நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


மரங்களின் புதல்வர் மணி

நம் வாசக நண்பர்களில் ஒருவர் சென்ற மாதம் நம்மை அலைபேசியில் அழைத்து, தமிழ் வேளாண் மக்கள் நலனுக்காகவே தம் வாழ்நாளில் பெருமளவு பாடு பட்ட இருவரைப் பற்றி நம் இதழில் தெரிவு படுத்த வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார். இம்மாதம் அவர்களில் ஒருவரான திரு. பி. எஸ். மணி அவர்களைச் சந்தித்து அவருடன் சில மணி நேரம் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. அவர் சென்னை மடிப்பாக்கம் பகுதியில் தன் மனைவி, மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

அவர் அலைபேசியில் கூறியபடி மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கினோம். அவ்விடத்தில், வழக்கமான சென்னையின் பெரு ந‌கர பகட்டுககள் குறைவாக காணப்பட்டது மனதிற்கு இதமாக இருந்தது. மதியத்தின் இறுதி, இளமாலை நேரம். காய்கறி, பூ, கீரை போன்றவை விற்கும் பெண்டிர் தம் சாலைக்கடைகளை அமைத்துக் கொண்டிருந்தனர். வெயிலின் சூடு சற்றே குறைந்து, மெலிய கடற்காற்று பல வித மனித கட்டமைப்புத் தடுப்புகளையும் மீறி, நகருக்குள் நுழையத் தலைப்பட்டுக் கொண்டிருந்ததது. வழியில் ஒருமுறை மீண்டும் அவரை அலைபேசியில் அழைத்து செல்லும் வழி சரியானதா என்று உறுதி செய்து கொண்டு, திரு மணி அவர்களின் வீட்டை அடைந்தோம். அவர் வீட்டு வாசலில் நம்மை எதிர் நோக்கி நின்றிருந்தார். வீட்டிற்குள் சென்றமர்ந்ததும், துணைவியாரிடம் நமக்கு மோர் தருமாறு கேட்டுக்கொண்டார். நம்மை பற்றி சிறிய அறிமுகத்துக்குப் பின் உரையாடலைத் துவங்கினோம்.

திரு. பி. எஸ். மணி அவர்கள் நீண்ட காலம் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையில் பணியாற்றியவர். பல உயர் பதவிகளை வகித்தவர். இவரைப் போல் பலர் உள்ளனர். எனினும் ஒரு விவசாயி நம்மை ஏன் இவரைக் குறிப்பாக இத்தொடரில் எழுதுமாறு கோரினார் என்பதன் காரணம் நமக்கு அவருடன் உரையாடுகையில் தெள்ளத் தெளிவாகிறது. தாம் மேற்கொண்ட பணியின் உண்மையான இலக்கை உணர்ந்து அவர் செயல் பட்டிருக்கும் விதம் நம்மை வியப்பிலாழ்த்துகிறது. அவருடைய பணிக்காலத்தில் தாம் எடுக்கும் முடிவுகளும், செய்யும் செயல்களும் விவசாயிகளுக்கு சரியான பயன் அளிக்குமா என்று சீர் தூக்கி, வேறெந்த கட்டாயங்களுக்கும் இடம் தராமல் செயலாற்றியுள்ளார்.

பரமக்குடியில் அவர் தம் துவக்க நாட்களில் பணியாற்றினார். அப்பகுதியின் நீர்வளக்குறைபாடு நாம் நன்கறிந்ததே. அங்குள்ள குறு விவசாயிகள் வறட்சி மிகும் காலங்களில், தம் பொருளாதாரச் சிக்கலை எதிர் கொள்ள ஏர் எருதுகளை விற்று விடுவதை வழக்கமாக செய்து வந்தனர். பின்னர் மழை வரும் நாட்களில் வாடகை மாடுகள் கிடைக்காமல், பயிர் பருவத்தைத் தவற விட்டு மேலும் இன்னலுக்கு ஆளாகிக் கொண்டிருந்தனர். இவர்களின் இத்துன்ப நிலையை போக்க‌ திரு மணி அவர்கள் ஆழ்ந்து சிந்தித்தார். அவ்வட்டாரத்தின் மண் நிலைக்கு ஏற்ற, வறட்சியை தாங்கி வளரும் சில மரவகைகளை தேர்வு செய்து அவ்விவசாயிகளை வரப்போரம் வளர்க்குமாறு அறிவுறுத்தினார். அவரது அறிவுரை அவ்விசாயிகளுக்கு அடுத்த முறை வறட்சியின் போது கை கொடுத்தது. எருதுகள் விற்கப்படாமல், அம்மரஙகள் வெட்டி விற்கப்பட்டன. நம் பொதுவான எண்ணத்தில் மரங்கள் வெட்டப்படுவது சரியானதல்ல என்ற எண்ணம் தோன்றலாம். எனினும் சிரமத்திலுள்ள ஒரு சிறு விவசாயிக்கு ஏர் மாடுகள் இல்லாத நிலை, அவரின் அடிப்படை வாழ்வாதாரத்தையே உலுக்கக் கூடும். அக்கண்ணோட்டத்தில் காண்கையில், நம் நாயகர் எளியோருக்காக எண்ணி அவர்கள் துன்பம் குறைக்க செய்த முயற்சியின் முக்கியத்துவம் புரிபடும்.

திரு. மணி அவர்கள் தம் பணிக்கு அப்பாற் பட்டு ஒரு அற்புத தகவல் களஞ்சியத்தை உருவாக்கி உள்ளார். ஐந்து பாகங்களாக அவர் எழுதி, சென்சுரி புத்தகாலயத்தினரால் பதிப்பிக்கப் பட்ட வளம் தரும் மரங்கள் என்ற புத்தகம், இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் படித்துப் பாதுகாக்க வேண்டிய புதையல்.

இவ்வைந்து பாகங்களில் திரு. மணி அவர்கள் இரு நூறுக்கும் மேற்பட்ட மரங்களைப் பற்றி

1.தாவரக் குடும்பம், அறிவியற் பெயர்
2.இலையமைப்பு, நிறம், பட்டையின் தன்மை போன்ற தோற்ற விவரங்கள்
3.பூக்கள் காய்களின் நிறம், தன்மை, பருவங்கள்
4.வளர்வதற்கேற்ற சூழல், வளர்ப்பில் நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சி / பணிகள்
5.மரத்தின் மருத்துவப் பயன்கள்
6.அதன் தொழில், உணவு முதலான பயன் பாடுகள்
7.கால்நடை உணவுக்கு உகந்த‌தெனில் பயன் படுத்தும் முறை

இன்னும் பல தகவல்களை விரிவாக எழுதியுள்ளார். அன்னாருடைய ஆழ்ந்த அறிவு, மரங்களை அவர் எவ்வளவு நேசிக்கிறார், நம் மண்ணின் வளம் பற்றிய அவரின் அக்கறை எத்தகையது ஆகிய‌வை இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்களால் நன்றாக உணர முடியும். ஒரே வருத்ததிற்குரிய செய்தி என்னவென்றால் இப்புத்தகத்தின் பிரதிகள் இப்போது விற்பனையில் இல்லை. நம் வாசகர்களோ அல்லது தாளாண்மை அங்கத்தினர்களோ ஒரு மறு பதிப்புக்கு முயற்சித்தால் பலரும் பயன் பெறக் கூடும்.

அய்யா மணி அவர்கள் கோவையில் வேளாண்துறை மேலதிகாரியாக பணியாற்றிய பொழுது, ஒரு வருடம் பருவ மழை அறவே பொய்த்து விட்டது. தென்னைக்கு பெயர் பெற்ற பொள்ளாச்சி வட்டத்தில் பல தென்னந்தோப்புகள் நிறைய மரங்களை இழந்து வறண்டு வேதனையான நிலையில் இருந்தன. அய்யா அவர்கள் அத்தோப்புகளுக்கு சென்று விவசாயிகளைச் சந்தித்து, இஸ்ரேல் போன்ற நீர்வளம் குறைந்த நாட்டில் அவர்கள் எவ்வாறு திட்டமிட்ட நீர் மேலாண்மையின் மூலம் சிறப்பாக விவசாயம் செய்கிறார்கள் என்பதை விளக்கி, செயல்முறைப் பாடமும் பயிற்றுவித்திருக்கிறார். மீண்டும் மீண்டும் பயிற்சி மற்றும் தொடர்கண்காணிப்பு மேற்கொண்டு அவ்விடரின் பாதிப்பை ஓரளவு குறைத்திருக்கிறார். இது அவரது அடுத்த புத்தகத்துக்கு அடித்தளமாகியது. நீர் மேலாண்மையில் தமிழகம் அறிய வேண்டிய, கடைபிடிக்க வேண்டிய மாற்ற்ங்கள் பற்றி ஒரு ஆய்வு புத்தகம் எழுதினார் (The irrigation problems of Tamilnadu). இப்புத்தகம் தமிழ்நாடு வேளாண்மைத்துறை பெட்டகத்தில் இருக்கலாம் என்று எண்ணுகிறோம். அதைப்பற்றி பேசுகையில் அய்யா, மலைகளில் நாம் அமைத்த தேயிலைத் தோட்டங்கள் கோவை போன்ற மலைக்கு கீழுள்ள விளை நிலங்களை எவ்வாறு நீண்ட கால பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளன‌ என்று விவரித்தார்.

அவர் இயந்திரக் கலப்பை ஒரு சரியான தீர்வல்ல என்ற தம் எண்ணத்தை வெளிப்படுத்தினார். இயந்திரக் கலப்பை பயன் படுத்தும்போது, மண் அதன் சுமையால் அழுந்தி இறுகி விடும். நாம் விதைக்கும் பயிர்களுக்கு வேர் பரவ இவ்விறுகிய மண்ணே ஒரு இடையூறாகக் கூடும். எனினும் இப்பொழுது அதுவே யதார்த்தமாகி விட்டது என்பதையும் ஏற்றுக் கொள்கிறார். அவர் கற்ற‌வரும் உழுதால் மட்டுமே (white collar ploughing) பிற்காலத்தில் ஏர் உழவு நிலைக்கும் என்று அன்றே தாம் உணர்ந்ததாகக் கூறினார். அவர் பணியிலிருந்த சமயம் தம் சக பணியாளர்களுடன் மாடுகள் பூட்டும் ஏர் இன்னும் நவீனப் படுத்தப்பட வேண்டும் என்ற உந்துதலில் ஒரு சிறு பொறியியல் ஆய்வை துவங்கினார். இயந்திரக் கலப்பை போலவே, வெவ்வேறு வகையான நுகம் மாற்றும்படியான, ஏர் ஓட்டுபவர் அமர்ந்து செல்லும்படியான இருக்கையுடன் (அவ்விருக்கைக்கு மேல் நிழற்குடையும் உண்டு) ஒரு ஏர் செய்யும் முயற்சிதான் அது. அதைப் பற்றி நாம் இன்னும் விரிவாகக் கேட்ட போது, சிரித்துக் கொண்டே ” நாங்கள் எல்லொரும் அதை தொடராமல் விட்டு விட்டோம். அது வடிவு பெறாத்தற்கு எங்கள் முனைப்புக் குறைவே காரணம்” என்று மிகுந்த தன்னடக்கத்துடன் கூறுகிறார்.

நமக்கு அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தால் இன்னும் பல புது எண்ணங்களும் வேளாண்மையின் அடிப்படையான கேள்விகளுக்கு தக்க தீர்வும் கிடைக்கும் என்று தெளிவாகப் புரிந்தது. எனினும் நேரம் என்னும் கட்டில் நாம் யாவரும் சிக்கி உழல்வதால், அவரிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டோம்.

பொது நோக்கில் எளிதாக எண்ணக் கூடிய ஒரு அரசுப் பணியில், அதிலுள்ள தார்மீக பொறுப்பையும், சமூகத்துக்கு அப்பணியினால் தாம் ஆற்றக்கூடிய பயனையும் உள்வாங்கி, ஒரு சிறு தன்னல எண்ணமுமின்றி செவ்வனே செய்து முடித்த ஒரு மாபெரும் கர்ம வீரரைச் சந்தித்த மன நிறைவுடன் வருகிறோம். பேருந்தின் நெரிசலும், சென்னை மாநகர ஓசைகளும் நம்மை சிறிதளவும் பாதிக்கவில்லை.

தொடர்பிற்கு: செம்மல் - 99944 47252 ; பி.எஸ்.மணி - 93825 86311

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org