் செய்யும்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org