தண்ணீரின் அளவு, தரம் ஆகிய இரண்டையும் போற்றிக் காத்து அதிகரிப்பது குறித்து நாம் உடனடியாகக் கவனஞ் செலுத்தவேண்டும். இல்லையேல் அடுத்த முப்பதாண்டுகளுக்குள் நம்மில் பெரும்பாலானோர் மிகக் கடுமையான தண்ணீர் மற்றும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்வோம்! இது ஏதோ 'அடுத்தவர் பிரச்னை' என்றும் நமக்கு இந்நிலை வராது என்றும் இறுமாப்புடன் இருந்தால் ஏமாற்றமும் அதிர்ச்சியுந்தான் மிஞ்சும்.
நம் நீராதரத்தை எப்படிக் காப்பது? சுருக்கமாகச் சொன்னால் "நுகர்வைப் பெருமளவு குறைத்துத் தண்ணீர்ச் சேமிப்பைப் பெருமளவு அதிகரிக்கவேண்டும்!” தண்ணீர்த் தட்டுப்பாடு, சூழல் மாசுபாடு, மனித உரிமை மீறல் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாகவும் கூட்டாகவும் காரணிகளாக இருக்கிறோம். (உண்மையில், பெரும்பாலான சிக்கல்களில் தனி மனிதர் பங்கு, குமுகளாவிய பங்கு எனப் பிரித்து அடையாளம் காண்பதே கடினமானது!) எனவே தீர்வுகளும் இவ்விரு தரப்புகளில் இருந்தும் வரவேண்டும் என்பதையும் மனத்தில் கொள்ளவேண்டும். இனி இது குறித்துச் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.
அ. அனைத்துவகை நுகர்வையும் பெருமளவு குறைக்கவேண்டும்!
இருபதாம் நூற்றாண்டில் உலக மக்கள் தொகை மூன்று மடங்கு அதிகரித்தது; ஆனால், உலகத் தண்ணீர்ப் பயன்பாடு ஏழு மடங்கு உயர்ந்தது. எனவே, மக்கள் தொகைப் பெருக்கமே நம் இன்னல்களுக்கெல்லாம் தலையாய காரணம் என்று வறியோர் மீது பழி போடுவது மாபெரும் பாவச் செயலாகும்! அதுபோலவே, இந்தியர்களின் சராசரி நுகர்வும் சூழல் தாக்கமும் குறைவு என்று "வறியோர் பின்னால் ஒளிந்துகொள்வதும்" மன்னிக்கமுடியாத குற்றமே! (ஏனெனில், இந்தியர்களில் பெரும்பாலானோருடைய நுகர்வு மிகக் குறைவு!)
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் கிராமத்தில் உள்ள நண்பர் திரு. பூவேந்தரசு என்பவர் தனது சொந்த விவசாய நிலத்தில் இயற்கைமுறையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்துள்ளார். நான் சென்று பார்த்த பொழுது அவர் நிலங்களில் அறுபதாம் குருவை, சீரகசம்பா, வெள்ளை பொன்னி, தூயமல்லி போன்ற ரகங்கள் தலா 50 சென்ட் வீதம் நடவு செய்து இருந்தார். அனைத்து ரகங்களும் 15 நாட்களில் அறுவடைக்காக காத்திருந்தது. அவர் கடந்த மூன்று வருடங்களாக இயற்கை முறையில் விவசாயம் செய்வதாகவும் அதுமட்டுமல்லாமல் 'அன்பு அறக்கட்டளை' என்ற ஒன்றை நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் இயற்கை வழி வேளாண்மைப் பண்ணைகளை உருவாக்கும் ஒன்று என்று கூறினார்.
கடத்தூரைச் சுற்றியுள்ள கதிர்நாயக்கன்பட்டி, பத்தலஹள்ளி, குண்டல்பட்டி, ஒடசல்பட்டி போன்ற கிராமங்களில் 12 விவசாயிகளுக்குப் பாரம்பரிய விதைகளைக் கொடுத்து விதைநெல் உற்பத்தி செய்ய அன்பு அறக்கட்டளை மூலம் நிதி உதவியும் செய்துள்ளார். விதைகள் இலவசமாகவும் வழங்கியுள்ளார். 12 விவசாயிகளையும் நேரில் சென்று என்னிடம் அறிமுகம் செய்து அவர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதையும் காட்டினார்.
பூவேந்தரசு அவர்கள் கூறிய ஒரு வியப்பான செய்தி, தாளாண்மை படிக்க ஆரம்பித்த பின்தான் பாரம்பரிய நெல்ரகங்களின் அருமை புரிந்தாகவும், நம் தாளாண்மையின் அனந்து அவர்களின் அறிவுரையின் காரணமாகவே அன்பு அறக்கட்டளை வளர்ந்து உள்ளதாகவும், அறக்கட்டளை வளர்ச்சிப் பணிகளுக்கு அனந்து முழு ஒத்துழைப்புத் தந்தாகவும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். அன்பு அறக்கட்டளையின் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளை வடிவமைத்துத் தந்தது அனந்துவே என்று சொல்லி செயல் திட்டங்களையும் பட்டியலிட்டார்.