தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

ஊன் உடம்பு ஆலயம்


உடல் வலி - ஒரு எச்சரிக்கை மணி

பிரபஞ்ச ஜீவராசிகளில் ஒன்றான மனிதரில் 95 சதவீதத்தினர் நித்தம் எதிர்நோக்கும் ஒரு முக்கிய தொந்தரவு உடலில் அல்லது உடலின் ஒரு பகுதியில் ஏற்ப்படும் வலி. வயது வரம்பு இல்லாது தினம் ஒரு முறையாவது ஏதோ ஒரு வடிவில் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறோம். கை வலி, கால் வலி, கழுத்து வலி, தலை வலி, இடுப்பு வலி, தசை வலி, நரம்பு வலி, வயிறு வலி, முடுகு வலி, முழங்கால் வலி, பல் வலி, நெஞ்சு வலி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

கடுமையான உழைப்பு என்பது தமிழர்களின் கலாச்சாரம்; நிலத்தினை உழுது, விதைத்து, களையெடுத்து, கதிரடித்து, களத்திற்கு கொண்டு வந்து பின் உலக்கை அல்லது திருகையால் உதிர்த்து அதனைப் பொங்கி உணவருந்தினர். அன்று உடல் வலியும் இல்லை நோயும் இல்லை. ஆனால் இன்றோ எல்லாவற்றிற்கும் இயந்திரம், டிராக்டர் முதல் மிக்சி, கிரைண்டர், குக்கர் வரை எல்லா வேலையிலும் உடல் உழைப்பு குறைந்து விட்டது. நோய்களோ பெருகி விட்டது. இந்தச் சூழலில் சிறுவர் முதல் பெரியவர் வரை தினமும் ஒலிக்கும் ஒரு மந்திரமாக மாறியது உடல் வலிகள். எதோ ஒருநாள் கடுமையான எடைகொண்ட பொருளை தூக்கியதனால் முதுகோ அல்லது கைகால் வலி கொள்கிறது என்பதும் அதே போல் ஒருநாள் உணவு சரியாக இல்லை அதனால் வயிறு அல்லது தலைவலி வருகிறது என்ப‌தும் இயல்பான‌ ஒரு செயல். ஆனால் என்றோ வருவதும் போவதும் என்பது இல்லாது இன்று பலருக்கு அது நிரந்தரமாகவே தன் இடத்தைப் பிடித்துக் கொண்டு அவர்களுடன் வாழ்ந்து வருகிறது.

அன்று உடல் உழைப்போடு காலை சூரிய ஒளியில் 10 முறை சுற்றுவது, காதுகளை பிடித்து தோப்புக்கரணம் போடுவதும், வெறும் காலில் மண்தரையில் நடப்பது என்று உடலை சுறுசுறுப்பாகவும் அசதியில் இருந்தும் வெளிவர பல இயற்கை சிகிச்கைகளை வாழ்வியலோடு பின்பற்றினர். ஆனால் இன்று எந்த உழைப்புமின்றி படுத்த இடத்தில பலரது உதவியுடன் கைகால்களை அசையவைத்து உடல் வலிகளுடன் அவற்றின் மூலக்கூறுகளை அறியாமல் வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி பலர் வாழ்நாள் தொந்தரவுகளையும், உறுப்பு மாற்று சிகிச்சையையும் மேற்கொண்டு நிரந்தர நோயாளியாக மாறும் அவலம் நடந்த வண்ணம் உள்ளது.

வலி என்றால் என்ன? ஏற்படக் காரணம் என்ன‌?

வலி நல்லது…
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்பதற்கேற்ப நம் உடல் பஞ்ச பூதங்களின் இயக்கம் என்று அனைவரும் அறிவர். இந்தப் பஞ்ச பூதங்களின் சமன்பாடு குறையும் போது உடலில் கழிவுகள் தேக்கம் அடையத் தொடங்கும். அன்றாட வாழ்வில் உணவு, உழைப்பு, தூக்கம், சுவாசம், தண்ணீர் ஆகியவை தொடர்ந்து அதிகரிப்பதோ அல்லது குறைவதோ பஞ்சபூத சமன்பாடு இல்லாத நிலையாகும். இந்தச் சமன்பாடு சீர்கேட்டினால் உணவு அஜீரணம் முதல் தூக்கமின்மை, சோர்வு வரை பல தொந்தரவுகள் வெளிப்படும். அன்றாடம் ஏற்படக் கூடிய உடல் வலியை (உடலின் சமநிலையை சீர்படுத்த) நமது உடல் தேவைக்கேற்ப காய்ச்சலாக வெளிப்படுத்தி போதிய ஓய்வையும் எளிய உணவு முறை மூலமும் (நாக்கில் ஏற்ப்படும் கசப்பு சுவை) தன்னைத் தானே சரி செய்து கொள்கிறது. இந்த ஓய்வையும் எளிய உணவையும் கொடுக்காத பட்சத்தில் நமது ஓட்டம் அதிகரிக்க ஏதாவது ஓர் உறுப்போ அல்லது உடலில் ஓர் பகுதியோ பலவீனமாகத் தொடங்குகிறது.

இதனால் இரத்த சுழற்சி பாதிக்கப்பட(சக்தி பற்றாக்குறையால்), அது உடலில் பலவீனமாக உள்ள பகுதியில் வலியாக வெளிப்படும்.* இந்த பாதிப்பே உடல் வலியாகும். பலவீனமாக உள்ள இடத்தில ஏற்பட்ட வலியை முறையாக கவனிக்காததினால் அது நாள்பட்ட நோயாக (நிரந்தர வலியாக) மாறுகிறது.

உதாரணத்திற்குத் தொடர்ந்து கனமான பொருட்களைத் தூக்கும் ஒருவருக்குப் போதுமான உடற்பயிற்சி இல்லாது முதுகிற்கு மட்டுமே அதிக வேலை கொடுக்க முதுகு தண்டுவடம் பலவீனமாகும். முதலில் வலியாக வெளிப்பட அதனை பொருட்படுத்தாது தொடர சில வருடங்களில் நிரந்தர முதுகுத்தண்டு வியாதியாக மாறுகிறது. அவர்கள் எந்தச் சின்ன பொருளையும் தூக்க இயலாது முதுகை நேராக வைத்து எந்நேரமும் படுத்தப் படுக்கையாக வாழும் நிலை உருவாகிறது. மூட்டு வலிக்கு காரணம், மூட்டு தேய்வது அல்ல‌- மாறாக, மூட்டுகளைச் சுற்றி உள்ள தசைநார்கள் வலு இழப்பதும், மூட்டுகளுக்கு இடையில் உள்ள ச‌வ்வு பகுதியில் நீர்த்தன்மை குறைவதால் அவை சுருங்கி விரியும் தன்மையை இழந்து இரு எலும்புகளும் உறைவதால் வலி ஏற்படுகிறது.

எதிர்கால நோயை ஆரம்பத்திலேயே அறிவிக்கும் முன்னறிவிப்பே தொடரும் உடல் வலி.

வலி மாத்திரைகள்

இந்த உடலின் அக்கறையான எச்சரிக்கை மணியோசையை புரிந்து கொள்ளாமல் நம்மில் பலர் உடலில் ஏதோ ஒரு இடத்தில் வலி ஏற்பட்டவுடன் ஆங்கில மருத்துவத்தின் வலி மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறோம். இதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் ஆபத்தானது. இவைகள் வலியை சரிசெய்வதில்லை! பின் எவ்வாறு வலி குறைகிறது என்பதே அதிர்ச்சியான பதில்…

நம் தலையில் Pitiutary Gland என்ற சுரப்பிக்கு அருகில் ஹைப்போதாலமஸ் என்ற ஒரு பகுதி உள்ளது. இது நம் உடலில் ஏற்படும் உணர்வுகளில் ஒன்றானவலிகளை மூளைக்கு தெரிவிக்கிறது. எனவே மருந்துகளை கொடுத்து இந்த ஹைப்போதாலமஸ் இன் செயல்பாட்டை நிறுத்தி வைத்தால் வலிகள் மூளைக்கு எட்டுவது நிறுத்தப்படும். ஆக மொத்தம் வலி உடலில் இருக்கும், வலிக்கான காரணிகளும் உடலிலேயே இருக்கும் ஆனால் வலியை மட்டும் உணராமல் வைக்கப்படுகிறது (போதைக்கு அடிமையாகும் குடிகாரர்களைப்போல்). அப்படி என்றால் உடல் எவ்வளவு நேரம் வலி இல்லாத இந்த நிலையிலேயே இருக்கும் என்று பார்ப்போம்.

நம் உடல் ஒரு அற்புதமான கட்டமைப்புடன் செயல்படுகிறது, எனவே அது நல்ல நிலையில் உள்ள போது எந்த ஒருரசாயனத்திற்கும் கட்டுப்படுவது இல்லை. எனவே தான் தினம் தினம் மாத்திரைகள் எடுக்கும் தேவை அதிகரிக்கப்படுகிறது. தொடர்ந்து மாத்திரைகள் எடுக்கும் போது உடலின் இந்த கட்டமைப்பு சின்னாபின்னம் செய்யப்படுகிறது. இப்போது பலருக்கு உடலில் ஏற்படும் பல உணர்வுகள் குறைபடுகிறது, காலில் ஒரு முள் குத்தினாலோ அல்லது ஒரு கல் பட்டு காயம் ஏற்பட்டாலோ கூட தெரிவது இல்லை. இரத்தம் வெளியேறிய பின்பு யாராவது சுட்டிக்காட்டினால் மட்டுமே அவர்கள் சுதாரிப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம்.

இது மட்டும் அல்ல, தொடர்ச்சியாக மருந்துகள் எடுப்பவர்களுக்கு சில நாட்களுக்கு பின்னர் அதிக கோபம், பயம், கண் எரிச்சல், தெளிவற்ற சிந்தனை, ஆண்மை குறைவு, கர்ப்பப்பை பிரச்சனைகள், தூக்கமின்மை, பசியின்மை, இடுப்புவலி, புதிய இடங்களில் வலிகள் என்று பல புதிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதற்கு காரணம் நம் உடலில் உள்ள முக்கிய‌ உறுப்புகளான கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறையத் தொடங்குவதே ஆகும். காரணம் உடல் ஒருபோதும் ரசாயனங்களை நோய் தீர்க்கும் சக்திகளாக எற்றுகொள்வது இல்லை.

இதற்கு ஒரு உதாரணம் இயற்கை முறை சிகிச்சை மேற்கொள்ளும் (பழ உணவுகள் மற்றும் எளிய கஞ்சி வகைகள் உட்கொள்ளும்) பொழுது உடல் கழிவுகள் வெளியேறும் போது சிறுநீர் மஞ்சள் நிறமுடனோ அல்லது மருந்துகளின் நாற்றமுடனோ வெளியேறும். இதன் மூலமாக நாம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள முடியும் அதாவது உடல் நோயெதிர்ப்பு சக்தி பெறும்போது மருந்துகளை சக்திகளாக நினைத்து இருந்தால் அவற்றை ஜீரணித்து தன் தேவைக்கு படுத்தியிருக்கும். ஆனால் அதற்கு மாறானது, உடல் சக்தி பெறும்போது தனக்குள் தேங்கிய ரசாயண மருந்துகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவது, உடல் ரசாயண மருந்துகளை புறக்கணிக்கிறது என்பதை ஆதாரமாக காட்டுகிறது. உடல் என்றுமே கழிவுகளை மட்டுமே வெளியேற்றும் - சக்திகளை அல்ல.

நிரந்தர வியாதிகளையும் வலிகளையும் குணப்படுத்த

பசி, தூக்கம், தாகம், உழைப்பு, நல்ல காற்று ஆகியவற்றை சீராக தேவைக்கேற்ப விழிப்போடு கொடுப்பதே முதல் நிலை மற்றும் நீண்ட நாள் வலியிலிருந்து விடுதலை பெற உதவும்.

சீரான உணவு முறை. எளிதில் ஜீரணிக்கும் சத்துமிக்க தானியங்கள், பழங்கள், கீரைகள் உட்கொள்ள வேண்டும்.

அளவான உடற்பயிற்சி. யோகா மூச்சுப் பயிற்சி தவறாமல் காலையில் பழக்கப்படுத்தவும்.

நீண்டநேரம் நாற்காலியில் உட்கார முதுகை நேராக வைத்து உட்கார வேண்டும்.

மாமிசம், பால் பொருட்களை குறைத்துக் கொள்வது நல்லது (அஜீரணத்தை ஏற்படுத்தும்). பூண்டு, இஞ்சி, மஞ்சள் சேர்த்துக் கொள்ளவும்.

நீர் சத்துள்ள (தாது உப்புகள்) காய்கறிகளான பூசணி, சுரக்காய், வாழைத்தண்டு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் நாள்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கசாயமாக்கிப் பருகவும்.

வில்வ இலையும், அருகம் புல்லும் இடித்துச் சாறு எடுத்துக் காலை-மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.

கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் இருப்பது நல்லது. வலி இருக்கும் இடத்தில சுடுநீர் ஒத்தட‌ம் கொடுக்கவும்.

நல்ல எண்ணெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய் கலந்து வலி இருக்கும் இடத்தில் தேய்த்து வர நாள்பட்ட முட்டு வலிகளும் தசை வலிகளும் குணமாகும்.

இவ்வாறான சிகிச்சை முறைகள் பயன்படும் பொழுது நமது உடல் மீண்டும் சக்தி பெறப்பெற தனக்குள் தேங்கப்பட்ட கழிவுகளை வெளியேற்றும், இப்போது மருந்துகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஹைப்போதாலமஸ் மீண்டும் புத்துணர்வு பெரும். தொடருந்து பின்பற்றும் பொழுது விரைவில் குணமடையலாம்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org