கற்பதும் கசடும் - ஜெய்சங்கர்


[கற்பதும் கசடும் தொடரைப் படித்து விட்டு நண்பர் ஜெய்சங்கர் இந்தக் கட்டுரையை அனுப்பியிருந்தார். சம‌ச்சீர்க் கல்வி, கவைக்குதவா ஏட்டுக் கல்வி, அனைவருக்கும் ஒரே பாடத் திட்டம் போன்றவற்றின் அடிப்படைக் காரணங்களை அவர் மிக நுட்பமாக விளக்கியுள்ளதால் அதை அப்படியே பிரசுரிக்கிறோம். - ஆசிரியர்]

கற்பதும் கசடும் தொடரில் எழுத்தறிவு என்பது பூதமா இல்லையா என்று பல கோணங்களில் ஆய்ந்தோம். சாக்ரடீஸ் எழுத படிக்க தெரியாதவர் என்பது வியப்பான செய்தியே. பழங்குடியினருக்கு கல்வி, நாகரிகம் என்ற பெயரில் எவ்வாறு அவர்களுடைய, அடிப்படைகளை, அடையாளங்களை அழிக்கிறோம் என்று ஆனந்த குமாரசாமி சொல்வதையும் பார்த்தோம். இவைகளின் அடிப்படையில் எங்கள் கிராமத்தில் எழுதப் படிக்கத் தெரியாத பழங்குடியினருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்வது முக்கியம் என்று நினைக்கிறேன்.

எங்கள் பண்ணையில் வேலை செய்யும் பெரும்பாலான மக்கள் எழுதப் படிக்க தெரியாதவர்கள். பள்ளிக்கு செல்லாதவர்கள் அல்லது இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பு வரை பள்ளி சென்றவர்கள். அதில் ஒருவருக்கு இரண்டு மகன்கள். ஐந்து வருடங்களுக்கு முன்னர் நாங்கள் இந்த பண்ணைக்கு வந்த போது ஒருவன் வணிகவியலில் அந்த வருடம்தான் இளநிலை பட்டம் பெற்றவன் (B.Com). இன்னொருவன் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

பட்டம் பெற்றவனுக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யுங்களேன் என்ற கோரிக்கையை அவனது தந்தை என்னிடம் வைத்தார். நம்மால் இயன்றதை செய்வோம் என்று எண்ணினேன். அப்போது பண்ணையில் தங்குவதற்காக ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்த சமயம். சேலம் சென்று வீட்டின் தரைக்கு தேவையான மண் ஓடு (Terracotta Tiles) வாங்க சென்று கொண்டிருந்தேன். அப்போது பட்டம் பெற்ற பையனை ஓடு வண்டியில் அடுக்குவதற்காக உடன் அழைத்துச் சேல்லும்படி நேர்ந்தது. சேலம் செல்லும் வழியில், பையனிடம் பேச்சுக் கொடுத்தேன். நமது வீடு, பதினோரு அடிக்கு இருபத்தியாறு அடி. நாம் வாங்கப் போகும் ஓடு முக்கால் அடிக்கு முக்கால் அடி என்றால் எத்தனை ஓடு வாங்க வேண்டும் என்று கேட்டேன். என்ன ஆச்சரியம்! எப்படி அதை கணக்கிடுவது என்றே அவனுக்கு புரியவில்லை. சரி…முக்கால் அடிக்கு முக்கால் அடி ஓடு என்பதால் சிரமமாக இருக்கிறது போலும் என்று எண்ணி, ஓடு ஒரு அடிக்கு ஒரு அடி என்றால் எத்தனை ஓடு என்று கேட்டேன். மீண்டும் அச்சரியம்!! எந்த விதமான பதிலும் எனக்கு கிடைக்கவில்லை. திரும்பி வந்த பிறகு அவனது தந்தையிடம் அதே கேள்வியை கெட்டேன். அவர் பள்ளிக்கு சென்றதில்லை. எழுதப் படிக்க தெரியாதவர். கேள்வி கேட்டவுடன் அவர், முக்கால் அடி ஓடா… பதினோரு அடியில் ஒரு பதினைந்து ஓடு பிடிக்கும்… இருபத்தியாறு அடியில் சுமார் முப்பத்தியைந்து ஓடி பிடிக்கும்…அப்படியானால் மொத்தம் ஐநூற்றி ஐம்பது ஓடு வாங்கினால் சரியாக இருக்கும் இல்லையா? என்று இதை நீங்கள் படிக்க ஆகும் நேரத்தை விட விரைவாக சொல்லி விட்டார். அவர் இவ்வளவு விரைவாக விடை சொன்னதில் எனக்கு அச்சரியமே இல்லை. அது நான் எதிர்பார்த்ததுதான். இளநிலை பட்டம் பெற்றவன் சொல்லாததுதான் ஆச்சரியம்.

மேலும் ஒரு அனுபவம். அதே குடும்பத்தில் நெல் அறுவடை. நெல்லை எங்கள் களத்தில் கொண்டு வந்து தூற்றி மூட்டை கட்டி வைத்துக் கொண்டிருந்தனர். அவரது இரண்டாவது மகன், ஒன்பதாம் வகுப்பு படிப்பவனும் உதவி செய்து கொண்டிருந்தான். (நல்ல விஷயமே!) நான் அவர்களிடம் மொத்தம் எவ்வளவு கிலோ நெல் அறுவடை என்று கேட்டேன். அதற்கு தந்தை, யார் எடை போட்டு பார்த்தார்கள். இதோ இது மாதிரி ஏழு சிப்பம் கிடைத்தது என்றார். அப்படியா! ஒரு சிப்பம் சுமார் எவ்வளவு எடை என்று தூக்கி பார்த்து சொல்லுங்கள் என்றேன். அவர் ஒரு முப்பத்தியைந்து கிலோ இருக்கும் என்றார். நான் இரண்டாவது மகனிடம் சரி… ஒரு சிப்பம் முப்பதியைந்து கிலோ என்றால் ஏழு சிப்பம் மொத்தம் எவ்வளவு எடை என்று கேட்டேன். அவனால் அதற்கு விடை சொல்ல இயலவில்லை. மீண்டும், பள்ளிக்கு செல்லாத அவனது சித்தப்பா பேச்சு வாக்கில், ஒன்று முப்பதியைந்து கிலோ என்றால் இரண்டு எழுபது கிலோ, நான்கு நூற்றி நாற்பது, ஆறு இருநூற்றி பத்து, ஏழு இருநூற்றி நாற்பத்தியைந்து கிலோ, சரியா… என்று கேட்டார். இந்த கேள்வியை மட்டும் கேட்டு விட்டு உள்ளே ஓடிச் சென்ற அவர் மகள் (நான்காவது வகுப்பில் பயில்பவள்) சிறிது நேரம் கழித்து வந்து, அண்ணா… இரண்டு சிப்பம் எழுபது கிலோ… என்று சொல்லி விட்டு மீண்டும் உள்ளே ஓடி விட்டாள், மீதி கணக்கு போட. அவளும் ஒன்பதாவது படிக்கும் போது இரண்டு மூட்டை கணக்கிட்டு ஒவ்வொன்றாக கூட்டி கணக்கு போடலாம் என்ற அறிவை கடந்து விடுவாள் என்று எண்ணிக் கொண்டேன்.

ஏன்? (சாக்ரடீஸ் கேட்கச் சொன்ன அதே கேள்வி) ஏன் இது இப்படி இருக்கிறது? பள்ளிக் கல்வி அவ்வளவு மோசமா? சாதாரண பெருக்கல், கூட்டல் கூடவா பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்றுத் தருவதில்லை! கணக்கு என்னவோ சொல்லித் தருகிறார்கள், ஆனால் இந்த எளிதான கேள்விக்கு கூட ஏன் விடை சொல்ல, ‘முயற்சி’ கூட அவர்கள் இருவரும் செய்யவில்லை. சிந்தித்துப் பார்த்ததில் ஒன்று விளங்கியது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நமக்கு என்ன பாடம் சொல்லிக் கொடுத்தாலும் அதன் பின்னால், பாலில் நெய் கலந்துள்ளது போல், அடிப்படையில் ஒரு பாடம் சொல்லித் தருகிறார்கள். அது என்ன? “தவறு செய்யக் கூடாது”, “தவறான விடை சொல்லக் கூடாது” என்பதே அது. ஒவ்வொரு முறை தவறான விடை சொல்லும் போதும் அதற்கான பலனை மதிப்பெண் மூலமாகவோ, அல்லது திட்டு வாங்குவதன் மூலமோ அனுபவிக்கிறோம். தேர்வின் போது விடை சொல்லித்தான் ஆக வேண்டும். அதனால் தெரியாவிட்டால் கூட ஏதோ விடையளிக்கிறோம். ஆனால், வகுப்பில் கேட்கும் போது இயன்றவரை கேள்விகளை சந்திக்காமல் இருப்பதே நல்லது என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் விதைக்கப்படுகிறது. மாறாக, குழந்தைகள், தெரியவில்லையானால் கூட ஏதோ முயற்சி செய்யும். தவறான விடையளிக்க தயங்காது. ஆனால், பதின் பருவம் எட்டியவுடன் ஒரு நாளைக்கு எத்தனை முறை பெற்றோரிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போது கூட 'தெரியாது’ என்ற விடை கிடைக்கிறது என்று பாருங்கள். ஒன்று தெளிவாக தெரிந்தால் மட்டுமே முயற்சி செய்ய வேண்டும் என்றால் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் சாத்தியமில்லை. நாம் தவறாக இருப்பதற்கு தயாரில்லையானால், ‘புதுமை’ எதையும் உருவாக்க முடியாது.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் புதுமை எதற்கும் இடமில்லை. மற்றவர் கண்டறிந்தவற்றை மட்டும் படித்து மனனம் செய்தால் போதும். சமச்சீர் கல்வி முறையில் தேர்வின் போது, கணக்கில் கூட புத்தகத்தில் உள்ள அதே எண்களுடன் கணக்கு கேட்கப்பட வேண்டும். இல்லையேல், கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்தது என்று சொல்லும் அளவிற்கு நாம் யோசிப்பதை கொலை செய்து மனனம் செய்வதை மட்டும் வளர்க்கிறோம். ஆனால், பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பிற்கு பிறகு நம் வாழ்க்கையில், வேலையிலோ அல்லது தொழிலிலோ நாம் கற்றுக் கொள்வது எல்லாம், ஒன்றை முயற்சி செய்து பார்த்து தான். அது தவறாக முடிந்தால் அதுவும் ஒரு பாடம் தான். உலகம் ஒரு புது மாதிரியான பள்ளிக்கூடம். கற்றுக் கொடுத்து விட்டு தேர்வு வைக்காது. தேர்வு வைத்து அதன் மூலம் கற்றுக் கொடுக்கும்.

சரி, ஐந்து வருடம் கழித்து, இளநிலை பட்டம் பெற்ற பையன், இரண்டு கம்பெனிகளில் கணக்கு எழுதும் வேலை பார்த்து விட்டு, பிடிக்காமல், இப்போது இரண்டு வருடமாக பக்கத்தில் உள்ள கிராமத்தில், நிழற்படம் எடுக்கும் கடை நடத்தி வருகிறான். அதனுடன் கைபேசிக்கு காசு ஏற்றுதல் (டாப் அப்-Top-up) செய்வது, பழுது பார்ப்பது போன்ற வேலைகளும் கற்றுக் கொண்டு செய்கிறான். கல்யாணங்களுக்கு நிழற்படம் மற்றும் வீடியோ எடுப்பதும் செய்கிறான். வீடியோவை எடிட்டிங், மிக்ஸிங் போன்ற வெலைகளுக்கான மென் பொருட்களை கற்றுக் கொண்டு செய்து வருகிறான். இப்போது நான் எவ்வளவு ஓடு வேண்டும் என்று கேட்டால் உடனே சொல்லி விடுவான். ஏனெனில், பல முறை தொழிலில், கடையில் தவறு செய்து, தவறு செய்து அதன் மூலம் கற்ற முக்கியமான பாடம், “முயற்சி செய்யாமல் ஒன்றை தெரிந்து கொள்ள முடியாது” என்பதுதான்.

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பையன் படிப்பை அந்த வருடமே பாதியில் நிறுத்தி விட்டு மொட்டார் பைக் பழுது பார்க்கும் கடையில் வேலைக்கு சேர்ந்து, தொழிலைக் கற்றுக் கொண்டு, சென்ற ஆறு மாதமாய் அருகில் உள்ள டவுனில் தனியாக கடை வைத்து, இரண்டு பேருக்கு வேலை கொடுத்துள்ளான். ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒரு முறை, என் நண்பனுடைய புதிய என்பீல்ட் பைக்கை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, அந்த பைக் மின்கலம் (Battery) சார்ஜ் இல்லையானால், உதைத்து இயக்க முயன்றாலும் ஸ்டார்ட் ஆகாதது ஏன் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு அவன் புதிய, நவீன பைக்குகளில் மின்னணு எரிபொருள் செலுத்தி (electronic fuel injection) இருப்பதனால் எரிபொருள் என்ஜினுள் செல்ல மின்கலம் அவசியம் என்று விளக்கமளித்தான். வேலையின் மூலம் நான்கு வருடங்களில் அனுபவத்தின் மூலம் தெளிவாக மின்னணு எரிபொருள் செலுத்தி எவ்வாறு இயங்குகிறது என்று (புத்தகங்களில் படிக்காமல்) கற்றுக் கொள்ள முடிகிறது. பள்ளியில், கல்லூரியில் நான்கு வருடங்களில் இதை கற்றுக் கொள்ள இயலாது. நான் ஒரு முறை, (மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது) கல்லூரிக்கு சென்று கடைசி வருடம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தும் போது, பத்துக்கு ஒன்பது வாகனவியல் (Automobile engineering) மாணவர்களுக்கு பெட்ரொல் எ என்ஜினுக்கும் டீசல் என்ஜினுக்கும் வித்தியாசம் கூட தெரியவில்லை என்பது நினைவுக்கு வருகிறது.

அப்படியானால், பள்ளி கல்லூரிகள் ஏன் அனுபவத்தின் மூலமே பாடம் நடத்தக் கூடாது? அது தானே இயற்கையாக நாம் கற்றுக் கொள்ளும் வழி. காந்தி பரப்பிய நை தாலீம் (Nai Talim) என்ற கல்வி முறையில் அப்படித்தான் கற்றுத்தருவார்களாம். உதாரணமாக, நூல் இராட்டையில் நூற்பது எப்படி என்று பழகும் போதே அதனுடன் சேர்த்து எவ்வளவு நூல் நூற்றிருக்கிறாய் என்பதைக் கண்டுபிடிக்க எண்ணிக்கை கற்றுத் தர வேண்டும். பஞ்சின் வரலாறு பற்றி சொல்லலாம். பஞ்சு எங்கே விளைகிறது, எந்த மாதிரி மண்ணில் வளர்கிறது என்ற புவியியல் பாடமும் எடுக்கலாம். இராட்டையின் இயக்கம் எப்படி நூலை நூற்கிறது என்பதை கற்றுக் கொடுக்க அறிவியல் பாடம் எடுக்க வேண்டும். இன்னும் வளர்ந்தவர்களுக்கு, இராட்டையின் எந்த பாகம் எந்த உலோகத்தினால் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது புரிய உலோகவியல் பாடம் கூட எடுக்கலாம். மேலும், தற்போதைய இயந்திர மயமான நூற்பாலைகள் பற்றி சொல்வதன் மூலம் பொருளாதாரம், அரசியல், தத்துவம் போன்று பல பரிமாணங்களில், கையால் நூற்பதில் ஆர்வத்தை வளப்பதுடன், பாடமும் கற்றுத் தர முடியும். இது போன்று, ஒவ்வொரு செயல் முறை கைத்தொழில் பழகும் போதும் அதனுடன் இணைந்த அறிவியல், வரலாறு, புவியியல், கணக்கு என்று கற்றுக் கொடுத்தால் கண்டிப்பாக இப்போது பள்ளியில் உள்ள (மணிக்கொருமுறை தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கும்) வகுப்புகளை விட மனதில் நிற்கும். ஆர்வமும் குன்றாது.

ஆனால், நமது இயந்திரமயமான சமூகத்திற்கு, கேள்வி கேட்டு, புரிந்து கொள்ளும் மக்கள் தேவையில்லை. கொடுத்த வேலையை நினைவு வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப ஒரே மாதிரி செய்யும் அடிமைகள் தான் அதிகம் வேண்டும். எனவேதான், நமது தொழிற்சாலைகளைப் போலவே, பள்ளிகளின் வடிவமைப்பும் உள்ளது. உதாரணமாக, ஒரே வயதுடையவர் ஒரே வகுப்பில் (Batching), எல்லோருக்கும் ஒன்று போல கேள்விகள் (Standards), அதற்கு ஒரே ஒரு சரியான விடை மட்டுமே (Standardisation), மணி அடித்தாலும் உங்கள் ஆர்வம், போன வகுப்பின் கணக்கை தீர்ப்பதில் இருந்தாலும், அடுத்த ஒரு மணி நேரம் இயற்பியல் படித்தாக வேண்டும் (Production Cycle) என்ற வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நமது தற்போதைய கல்வித் திட்டம் முழுவதும், இயந்திரமயமாக்க‌லுடன் (Industrialisation) சேர்ந்தே வடிவமைக்கப்பட்டு உருவானதால், கற்பதற்கு முக்கியத்துவம் இல்லாமல் போய் விட்டது. நாம் இப்போது, கல்வியையே ஒரு தொழிலாகவும் ஆக்கி விட்டோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org