மீன்கொத்தி
White Breasted Kingfisher அல்லது White Throated Kingfisher என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படுவது. அறிவியற் பெயர் Halcyon Smyrnensis.
வீதிகளில் வாகனம் செல்லும் பொழுது காற்றொலிப்பானை அடித்து கொண்டே செல்வர் சிலர். அதுபோல மீன்கொத்தி தான் பறந்து செல்லும் பொழுது கிர்ரீ.. கிர்ரீ..கிர்ரீ.. என்ற ஓசையோடுதான் செல்லும். பெரிய பிரமுகர்களின் வாகனங்களுக்கு சைரன் அடிப்பது போல!
தோற்றம்
மைனாவை விடச் சிறியதாக இருக்கும். அலகு மட்டும் பெரியதாக செந்நிறத்தில் நீளமாக அமைந்திருக்கும். தலைப் பகுதியும்,உடலின் மேற்பகுதியும் பழுப்பு நிறத்தில் இருக்கும். நெஞ்சு வெண்நிறத்தில் இருக்கும். சிறகுகள் நீலமும், கருப்பும், அரக்கு வண்ணமும் கலந்து அமைந்திருக்கும். மூக்கு நுனியில் கூர்மையாகவும் பின்புறம் சற்று பெரியதாய் தன் உணவை விழுங்கும் வசதியுடனும் அமைந்திருக்கும்.
காணும் இடம்
இந்தியா முழுவதிலும் இவற்றைக் காணலாம். தண்ணீர் குறையும் காலங்களில் நிலப்பரப்பில் அதிகம் தென்படும். அதாவது கோடைகாலங்களில் குளம், குட்டை, வாய்கால், வயல்கள், தோட்டங்கள் ஆகியவற்றில் நீர்த்தேக்கம் குறையும்போது நண்டுகள், பூச்சிகள் வெளியே வரும்; அவற்றை நன்று வேட்டையாடி உண்ணும்.
உணவு
மீன், தவளை, பல்லி, பூரான்,வெட்டுகிளி போற்றவற்றை உண்ணும். இவை மின்கம்பியில் அமர்ந்து நண்டைத் துணி துவைப்பது போல் அடித்துப் பின் உண்ணுவது பார்க்க மிக அழகாக இருக்கும் (நண்டுக்கு அல்ல!)
இனப்பெருக்கம்
கோடைகாலங்களில் இனப்பெருக்கத்தில் இவை ஈடுபடும். மரங்களிலோ அல்லது பூமி பகுதியிலே குழாய் போன்ற பொந்துகளில் கூடு அமைக்கும். 4 - 7 முட்டைகள் இடும். 20 - 22 நாட்களில் குஞ்சு பொரித்துவிடும். 19 நாட்களில் குஞ்சுகள் பறக்கத் துவங்கும்.