தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பதனவாளு அறப்போர் - அனந்து


நம் நாட்டில் வேளாண்மைக்கு அடுத்துக் கைத்தறியே அதிகமான வாழ்வாதாரங்களை அளிக்கின்றது . கடந்த முப்பதாண்டுகளாக, 1985ல் இயற்றப்பட்ட ஒரு சட்டம் கைத்தறித் தொழிலை ஓரளவு பாதுகாத்து வருகிறது. உற்பத்திப் பொருட்களுக்கான ஒதுக்கீடு - கைத்தறிச் சட்டம் [Handloom (Reservation of Articles for Production) Act] என்ற இச்சட்டம் கைத்தறி என்றால் மின்தறியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைத் தவிர பிற தறிகள் அனைத்தும் கைத்தறி என்று வரையறுத்திருக்கிறது. அந்த நெசவாளர்களின் சிறு வரவையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வண்ணமாக மின் தறிகளுக்குக் கைத்தறிகளுக்கான சலுகைகளை வழங்க வேண்டும் (அல்லது கைத்தறி நெசவாளர்க்கு சலுகைகள் இருக்கக்கூடாது) என்று தொடர்ந்து மன்றாடி வருகின்றனர் மின்தறி உற்பத்தியாளர் சங்கத்தினர்.

வளர்ச்சி என்னும் மாயையில் அல்லது 'வியாபாரத்தில்' சிக்கியிருக்கும் அரசாங்கங்க‌ளுக்கு ஏழைகளும், விவசாயிகளும், கைவினைப் பொருட்கள் செய்பவர்களும் கண்ணுக்கு தெரிய மாட்டார். இவர்களால் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கூட சில மூட அரசுகள் (அரசியல்வியாதிகளும் கூட) நம்புவ‌ர். அதனால் இந்தத் தொழில் செய்யும், கை(மெய்!)வேலை செய்யும் வர்க்கத்திற்குப் பல இன்னல்களைக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். சிதம்பரம், மன்மோஹன், மோடி போலிருந்தால், இந்த வர்க்கத்தை ஒழித்தால் தான் நாட்டிற்கு முன்னேற்றம் என்று கூட நினைத்து செயல்படுவர். சமூகத்தில், வளர்ச்சியில், நாட்டின் பொருளாதாரத்தில், உற்பத்தியில் இவர்களது பங்கினை ஏற்றுக் கொள்ளவோ, அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவோ யாரும் தயாராய் இல்லை. இவர்களுடன் கொள்ளை லாப வெறி கூட்டங்கள் (பெரும் கம்பனிக்கள்) சேரும் போது இவர்களது ஆட்டமே ஆட்டம் தான். விதை சட்டம், நில ஆக்கிரமிப்பு சட்டம், SEZ சட்டம், உயிரி தொழில்நுட்ப ஒழுங்குமறை சட்டம் என மக்களுக்கு (முக்கியமாக ஏழைகளுக்கு) எதிரான, வாழ்வாதாரத்தை அழிக்ககூடிய சட்டங்கள் வகுக்கப்படும்.

கைத்தறித் தொழில் 43 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கும், பிற‌ கைவினைப் பொருட்கள் 68 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு அளிப்பதாகத் திட்டக்கமிச‌ன் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. உலகின் மிகப்பெரிய வேலை கொடுக்கும் நிறுவனம் எனக் கருதப்படும் வால்மார்ட் 22 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறது. இந்திய ரயில்வே 13 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறது. 1 கோடியே 12 லட்சம் பேருக்கு வாழ்வாதரமாக இருக்கும் கைத்தறி/கைவினை உற்பத்தியைத் தகர்ப்பதா வளர்ச்சி? அதைப் பாதுகாக்க அல்லவா அரசு திட்டமிட வேண்டும்!

மின்தறி உற்பத்தியாளர்கள், மின்தறிகள், கைதறிகளுக்குச் சமம் என்று கோரும் வகையில், கைத்தறிக்கு இருக்கும் சலுகைகள் மின்தறிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கின்றனர். கைத்தறிக்கு இருக்கும் சலுகைகளை எடுத்தால்தான் தங்களுக்கே பெரும் பகுதி சந்தை கிடைக்கும் என்று இதனை முன் வைக்கின்றனர். ஏற்கனவே அவர்கள் மின் தறிகளில் பல சலுகைகளுடன், குறைந்த காசில் உற்பத்தி செய்து அவற்றைக் கைத்தறி என்று “தவறாக” விற்பது போதாதா? காந்தியின் கனவான, குமரப்பாவின் கைவண்ணமான, இந்தக் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் தயாரிக்கும் குழுக்களை அழிக்க ஏற்கனவே பல சதிகள் நடந்த வண்ணம் உள்ளன. அது போதாது என்று அவற்றை ஒரே அடியாக வீழ்த்த இந்த அடுத்த ஆயுதம்.

எப்படி விவசாயமும், சிறு விவசாயிகளும் அழியப் பல சட்டங்களையும், வரைவுகளையும் கொண்டு வருகின்றனரோ அதே போல் இந்தக் கதரையும் அழிக்கப் பல முயற்சிகள் நடக்கின்றன. இவற்றை எதிர்த்து, நாடு தழுவிய ஒரு அகிம்சைப் போராட்டத்தினைக் கைதறி நெசவாளர்கள், கர்நாடகத்தில் துவுங்கியுள்ளனர். அவர்களுடன் விவசாயக் குழுக்கள், நுகர்வோர், எனப் பலரும் இணைந்து ஒரு அற வழிப் போராட்டத்தை தொடங்கினர். இவ்வறப்போர் புகழ் பெற்ற காந்தியவாதியும், கன்னட நாடகத்தின் முன்னோடியும், பலருக்கும் கிராமத்தில் வாழ்வாதாரம் அளிக்கக்கூடிய “தேசி” மற்றும் “சரகா”போன்ற கிராம வளர்சிக்கு உதவும் சமூக நிறுவனங்களை நடத்தி வருபவரும் ஆன‌் பிரசன்னா அவர்கள் தலைமையில் நடந்தது. மேதா பட்கர், கவிதா குருகன்டி உட்படப் பல சமூகப் போராளிகள், நாடக உலகப் புள்ளிகள், சினிமா நட்சத்திரங்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் இந்த சத்தியாகிரகத்திற்கு. கடந்த 15 தேதி முதல் கர்நாடகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பாத யாத்திரை தொடங்கி, எல்லோரும் ஏப்ரல் 19, பதனவாளுவில் கூடினர்.

பதனவாளு என்று வழங்கப்படும் இந்தச் சிறு கிராமம், மைசூர் மாவட்டத்தில், நஞ்சன்கூடிற்கு அருகில் உள்ளது. மஹாத்மா காந்தி அவர்கள், 1932ல் இந்தக் கிராமத்திற்கு வந்த பொழுது இது ஒரு பெரும் கதர்க் குழுமமாக விளங்கியது. அப்பொழுதே ஆயிரக்கணக்கான பெண்கள் இந்தக் குழுவில் இயங்கிவந்தனர். அப்படிப்பட்ட பெரும் புகழ் வாய்ந்த ஒரு கதர் இயக்க‌த்தை, காந்தி அவர்கள் வந்து சிறப்பித்த ஒரு இடத்தைப் படிப்படியாக அரசுகளும், அவர்களது கொள்கைகளும் இன்று ஒரு செத்த நகரமாக மாற்றி விட்டன. (நான் 6 மாதங்களுக்கு முன் 'துலா' சம்பந்தமாக இங்கு சென்றிருந்த பொழுது, பூத நகரம் (ghost town) ஆகத்தான் காட்சி அளித்தது. அங்கு இன்றும் கையால் நூல் நூற்கும் பெண்கள் வருகின்றனர். ஒரு பாழடைந்த கட்டிடத்தில் இன்றளவும் நூல் நூற்கின்றனர். அவர்களுக்கு அங்கு சுவரிலிருந்த போட்டோக்களை காண்பித்து யார் யார் என்று நான் கேட்ட பொழுது காந்தியைத் தவிர நேரு, படேல், வினோபா, லால் பகதூர் சாஸ்திரி என்று யாரையும் தெரியவில்லை. அவர்கள் மிகவும் அற்ப வருவாய்க்கு இந்தக் கைதொழிலை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்)

இந்த பாரம்பரியமிக்க பதனவாளுவில் ஏப்ரல் 19ம் தேதி, நாடு முழுவதில் இருந்தும், 5000க்கும் அதிகமானோர் கூடினர் - இந்த இடத்தின் மகிிமையை மீட்க, நீடித்த நிலைத்த‌ வாழ்வியல்களைப் பறைசாற்ற‌, கைத்தறி நெசவாளர்களின் துயர் தீர்க்க, பாரம்பரிய கைவினை கலைஞர்களை ஊக்குவிக்க, வாழ்வாதாரங்களை மேம்படுத்த‌ . முக்கியமாக ஜி.டி.பி (GDP) என்பது உப்புப் பெறாத எண் விளையாட்டு, அதை விட்டு மக்களின் உண்மையான வாழ் தரம், மகிழ்ச்சிக் குறியீடு, வாழ்வாதாரம், எளிமை, சுற்றுச்சூழல் என்று எல்லாவற்றையும் பற்றியும் கலந்துரையாட! வந்தவர்களில் பெரும் பகுதி இளைஞர்களாயிருந்தது எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

கர்நாடகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து ஏப்ரல் 13 முதல் தொடங்கி பல்வேறு குழுக்கள் நடைபயணமாகப் பல கிராமங்கள் வழியாக வந்தனர். வழியில் தெருக்கூத்து, பாட்டு, பேச்சு என்று மக்களுடன் ஊடாடி வந்தனர்.

சாமராஜநகரிலிருந்து “அம்ருத பூமி” என்னும் ஒரு பெரும் இயற்கை விவசாயிகள் குழு, அழகிய மாட்டு வண்டியில் பல நாட்டு விதைகளை காட்சியாக இட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். சஹஜ சம்ருத்தா குழுவினரும் பல்வேறு விதைகளைக் காட்சிக்கு இட்டதுடன், பாரம்பரிய நெல் மற்றும் சிறு தானியங்களினாலான‌ உணவு பொருட்களையும் விற்றனர். பெலகாமில் பல்வேறு பழங்குடியினருடன், நாடோடிசமூகங்களுடன் பணி புரியும் 'ஷ்ராமிக் கலா' கோபி அவர்களது குழுவின் பல்வேறு கைவினை பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தார்.

ஒரு பள்ளியின் சிறுவர் குழு ஒன்று “கோலா”, “விதை உரிமை” மற்றும் “வெண்மை படுத்தும் க்ரீம்கள்” பற்றி விழிப்புணர்வு வீதி நாடகங்களை போட்டு வந்தன. இங்கும் அவ்வப்பொழுது அதனை அரங்கேற்றினர். மிகவும் சிறப்பாக‌ இருந்த அவர்களது நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இரு அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் பேச்சு, கருத்தரங்கு நடைபெற்று வந்தன. பெரும் கூட்டங்கள் அவற்றில் பங்கு கொண்டனர். ஒரு இயற்கை விவசாயி டிராக்டர் நிரம்ப த‌ர்பூசனிப் பழங்களைக் கொண்டு வந்து கீற்றுகளாக விற்க, அந்த வெய்யில் நாளில் சில மணிகளில் அவை அத்தனையும் விற்றுத் தீர்ந்தன‌. குச்சி ஐஸ் உட்பட பல கிராமத்து ஈர்ப்புகளும் இருந்தன.

பதனவாளுவின் உறுப்பினர்கள் ராட்டை மற்றும் தறிகளை நிறுவி இயக்கியும் காண்பித்தனர்.

ஒரு பெரும் மண் பண்டங்கள் செய்யும் தண்ட சக்கரம் நிறுவப்பட்டுப் பல்வேறு மண் பானைகள் மற்றும் பண்டங்கள் செய்யப்பட்டு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

இதில் அனைத்திலும் முதல் இடம் பெற்றது : ஒரு அழகிய பாய் வேயும் தறியை 3 கைத்தொழில் நிபுணர்கள் மிக எளிதாக‌ ஒரு ஓரத்தில் நிறுவி, நமது பத்தமடை பாய் போல அங்கு பிரசித்தமான “காட்கோலா பாய்களை” நெய்து காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். இதற்குத் தேவை, நாணல் வகையின் தண்டுகள் மற்றும் நார் கத்தாழையின் இழைகள். கத்தாழையிலிருந்து மிக அநாயாசமாக அங்கேயே நார்களை மிக அழகாக உருவி, உடனே அதனை ஒரு சிறு 'தக்ளி'யில் நூலாக நூற்று அதனையே இந்த பாயில் கட்டவும் வேயவும் உபயோகித்து அப்படியே சில நிமிடங்களில், பெரும் இடுபொருள், செய்முறை, பதப்படுத்துதல், தொழில்நுட்பம், முதலீடு, எதுவும் இல்லாமல் நம் கண் முன் பாய் ! காந்தியும் குமரப்பாவும் கண்ட கனவினை எடுத்து சொல்ல இதை விடச் சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியுமா? ரவீந்த்ர ஷர்மா அவர்கள் கூறியது போல இது தான் நவீன உற்பத்திக்கும் பாரம்பரிய தொழில்நுட்பத்திற்குமான வித்தியாசம்: அவர்கள் தங்களது கருவிகளை, மொத்த “தொழிற்சாலை”யுடன் அப்படியே எடுத்துச்செல்ல முடியும்! ஆனால் இம்மூவர் தான் இந்தப் புகழ் பெற்ற பாயினை வேயும் கடைசி மூவர்!

அதே போல் பல கிராமங்களிலும், பெரும் அதிர்ச்சியாக‌, நான் கடைசியாய் எஞ்சியிருக்கும் கையால் நூல் நூற்பவர், நெசவாளர்களைச் சந்தித்தேன்; இந்தக்கணம் நாமும் நம் சமுதாயமும் அரசுகளும் விழிக்கவில்லை என்றால் இவை எல்லாம் நம் அடுத்த சந்ததியினருக்கு ஒரு சுவடு கூட இல்லாமல் போய்விடும்.

நாம் விழித்தெழ வேண்டியது மிகவும் அவசியம். இந்தக் கைவினைப் பொருட்களை, அவற்றைச் செய்யும் கைத்தொழில் நிபுணர்களை ஊக்குவிக்க வேண்டும். அப்பொருட்களையே வாங்க வேண்டும். உதாரணத்திற்கு உடை வாங்க வேண்டி வந்தால் கைத்தறியாக, கதராக‌, இயற்கைப் பருத்தியில் ரசாயன சாயமற்ற துணியாக வாங்குதல் அவசியம்! இந்த கடைசி வாய்ப்பை நாம் தவற விடக்கூடாது.

இதைப்போன்ற எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் பங்கேற்று நமது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். அரசுக்கும் எடுத்து சொல்லத்தவறக்கூடாது. முடிந்தால் அவரவர் தத்தமது ஊர்களில் (ஒன்றியங்களில்/மாவட்டங்களில்) கைத்தொழில் நிபுணர்களையும் இயற்கை விவசாயிகளையும் இணைத்து இதைப்போன்ற பெரும் விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்தப் பதனவாளு அறப்போர், ஒரு தொடக்கமே. அது ஒரு பேரியக்கமாக, ஒரு தீர்வாக உருவாவது நம் போன்ற சிலரின் கைகளில் தான் இருக்கிறது.

box item:

இந்த சத்தியாகிரகம் நடந்ததொடல்லாமல் பலர் இதனைப்பற்றியும் நெசவாளர்/கைத்தறி பற்றியும் எழுதி வர, திருமதி கிரன் கேர், பாராளுமன்றத்தில் இதை பற்றி கேள்வி நேரத்தில் எழுப்ப, ஜவுளி அமைச்சர் அப்படி ஒரு எண்ணம் (தற்போது) இல்லை என்று கூறியுள்ளார். இது தற்சமயத்திற்கு தான் என்றாலும், மேலும் பல பிரச்சினைகள் உள்ளன என்றாலும், இது ஒரு வெற்றியே. பதனவாளு சத்தியாகிரகத்திற்கு!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org