தரம்பால் கூறும் சாதாரண இந்தியரின் கதைகள் - சமன்வயா ராம்


(சென்ற மாதத்தின் தொடர்ச்சி)

இன்று நமது நாட்டின் மற்றும் சமூகத்தின் நிக‌ழ்வுகளை, சுதந்திர இந்திய நாட்டின் புதிய வரலாறாகவே பிரதிபலிப்பது மற்றும் ஆய்வு செய்வது நமது அவல நிலை. பல நூற்றாண்டுகள் கடந்து வளர்ந்த ஒரு பழுத்த நாகரீகத்தின் வாழ்முறையை, வெறும் 70 வயது மட்டுமே இருப்பதாக நம்மில் பலர் புரிந்துகொள்வது, நமது அனுபவ‌ ஞானத்தையும், நாகரீக வளர்ச்சியையும் அவமதிப்பதே அன்றி வேறொன்றும் இல்லை.

நமது வரலாற்று நிகழ்வுகளையும் இன்றைய வாழ்முறையையும் இணைத்துச் சாதாரண இந்தியர்களின் உணர்வுகளை ஒரு நாகரீகத் தொடராகக் கூறுவதில் திரு. தரம்பால் முக்கியமான பங்கு வகித்தார். இதனால் வரலாற்றில் நாம் தவறு செய்யவே இல்லை என்பது இவரது வாதம் அல்ல‌. ஆனால், காந்தியைப் போல இவரும், வரலாற்றுத் தவறுகளை இந்தியர்கள் தங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நம்பினார். “ஆயிரம் உண்டிங்கு ஜாதி, எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி?” என்று பாரதி வினவியதைப்போலவே, தரம்பாலும், நமது வரலாற்றுத் தவறுகளைத் திருத்திக்கொள்ள நமக்கு அன்னியர் உதவி தேவையில்லை என்றே கருத்துத் தெரிவித்தார். பலமுறை இத்தகைய தவறுகளை திருத்திக் கொள்ளுவதில், வேறுபாடுகள் ஏற்படினும், சில நேரங்களில் வன்முறை ஏற்பட்டாலும் கூட நாம் ஒரு தேசமாக நமது கலாசாரத் தற்சார்பை இழக்கலாகாது என்பது இவரது வாதமாக இருந்தது.

அவர் இந்த கருத்தைத்தான் அயோத்தி நிகழ்வுகளையும் குறித்த அவரது பேச்சில் தெரிவிக்கிறார். –

“இப்படிப் பல சுமுகமான‌ முடிவுகள் மக்களே முயற்சித்து மாறும் என்று பல ஆண்டுகளாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களின் கவனம் அயோத்தி போன்ற ஒரு விவாதத்துக்குரிய வரலாற்றுத் தவற்றின்பால் ஈர்க்கப்படுகின்றது. அவர்கள் ஒவ்வொரு வருடமும், “ஏதேனும் மாறும்” என்று எதிர்பார்த்து அயோத்திக்கு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அங்கு வெறும் கூட்டமும், சிறு பூசையும், வெற்று மேடைப் பேச்சுக்களும் இடம் பெறுகின்றன. “இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள், நம்மைப் போன்றவர்களைக் கொண்டு இவர்கள் அரசியல் செய்கின்றார்கள்” என்று அவரகளுக்குள் மக்கள் பேசத் துவங்கியிருப்பார்கள். 1992 டிசம்பர் 9ஆம் நாள், பாபரி மசூதியை இடிப்பதற்கான ஒரு மிகப்பெரிய சதித்திட்டம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜா.க. மற்றும் விஸ்வ இந்து பரிஷ‌த் போன்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் தீட்டப்பட்டிருக்கலாம். இவர்களில் சிலராலோ அல்லது மொத்தமாகவோ அத்தகைய சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம். ஆனால், இவர்கள் யாரும் இத்தகைய திட்டத்தை தீட்டாமலேயே அன்று அந்த மசூதி இடிக்கப்பட்டிருக்கவும் வாய்புள்ளது. ஏனெனில், இவர்கள் யாருமே இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண விரும்பவில்லை. இந்த மசூதியை இடித்து விட்டால் அது ஒரு விதமான தீர்வாகிவிடும், அதனால் இவர்கள், தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக இந்த சிக்கலைத் தீர்க்காமல் மேலும் பல ஆண்டுகள் இதனை நீட்டிக்கவும், அதனால் லாபமடையவும் முயன்றிருக்கலாம். இந்தப் போக்கில் நான் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜா.கவிற்கும் பெரிதும் எந்த வேற்றுமையையும் காணவில்லை.

ஒரு சூழ்ச்சியினாலேயோ அல்லது முயற்சியினாலேயோ அன்று அந்த மசூதி இடிக்கப்பட்டது. இந்தச் செய்தியை அறிந்தவுடன் எனக்கு ஒரு விதத்தில் நிம்மதியாகவே இருந்தது. நமது குடும்பத்தில் மூத்தவர்கள் யாரேனும் நீண்ட நாட்கள் நோய் வாய்ப்பட்டு, அவதிப்பட்டு இறக்க நேர்ந்தால் ஏற்படும் நிம்மதி போன்ற ஒரு நிம்மதி. அதில் துக்கமில்லாமல் இல்லை, ஆனால் ஒரு நிம்மதி நிச்சயமாகப் பலரும் உணர்ந்த ஒரு அனுபவமாகவே இருந்திருக்கும் என்று நான் நினைக்கின்றேன். இதனுடன் கூடி சிலருக்கு மகிழ்ச்சியும், சிலருக்கு கோபமும் வந்திருக்கும். இவை அனைத்து உணர்ச்சிகளும் சேர்ந்தே வந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

பிறகு ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் மற்றும் சமூக சித்தாந்த அல்லது சமூக நோக்கைச் சார்ந்த ஒரு கருத்தை தெரிவிக்கவேண்டிய கட்டாயம். அவரவர் அவர்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதனை அடுத்து பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது, போலீசாரால் கட்டுப்படுத்த இயலாமல் சில இடங்களில் ராணுவம் அழைக்கப்பட்டது. சில இடங்களில் போலீசாரால் வன்முறை இழைக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளைக் காட்டிலும் நமது நாட்டில் போலீசார் மிகவும் குறைவு, ஆகையால் அவர்கள் மேலுள்ள வேலைப் பளு மிக அதிகம். இதனாலேயே அவர்கள் பலமுறை வன்முறையில் ஈடுபடுகின்றனர். இதனால் ராணுவம் பல இடங்களில் அழைக்கப்பட்டது. அதனையும் மீறிப் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தது. பல உயிரிழப்புகளும் நேர்ந்தன‌. இவை அனைத்தும் மிகவும் வருந்ததக்க நிகழ்வுகள்.

ஆனால், ஒரு வேளை அன்று அந்த மசூதி இடிக்கப்படாமல் இருந்தால்? நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள எதிர்பார்ப்பு கட்டுக்கடங்காமல் போயிருக்கும். அதனை ஒரு நேருவோ அல்லது ஒரு இந்திரா காந்தியோ வந்திருந்தாலும் ஒன்றும் செய்திருக்க இய‌லாது. அதனால் வருந்தத்தக்க பல சேதங்கள் ஏற்பட்டாலும், இந்த விஷயத்தில் நாம் இப்போது ஒரு நிரந்தர முடிவைத்தேடி பல இடங்களில் விவாதங்களும், கூட்டங்களும் நடந்து வருவது வரவேற்கத்தக்கது. இத்தகைய கூட்டங்களில் இந்த அயோத்தி விச‌யம் மட்டும் இல்லாமல், நமது நாட்டைப் பல காலமாக ஆக்கிரமித்திருக்கும் இதர சில இன்னல்களையும் போக்க வழிகாண‌ வாய்ப்புள்ளது.

ஆனால், இத்தகைய விவாதங்கள் எந்த உருப்படியான நிரந்தர முடிவிற்கும் வழிவகுக்காமல் வெறும் பேச்சாக அரசியவாதிகளால் கட்டாயப் படுத்தப்பட‌ வாய்புள்ளது. நான் முதன்முதலில் இந்த சர்ச்சையைக் குறித்துத் திரு. அத்வானி ஆற்றிய உரையைக் கேட்டிருக்கிறேன், அப்போது அவர் மிகவும் தெளிவாக கூறியது “இந்த மசூதியை நாங்கள் இடிக்கவே மாட்டோம்” என்பது. எனக்கு அப்போழுதும் இப்போதும் ஆச்சிரியமாகவே உள்ளது. அரசியல்வாதிகள் எவ்வாறு இந்த விஷயங்களில் முடிவெடுக்கின்றார்கள்? யாரைக் கேட்டு இந்தியாவில் எந்த கட்டிடங்கள் இருக்கவேண்டும், எவை இடிக்கப்படவேண்டும் என்று தீர்மானிக்கின்றார்கள்? சில கோயில்களை நாம் இடிக்கவேண்டியிருக்கலாம், சில சர்ச்சுகளையும், இதர மதத்தளங்களையும் நாம் அப்புறப் படுத்த வேண்டியிருக்கலாம். அவ்வாறு அவற்றை அகற்ற வேண்டும் என்றால், யார் அதனை முடிவு செய்கின்றனர்? இன்று நமது நாட்டில் யாரும் பார்த்துக் கொள்ளவோ பராமரிக்கவோ இயலாத நிலையில் பல கோயில்களும் இதர மத தளங்களும் இயங்கி வருகின்றன. இவற்றைப் புதுப்பிக்கவோ அல்லது நமது சாதாரண மக்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் கல்வி, கைவினைக் கலைஞர்கள் அல்லது பல்வேறு கலைத்துறையினர் யாருக்கேனும் இவற்றைப் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கும் எண்ணமோ, திட்டமோ யாரிடத்திலும் இல்லை.

நமது மக்கள் சிலர் “பாகிஸ்தானில் உள்ள கோயில்கள் பராமரிக்கவேண்டும்”, என்று கூறிவருகின்றனர். “யாருக்காக, ஏன்? ” என்று நாம் சிந்திக்க வேண்டும். அங்கு சொற்ப அளவில் சிந்து பிரதேசத்தில் இருப்பவர்களைத் தவிர, பெரும்பாலும் இந்துக்கள் இல்லை. யாருக்கும் பயனளிக்காத இத்தகைய கட்டிடங்களை நாம் யாருக்காகப் பராமரிக்கவேண்டும்? இத்தகைய கட்டிடங்களைக் குறித்து, அவற்றைப் பாதுகாப்பது அல்லது அகற்றுவது குறித்து நமது நாட்டில், உள்ளூர் நிர்வாக அளவில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். நம்மால் இத்தகைய விச‌யங்களை இயல்பாகவும், சமரசத்துடனும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.

நாம் இன்று ஏன் ஒரே விதமான இந்து அல்லது முஸ்லிம் எங்கின்ற அடையாளங்களை ஏற்படுத்தி வருகிறோம் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டும். நமது சாதாரண மக்கள் இன்னமும் பல அடையாளங்களைப் பாரம்பரியமாகத் தாங்கி வருகின்றனர். ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒரு ஊரைச் சேர்ந்தவர்களாகவும், ஒரு விதமான வாழ்வாதாரத்தை அல்லது தொழில் செய்வோர் குழுவைச் சேர்ந்தவர்களாகவும், மக்கள் இருந்து வருகின்றனர். வாழ்வாதாரம் என்றால் வெறும் ஒரு மருத்துவரோ அல்லது வக்கீலோ அல்ல, அவர்கள் தச்சர்கள், தோல் பொருள் பதனிடுவர், அதனைக்கொண்டு பல்பொருள் தயாரிப்பவர்கள் என்று பலவிதமான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நாம் உணரவேண்டும்.

இத்தகைய அடையாளங்களை நாம் இன்று மறுத்து நமது மக்களை வெறும் இந்து அல்லது இஸ்லாமியர் எங்கிற ஒரு குறுகிய அடையாளத்துக்குள் அடைக்க முற்படுவது கண்டிக்கத்தக்கது. நமது ஒட்டுமொத்த நோக்கு மாற‌ வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த விதத்தில் இந்த அயோத்தி விவகாரம் நம்மை மாற்றும் என்றால் அதனை நான் வரவேற்கிறேன். இன்று இதற்கு காரணமாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளைக் குறித்து நான் கவலைப் படவில்லை, இவர்களில் பலர் 1920களில் பிறந்தவர்கள், இன்னமும் 10 வருடங்களுக்கு பிறகு இவர்கள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் செல்வாக்குக் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். நான் சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்களைத்தான் கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேன், அவர்கள் வரும் காலத்தில் இந்தியாவின் தலைவர்களாக வருவார்கள்.

மற்றொரு முக்கிய கருத்தை நான் முன்வைக்கிறேன். நாம் உலகைக் கண்டு அச்ச‌ப்படுவதை நிறுத்தவேண்டும். இந்த உலகம் என்றுமே இப்படித்தான் இயங்கி வருகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு வன்முறை மற்றும் சுயநலவாத உலகமாகவே இயங்கி வருகிறது. உலகைத் தன் ஆதிக்கத்தின் கீழ் அமைப்பதற்கு ஐரோப்பா மிகபெரும் முயற்சி மேற்கொண்டது. உலகின் பெரும்பங்கை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரவும் செய்தது. உலகளவில் மக்களை மாற்ற முற்பட்டது. இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும், இது நியதி. பிற்காலத்தில் இதனை அவர்கள் மீண்டும் சுற்றுப்புற சூழல் என்கிற பெயராலேயோ அல்லது மனித உரிமை என்கிற பெயராலேயோ முயற்சிக்க வாய்புள்ளது.

இஸ்லாமும் இதேபோல் பல போர்களைக் கடந்து வந்துள்ளதை நாம் வரலாற்றில் படிக்கின்றோம். இஸ்லாமிய விரிவாக்கம் நவீன யுக்திகளை கொண்டோ அல்லது ஆயுதங்களை கொண்டோ உருவாக்கப்படவில்லை. அவர்களுடைய பர‌ப்பு, கடினமான மனித‌ உழைப்பு மற்றும் தீவிர நம்பிக்கையினால்தான் சாத்தியமானது. இது மீண்டும் நடக்க எல்லா சாத்தியங்களும் உள்ளன. நாம் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் இதில் படையெடுத்தவர்கள், ஆக்கிரமித்தவர்களிடம் மிகப்பெரிய அளவில் பணபலம் இருக்கவில்லை. ஐரோப்பா உலக அளவிலான தங்கள் விஸ்தரிப்பு துவங்கியபோது அவர்கள் ஆக்கிரமித்த நாடுகளைவிட அதிக பணபலமோ அல்லது பொருள் பலமோ அவர்களிடம் இல்லை. இஸ்லாமிய நாடுகளின் நிலையும் அவ்வாறே இருந்தது.

இன்று உலகத்தில் முற்காலத்தைவிட அதிக அளவு பணபலமும், பொருள் பலமும் கொண்ட நாடுகள் உள்ளன. ஆனால் நாம் சிந்திக்க வேண்டியது பொருளைக் குறித்தோ அல்லது பணத்தைக் குறித்தோ அல்ல. நாம் நமது (நாட்டின், நாகரீகத்தின்) ஆன்மா என்னவென்று உணர்கின்றோம்? இதனைக் கொண்டு உலக மைதானத்தில் எதனை நிர்மாணிக்க முயல்கின்றோம்? இந்தியர்களாக நமக்கென்று ஒரு கொள்கையோ அல்லது பெருக்கத் தகுந்த ஒரு குறிக்கோள் உள்ளதா? அத்தகைய கொள்கை இல்லாத இட‌த்தில் நாம் என்ன சாதிக்க முயல்கிறோம்? அப்போழுது நாம் வாழ்ந்து என்ன பயன்? உலக நாடுகளின் மத்தியில் தன் தனித்துவத்தை உணராது, அதன் மூலமாக லட்சியங்களை நிர்ணயித்து, அடைய முயற்சிக்காத, வெற்றாகப் பிறரைப் பின்பற்றி வாழும் நாடுகள் நிலைத்திருக்க வாய்பில்லை.”

மேலே தெரிவிக்கப்பட்ட கருத்துகள், திரு. தரம்பால் அவர்கள் இருபது வருடங்களுக்கு முன்னர் தெரிவித்தது. இன்று இந்தக் கருத்துக்களைப் படிக்குபோதும் அவை நமது காலத்திற்கு ஏற்றவாறு இருப்பதைக் காண முடிகிறது. திரு. தரம்பால் அவர்கள், நமது மக்கள் மனதளவில் அடிமைத்தனத்தைப் போக்க, இன்றைய ஜனாதிபதி மாளிகையாக விளங்கும் முன்னாளைய அடக்குமுறை ஆட்சியாளர் (ஆங்கிலேயர்) தலைமைப்பீடம் போன்ற ஆடம்பரமான மாளிகைகளைக் கூட நாம் ஒரு நாள் இடித்துவிடவோ அல்லது அதனை ஒரு மாட்டுத் தொழுவமாக மாற்றிவிடவோ முயற்சித்தால் அன்று நமது நாடு உண்மையில் விடுதலை அடையும் என்று அடிக்கடி கூறுவார்.

இந்தியாவின் நாகரீகத்தை ஒரு தொடராகவே என்றும் நோக்கிய இவரது கருத்துக்களை வரும் இதழ்களில் மேலும் படிப்போம்…

[ஆசிரியர் குறிப்பு

தாளாண்மை சார்பற்றது. எவ்வித இன, நிற, மத, மொழிப் பிரிவினைகளையும் நாம் ஏற்பதில்லை. தாளாண்மையைப் பொறுத்தவரை இரண்டே மனிதப் பிரிவுகள்தான் உள்ளன: ஒன்று சுரண்டும் இனம், இன்னொன்று சுரண்டப்படும் இனம். சுரண்டல்களை இனங்காண்பதும், நம்மால் இயன்றவரை சுரண்டப்படுபவருக்குக் குரல் கொடுப்பதுமே நம் ஒரே கடமை.இக்கட்டுரையில் வரும் தரம்பாலின் கருத்துக்கள் சில‌ தாளாண்மையின் கருத்துக்களுட‌ன் முரண்பட்டாலும், தரம்பாலின் சிந்தனைகளில் பல முத்துக்கள் ஒளிந்துள்ளன. ஒரு சமூகம் தன்னைத் தானே ஆட்சி செய்து கொள்வது, தன் பாரம்பரியத்தில் பெருமை கொள்வது, அதைச் சார்ந்து தன் அறங்களையும் சமூக ஏற்புக்களையும் அமைத்துக் கொள்வது என்பது தன்னாட்சிக்கும், தற்சார்புக்கும் மிகவும் இன்றியமையாதது. இன்று மேலைநாட்டு மோகத்தால் நம் இளைஞர்கள் பெரிதும் சீர்குலைந்த நிலைமைக்குக் காரணம் நம் பண்பாட்டின் மீது நமக்கு ஏற்பட்டுள்ள தன்னம்பிக்கையின்மையே. இதை மீட்டெடுக்க வரலாற்று ஆய்வு என்பது மிக உடனடித் தேவையானது.]

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org