முன்னுரை
பொதுவாக விவசாயிகளிடையே நெல் விவசாயத்தைப் பற்றி, “அது மிகுந்த வேலைப்பளுவைக் கொண்டது; லாபம் குறைவானது; ஆட்தேவை அதிகமானது ” என்பது போன்ற கருத்துக்கள் நிலவி வருகின்றன. இவையனைத்தையும் மீறித் தமிழ்நாட்டில் 51% விளைநிலம் நெல் விளைச்சலுக்குப் பயன்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நெல்லை விற்பனை செய்வது மிக எளிது; குறைந்த விலையாயினும் அதை உடனே காசாக்கி விடலாம். இரண்டாவது நெல்லில் எப்போதுமே ஒரு குறைந்த பட்ச வருவாய்க்கு உத்திரவாதம் உண்டு. கடைமடைப் பாசனப் பகுதியான தஞ்சை , நாகை, திருவாரூர் போன்ற வெள்ளம் தேங்கும் களிமண் பூமிகளில் நெல், கரும்பு, தென்னை மரம் போன்ற பயிர்களைத் தவிர வேறு பயிர்கள் மிகக் கடினமே. எனவே அங்கு நெல் விளைவிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. எனினும் வடிகால் வசதி கொண்ட பல பகுதிகளிலும் பிற பயிர்களைப் பயிரிடாமல் விவசாயிகள் நெல்லை நாடுவது அதை விற்பது மிக எளிது என்பதால்தான்.
விலையையோ, இடுபொருட் செலவையோ மேலாண்மை செய்ய இயலாத நெல் விவசாயி, விளைச்சலை அதிகப் படுத்துவதே வருவாய்க்கு ஒரே வழியாக முயற்சிக்கிறான். தவிர, இயற்கை விவசாயத்தில் நெல்லின் மகசூல் குறைந்து விடும் என்றும், அதிலும் பாரம்பரிய ரகங்களை நட்டால் விளைச்சல் இன்னும் குறைந்து விடும் என்றும் பரவலாக நம்பப் படுகிறது. இதனால் விளைச்சலுக்கு ஆசைப்பட்டு வீரிய ஒட்டு ரகங்கள், உயர் விளைச்சல் ரகங்கள் என்று ஏமாந்து, விதைக்கும் அதன் விளைவாய் வேதி இடுபொருட்களுக்கும் விவசாயிகள் செலவழித்துக் கொண்டே போவதால் நெல் விவசாயியும் கடனில் சிக்கிக் கொள்கிறான்.
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வெள்ளரி வெள்ளி கிராமம், செல்லப்பன் காட்டுவலசு வில் உள்ள 19 ஏக்கர் விவசாய பூமி திரு செங்கோட கௌண்டருக்கு சொந்தமானதாகும். இவரது மகன் ராஜன் (எ) உத்திரசாமி இதில் உள்ள 12 1/2 ஏக்கரில் கடந்த 20 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறார். இவர் M.Com Co-Op படிப்பை முடித்தவர். இவர் மனைவி திருமதி. செல்வமணி BSc BEd படிப்பை முடித்திருக்கிறார். இதில் 7 ஏக்கர் பூமியில் 20 வயது கடந்த மாமரங்கள் இவரது தந்தையால் நடவு செய்யப்பட்டு இருந்தது. கடந்த வருடம் இந்த மரங்கள் அனைத்தையும் வெட்டி விற்பனை செய்துள்ளார். காரணம் வருவாய் சரியாக கிடைக்காததாகும்.
கடந்த 2000 ஆம் ஆண்டில் நம்மாழ்வாரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் இரண்டு மூன்று வருடங்கள் இரசாயனமற்ற விவசாயம் செய்துள்ளார். 2003 இல் ஏற்பட்ட கடுமையான வறட்சியினால் மிகவும் பாதிக்கப்பட்டு பெங்களூர் சென்று இரண்டு வருடங்கள் அங்கு தொழில் செய்து மீண்டும் விவசாயத்திற்கு திரும்பி ஏதாவது ஒரு பயிரை மீண்டும் மீண்டும் பயிர் செய்து போதிய வருவாய் இன்றி மிகச் சிரமப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக மீண்டும் அதே தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
விஞ்ஞானிகளின் மாநாடு
சண்டிகர் இயற்கை மாநாட்டின் ஒரு பெரும் கவர்ச்சிகரமான நிகழ்ச்சியாக கருதப்பட்டது விஞ்ஞானிகளின் மாநாடு ஆகும். நாடு முற்றிலுமிருந்து சிறந்த விஞ்ஞானிகள், பல வேளாண் அறிஞர்கள், பல்வேறு வேளாண் பல்கலைகழகங்களிலிருந்து துணை வேந்தர்கள் என வேளாண்மையில் ஈடுபட்டு வரும் பல அறிஞர்களும் பங்கு கொண்டனர். நம் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத் துணைவேந்தர் வந்து சிறப்பித்தார். வேளாண் சூழலியலைப் பொதுமுறைமைக்குக் கொண்டுவருவது [mainstreaming agroecology] என்ற முழக்கத்துடன் நடைபெற்றது இந்த விஞ்ஞானிகளின் மாநாடு. அவர்களுடன் பல்வேறு முன்னோடி இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டது பெரும் சிறப்பு. பல அறிஞர்களும் வேளாண் விஞ்ஞானிகளும் இவர்களது பங்களிப்பைப் பெரிதும் பாராட்டினர். சிலர் இந்த விவசாயப் புலிகளின் சாதனை, சோதனை மற்றும் தகவல் விவரங்களை பெரிதும் போற்றினர். இந்த மாநாட்டின் வாயிலாகவே அவர்களுக்கு இப்படிப் பெரிதும் சாதித்துள்ள விவசாயிகள் பற்றியும் அவர்களது அறிவுத்திறன் பற்றியும் தெரிய வந்துள்ளது என்றனர்.
அந்த விஞ்ஞானிகளின் மாநாட்டில் விஞ்ஞானிகளின் தீர்மானம் ஒன்று அறிவிக்கப்பட்டது பெரும் சிறப்பு ஆகும்.