தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய பொருளாதாரக் கொள்கை

இடைப்பட்ட தொழில்நுட்பம் - உழவன் பாலா

சென்ற சில கட்டுரைகளில் வளம்பெருக்குபவையாகவும்,வேலை வாய்ப்பளிப்பதாகவும், நாட்டை அடமானம் வைக்காததாகவும் நம் பொருளாதாரக் கொள்கை இருக்க வேண்டியதன் தேவையைப் பார்த்தோம். பொருளியல் என்பதும் வாணிபம் என்பதும் தற்காலத்தில் மனித உணர்வுகளை மதிக்காது லாபம் ஒன்றையே குறியாகச் (வெறியாகச்) செல்வதையும் அதற்குத் தொழில்நுட்பமும் அறிவியலும் போர்வாட்களாய்ச் செலுத்தப்படுவதையும் கண்டோம். அந்நிய முதலீடுதான் நம் நாட்டிற்கு வேலை வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கையில் நம்மை ஆள்பவர்கள் நம் நாட்டைப் பெரு நிறுவனங்களிடம் தாரை வார்த்துக் கொண்டு இருக்கும் அவல நிலை நிலவி வருகிறது. வேலைகள் உருவாக்குவதும் உற்பத்தியை வெல்வதுவும் நாகரீக வாழ்விற்கு இன்றியமையாதது. இதில் மாற்றுக் கருத்திற்கே இடமில்லை. எனினும் நவீன‌ வாழ்வில், இயந்திர உற்பத்தியால் கடந்த 100 ஆண்டுகளில் நாம் அழித்த இயற்கை வளங்கள் அதற்கு முந்தைய வரலாற்றில் 2000 ஆண்டுகளின் அழிவிற்குச் சமம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் எவ்வாறு “அகலாது, அணுகாது தீக்காய்வது ” போலக் கையாள்வது என்பதே நம் புதிய பொருளாதாரக் கொள்கையின் முக்கியக் கேள்வி.

இக்கேள்விக்குப் பலர் பலவிதமான விடைகளைப் பரிந்துரைத்திருக்கின்றனர். அறிவியல் மேலும் மேலும் புதிய ஆற்றல் ஊற்றுக்களைக் கண்டறிந்து விடும், எனவே நாம் கவலையின்றி இருக்கும் வளங்களை அழிப்போம் என்பதே தற்போது நமக்கு மிகவும் வசதியாய் இருக்கும் ஒரு கொள்கை. உலகில் 100க்கு 98பேர் இதைத்தான் நம்புகின்றனர். வாணிப வலுவும் அதற்குச் சாமரம் வீசும் ஊடக வலுவும் நம்மை நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் மேலைநாடுகளில் இருந்து இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மிகச் சிலரே. அவர்களும் விடைகளைக் கூறாது குறைகளை மட்டுமே கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். தொழில்நுட்பத்தின் கவர்ச்சியை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களில், தோரோ, டால்ஸ்டாய், காந்தி ஆகியோர் மிக முக்கியமானவர்கள். மேலை நாட்டார் மிகவும் மதித்து நோபல் பரிசுகளை அளித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், “காந்தியின் கருத்துக்களே நம் காலத்து அரசியல்வாதிகளில் மிகுந்த ஞானம் உடையவையாக நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

காந்திக்குப் பின்னர் காந்தியின் சீடர்களான குமரப்பா, வங்கத்தைச் சேர்ந்த சதீஷ் சந்திர தாஸ்குப்தா,கிருபளானி, ஜெயப் பிரகாஷ் நாராயணன் ஆகியோர் நம் இந்திய நாட்டில் காந்தியக் கொள்கைகளைப் பரப்பியும், மேற்கத்திய தொழில்நுட்பத்தை எதிர்த்து மாற்றுக் கொள்கைகளைக் கூறியும் வந்தனர். இதே கால கட்டத்தில் ஜெர்மனியில் பிறந்து, உலகப் போரின் காரணமாக இங்கிலாந்தில் வளர்ந்த ஒரு தலைசிறந்த மாமேதை ஈ.எஃப்.ஷூமாக்கர் ஆவார். மேற்கத்திய நவீனமயமாக்குதலையும், இயந்திர மயமாக்குதலையும் அதன் உள்ளிருந்தே எதிர்த்துத் தற்காலத்தில் மிகப் ப‌ரவலாகப் பேசப்படும் பல மாற்றுப் பொருளியல் கொள்கைகளை முன்மொழிந்தவர் ஷூமாக்கர்.

இன்று உலகெங்கிலும் எல்லா நாடுகளும் பரவலாய் விரும்பும் முதலாளித்துவக் கொள்கைகளுக்கு ஒரு உருவகம் கொடுத்தவர் ஜான் கெய்ன்ஸ் என்னும் ஆங்கிலப் பொருளியல் அறிஞர். நவீனப் பொருளியலில் கெய்னீஸியப் பொருளியல் என்று ஒரு பிரிவே உண்டு. ஷூமாக்கர் இவரிடம், புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், பொருளியல் பயின்றார். அரசு முதலாளித்துவத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கொள்கைத் திசையைக் காட்டியவர் கெய்ன்ஸே. 1930ல் இரண்டாம் உலகப் போருக்குமுன் முதலாளியத்தை ஆதரித்து கெய்ன்ஸ் எழுதிய கட்டுரையில் “பேராசையும், தட்டிப் பறித்தலும், முன்னெச்சரிக்கையும் இன்னும் சில காலங்களுக்கு நாம் நம் கடவுள்களாக ஏற்றுக் கொண்டாக‌ வேண்டும். தர்மத்தை அளவுக்கு அதிகமாகப் பாராட்டிக் கொண்டிருந்தால் முன்னேற இயலாது” என்று எழுதினார். தன் ஆசிரியர் ஆயினும் அவர் கருத்துக்கள் ஏற்க இயலாதவை என்று வாதாடியவர் ஷூமாக்கர்.

1950 முதல் 1970 வரை பிரிட்டானிய‌ அரசின் , தேசிய‌ நிலக்கரி ஆயத்தின் (National Coal Board), தலைமைப் பொருளியல் ஆலோசகராகப் (chief economic advisor) பணியாற்றினார். 1955ல் அன்றைய பர்மா அர‌சுக்குப் பொருளியல் ஆலோசகராகப் பணியாற்றச் சென்றார். அப்போது அவர் எழுதுகிறார்: “நான் மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும்:

- ஏழ்மையையும் அதன் இயலாமைகளையும், எல்லைகளையும் நான் ஆராய வேண்டும் - நான் ஏழ்மையுடன் என்னை இணைத்துக் கொள்ளவேண்டும் - அதன் பின்னர் நான் ஏழைகள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள என்னால் என்ன உதவிகள் செய்ய இயலும் என்று கண்டறிய வேண்டும்”.

(இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வந்து மண்வீடு கட்டும் தொழில்நுட்பங்களை ஆராய்ந்த லாரி பேக்கர் நினைவு வருகிறதல்லவா! - பேக்கர் இந்தியா வந்து எழுதியது: “நான் பெற்ற இப் புதிய‌ கல்வியின் மிகுந்த வியப்பளிப்பதும், நம்ப இயலாததுமான அங்கம் என்னவென்றால், இவ்விநோதமான கட்டுமுறைகள் நன்கு வேலை செய்பவையாக இருந்தன. நான் விடை காண முடியாதவை என்று எண்ணிய இடர்களின் விடைகள் என்னைச் சுற்றி, நான் எங்கு சென்றாலும் காணப்பட்டன. நான் கண்ட பாரம்பரியத் தொழில்நுட்பங்கள், அண்மையில், எளிதில், கிடைக்கும் இயற்கைப் பொருட்களை வைத்து கட்டிடம் கட்டும் நுட்பங்கள், பல்லாயிரக்கணக்கான வருட‌ ஆராய்ச்சியையும், அனுபவத்தையும் உள்ளடக்கியவை என்று உணரவே எனக்குப் பல வருடங்கள் பிடித்தன. இம்மாதிரிக் கட்டிய கட்டிடங்கள் அவ்வச்சூழலின் புவியியல், நிலவியல், தட்பவெட்ப மாற்றங்கள், இயற்கை இடர்கள் (தாது, தாவர, பூச்சியின, பறவையின, மிருகங்கள் எதுவாயினும்) அனைத்தையும் சமாளித்து. அங்குள்ள மத, சமூக, கலச்சார முறைகளுக்கும் ஈடு கொடுப்பவையாக இருந்தன. எந்த நவீன இருபதாம் நூற்றாண்டுக் கட்டிடக் கலை வல்லுனருமே சாதிக்காத ஒரு பிரமிப்பான, வியத்தகு சாதனையாக இதை நான் கருதுகிறேன்.” )

மக்களை மதிக்கும் ஒரு பொருளியல் ஆய்வு (a study of economics as if people mattered) என்ற உபதலைப்பில் 1973ல் இவர் எழுதிய சிறியதே அழகு (Small is Beautiful) என்ற நூல், ராசேல் கார்சனின் மௌன வசந்தத்தைப் போல், உலகளாவிய‌ ஒரு பெரும் பொருளியல் மாற்றுச் சிந்தனைக்கு வித்திட்டது. 1968ல் இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் சிலர் கூடி இந்தியா வளர்ச்சிக் குழுமம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். இதில் இந்தியராய்ப் பிறந்து இங்கிலாந்தில் கல்வி பெற்றுப் பணி புரிந்து வந்த தொழில்நுட்ப வல்லுனரான மன்சூர் ஹோதாவும் அவரது சகோதரர் சுரூர் ஹோதாவும் முதன்மையானவர்கள். இதற்கு முன்னர் 1966லேயே மன்சூர் ஹோதாவும், ஷூமாக்கரும் இணைந்து “இடைப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக் குழுமம்” (Intermediate Technology Development Group) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். தற்போது இவ்வமைப்பு “நடைமுறைச் செயல்” (Practical Action) என்ற பெயரில் இயங்கி வருகிறது.

எல்லாத் தீர்க்க தரிசிகளைப் போலவே, இந்த மேம்படுத்துதலின் போதாமைகளை ஷூமாக்கர் அன்றே உணர்ந்திருந்தார்.1964ல் ஊரகத் தொழில்மயமாக்கல் (rural industrialization) என்ற கேம்பிரிட்ஜ் கூட்டத்தில் அவர் கூறியது -

முதலில், ஏழ்மை என்பது உலகின் மூன்றாம் நாடுகளின் உட்கிராம‌ங்களில் உற்பத்தியாகி மையம் கொண்டுள்ளது. வளர்ந்த நாடுகளின் உதவியோ, மேம்படுத்துதலோ இவ்விடங்களைச் சென்று அடைவதே இல்லை.

இரண்டாவது, இவ்வுட் கிராமங்கள் புறக்கணிக்கப் பட்டே இருக்கும்; அவற்றில் வேலையின்மையும், வறுமையும் பெருகிக் கொண்டேதான் இருக்கும் - நாம் அக்கிராமங்கள் தற்சார்பு அடைவதற்கான இடைப்பட்ட தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றின் பயன்பாட்டை அவர்களுக்கு கிடைக்குமாறு செய்யாத வரை.

மூன்றாவது, உதவி செய்கிறேன் என்று வரும் பணக்காரக் கொடை நாடுகளுக்கு இக்கிராமங்கள் பற்றிய புரிதலோ அவற்றில் எளிதாய்ச் செயல்படுத்தக் கூடிய பொருத்தமான‌(எளிமையான) தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவோ இல்லை

குறைந்த செலவு உடைய, எளிமையான, இடைப்பட்ட தொழில்நுட்பத்தை மூன்று விதங்களில் செயல் படுத்தலாம் என்று ஷூமாக்கர் எழுதுகிறார்.

  1. அவ்வவ்விடங்களில் இருக்கும் நுட்பங்களையும், செயல்களையும் மேம்படுத்துவது
  2. மேலை நாடுகளில் உள்ள பொறிகளை எளிமைப்படுத்துவது
  3. புதிய கண்டு பிடிப்புக்களை உருவாக்குவது

இதில் ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றவற்றைக் கண்டறிவதுதான் இக் குழுமத்தின் நோக்கம்.

இடைப்பட்ட தொழில்நுட்பம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஷூமாக்கர் சில குறியீடுகளை முன்வைக்கிறார்.

முதன்மையாக தொழிநுட்பக் கண்டுபிடிப்புக்கள் அவ்வச் சூழலில் இயல்பாய்க் கிடைக்கக் கூடிய இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் பயன்படுத்தி பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும்

இரண்டாவதாக பெருமளவு மக்கள் பங்கு பெறுவதாகவும், பயன்பாட்டைப் பகிர்ந்து கொள்வதாகவும் தொழில்நுட்பம் இருக்க வேண்டும். இதனால் சமூக மேம்பாடு இயல்பாக நடைபெறும்.

மூன்றாவதாக ஏழைக் கிராமங்களில்/நாடுகளில் தற்போதுள்ள தொழில்நுட்பங்களைப் பெரிதும் மேம்படுத்துபவையாக அவை இருக்க வேண்டும். மேற்கு நாடுகளில் இருந்து காப்பியடிக்கப் படும் தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் பயனற்றவையாகவே இருக்கும்.

நான்காவதாக, நாட்பட நாட்பட இத்தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவோரின் வாங்கும் திறனுக்கும், பயன்படுத்தும் நுட்பத்திற்கும் ஏற்றவாறு வளர்பவையாக இருக்க வேண்டும்.

ஏழ்மைக்கு மூன்று காரணிகளை ஷூமாக்கர் பட்டியலிட்டார். “நம்மைச் சுற்றிப் பார்த்தால் ஏழைநாடுகளில் வளம் என்பது சற்றும் குறைவாயில்லை. கல்வியின்மை, அமைப்பின்மை மற்றும் ஒழுக்கமின்மை (lack of education, organization and discipline) ஆகிய மூன்று காரணங்களே வறுமைக்குக் காரணம்” என்றார். இவ்விடைப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக் குழும‌த்தின் செயல்முறைகளையும், உதாரணங்களையும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org