தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கவிதைப் பக்கம் - அர‌.செல்வமணி


தீய்ந்துவிட்ட பல்லுயிரால் தெரிவதினித் தாழ்வே!

மண்ணாளப் பிறந்தவர்கள் மண்வளத்தை மறந்தார்
மாளாத காசுக்கே மதியிழந்து போனார்
விண்தொட்ட கானெல்லாம் வீணாகத் தொலைத்தே
விளைநிலத்தில் பல்லுயிரை வீழ்த்தியிங்குக் குலைத்தார்
மண்ணுயிர்கள் தொலைந்தின்று மலடான மண்தான்
மங்கிவிட்ட விளைச்சலினால் மனமெல்லாம் புண்தான்
மண்ணின்றிப் பயிர்வளர்ப்போம் மாண்புடனே என்பார்
மாடியிலே செடிவளர்த்து மகிழ்ந்தவரும் தின்பார்
நுண்ணுயிர்கள் பெருகியமண் நோயெதிர்ப்பைக் கொடுக்கும்
நோய்காணாப் பயிர்பலவும் ஊதியத்தை அடுக்கும்
வண்ணவண்ணப் பறவைபல வாழ்ந்திருந்தால் மட்டும்
வளங்குன்றா வேளாண்மை வாழ்நாளில் கிட்டும்
மண்வளத்தைக் காப்பதென்றும் மரபுவிதை ஒன்றே
மலட்டுவிதை மண்டியதால் வளமிழந்த தின்றே
மண்தின்னும் பொருள்களாலே மாண்பெய்தும் நாடே
மக்காத நெகிழிகளால் மாளாத கேடே
மாந்தரைப்போல் வேறெதுவும் மண்கெடுப்ப துண்டா
மணியான ஆறறிவால் வளர்ச்சியிதோ கண்டார்!
வேந்தரான கும்பனிகள் வேதிகளால் நிலைத்தார்
வெகுவாக மண்வளத்தை வீணாக்கித் தொலைத்தார்
ஏந்துபல பெற்றபின்னும் எந்நாளும் பதற்றம்
ஈடில்லா நுகர்வுக்கே இரையாகும் குற்றம்
சீந்துகின்ற பணத்தாலே சிறைப்பட்ட வாழ்வே
தீய்ந்துவிட்ட பல்லுயிரால் தெரிவதினித் தாழ்வே!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org