நீரின்றி அமையாது உலகு - பரிதி


பகுதி 2 – தீர்வுக்கான சில வழிகாட்டுதல்கள்

தண்ணீரின் அளவு, தரம் ஆகிய இரண்டையும் போற்றிக் காத்து அதிகரிப்பது குறித்து நாம் உடனடியாகக் கவனஞ் செலுத்தவேண்டும். இல்லையேல் அடுத்த முப்பதாண்டுகளுக்குள் நம்மில் பெரும்பாலானோர் மிகக் கடுமையான தண்ணீர் மற்றும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்வோம்! இது ஏதோ 'அடுத்தவர் பிரச்னை' என்றும் நமக்கு இந்நிலை வராது என்றும் இறுமாப்புடன் இருந்தால் ஏமாற்றமும் அதிர்ச்சியுந்தான் மிஞ்சும்.

நம் நீராதரத்தை எப்படிக் காப்பது? சுருக்கமாகச் சொன்னால் "நுகர்வைப் பெருமளவு குறைத்துத் தண்ணீர்ச் சேமிப்பைப் பெருமளவு அதிகரிக்கவேண்டும்!” தண்ணீர்த் தட்டுப்பாடு, சூழல் மாசுபாடு, மனித உரிமை மீறல் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாகவும் கூட்டாகவும் காரணிகளாக இருக்கிறோம். (உண்மையில், பெரும்பாலான சிக்கல்களில் தனி மனிதர் பங்கு, குமுகளாவிய பங்கு எனப் பிரித்து அடையாளம் காண்பதே கடினமானது!) எனவே தீர்வுகளும் இவ்விரு தரப்புகளில் இருந்தும் வரவேண்டும் என்பதையும் மனத்தில் கொள்ளவேண்டும். இனி இது குறித்துச் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

அ. அனைத்துவகை நுகர்வையும் பெருமளவு குறைக்கவேண்டும்!

இருபதாம் நூற்றாண்டில் உலக மக்கள் தொகை மூன்று மடங்கு அதிகரித்தது; ஆனால், உலகத் தண்ணீர்ப் பயன்பாடு ஏழு மடங்கு உயர்ந்தது. எனவே, மக்கள் தொகைப் பெருக்கமே நம் இன்னல்களுக்கெல்லாம் தலையாய காரணம் என்று வறியோர் மீது பழி போடுவது மாபெரும் பாவச் செயலாகும்! அதுபோலவே, இந்தியர்களின் சராசரி நுகர்வும் சூழல் தாக்கமும் குறைவு என்று "வறியோர் பின்னால் ஒளிந்துகொள்வதும்" மன்னிக்கமுடியாத குற்றமே! (ஏனெனில், இந்தியர்களில் பெரும்பாலானோருடைய நுகர்வு மிகக் குறைவு!)

நாம் பயன்படுத்தும்

உணவு, உடை, உறைவிடம் (வீடு), ஊர்தி, நகை, தாள், மின்சாதனங்கள், இலத்திரனியல் கருவிகள் (கணினி, கைப்பேசி ஆகியன) உள்ளிட்ட பொருள்கள்,

வைப்பகம், தொலைபேசி, மருத்துவம், பொழுதுபோக்கு, சுற்றுலா, கடைகள் உள்ளிட்ட சேவைத் துறைகள்,

மின்சாரம், சமையல் எரிவளி, கன்னெயம், 'டீசல்' போன்ற ஆற்றல்கள் ஆகிய அனைத்தும் தண்ணீரையும் சூழலையும் மனித உழைப்பையும் பெருமளவு பயன்படுத்தியும் சுரண்டியும் உருவாக்கப்படுகின்றன; தண்ணீரையும் சூழலையும் மிகுதியாக மாசுபடுத்துகின்றன. இவற்றில் சிலவற்றைக் குறித்துச் சற்று விரிவாக இனிக் காண்போம்.

உணவு

உணவுத் துறையில் வேளாண்மை முதன்மைப் பங்கு வகிக்கிறது. (பதப்படுத்துதல், போக்குவரத்து, வழங்கல் ஆகியன உணவுத் துறையின் பிற அலகுகள்.) இந்தியா உள்ளிட்ட 'வளரும்' நாடுகளில் ஏறக்குறைய 80% தண்ணீரை வேளாண்மை பயன்படுத்துகிறது. ஆகவே, தண்ணீரின் அளவையும் தரத்தையும் காப்பதில் வேளாண் துறைக்கு அதிகப் பொறுப்பு உள்ளது.

நாம் ஏற்கெனவே பார்த்தபடி, உழவர்கள்

க)தம் பகுதியின் மழையளவு, மண்ணின் தன்மை, சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ற பயிர்களை மட்டுமே பயிரிடவேண்டும். (ஆனால், அரசுகள் மிகச் சில பயிர்களுக்கு மட்டுமே ஓரளவு கட்டுப்படியாகக் கூடிய கொள்முதல் விலையை அறிவிக்கின்றன. அதன் விளைவாக உழவர்கள் எப்பாடுபட்டேனும் அந்தப் பயிர்களையும் மலர்கள் உள்ளிட்ட பணப் பயிர்களையும் விளைவிக்கத் தலைப்படுகின்றனர்.)

கா)வேதியுரங்களையும் உயிர்க் கொல்லிகளையும் தவிர்த்து இயற்கைவேளாண் முறைகளைப் பயன்படுத்தவேண்டும்.

நுகர்வோர் செய்யவேண்டியன:

க)முடிந்தவரை உள்ளூரில் விளையும் பொருள்களை வாங்கிப் பயன்படுத்துதல்.

கா)உயிர்ம வேளாண்மையில் விளைவிக்கப்படும் பொருள்களை அதிகம் பயன்படுத்துதல்; அதில் ஈடுபடும் உழவர்களுடைய (குறிப்பாகச் சிறு குறு உழவர்கள், உழவுத் தொழிலாளர்கள் ஆகியோருடைய) வாழ்வாதாரம் மேம்படுவதற்குப் பாடுபடுதல்.

கி)நீர்த் தேவை அதிகமுள்ள விளைபொருள்களைக் குறைவாக நுகர்தல். எ.கா. இறைச்சி, கரும்புச் சர்க்கரை (குறிப்பாக வெள்ளைச் சர்க்கரை).

கீ)சிறு தானியங்கள் உள்ளிட்ட நீர்த் தேவை குறைவான உணவுப் பண்டங்களை அதிகம் வாங்குதல்.

கு)உணவு வீணாவதைப் பெருமளவு குறைத்தல். வீணாகும் உணவை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்பட்ட மனித உழைப்பு, நன்னீர், உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள், மின்னாற்றல், சூழலியல் சேவைகள் ஆகிய அனைத்தும் வீணாவதை எண்ணிப்பார்க்கவேண்டும்.

நுகர்வோர்-உழவர் ஆகிய இரு தரப்பினரும் கூட்டாகச் செய்யவேண்டியது: மேற்கண்டவை தொடர்பாக அரசுத் திட்டக் கொள்கை வகுப்பாளர்களை நெறிப்படுத்தவேண்டும். தாளாண்மை உழவர் இயக்கம், தற்சார்பு இயக்கம் போன்ற அமைப்புகளில் சேர்ந்து பணியாற்றுவது இதற்கு முதற்படியாக அமையும்!

உடை

(பருத்தி விளைவித்தபிறகு) ஆயிரம் கிலோ பருத்தித் துணியை உருவாக்குவதற்கு இந்தியப் பஞ்சாலைகள் இரண்டு முதல் இரண்டரை லட்சம் லிட்டர் நன்னீரைப் பயன்படுத்துகின்றன. ஆனால், உலகளவில் செயல்திறன் அதிகமுள்ள ஆலைகள் ஒரு லட்சம் லிட்டர் நன்னீரை மட்டுமே பயன்படுத்துகின்றன. உலக அளவில் ஆலைகளின் தண்ணீர்ப் பயன்பாட்டில் ஐந்தில் ஒரு பங்கு (20%) உடை உற்பத்திக்குப் பயன்படுவதாக உலக வைப்பகம் கணிக்கிறது. இந்தத் துறையில் 8,000 செயற்கை வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன; துணிகளுக்குச் சாயமிடும் ஆலைகளின் கழிவு நீரில் சுமார் 72 கொடிய நச்சுகள் வெளியாகின்றன.

கெட்டித் துணியாலான கால்சட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 10,850 லி, பருத்தித் துணி டி-சர்ட்-க்கு 2,720 லி, காதுகளைக் குடைந்து தூய்மைப்படுத்தப் பயன்படுத்தும் பருத்திக் குமிழ் ஒன்றுக்கு 3.6 லி. நீரும் தேவைப்படுகிறது.

1997-2001 காலத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்தித் துணிகளை உற்பத்தி செய்வதற்கு 25,66,000 கோடி லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. உலக அளவில் இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்ட தண்ணீரில் இது 13 விழுக்காடு ஆகும். சீனாவும் இதே அளவு தண்ணீரை (துணியாக) ஏற்றுமதி செய்தது. இவ்விரு நாடுகளும் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன! நுகர்வோர் கடமைகள்: (க) நுகர்வைக் குறைத்தல், (கா) உயிர்ம வேளாண் விளைபொருள்களையும் இயற்கைச் சாயங்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் துணிகள், பாதணிகள் முதலியவற்றை (மட்டும்) வாங்குதல்.

ஆற்றல் (குறிப்பாக, மின்சாரம்)

மனிதர் மற்றும் விலங்குகளின் ஆற்றலைத் தவிர வேறு வகையான ஆற்றல்களைப் பயன்படுத்தும்போது இயற்கைச் சூழலை மாசுபடுத்துகிறோம். குறிப்பாக, புனல் மின் நிலையங்கள், நிலக்கரி, எரிவளி, 'டீசல்', அணுக் கதிர்வீச்சு ஆகியவற்றைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்கள், கதிரொளி மற்றும் காற்றின் வேகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் "புதுப்பிக்கத்தக்க" மின் உற்பத்தி முறைகள், மின் பகிர்மானக் கட்டமைப்புகள் ஆகிய அனைத்துமே தண்ணீர் உள்ளிட்ட இயற்கைச் சூழலைப் பெருமளவு மாசுபடுத்துகின்றன என்பதை நாம் ஒவ்வொரு கணமும் உணரவேண்டும்.

ஆலைகளுக்குப் பயன்படும் நீரில் பெரும்பகுதி அனல்மின் நிலையங்களில் குளிர்விக்கும் ஊடகமாகப் பயன்படுகிறது. எனவே, மின்னாற்றல் தேவையைக் குறைப்பது மிக மிக முதன்மையானது!

எடுத்துக்காட்டாக, உலகில் உள்ள 8,359 நிலக்கரி மின் நிலையங்கள் ஆண்டுதோறும் 19,00,000 கோடி லிட்டர் நன்னீரைப் பயன்படுத்துகின்றன. குடித்தல், குளித்தல், சமையல், தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட இன்றியமையாத் தேவைகளுக்கென நாளொன்றுக்கு மனிதர் ஒருவருக்குக் குறைந்தது ஐம்பது லிட்டர் நன்னீர் தேவை என்பது (ஒன்றிய நாடுகளவையின் உறுப்பான) உலக நலக் கழகத்தின் வழிகாட்டுதல்களில் ஒன்று. இதன்படி, சராசரி மனிதரின் குறைந்தளவு ஆண்டுத் தேவை 18,275 லிட்டர். அப்படியானால், நூறு கோடி மக்களுடைய குறைந்தளவுத் தேவை 18,27,500 கோடி லிட்டர். ஆக, நூறு கோடி மக்களுடைய அடிப்படைத் தேவைக்குப் பயன்படக்கூடிய நன்னீரை உலகிலுள்ள 8,359 நிலக்கரி அனல் மின் நிலையங்கள் பயன்படுத்துகின்றன. இந்நிலையில் உலகளவில் மேலும் 2,668 நிலக்கரி மின் நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன!

நாம் (நம் வீடுகளில்) தனிப்பட்ட முறையிலும் அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் ஆற்றல் பயன்பாட்டைப் பெருமளவு குறைத்து வாழப் பழகவேண்டும்.

உறைவிடம் (வீடு)

ஒவ்வொரு முறை மின்சாரத்தைப் பயன்படுத்தும்போதும் அதன் சூழலியல் விளைவுகளைக் குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும்! குறிப்பாக, அறையைக் குளிர்விக்கப் பயன்படும் மின்பதனி, துணிகளில் சுருக்கங்களைப் போக்க உதவும் மின்தேய்ப்புப் பெட்டி போன்றவற்றுக்கு மிக அதிக அளவு ஆற்றல் தேவை. இந்தியாவில் 2004 முதல் அறை மின்பதனி விற்பனை ஆண்டுக்குச் சராசரியாக 17% அதிகரித்துவந்துள்ளது! இந்திய மின்பதனிகளின் செயல்திறன் வளர்ந்த நாடுகளில் இருப்பவற்றின் செயல்திறனைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இதே போக்கு நீடித்தால் 2030 வாக்கில் அறை மின்பதனிகளுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மட்டும் தலா 500 MW மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 120 கூடுதல் நிலக்கரி மின் நிலையங்கள் இந்தியாவுக்குத் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது! அந்நிலையில் நம் சூழலும் தண்ணீர்ச் சிக்கலும் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு மோசமாகிவிடும் என்பது உறுதி!

நாம்,

1.வீடுகளைப் பெரிதாகக் கட்டாமல் "அளவாகக்" கட்டவேண்டும்!
2.வீடுகளைச் சூழலுக்கு உகந்தவாறு கட்டவேண்டும்.
3.சொகுசு வாழ்க்கையை உதறி எளிமையாக வாழப் பழகவேண்டும்; ஆடம்பரப் பொருள்களால் வீட்டை நிரப்பக்கூடாது.

போக்குவரத்து

ஒரு மகிழுந்தை உருவாக்குவதற்குச் சுமார் ஒன்றரை முதல் இரண்டு லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. (இது மகிழுந்து உற்பத்தி செய்யும் ஆலைகளில் பயன்படுத்தப்படும் நீரின் அளவு மட்டுமே; மகிழுந்துக்குத் தேவையான அனைத்து மூலப் பொருள்களையும் உற்பத்தி செய்வதற்கு வேண்டிய தண்ணீர் இந்தக் கணக்கில் வரவில்லை.) இந்தியாவில் 2015-இல் இருபது லட்சம் புது மகிழுந்துகள் விற்பனையாகின. (அவற்றைத் தவிரப் பிற நாடுகளுக்கும் மகிழுந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.) அவற்றை உற்பத்தி செய்வதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்பட்டிருக்கும் என்பதைக் கணக்கிட்டுப்பாருங்கள்! அந்தத் தண்ணீர் ஆலையில் இருந்து வெளியேறுகையில் எந்நிலையில் இருந்திருக்கும், அவ்வாறு இயற்கையை மாசுபடுத்துவதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது, அந்தத் தகுதியை நமக்குத் தந்தது யார் அல்லது எது என்பது குறித்தும் சிந்திக்கவேண்டும்.

மேலும், ஊர்தியைப் பயன்படுத்தும்போது மட்டுந்தானா சூழல் கெடுகிறது? அதன் மூலப் பொருள்களில் இருந்து அதை உற்பத்தி செய்யும்போதும் அதற்கான சாலை வசதிகளை ஏற்படுத்தும்போதும் அதைப் பழுதுபார்க்கையிலும் சூழல் மாசு நேர்கிறது. ஆகவே, “மாசுபடுத்தாத கார்", “பசுமைக் கார்" போன்ற விளம்பரங்கள் பெரும்பொய்களைப் பரப்புகின்றன.

இது தொடர்பாக நாம் கேட்கவேண்டிய வேறு சில வினாக்கள்:

1.நாம் மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொரு பயணமும் தேவையா? குறிப்பாக, மகிழுந்திலும் வானூர்தியிலும் சுற்றுலாச் சென்று சூழலைக் கெடுப்பது குறித்துச் சிந்திக்கவேண்டும். வாழ்க்கையில் ஓரிரு முறை சென்றால் போதாதா, அதற்குங்கூடப் பொதுப் போக்குவரத்துச் சாதனங்களைப் பயன்படுத்தமுடியாதா எனவும் சிந்திக்கவேண்டும்!

2.பொதுப் போக்குவரத்துத் துறைகளை முறையாக நிர்வகித்து அந்த வசதிகளைப் பெருக்கினால் இவ்வளவு மகிழுந்துகளும் ஈருருளிகளும் தேவைப்படுமா?

சடங்குகள், பண்டிகைகள்

இந்த (2016-ஆம்) ஆண்டு ஏப்ரல் 22 அன்று தொடங்கி ஒரு மாத காலம் நடக்கும் கும்ப மேளாப் பண்டிகையின்போது ஐந்து கோடி பக்தர்கள் மத்தியப்பிரதேச மாநிலத்தின் உச்சயினி நகரில் சிப்ரா ஆற்றில் குளிப்பார்கள், ஒரு கோடிக்கும் அதிகமானோர் வழிபாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதற்கென அரசு 7500 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது. மூவாயிரங் கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. சிப்ரா ஆற்று நீர் மாசடைந்திருப்பதால் குளிப்பதற்கு ஒவ்வாதது. பண்டிகைக்கென அரசு நர்மதை ஆற்றுடன் சிப்ரா ஆற்றை 'இணைத்துள்ளது': ஒரு மணி நேரத்துக்கு 5,10,000 லிட்டர் நீர் நர்மதையில் இருந்து சிப்ராவுக்கு மின்மோட்டர்கள் மூலம் இறைக்கப்படும்! 46,000 கழிப்பறைகள் கட்டப்படும். 2,500 உழவர் குடும்பங்கள் உட்படச் சுமார் 3,500 குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துள்ளன. உழவர்கள் ஏக்கருக்கு 2,40,000 ரூபாய் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் (2016 மார்ச்) யமுனை ஆற்றங்கரையில் சிறீ சிறீ ரவிசங்கருடைய நிறுவனம் நடத்திய மூன்று நாள் கூ(ட்ட)த்துக்கு ஆயிரம் ஏக்கர் பரப்பில் சூழல் கெடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இதுபோலவே பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் காசி, ராமேசுவரம், சபரிமலை, திருப்பதி, பழனி உள்ளிட்ட இடங்களுக்கும், முசுலீம்கள் மெக்கா, மெதீனாவுக்கும், கிறித்தவர்கள் வேளாங்கண்ணி, ரோம் போன்ற இடங்களுக்கும் ஆண்டுதோறும் செல்வதையும் தவிர்க்கவேண்டும்.

ஒரு குடும்பத்தின் பண வசதி அதிகரிக்கையில் திருமணம், புது மனை புகுதல் உள்ளிட்ட விழாக்களுக்கென அக்குடும்பம் செய்யும் செலவும் அதற்கேற்பச் சூழல் மாசுபடுதலும் வேகமாக உயர்கின்றன. இத்தகைய 'நுகர்வு'களைத் தவிர்ப்பது நம் கையில்தான் உள்ளது; இருப்பினும் குமுக அளவிலான பண்பாட்டுத் தாக்கத்திற்கும் இதில் பெரும்பங்கு இருப்பதை மறுக்கமுடியாது.

ஆ) தண்ணீரைச் சேமிக்கவேண்டும்!

1. ஆலைகளில்

தண்ணீர்ப் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும்;
கழிவு நீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தவேண்டும்.

2. வேளாண்மையில்

வாய்க்கால்ப் பாசனத்தைக் குறைத்துச் சொட்டுநீர்ப் பாசனத்தை அதிகப்படுத்தவேண்டும். (ஆனால், இது மிகுந்த செலவு பிடிப்பது, நெகிழிப் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கும், சொட்டுநீர்க் குழாய்களை எலி கடித்தல் உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளன.)
சூழலுக்கேற்ற பயிர்களை மட்டும் பயிரிடவேண்டும்.
மூடாக்கிடவேண்டும். இதன் மூலம் நிலம் வெயிலில் காய்ந்து நீர் ஆவியாவதைப் பெருமளவு தடுக்கலாம்.
இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தவேண்டும்; அளவாக உரமிடவேண்டும்.
வேறு சில செயலுத்திகள்: சால்களின் இடைவெளியைப் பயிரின் வளர்ச்சிப் பருவத்தைப் பொறுத்து மாற்றியமைத்தல், சீரிய நெல் சாகுபடி.

3. அரசுகள் உள்ளூரளவில் மக்கள் பங்களிப்புடன் மழைநீர்ச் சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தவேண்டும். பெரிய அணைகளைக் கட்டுவதைக் காட்டிலும் சிறு சிறு மழைநீர்ச் சேமிப்புத் திட்டங்கள் சூழலுக்கும் மக்களுடைய வாழ்வாதாரத்திற்கும் மிகவும் உகந்தவை. அவற்றைச் செயல்படுத்துவதற்கு ஆகும் செலவும் குறைவு. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஊழலின்றி முறையாகப் பயன்படுத்தினால் நமக்குத் தேவையான அளவு மழைநீரைச் சேமிக்க இயலும். ராசசுத்தான் மாநிலப் பாலைவனப் பகுதியில் ராசேந்திர சிங் அவர்களுடைய வழிகாட்டுதலில் நூற்றுக்கணக்கான ஊர்களில் தண்ணீர்ப் பற்றாக்குறையை வெற்றிகரமாகப் போக்கியுள்ளார்கள்.

இ) ஏற்கெனவே இருக்கின்ற நீர்நிலைகளைக் காக்கவேண்டும்

அளவு: பல்லாயிரக் கணக்கான ஏரி, குளம், குட்டைகளை மூடியும் எஞ்சியவற்றை முறையாகப் பராமரிக்காமலும் மணல் அள்ளியும் உருக்குலைத்துவிட்டோம். இந்தக் கொடுமைகளைத் தடுப்பதற்கான சட்டங்களை முறையாகச் செயல்படுத்துவதற்கு அரசுகளுக்கு அழுத்தந்தரவேண்டும். மணல், சிமென்ட் ஆகியவற்றைக் குறைவாகப் பயன்படுத்தும் கட்டடக் கலைகளையும் பொறியியலையும் மேம்படுத்திப் பரப்பவேண்டும்.

தரம்: நகராட்சிகளும் ஆலைகளும் மாசுபட்ட நீரை நீர்நிலைகளில் கலந்து விடுவதால் இந்தியாவின் புறப்பரப்பு நீரில் எண்பது விழுக்காடு மாசடைந்துள்ளது! இந்திய அரசின் நடுவண் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2009-இல் வெளியிட்ட கணக்கின்படி, இந்திய நகரங்கள் 3,800 கோடி லிட்டர் கழிவு நீரை வெளியிட்டன; அதில் முப்பது விழுக்காடு தான் சேகரிக்கப்பட்டது; அந்த 1,140 கோடி லிட்டர் நீரில் இருபது விழுக்காட்டுக்கும் குறைவான நீர்தான் தூய்மைப்படுத்தப்பட்டது. எஞ்சிய கழிவுநீர் ஆறு, குளம், ஏரி, குட்டை ஆகியவற்றில் விடப்பட்டது. இத்தகைய கொடுஞ்செயல்களைத் தடுக்கவேண்டிய அரசுத் துறைகளே அவற்றில் ஈடுபடுகின்றன! இப்போது உள்ள ஏட்டளவிலான மக்களாட்சி முறையின் போதாமையையே இது சுட்டிக்காட்டுகிறது.

முடிவாக ...

நாம் அனைத்துவகை நுகர்வையும் தொடர்ந்து குறைக்கவேண்டும். சூழல் நலனில் அக்கறை கொண்டு, பணியாளர்களைக் கண்ணியத்துடன் நடத்தும் உழவர்கள், வணிகர்கள், ஆலை நிர்வாகங்கள் ஆகியோரை ஆதரிக்கும்வண்ணம் அவர்களுடைய பொருள்களைத் தேடி வாங்கிப் பயன்படுத்தவேண்டும்.

மாற்றங்கள் நம்மிடம் (தனி மனிதரிடம்) இருந்து தொடங்கவேண்டும். ஆனால், இப்போது உலகை ஆட்கொண்டிருக்கும் முதலாண்மை ('முதலாளித்துவம்') எனும் அரசியற்பொருளாதார முறையில் நுகர்வைத் தவிர்ப்பதென்பது வெறும் தனி மனிதச் சிக்கல் மட்டும் அன்று! இதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு இதோ:

இந்த ஆண்டு விளம்பரங்களுக்கென உலக அளவில் நிறுவனங்கள் 56,100 கோடி டாலர் செலவு செய்யவுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை தோராயமாக 800 கோடி; அதில் சுமார் 200 கோடிப்பேர் மிகவும் வறியவர்கள். அப்படியானால் மீதமுள்ள 600 கோடிப்பேரைக் கவர்வதற்கென ஓராண்டுக்கான விளம்பரச் செலவு 56,100 கோடி டாலர். அதாவது, தலா சுமார் 90 டாலர் (ஏறக்குறைய 6,030 ரூபாய்). இந்த உளவியல் தாக்குதலை நம்மில் எத்துணைப் பேர் வெற்றிகரமாக எதிர்கொள்ளமுடியும்?!

இந்நிலையில், பணப் பயிர்களை நாடுதல், வேதிப்பொருள்களை அளவுக்குமீறிப் பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் உழவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்று முதலாளிகள், அரசியல்வாணர்கள், அதிகாரிகள், உள்ளிட்டோர் தூற்றுவது முறைகேடான செயலன்றோ! உழவர்களும் இந்தக் குமுகத்தில் தானே வாழ்கின்றனர்? இந்தக் குமுகத்தின் அரசியற் பொருளாதாரப் பண்பாட்டுச் சூழலில் உணவு, உடை, வாழிடம், கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு, சடங்குகள் போன்றவற்றுக்கென உழவர்களுக்கும் பணம் தேவைப்படுவது நியாயந்தானே? 'மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், சூழல் காப்புக் குறித்து அக்கறைப்படாமல் நுகர்ந்து மகிழலாம், ஆனால் உழவர்கள் மட்டும் நம் இயற்கைச் சூழலைக் கண்ணுங் கருத்துமாகக் காக்கவேண்டும்' என்பது எவ்வகையில் நியாயம்?

அரசியல் சட்டத்தில் உள்ளபடி அனைவருக்கும் அருகமை அரசுப் பள்ளிகளில் செலவில்லாத, தரமான கல்வி, தரமான பொது மருத்துவம் ஆகியவற்றையும் அடிப்படை வேலை வாய்ப்பையும் தருமாறு நம் அரசுகளை மாற்றவேண்டும். இதுவரை நாம் எழுப்பிய வினாக்களுக்கான விடைகளையும் எந்தச் செயல்கள் நல்லவை எவை தீயவை, எவை பாவச் செயல்கள் போன்றவற்றையும் யார், எப்படி முடிவு செய்வது? அனைத்து மக்களின் நேரடிப் பங்களிப்புள்ள உண்மையான மக்களாட்சி முறையும் அதற்கு ஏற்ற பொருளாதார முறையும் இதற்கு இன்றியமையாத் தேவை. இந்தத் திசையை நோக்கி நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும்!

[கட்டுரையாளர் குறிப்பு: 'சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லியவண்ணம் செயல்!” என்ற திருக்குறள் எனக்கும் பொருந்தும். நான் நுகர்வைப் பெருமளவு குறைத்துள்ளேன். ஆனால் இன்னும் நான் இத்திசையில் நெடுந்தொலைவு செல்லவேண்டும் என்பதை உணர்கிறேன்!]

அமெரிக்கா.............................the united states of america
ஆசுத்திரேலியா.....................australia
ஆலிவ்..................................olives
இந்தோனேசியா.....................indonesia
இலத்திரனியல் ('மின்னணுவியல்')............electronics
ஈருருளி.......................................two-wheeler
உயிர்ம வேளாண்மை.......................organic farming
உலக நலக் கழகம்...........................world health organization
எக்ட்டேர் (இரண்டரை ஏக்கர்)...........hectare
ஒன்றிய நாடுகளவை .........................the united nations
ஓலிப் பண்டிகை.....................................holi
கபில் மிசுரா.........................................kapil misra
கன்னெயம் ('பெட்ரோல்')......................petroleum
காதுகளைக் குடைந்து தூய்மைப்படுத்தப் பயன்படுத்தும் பருத்திக் குமிழ் ....................cotton ear buds
குமுகம் ('சமூகம்')..................................society
கெட்டித் துணியாலான கால்சட்டை .....................jeans pants
சமையல் எரிவளி....................................cooking gas
சிப்ரா......................................................kshipra
சீனா......................................................china
சோயா மொச்சை.....................................soyabeans
நடுவண் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ...............central pollution control board
நெகிழி.................................................plastic
ப்ரெசீல்................................................brazil
பாக்கிசுத்தான்....................................pakistan
பாதணிகள்,.......................................slippers, shoes
புறப்பரப்பு நீர்......................................surface water
பொருளாதாரக் கணக்கெடுப்பு....................economic survey
மகாராட்டிரா............................................maharashtra
மராத்வாடா................................................marathvada
மின்தேய்ப்புப் பெட்டி.................................electric iron
மின்பதனி..............................................airconditioner
ராசசுத்தான்..........................................rajasthan
ராசேந்திர சிங்.....................................rajendra singh
லாட்டூர்..................................................latur
வட்டாரம்............................................block
வைப்பகம் ('வங்கி')...............................bank

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org