தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம்


மக்களின் வருமானம்

(இந்திய விவசாயிகளின் பொருளாதார பின்புலம் என்ற தலைப்பில் ஆக்ஸ்போர்டு கையேடுக்குக் குமரப்பா எழுதியளித்த‌தில் ஒரு பகுதி)
கிராம இயக்கம் எதற்காக? (Why the Village Movement) என்ற நூல்; அத்தியாயம் .

தமிழில் அமரந்தா

தேசிய வருமானத்தை அளவிடவும், அதன்வழி தனிநபர் வருமானத்தை அளவிடவும் பின்னர் அதனைக்கொண்டு இதுபோன்று கண்டறியப்பட்ட பிற நாடுகளின் மக்கள் வரும்படியோடு ஒப்பிடவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன‌. சமீபத்தில் பிரிட்டனின் கீழ் இந்தியாவின் தேசிய வருமானம் குறித்து அறிக்கையை பேராசிரியர் வீ.கே.ஆர்.வி.ராவ் அளித்துள்ளார். இதன்படி தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ 62 மட்டுமே. சிலவகை அளவீடுகளுக்கு இத்தகைய கணக்குகள் பயன்படும் என்றாலும் கிராமப்புற உண்மை நிலையை சித்தரிப்பதில் இவை முற்றிலும் தவறாகவே உள்ளன. இதுபோன்ற கணக்குகளை முன்வைப்பதில் பல போதாமைகள் இருப்பதென்னவோ உண்மைதான். கிடைத்துள்ள புள்ளி விவரங்களில் பாதுகாப்பின்மையும் நம்பகமின்மையும், கணக்கீட்டு முறையின் சமமின்மையும் சராசரியை எட்ட, மிகப் பரந்த நிலப்பரப்பை ஆய்வுக்குட்படுத்துவதும் இந்தக் கணக்கின்மீது அளவற்ற நம்பிக்கை வைப்போரை ஏமாற்றிவிடக்கூடும். இவ்வகைக் கணக்கீடு, மாத வருவாய் ரூபாய் ஐந்து என்ற முடிவுக்கு வருகிறது. ஆனால் உயிர்வாழத் தேவையான சரிவிகித உணவு போதுமான அளவுக்கு கிடைக்க வேண்டுமானால் இந்த வருமானம் போதவே போதாது. பிறகு துணிமணிக்கும், வசிக்க‌ நிழலுக்கும் எங்கே போவது?

கிராமங்களின் மெய்யான வருமானக் கணக்காய்வு மூலம் கிட்டும் விவரங்கள் ஏறக்குறைய சரியாகவும் நம்பகமாகவும் இருக்கும். இந்த அறிக்கையை முன்வைக்கும் எழுத்தாளர் (ஜே.சி.குமரப்பா) மட்டர் தாலுக்காவின் 50க்கு மேற்பட்ட கிராமங்களில் திரட்டிய விவரங்களின் அடிப்படையில் எட்டப்பட்ட சராசரி தனி மனித வருமானம் ஆண்டுக்க ரூ14/- (மட்டர் தாலுக்கா ஆய்வு : பக்கம் - 70). குஜராத் மாநிலத்தின் இந்த தாலுக்கா ஒப்பீட்டளவில் சற்று வளமிக்க பகுதி என்பதோடு பிற இந்திய மாநிலங்களைவிட குஜராத் மாநிலம் சற்று மேம்பட்ட நிலையில் உள்ளதாகும்.

விவசாய சமூகங்களின் வருவாய் குறித்த சரியான தகவல் நிலத்திலிருந்து கிடைக்ம் வருவாயைக் கொண்டு அளந்தால் கிடைக்குமேயன்றி, பணத்தை கொண்டு அதை அளக்க முடியாது. இந்தியாவின் மத்திய மாநிலங்களைச் சேர்ந்த 600 கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சராசரி தனி மனித வருமானம் ஆண்டுக்க ரூ 12/- என்று காட்டுகிறது (மத்திய மாநிலங்கள் தொழில் ஆய்வுக் கமிட்டி அறிக்கை பகுதி I). குறைந்த சத்துள்ள உணவில் பாதியைக்கூட இத்தொகையைக் கொண்டு பெறமுடியாது. ஆக, மொத்த வருமானத்தையும் உணவுக்கே செலவிட்டால்கூட மக்கள் அறை வயிற்று உணவோடு காலந்தள்ள வேண்டியது தான்.

ஏனிந்தக் குறைந்த வருவாய்?

வாழ்க்கைத் தரம் சராசரியை விடக் கீழ் என்ற நிலையில் அதற்கான காரணங்களை அறிய நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். துறவு மனப்பான்மையை நலிந்த வாழ்க்கைத் தரத்திற்குக் காரணமாக எடுத்துரைப்பது தவறாகும். மக்கள் அரைப் பட்டினி கிடப்பது வ‌றுமையானால் தானேயொழிய மெலிந்த உடலைப்பேணுவதற்காக அல்ல. தேவையை நிறைவேற்றிக் கொள்ளுமளவிற்கு அவர்களிடம் வாங்கும் திறனில்லை. மக்கள் உழைப்பாளிகளாகவும் அறிவாளிகளாகவும் இருக்கையில் அவர்கள் திறமையற்றவர்கள் என்று கூறுவது வெற்றுப்பேச்சு. அவர்களது வாழ்க்கைத் தரம் தாழ்வாக இருப்பது ஏனென்று அறிய வேறு திசையில் காரணம் கண்டறிய வேண்டும்.

கடினமாக உழைக்க விரும்பும் புத்திசாலி மனிதன் போதிய வருமானம் கிட்டும் வேலை கிடைக்காதவனாக இருக்கலாம். ஆல்லது கிடைக்கும் வேலைக்கு செலுத்தும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காதிருக்கலாம். வாழ்க்கைத் தரம் குறைவாக இருப்பதற்கு அவன் காரணமல்ல நம் நாட்டில் பொதுவாக நிலவும் உண்மையிது.

பணமும் கடன் பொருளாதாரமும்

நம் நாட்டில் அனைத்து விதமான சரக்குகளுக்கும் போதுமான உள்நாட்டுச் சந்தை இருக்கிறது. இந்தச் சந்தையை சரிவரப் பேணியிருந்தால் மக்கள் உற்பத்தி செய்யும் சரக்குகளுக்குக் குறைவில்லாத சந்தை கிடைத்திருக்கும். கடந்த நூற்றாண்டில் பணப் பொருளாதாரமும் அது பெற்ற கடன் என்னும் பிசாசுக் குழந்தையும் தமது கொடுங்கரங்களை விரித்து, உள்நாட்டு சந்தைகளைச் சீரழித்து அந்நிய தொழில்களைப் பெருக்கச் செய்துவிட்டன. வாங்கு திறனைக் கைமாற்றப் பணமும் கடனும் வரைமுறையின்றிப் பயன்படுத்தப்படுகின்றன. நேர்மையான பரிமாற்றம் வெறும் சந்தை மதிப்பை பொறுத்ததல்ல; அதில் மானுட மதிப்பீடும், அற மதிப்பீடும் கூட பரிமாற்றப்படுகின்றன. விரைவில் அழுகக்கூடிய வாழையும் மீனும் விற்பவரின் பலமும் அழியாத்தன்மை கொண்ட தங்கத்தை வைத்திருப்பவரின் பலமும் ஒன்றல்ல. பணப்பரிமாற்றம் விரிவடைந்து சமநிலை, அறம் ஆகியவற்றைக் குறித்த சிந்தனைகளை துடைத்தெறிந்து விட்டது. வாங்குவதற்கான பணத்தைக் கொடுக்க முடிந்தால் அந்தப் பரிவர்த்தனை குறித்து மேலே எதுவும் கூற வேண்டியதில்லை இத்தகைய வர்த்தகம் உலகின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சந்தையை விரிவாக்கலாம் ஆனால் செல்வத்தையும் மதிப்பீடுகளையும் சமமாகப் பரிவர்த்தனை செய்ய இயலாது. வுரம்பற்ற இந்த விரிவாக்கம் தூரதேசங்களுக்கு கச்சாப் பொருள்களை ஏற்றுமதி செய்யவும் உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளை தூரதேசங்களிலிருந்து இறக்குமதி செய்யவும் வழிவகுத்து விட்டது. இதன் விளைவாகத்தான் முன்பு குறிப்பிட்டது போல் உழைப்புக்குத் தகுந்த ஊதியம் நம் நாட்டில் கிடைக்காமல் போகிறது.

இந்தியாவின் பழைய பரிவர்த்தனை முறை பணமும் பண்டமாற்றும் இனைந்த ஒன்று. அதில் மானுட தேவைகளுக்கு இடமுண்டு. கைத்தொழில் செய்யும் தச்சர், கருமான், அம்பட்டர், துப்புரவு செய்வோர் ஆகியோருக்கு வாழ்க்கை நடத்தப் போதுமான சம்பளம் சமூகத்திற்கு அவரவர் செய்த சேவை அடிப்படையில் அறுவடை நேரத்தில் தானியமாக வழங்கப்பட்டது. இந்த முறை விரைவாக அழிந்து வருவதால் வாழ்வாதாரமிழந்து அன்றாட வாழ்வே பலருக்கும் பெரும் போராட்டமாகிவிட்டது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org