தலையங்கம்


சுரைக்காயா பூசணிக்காயா ?


பருவநில மாற்றம், புவி வெப்பமடைதல் போன்றவற்றைப் பற்றிப் பேசும் போதெல்லாம், “அதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய். அது ஏதோ ஐம்பது, நூறு ஆண்டுகளுக்குப் பின் ஏற்படப் போகிறது; அதற்காக இப்போது நாம் ஏன் நம் சுகங்களை விட்டுக் கொடுக்க வேண்டும்” என்று அலட்சியமாகப் பேசியவர்களே அதிகம். நாளை என்று ஒன்றில்லை; இன்றென வாழ்வோம் என்று கண்மூடித் தனமாக நாம் நுகர்ச்சியை அதிகரித்துக் கொண்டே போவதன் விளைவுகளை நாம் நம் வாழ்நாளிலேயே சந்திக்கும் சூழல் உருவாகி விட்டது. ஆறு மாதங்களுக்கு முன் வரலாறு காணாத மழையும், வெள்ளமும், மலைச் சரிவுகளும், உயிரிழப்புக்களும் சந்தித்த போது எல்லோரும் நீர் நிலைகளைப் பாதுகாப்பது, வடிகால் வசதிகளைச் செப்பனிடுவது போன்று மேடையில் மட்டும் உரக்கப் பேசினோம். இன்று நூறு வருட வரலாற்றின் மிக வெப்பமான கோடையின் கொடுமையில் இருக்கிறோம். இந்தியாவில் மூன்று மாநிலங்களில் வறட்சி கோர தாண்டவம் ஆடுகிறது.

இப்போதும் நாம் விழித்துக் கொள்வதாய்த் தெரியவில்லை. பொருளாதார வளர்ச்சியையே இலக்காகத் துரத்திக் கொண்டிருக்கிறோம். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதைப் பற்றிப் பேசினாலே மிக மோசமான கெட்ட வார்த்தையால் திட்டுவதுபோல் அனைவரும் பார்க்கிறார்கள். அடுத்த 15 வருடங்களில், இந்தியாவின் மின் ஆற்றல் தேவை வருடா வருடம் 10 % அதிகமாகிக் கொண்டே போகும் என்றும் , 2030ல் நாம் இன்றுபோல் நான்கு மடங்கு மின் ஆற்றலை நுகர்வோம் என்றும் மத்திய ஆற்றல் மந்திரி பியுஷ் கோயல் பெருமையாக மார்தட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் விளையப் போகும் வெப்பம் என்ன ஆகும் என்பதைப் பற்றி அவர் ஏதும் வாய்திறக்கவே இல்லை.

சரி அப்படி இவர்கள் உலகமெங்கும் கூவிக் கூவி யாசகம் செய்த அந்நிய முதலீடு என்ன செய்து விட்டது என்றால் , உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகளின் வளர்ச்சி (இயந்திர மய‌மான ஆலை உற்பத்தி) சென்ற மார்ச் மாதம் 0.1% வளர்ந்துள்ளது. இதற்கென அரசு அளிக்கும் மானியமோ 50,000 கோடிக்கும் மேல்! ஆனால் புவியின் வெப்ப மண்டலத்தை முற்றிலும் சீர் செய்யக் கூடிய திறன் கொண்ட இயற்கை வேளாண்மைக்கோ ஒதுக்கீடு வெறும் 300 கோடி ரூபாய். உற்பத்தியும் பெருகாமல், வேலைவாய்ப்புக்களும் உருவாகாமல், இயற்கை வளங்களை அழித்து, இயற்கை சார் தொழில்களான வேளாண்மை, கிராமிய சிறு உற்பத்திகள், மீன்பிடித்தல், உப்பளங்கள் , பனை போன்ற வறட்சியைத் தாங்கும் மரம் சார் தொழில்கள் ஆகிய அனைத்தையும் அழித்து, உருப்படாத பெருநிறுவனங்கள் உண்டு கொழுப்பதற்குப் பெயர்தான் வளார்ச்சியா, மேம்படுத்துதலா?

இதில் கொடுமை என்னவெனில், வறட்சி வந்தால் வலுத்தவர்கள் பணம் கொடுத்து நீர் வாங்கிக் கொள்கிறார்கள். வெள்ளம் வந்தால் ஹெலிகாப்டர்களில் அவர்கள் காப்பாற்றப் படுகிறார்கள். அவர்களின் பிரச்சினைக்கென அரசும் அதன் இயந்திரங்களும் இடறியடித்துப் போய் சேவை செய்கின்றன. மிகக் குறைந்த சூழல் சுவடு பதிக்கும் ஏழைகளோ, எந்தத் தவறும் செய்யாமல் தண்டிக்கப் படுகிறார்கள். செல்வந்தர்களின் நுகர்ச்சியும், அவர்களுக்குப் பல்வகை நுகர்ச்சிகளைப் பழக்கிப் போதையேற்றிப் பணம் பண்ணும் பெருநிறுவனங்களும் செய்யும் பாபங்களுக்குத் தண்டனை அனுபவிப்பது அப்பாவிக் கிராம மக்களே.

பருவநிலை மாற்றம் என்பது ஏட்டுச் சுரைக்காய் அல்ல; அது நம் கண்ணெதிரே விசுவரூபம் எடுத்து நிற்கும் முழுப் பூசணிக்காய்; அதைச் சோற்றில் மறைக்க முயலாமல் அரசும் திட்டமிடுவோரும் இனியேனும் விழித்துச் செயலாற்ற வேண்டும். குமரப்பா கூறியது போல் அடிப்படைத் தேவைகளை அனைவருக்கும் நிறைவு செய்யவும், கிராமியத் தொழில்கள் சார்ந்ததாகவும் உற்பத்தியை மாற்றி அமைக்க வேண்டும். வருடா வருடம் 10% ந‌ம் ஆற்றல் நுகர்ச்சியைக் குறைக்கத் திட்டமிட வேண்டும். நாம் உயிரோடு இருக்க வேண்டும் என்ற சுயநலத்துடனாவது இதைச் செயலாற்றல் தேவை.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org