குமரப்பாவிடம் கேட்போம் - தமிழில் பாபுஜி


சில பொய்யான ஊகங்கள்

'நமது நாட்டின் மூலப்பொருட்களைக் குடிசைத்தொழில்களின் மூலம் நுகர்வுப்பொருட்களாக மாற்றுவதுதான் சேதாரமற்ற வழியில் மூலப்பொருட்களை பயன்படுத்தும் சிறந்த வழியா?' என்று நம் நாட்டின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றின் பேராசிரியர் நம்மை கேட்கிறார். அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் கால்நடைகளில் இருந்து சிறிதும் 'சேதாரம்' இல்லாமல் நுகர்வுப்பொருட்களை (மாமிசம், கொழுப்பு போன்ற‌) மிகக்குறைந்த விலையில் உற்பத்தி செய்யமுடிவதனை மேற்கோள் காட்டி!

அவரது கேள்வியில் மூன்று அனுமானங்கள் உள்ளன.

1. மூலப் பொருட்களைச் சேதாரமின்றி முற்றிலுமாகப் பயன்படுத்துவது (ஆலை ம‌யமான‌) பெருந்தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியம். 2. பெருந்தொழில் நிறுவனங்கள் மட்டுமே மூலப் பொருட்களைச் சிக்கனமாகவும் முற்றிலுமாகவும் பயன்படுத்தவல்லவை. 3. குறைவான விலை என்பதே எப்போதுமே அவசியமான ஒன்று.

நாம் இப்போது இம்மூன்றையும் அலசுவோம்…

பெருந்தொழில் நிறுவனங்களால் மூலப்பொருட்களை முற்றிலுமாக நுகர்வுப்போருட்களாக மாற்ற இயலும் என்பது உண்மைதான் என்றாலும் அவர்களால் மட்டுமே அவ்வாறு செய்ய இயலும் என்று நினைப்பது தவறு. கல்கத்தாவில் நண்பர் சதீஷ் சந்திர தாஸ் குப்தா நடத்தும் தோல் பதனிடும் குடிசைத்தொழில் நிறுவனத்தை சுற்றிப்பார்க்கையில் இங்கும் மூலப்பொருளான கால்நடை உடல் சதை, எலும்புகள், கொம்பு, குளம்பு, தோல், கொழுப்பு, என அனைத்தும் குடிசைத்தொழில் மூலமே முற்றிலுமாக பயன்படுத்தப்படுவதைக் காணலாம். இவ்வாறாக இயல்பில் நடக்காமல் போவதற்கு குடிசைத்தொழில் மூலம் தோல் பதநிடுவோரின் அறியாமையே காரணம்; குடிசைத்தொழிலால் மூலப்பொருட்களை முற்றிலுமாகப் பயன்படுத்த முடியாது என்பதல்ல. இதைச் சரி செய்வதற்கு நாம் இக்குடிசைத் தொழில்களைக் கைவிடவேண்டியதில்லை, அறிவியலை அவர்களிடம் கொண்டு சேர்த்தால் போதும். நாம் இங்குதான் தோற்றுப்போனோம். நமக்கு தேவையானது தன்னலமற்ற, அறிவியலைச் சிறு தொழில்களுக்குக் கொண்டு சேர்க்கும் முனைப்புடைய அறிவியலாளர்கள்தான், பெரு நிறுவனங்களுக்கு தொண்டு செய்பவர்கள் அல்ல.

பெரு நிறுவனங்கள், செலவுகளை குறைத்து சிக்கனமாக மூலப்பொருட்களை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றாலும் அவர்களால்தான் மிக சிக்கனமாக நுகர்வுப்போருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது, அமெரிக்கா போன்ற சந்தைப்போட்டி பொருளாதாரத்தில் நிகழ்ந்த 'பருத்தி வயல்களை எரித்தது', 'கப்பல் கப்பலாக வந்திறங்கிய தேயிலையை கடலில் கொட்டியது, எரி பொருளாக பயன்படுத்தியது','கனிம வளம் நிரம்பிய மொலாசெஸ் என்கிற (கரும்பு சுத்திகரிப்பின்போது கிடைக்கும்) சாற்றை தேவையற்றவை என்று தூக்கி எரிந்தது' போன்ற சந்தை மதிப்பு சார்ந்த செயல்கள் சிறுதொழில் சார்ந்த பொருளாதார அமைப்பில் நிகழ்வதில்லை. பெருவாரியான நேரங்களில் பெருநிறுவனங்கள் ஒரு நாடு சார்ந்த பார்வையில் ஆடம்பரமானவைகளாகவே விளங்குகின்றன. மூங்கிலில் இருந்து காகிதம் தயாரிக்கும் தொழிலை உதாரணமாக எடுத்துக்கொண்டால், பெரிய அளவிலான மூங்கில் காடுகளை நிறுவாமல் இப்பெருநிறுவனங்கள் தயாரிப்பு எதையும் நடத்த இயலாது. தொடர்ச்சியாக மூங்கிலை வெட்டி வெட்டித் தடையின்றி இந்த ஆலைகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தால் மட்டுமே அவற்றால் காகிதம் சிக்கனமான விலையில் தயாரிக்க முடியும். ஆனால் மூங்கில் சார்ந்த நம் சிறு குடிசைத்தொழில்களை எடுத்துக்கொண்டால், முதலில் மூங்கிலில் இருந்து கூடைகள், பைகள், கூரைகள், தானிய சேமிப்புக்கலன்கள் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு, இப்பொருட்கள் வீணாகிப் பயன்பாடற்றுப் போகும்போதுதான் அவற்றில் இருந்து அற்புதமான காகிதம் தயாரிக்கப்படும். இப்போது சொல்லுங்கள் எந்தத் தொழில் முறை சிக்கனமானதென்று!

ஒரு பொருளுக்குக் குறைவான விலை அல்லது உயர்வான விலை என்பது அப்பொருளை உற்பத்தி செய்வதில் என்னென்ன செலவுகள் நிகழ்ந்தன என்பதைப் பொறுத்தே நாம் கூற இயலும். விலை நிர்ணயிப்பதில் மூலப்பொருட்களின் மதிப்புதான் கூடுதல் என்றால் குறைவான விலைக்கு விற்பது நல்லது. அவ்வாறில்லாமல் உழைப்பின் ஊதியம்தான் கூடுதல் என்றால் உயர்வான விலைக்கு விற்பது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் செல்வம் பரவுகிறது. ஒரு ரூபாய் மதிப்புள்ள ஆலைத்துணியில் மூலப்பொருட்கள், போக்குவரத்து, வட்டி போன்றவை 12 அணா (75 பைசா) மதிப்பு, கூலி அல்லது ஊதியம் 4 அணா என்றால் இத்துணியை விலை குறைத்து விற்பது (மூலப்பொருட்கள், போக்குவரத்து, வட்டி ஆகியவற்றில் சிக்கனம் செய்து) நியாயம். அவ்வாறின்றி ஊதியம் 12 அணா , மூலப்பொருட்கள், போக்குவரத்து, வட்டி சேர்ந்து 4 அணாதான் என்றால் விலை குறைப்பது, ஊதியத்தைக் குறைத்துத் தொழிலாளரின் வயிற்றில் அடிப்பதற்குச் சமம். எனவே மனித உழைப்பு அதிகம் தேவைப்படும் சிறுதொழில்கள் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை அதிக விலைக்கு விற்பதும், பெரு நிறுவனங்களால் குறைந்த மனித உழைப்பில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதும்தான் சரி!

மேற்கூறியவற்றை அலசி ஆராயாமல் நாம் (அந்த பேராசிரியர் போல) ஒரு முடிவுக்கு வருவது முட்டாள்தனம். முதலாளியம் மற்றும் சந்தைப் பொருளாதாரம் சார்ந்த நாடுகளால் முன்வைக்கப்பட்டு, புத்தகங்கள் வழியே நம்மை வந்தடையும் இத்தகைய ஊகங்கள் மிக்க கருத்துகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் மிக நுட்பமாக‌ அலசி ஆராய வேண்டும். இவ்வாறு அரை வேக்காட்டு உண்மைகள் (half truths) அன்றாடம் நமக்கு புகட்டப்படுவதால் நாம் சந்திக்கும் அபாயங்கள் ஏராளம்.

- கிராம உத்யோக் பத்ரிக்கா - ஏப்ரல் 1942

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org