தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்


சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வெள்ளரி வெள்ளி கிராமம், செல்லப்பன் காட்டுவலசு வில் உள்ள 19 ஏக்கர் விவசாய பூமி திரு செங்கோட கௌண்டருக்கு சொந்தமானதாகும். இவரது மகன் ராஜன் (எ) உத்திரசாமி இதில் உள்ள 12 1/2 ஏக்கரில் கடந்த 20 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறார். இவர் M.Com Co-Op படிப்பை முடித்தவர். இவர் மனைவி திருமதி. செல்வமணி BSc BEd படிப்பை முடித்திருக்கிறார். இதில் 7 ஏக்கர் பூமியில் 20 வயது கடந்த மாமரங்கள் இவரது தந்தையால் நடவு செய்யப்பட்டு இருந்தது. கடந்த வருடம் இந்த மரங்கள் அனைத்தையும் வெட்டி விற்பனை செய்துள்ளார். காரணம் வருவாய் சரியாக கிடைக்காததாகும்.

கடந்த 2000 ஆம் ஆண்டில் நம்மாழ்வாரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் இரண்டு மூன்று வருடங்கள் இரசாயனமற்ற விவசாயம் செய்துள்ளார். 2003 இல் ஏற்பட்ட கடுமையான வறட்சியினால் மிகவும் பாதிக்கப்பட்டு பெங்களூர் சென்று இரண்டு வருடங்கள் அங்கு தொழில் செய்து மீண்டும் விவசாயத்திற்கு திரும்பி ஏதாவது ஒரு பயிரை மீண்டும் மீண்டும் பயிர் செய்து போதிய வருவாய் இன்றி மிகச் சிரமப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக மீண்டும் அதே தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு வருடங்களாக இவர் தனது நண்பருடன் பல விவசாயச் பண்ணைகளுக்குச் சென்று பார்த்து அங்கு உள்ள விவசாயிகளுடன் கலந்து பேசியுள்ளார். அதன் மூலம் மிகவும் குறைந்த நீரைக்கொண்டு பயிர் செய்யும் முறையை அறிந்து அதன்படி செயல்பட முடிவு செய்தார். செலவினங்களை குறைக்கும் முறைகளையும் அறிந்து அவற்றை பின்பற்ற முடிவு செய்துள்ளார். அதன்படி தனது பூமி முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார். முதலில் கடலை பயிருடன் தினை, தட்டைப்பயறு மற்றும் ஆமணக்கு என மூன்று பயிர்களையும் கலந்து பயிர் செய்துள்ளார். இன்று அறுவடை நடந்துகொண்டுள்ளது. மற்றும் உள்ள சுமார் 1 1/2 ஏக்கரில் 12 அடிக்கு ஒரு வாணி எடுத்து அதில் இரண்டு வரிசை கரும்பு நடவு செய்து மேட்டு பாத்தியில் 5 அடிக்கு ஒரு பப்பாளி பயிர் செய்துள்ளார். மேலும் பப்பாளி நடவு செய்துள்ள மேட்டுப்பாத்தியில் குதிரைவாலி, மரவள்ளி, வெள்ளரி, காய்கறிச் செடிகள் என்று பலவிதமான பயிர்களைப் பயிர் செய்துள்ளார். இனி இந்த பூமிக்கு உழவு என்பது தேவையற்றதாக ஆகிவிட்டது. அனைத்துப் பயிர்களும் நன்கு செழுமையுடன் காணப்படுகின்றன‌.

60 நாட்கள் கடந்த கரும்புப் பயிரை மண் மட்டத்திற்கு அறுத்து எடுத்துக் கால்நடைக்கு தீவனமாக கொடுத்துள்ளார். வெட்டப்பட்ட ஒரு பயிரிலிருந்து 5 அல்லது 6 பயிர்கள் ஒரே மாதிரியாக வளர்ந்து உள்ளன‌. மற்றும் 2 ஏக்கரில் 3 1/2 க்கு 1 1/2 அடி அகலத்திற்கு மேட்டுப்பாத்தி அமைத்து சொட்டு நீர்ப் பாசனம் கொடுத்துப் பல விதமான காய்கறிச்செடிகள் பயிர் செய்யும் வேலை நடந்துகொண்டுள்ளது. இதை நிரந்தரமாக காய்கறி உற்பத்தி செய்யும் முறையில் அமைத்துள்ளார். இதில் இனி உழ வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் உள்ள 2 1/2 ஏக்கரில் 12 அடிக்கு ஒரு வாணி எடுத்து அதில் வாழையும், மேட்டுப்பாத்திக்கு இடையில் (இரண்டு வாணிகளுக்கு இடையில் உள்ள 12 அடி) நிலக்கடலையும் பயிர் செய்ய ஏற்பாடுகள் நடந்துகொண்டுள்ளது. வாழை பல வருடங்களுக்கு தொடர்ந்து பயன் கொடுத்துக்கொண்டிருக்கும். இந்த பகுதியிலும் இனி உழ வேண்டிய அவசியம் இல்லை.

இவர் தனது பண்ணையில் 20 வெள்ளாடுகளும், 2 பசு மாடுகளும் சுமார் 20 கோழிகளும் வளர்த்து வருகிறார். இவற்றுக்கு தேவையான பசுந்தீவனமாக மல்பெரியைப் பயிர் செய்துள்ளார். முதலில் ஏதாவது ஒரே பயிரை பயிரிடுவதில் இருந்து இன்று மாறி பலவிதமான பயிர்களை கலந்து பயிர் செய்துள்ளார். பல விதமான செலவினங்கள் (உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல் போன்ற) தானாகவே குறைந்துவிட்டன. வருடத்தில் இரண்டு முறை மட்டுமே கிடைத்த வருவாய் இன்று ஆண்டு முழுவதும் கிடைக்கும் விதத்தில் பண்ணை அமைந்துள்ளது. இந்த முறையில் தேவையும் எளிமையாகப் பூர்த்தியாகிறது. தண்ணீரின் தேவை மிகவும் குறைந்துவிட்டது. சரியான முறையில் மூடாக்கு கொடுத்துவிட்டால் வறட்சிக் காலத்திலும் பெரிதாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தேவையற்ற கழிவுகளை அங்கேயே திருப்பிக்கொடுக்கும் முறையைக் பின்பற்றுகிறார். இதனால் மண் வளம் நாளுக்கு நாள் கூடும். பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை கொண்டு திறன்மிகு நுண்ணுயிரிக்கலவை (EM) தயார் செய்து பயன்படுத்துகிறார். அனைத்துப்பயிர்களும் மிகவும் செழுமையுடன் காணப்படுகின்றன‌. பூச்சித்தாக்குதலும் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இதற்கு காரணம் கலப்புப் பயிர் செய்வதே ஆகும். இவர் தனது பூமியை மூன்று பங்காகப் பிரித்து ஒரு பகுதியில் தண்ணீர் தேவைப்படும் பயிரையும் இன்னொரு பகுதியில் குறைந்த நீரே தேவைப்படும் பயிரையும் மூன்றாவது பகுதியில் மானாவாரியில் விளையும் பயிர்களையும் திட்டமிட்டுப் பயிர் செய்துள்ளார். இதனால் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய நீர்ப்பற்றாக்குறை பண்ணையை பெரிய அளவில் பாதிக்காது.

தனது 20 வருட விவசாய அனுபவத்தில் திரு.ராஜன் கற்று அறிந்த விஷயங்கள் இன்று அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளன‌. ஒரே இனப்பயிரைத் தவிர்த்து பல இனப்பயிர்களை பயிர் செய்வதும், காலத்தை உணர்ந்து வேலையையும் செலவையும் குறைப்பதும் மிக முக்கியம் என்கிறார். ஒரே வருடத்தில் தனது 13 ஏக்கர் நிலத்தையும் மிக சுலபமான முறையில் பல பயிர் சாகுபடிக்கு மாற்றியுள்ளார். அடுத்த கட்டமாக அனைத்து பகுதிகளிலும் மரப்பயிர்களை நடத் திட்டமிட்டுள்ளார். இவற்றின் மூலம் இவரது பூமி உழவாண்மை பூமியாகவும், நிரந்தர வருவாய் தரக்கூடிய ஒன்றாகவும் மாற்றியுள்ளார். அவரது நடை முறை மற்ற விவசாயிகளும் எளிதில் பின்பற்றி பயன் பெறக்கூடிய ஒன்றாக உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இவருடன் இணைந்து பயன் பெறலாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org