தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அடிசில் பார்வை - அனந்து


கோதுமைப் பண்டம்

கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டத்தைக் காவிரி வெற்றிலைக்கு பண்ட மாற்றாகப் பாடினான் நம் மீசைக் கவிஞன்.

உலகளவில் சோளம் மற்றும் அரிசியை அடுத்து மிகவும் அதிகமாக விளைவிக்கப்படும் தானியம் கோதுமை ஆகும். 110 முதல் 120 நாட்கள் பயிரான கோதுமை, அரிசியை போன்றே புல் வகையை சார்ந்த‌து. மேலும் இந்த தானியம் அரிசிக்கு அடுத்து மிகவும் அதிகமாக உட்கொள்ளப்படும் பொருளாகும். பாரசீகம் (இன்றைய ஈரான், சிரியா) தான் இதன் பிறப்பிடம். 8000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கிருந்து மெதுவாக கிரீஸ், இந்தியா, எகிப்து வரை வந்தது. 7000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் அடுமனை (oven) மற்றும் ரொட்டி (bread) செய்யும் வழக்கம் தொடங்கிவிட்டது. பின்னர் கோதுமை 5000 ஆண்டுகளுக்கு முன் தான் இங்கிலாந்து வந்தது.

பின்னர் பசுமைப் புரட்சிக் காலத்தில் மகசூல் வெறியால் குட்டை மற்றும் வீரிய விதைகள் வந்து அவற்றுக்குத் தோதாக வரம்பு முறையற்ற ரசாயனங்களும், அதனால் மிகவும் அதிகமான நீரும், பூச்சிக்கொல்லிகளும் பயன்பாட்டில் வந்து இன்று கோதுமை விளைவிக்கும் இடங்களெல்லாம் அதிக வியாதிகளும், புற்றுநோயும் பெருகி நிலத்தடி நீர் முற்றிலும் அற்று இருக்கின்றன!

30 வருடங்களுக்கு முன் பிறந்தவர்கள் எல்லோருக்கும் கோதுமையாக மட்டுமே விற்க/வாங்கப் பட்ட இந்த தானியம் அவரவர் தேவைக்கு ஏற்ப அவ்வப்பொழுது தெரு முனை அரவை ஆலைகளில் அரைக்க‌ப்பட்டு மாவாக உபயோகப்படுத்தப்பட்டது என்று தெரியும் - . எந்த மாவாயினும் அத‌ன் முழு வீரியம் (சத்தும் உயிரும்) ஒரு வாரத்திற்கு மேல் குறையஆரம்பித்துவிடும் என்று நமது படிக்காத பட்டிகாட்டு முன்னோர்களுக்குத் தெரியும். அதனால் சோம்பலில்லாமல் அவர்கள் பைகளில் அடைக்காத செத்த மாவுகள் இல்லாமல் இப்படி புத்துணர்வுமிக்க புது மாவினையே பாவித்தனர். இந்த ஆட்டா, அந்த மாவு என்று பல மாதங்களுக்கு நெகிழிகளில் அடைக்கப்பெற்ற சத்தற்ற மாவினை விளம்பரம் கண்டு மயங்கி ஏமாறாது இருந்தனர். அந்த மாவரைக்கும் இயந்திரங்கள், பெரும்பாலும் மர செக்குகளாக அல்லது கல் பொருந்திய இயந்திரங்களாக இருந்தன. அப்பொழுது அவை முழுக் (whole wheat) கோதுமையிலிருந்து அரைக்கப்பட்ட மாவாக இருந்தன‌ . நார்ச் சத்துடன் பொடாசியம், மக்னீசியம் போன்ற பல அரிய கனிம உப்புக்கள், மற்றும் எளிதாக செரிமானம் ஆகும் புரதமும் கொண்டு விளங்கியது கோதுமை. முழு சத்துடன், உமியுடன் இருந்ததால், எண்ணையும் இருந்தது. அந்த எண்ணையில் அதிக அளவு வைட்டமின் 'இ' இருந்தது. அதனால் சில நாட்களிலேயே ஒரு வித (கெட்டுப்போன) நாற்ற‌மும் வரும்.

ஆம்! உயிர் உள்ளவை இறக்கத்தானே செய்யும்? இன்று போல் உமி அற்ற, எண்ணையும் நார் சத்தும் அற்ற, செத்த மாவாக இல்லாததால் அப்படி. அதனால் அன்று கோதுமையாக பத்திரப்படுத்தி கிடங்குகளில் இட்டு அவ்வப்பொழுது அரைத்து நல்லுணவு உண்டனர். இன்று அவை எல்லாம் வெறும் நினைவுகளாக மட்டுமே…

இன்று?

மேலே கூறிய எண்ணையினாலும் உமியுனாலும் அதிலுள்ள சத்தினாலும் தானே நீண்ட நாட்கள் கடை அலமாரிகளில் வைக்க இயலாது? அவற்றை எடுத்து விட்டு அரைத்தால்? ஆனால் சத்து மற்றும் அந்த முழுமைத்தன்மை என்னாவது என்று நீங்கள் நினைத்தால் இந்த லாப‌ வெறி உணவு வியாபாரத்திற்கு லாயக்கற்றவர். வெள்ளை வெளேர் என்று நமது வெண்மை மோகத்துக்கும் அறியாமைக்கும் அழகாக (மைதா) மாவு!

அரிசியைப் போலவே இதற்கும் வெளியிலிருந்து (தோலிலிருந்து) உள்ளே தான் வைடமின்கள், தாது மற்றும் புரதம் ஆகிய‌ சத்துக்கள் உள்ளன. அவற்றை நீக்கி வெறும் வெள்ளையாய் கொண்டுவரப்படும் மாவு தான் மைதா- தீட்டிய அரிசியை போல முற்றிலும் மாவுச்சத்து மட்டுமே கொண்டது ! மைதா மிகவும் உடல்நலக் குறைவை உண்டாக்கக் கூடியது என்று பல ஆய்வுகள் தெளிவித்து விட்டன.

இன்றைய அவசர உலகில் வசதி என்னும் சகதியில் வீழ்ந்தவருக்கெல்லாம், இந்த சாபம் தான். அறியாமை மற்றும் அந்நியப்படுதலினால் இப்படி பாதுகாப்பில்லா சத்தில்லா உணவு. இது மட்டுமா? கோதுமை, அரிசி, கேழ்வரகு போல் அல்லாமல் உண்ணக் கூடிய உமிகொண்ட, காற்றின் மாசுக்குப் பாதுகாப்பற்ற தானியம். (exposed). இதனால் நமது இன்றைய ரசாயன விவசாயத்தில் உபயோகிக்கப்படும் கொடிய விஷங்கள் எல்லாம் இந்த தானியத்தின் மீதே இருக்கும். chemical residue என்று கூறப்படும்வேதிக் கழிவுகள் மிக அதிகமாக இந்த தானியத்தில் இருக்கும். மாவரைப்பதற்கு முன்பு கழுவக்கூட படாத இந்த தானியத்தில் எச்சங்கள் அதிகம் இருப்பது ஒன்றும் அதிசயம் அல்லவே! (கழுவுவதால் அந்த எச்சங்கள் வெளியேற்றப்படாது. இருந்தும் தூசி போன்ற மற்ற அசுத்தங்களும் இருக்கும் என்று கொள்ளவும்).

அதனால் தான் இன்றைய கோதுமையில் லின்டேன், மோனோகுரோடொபாஸ் முதல் என்டோசல்ஃபான், கான்ஃபிடோர் முதல் மாலதியான் வரை எல்லா எச்சமும் இருக்கின்றன என்று பல படிப்பினைகளும் பரிசோதனைகளும் சொல்கின்றன. இவை எல்லாம் திறந்த அந்த தானியத்திலும் அதன் gluten என்னும் ஜவ்வுப்பொருளிலும் இருக்கின்றன. இந்த எச்சங்களினால் தான் gluten அலர்ஜி என்று ஆங்கில‌ மருத்துர்களால் அறியப்படுபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். அதே ஒவ்வாமை கொண்டவர்கள் இயற்கையாக விஷமில்லாது விளைவிக்கப்பட்ட கோதுமை உண்டால் பெரும்பாலானவர்களுக்கு இந்த ஒவ்வாமை இருப்பதில்லை!

கோதுமைத் தவிடானது நீர் உறிஞ்சும் தன்மை அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுப்பதுடன் குடல் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கின்றது.

60களில் கேரளாவில், கோதுமையில் பாரத்தியான் எச்சத்தினால், 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இறக்குமதிக்கான தானியத்தை பல முறை பல‌ நாடுகள் பரிசோதனைக்கு பின் பல்லாயிரக்கணக்கான டன் இதைப்போன்ற விஷ எச்சங்களால் திருப்பி அனுப்பி விடுகின்றனர் (அமெரிக்க கோதுமைக்கு சில ஆண்டுகளுக்கு முன் டைவான், ஜப்பான் செய்தது போல்).

ஆனால் இன்று, இந்த ரசாயன எச்சத்தை விட அச்சப்படக்கூடிய பெருவிஷம் உள்ளது! அதுதான், மரபீனி மாற்றப்பட்ட கோதுமை! (பார்க்க பெட்டிச் செய்தி)

சில மாதங்களுக்கு முன், ஜப்பான் அமெரிக்காவிலிருந்து வந்த கோதுமையை , மரபீனி மாற்றப்பட்ட கோதுமை கலந்திருப்பதைக் கண்டறிந்ததால், நிராகரித்துத் திருப்பி அனுப்பியது. ஐரோப்பாவில் துறைமுகங்களைத் தீவிரமாகக் கண்காணிக்கும்படி அவ்வந் நாட்டு அரசுகள் உத்திரவிட்டுள்ளன. அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள மான்சான்டோவின் மரபீனிமாற்று கோதுமை பரிசோதனை நிலத்திலிருந்து வெளியேறி விவசாயிகள் விளைவித்த கோதுமையில் கலந்ததால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ள‌து. தன் சுய லாபத்திற்காக உலகம் முழுவதும் உணவுடன் விளையாடும் மன்சான்டோ நிறுவனம் உலக‌ம் முழுவதற்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. ஓரிகான் மாநிலத்தில் விளைவிக்கப்பட்ட கோதுமையில், ஆய்விற்காகப் பயிரிடப்பட்டு பின் கைவிடப்பட்ட மரபீனிமாற்றுக் கோதுமை வயலில் இருந்து கலந்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து கோதுமை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் கோதுமை இறக்குமதி செய்யும் ஜப்பான் தனது புதிய கோதுமை ஒப்பந்தத்திற்கான டெண்டரை ரத்து செய்துள்ளது. அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யும் பிற முக்கிய ஆசிய நாடுகளான சீனா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் இறக்குமதி கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன . ஐரோப்பிய யூனியன் நாடுகள் கலப்படம் கண்டறியப்பட்டால் கப்பல் அப்படியே திருப்பி அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளன. இந்த மரபீனிகலப்படம் ஒரு கவலைகுறிய சமாச்சாராம் தான். ஆனால் இந்த கோதுமையில் கலப்பு பல (8) ஆண்டுகளுக்கு முன்னர் மொன்சான்டோ நிறுவனம் நடத்திய களப்பரிசோதனையினால் தான். அவற்றின் எச்சங்களிலிருந்து கடந்த ஆண்டு தூய்மைக்கேடு நடந்திருக்கிறது. இந்த வகை மரபீனி கோதுமைக்கு பெரும் எதிர்ப்பு உருவானதால், 2005லேயே அந்த மரபீனிமாற்றுக் கோதுமைக்கு அனுமதி கேட்ட மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டது மொன்சான்டொ. கோதுமைக்கு பெரும் சந்தை கொண்டுள்ள நமது நாடு பெரும் ஏற்றுமதி செய்யும் நாடும் ஆகும். அகையால் நாம் பெரிதும் கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கொதுமையும், அதனின்று மதிப்புகூடிய பதப்படுத்திய எந்த பொருளும் மரபீனி கலப்பிருக்கக்கூடும். அதனால் தான் நம் நாட்டில் தன்னார்வலர்களும் விவசாயிகளும் சில நடு நிலை விஞ்ஞானிகளும் மரபீனி களப்பரிசோதனைகளையும், மரபீனித் தூய்மைக்கேட்டையும் எதிர்க்கின்றனர். இவையெல்லாம் தெரிந்திருந்தும் மரபீனிப் பயிர்களின் திறந்த வெளி சோதனைக்கு அனுமதி வழங்கியுள்ள நம் அரசை எப்படித்தான் பாராட்டுவது என்றே தெரியவில்லை!

நாம் என்ன செய்யலாம்?

  • ரசாயனக்கலப்பில்லா, இயற்கை கோதுமையையே உபயோகிப்போம்.
  • அரைத்து வெகு நாட்களாக சேமிக்கப்பட்டு அல்லது பாக்கட் செய்யப்பட்டு விற்கப்படும் கோதுமை மாவை வாங்காமல்/உபயோகிக்காமல் இருப்பது
  • முடிந்தால் நாமே (பல வட மாநிலத்தவர் வீடுகளிலேயெ வைத்திருப்பது போல்) சிறு இயந்திரங்களை கொண்டு அரைத்து கொள்வது அல்லது தத்தமது சுற்றுவட்டாரத்தில் உள்ள‌ மாவு அரவை இயந்திரங்களில் அவ்வப்பொழுது அரைத்துக்கொள்வது
  • வெளி நாடுகளில் அதிலும் அமெரிக்க, கானடா போன்ற மரபீனிமாற்றப்பட்ட கோதுமை பரவலாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பதப்படுத்தப்பட்ட தின் பண்டங்களையும் கோதுமை மாவையும் அரவே நிராகரிப்பது
  • எப்பொழுதெல்லாம் முடியுமோ இயற்கை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கி நுகர்வோம்.

அல்லது OFM (இயற்கை விவசாயிகள் சந்தை) போன்ற இயற்கை

அங்காடிகளின் வாயிலாக இயற்கை கோதுமை வாங்கி உபயோகிப்போம் வாணிபத்தின் லாப வெறியால் உணவே நஞ்சாகி விட்ட தற்கால சூழலில், தனிநபர் விழிப்புணர்வு ஒன்றுதான் நம் உணவைக் காக்க இயலும். சோம்பலைத் தள்ளிவிட்டு நம் இலையில் விழுவதை நாமே முடிவு செய்வோமே!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org