தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கிராமிய வாழ்வாதாரங்கள் - ராம்


கலையிழந்த நாட்டிலே முன்போலே கலைசிறக்க வந்தனை வா, வா, வா - பாரதி

ஒருமுறை மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் பொற்றாமரைக் குளத்தின் படிகளில் அமர்ந்து ஒரு நண்பருடன் உரையாடும்பொழுது அவர் “இவ்வளவு அழகான ஒரு கோயிலை ஊரின் மையத்தில் கொண்ட நமது மக்களுக்கு எவ்வாறு, இவ்வளவு அழகற்ற, முகம் சுளிக்க வைக்கும் கட்டிடங்களை இந்தக் கோயிலைச் சுற்றிக் கட்ட மனம் வந்தது? இந்தக் கோயிலைக் கட்டியவர்களின் வழிவந்தவர்கள்தானே இந்தக் கோயிலைச் சுற்றியும் குடியிருந்தார்கள்? அவர்களுக்குக் கொஞ்சம்கூட அந்தப் பெருமை இல்லையா?” என்று கேட்டார்.

பல வருடங்கள் ஆன பின்பு, இன்றும் அந்தப் படிகளில் அமரும் பொழுது அக்கேள்வி நினைவுக்கு வராமல் இருப்பதில்லை. இது ஏறத்தாழத் தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு சிந்தனையே. ஒரு புராதானச் சிறப்பு மிக்க மரபிலிருந்து வந்தவர்கள், ஒவ்வொரு ஊரிற்கும் பல நூறு அல்லது பல ஆயிரம் வருடங்களாவது சரித்திரம் உள்ளவர்கள், ஒவ்வொரு ஊரிலும் நமது மக்களிடமிருந்த கலைத்திறனை பறைசாற்றும் பல கோயில்கள் மற்றும் கட்டிடங்கள் நிறைந்த நாம், எப்படி அவற்றை வெறும் காட்சிப் பொருளாக மட்டும் நினைத்து, நமது வாழ்க்கையிலிருந்து அதனை வேறுபடுத்திப் பார்க்க முடிகிறது?

இந்நாளில் வாழ்வாதாரம் என்பது வாழ்க்கைத் தரத்தினின்றும், வாழ்வியலில் இருந்தும் இணையாது தனித்து இருக்கிறது. அவ்வாறு இணைத்து உணர‌ நமது மக்கள் மறந்த / மறக்கடிக்கப்பட்ட பின்னர்தான் ஒருவர் வெறும் ஒரு நிறுவனத்தின் சிப்பந்தியாக மாறி 12 மணிநேரம் உழைத்து, 35 வருடம் கழித்து நாம் எதை இழந்தோம் என்று யோசிக்கும் முன்னரே நோய்வாய்ப்பட்டு மரிக்கும் காலம் வந்துவிடுகிறது. இதன் மத்தியில் “கலை என்று ஒன்றிற்கு ஏன் நேரம் செலவிடவில்லை?” என்ற கேள்வியே கேலியாகத் தோன்றும். “சும்மா பஞ்சப்பாட்டுப் பாடாதே”, என்று ஒரு பாட்டியார் ஒரு நண்பரை கடிந்தது நினைவிற்கு வருகிறது. நாம் வாழ்வாதாரத்தைக் குறித்து இன்று வெறும் பஞ்சப்பாட்டுப் பாடித்தான் பிழைக்கின்றோம்.

நமது கிராமப்புற மக்கள் பலரும் இன்றும் பலவிதமான கலைகளில் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே. ஆனால் அத்தகைய கலைகளை வாழ்வாதாரத்தோடு இணைத்து நாம் ஏனோ பார்க்க மறந்துவிட்டோம். நமது அரசாங்கத் திட்டங்கள் பெரும்பாலும் கலைத்திறனற்ற, கணக்குத் தணிக்கைக்கு மட்டுமே அஞ்சிய, கற்பனைத் திறனே இல்லாத மனிதனர்களால்தான் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது. இதனால்தான் பெரும்பாலும் எல்லா அரசுக் கட்டிடங்களும் கலைநயமின்றிக் கட்டப்படுகின்றன. மேலும் நமது அரசு அலுவலகங்களை விட அசிங்கமாக பராமரிக்கப்படும் கட்டிடங்கள் எங்கும் இருக்க வாய்ப்பில்லை. இந்தச் சூழலில் தினம் அம‌ர்ந்து வேலை பார்ப்பவர்க்கு எந்த விதத்திலும் கலையை உணரவோ அல்லது கலையைக் குறித்துச் சிந்திக்கவோ வாய்ப்பில்லை. தாங்கள் உணராத, அனுபவிக்க மறந்த கலையை, கிராமப்புற மக்கள் அனுபவிக்க இவர்கள் ஒப்புவார்கள் என்றும் எண்ணமுடியாது.

“எங்களுக்கே கலையில்லை, அப்புறம் கிராமத்திற்கு எதற்குக் கலை? ” என்று இவர்கள் பேசுவதில் வியப்பில்லை. சிறு கிராமங்களில் ஒவ்வொரு முறை “பெரிய அதிகாரிகள்” வரும்பொழுதும், வாயிலில் அழகாகக் கோலமிட்டு, அவர்களைப் பாரம்பரிய நடனமாடி வரவேற்கும் பல உள்ளூர் அதிகாரிகள், அந்த அதிகாரி சென்றபின்பு அந்தக் கலைநயத்தை ஏனோ தங்கள் கவனத்தில் கொள்வதில்லை. சமீபத்தில் ஒரு உயர் அரசாங்க அதிகாரி (ஊரக வாழ்வாதாரத்துறையை சேர்ந்தவர்) இதனைக் குறித்து கூறுகையில், “நாங்கள் அரசாங்கத்தில், ஒரு மனிதனைத் தனது வறுமை நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு மேம்படுத்த குறைந்தபட்சம் என்ன தேவையோ அதை மட்டும்தான் எங்கள் திட்டத்தின் மூலம் அளிக்கின்றோம். முழுமையாக அவன் வறுமையிலிருந்து விடுபட என்ன தேவை என்பது எங்களுக்குத் தேவையில்லாமல் போய்விடுகின்றது” என்றார். அது மட்டுமின்றி , இத்தகைய “வாழ்வாதார” திட்டங்கள் யாவும் மக்களை முழுநேர வேலையாளாக பாவித்துதான் இயற்றப்படுகின்றன. ஏழ்மை என்னும் சிந்தனை நமது அனைத்து இதர கூறுகளையும் ஆக்கிரமித்துள்ளது. இதனாலாயே பெரும்பாலான அரசுத் திட்டங்கள் வெறும் கணக்கு சமர்ப்பிக்கும் சடங்குகளாகவே முடிகின்றன. மக்களின் சுயசார்பு அல்லது சுயமரியாதையை முன்னேற்ற எந்த அரசாங்கமும் முயற்ச்சிப்பதில்லை.

நமது மக்களும் தங்களை, தங்கள் சமூகங்களை அரசுச் சலுகைகள் பெறுவதற்காக, “ஏழை” மற்றும் “மிகவும் பிற்படுத்தப் பட்டோர்” என்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள பெரும் பாடுபடுகின்றனர். இன்று இந்தியாவில் கணக்களவில் “ஏழை” என்று உள்ளவர்களை காட்டிலும் உண்மைப் பொருளாதார ஏழைகள் குறைவாக உள்ளனர் என்றே எனக்கு தொன்றுகின்றது, அவர்களிலும் பெரும்பாலானவர்கள் எத்தகைய சான்றிதழும் இல்லாத நிலையிலேயே உள்ளனர் என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

கலைகளுக்கும் வாழ்வுக்கும் உள்ள தூய, முக்கியமான தொடர்பைப் புரிந்து கொள்ளாதவரை, நமது மக்களை நமது அரசின் வாழ்வாதாரத் திட்டங்கள், ஆடு மாடுகளைப்போல் பாவிப்பது வியப்பளிக்கவில்லை. நமது மக்களின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்புவரை அனைத்துக் கட்டங்களிலும் இசை, இலக்கியம், நாடகம், கலை நயம் ஆகியன பாரம்பரியமாக வியாபித்துள்ளன‌. இன்று வெற்றுச் சடங்குகளாக இவை கடைப் பிடிக்கபட்டாலும், அரசு இயந்திரம் சற்றே முனைந்தால் இவற்றை மீட்டுருவாக்கலாம் என்பது திண்ணம்.

“வீட்டை இப்படிக் கட்டலாம்” என்று ஒரு குடும்பம் கனவுகாண ஆரம்பிக்கும் தருவாயில் ஒருவர், “அரசாங்கம் சொல்வதுபோல் வீடு கட்டினால் உங்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மானியம்” என்று கூறினால், பொருளாதார நிலையில் வாடும் அத்தகைய குடும்பங்கள் “வேண்டாம்” என்று நிராகரிக்கப் போவதில்லை. ஆனால், அத்தகைய அரசாங்கச் சலுகைகள் முதலில் குறிவைப்பது அந்த குடும்பத்தின் கனவைத்தான். “வீடு இந்த அளவாவது இருக்க வேண்டும், இத்தனை அறைகள் இருக்க வேண்டும், மேலே கூறை இத்தகைய பொருள்கொண்டு அமைக்கவேண்டும்” என்று கடைசியாக ஒரு தீப்பெட்டியை பொன்று வடிவமைக்கப்பட்டு எவரும் எளிதில் வாழ்வதற்கு முற்றிலும் ஒவ்வாத ஒரு அழகற்ற‌ வீட்டை கட்டிக்கொள்ள ஏழைகள் வற்புறத்தப் படுகின்றனர். அவரகள் முன்னோர்களின் கலைத்திறன், அவர்களின் கலையுணர்வு ஆகியவை மொத்தமாகக் குழிதோண்டிப் புதைக்கும் அரசாங்க திட்டங்களில் ஏழைகளுக்குக் “குறைந்த செலவில்” வீடுகட்டும் சலுகை முக்கியமானது.

ஏழை என்று ஒருவர் இருந்தால் அவர் எல்லாவற்றிற்கும் “குறைந்த செலவில்” தான் தனக்கும் தன் குடும்பத்திற்கும் தேவைகளை யோசிப்பார் என்ற கண்ணோட்டம்தான் இத்தகைய திட்டங்களின் அடிப்படை. இதனால்தான், ஏழைகளின் குழந்தைகள் பயிலும் பள்ளிகள் பராமரிக்கக் கூட அருகதையில்லாத அளவிற்கு மோசமாகக் கட்டப்படுகின்றன. அவர்களுக்கான பொதுக் கழிப்பிடங்களும், கிராமத்துப் பெண்களின் சுகாதார மையங்களும் யாரும் எளிதில் உபயோகிக்க இயலாத இடங்களில், முக்கிய வசதிகள்கூட இல்லாமல் நிறுவப்படுகின்றன. ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் மிதிவண்டி முதல் கணிணிவரை இலவசமாக வழங்கப்படும் தொலைகாட்சி பெட்டிமுதல், பொங்கலுக்கு வழங்கப்படும் சேலை வேட்டிவரை அனைத்தும் மிகக் குறைந்த செலவில், கலை இழந்த, பெரும் தொழிற்கூடங்களில் மிகக் குறைந்த வசதிகளுடன் செய்து அளிக்கப் படுகின்றன. இந்தச் சிந்தனையின் மிக பிரபலமான சின்னம், நகரப்புற ஏழைகள் வாழக் “குடிசை மாற்று” என்ற பெயரில் கட்டப்படும் பலமாடி தீப்பெட்டி வீடுகள். இவற்றில் வேறு வழியில்லாமல் வாழ்க்கையை நடத்தும் ஏழை மக்களுக்கு என்ன பெருமை இருக்கும்? எப்படி இவர்களால் சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும்? ஏன் இவர்களுக்கு கட்டப்படும் வீடுகள் அழகாகவும், பெருமைப்படும் அளவிலும் இருக்கக்கூடாது?

உலகவங்கி போன்ற உலகளாவிய வல்லுனர்கள் உலகத்தின் எல்லா ஏழைகளுக்கும் அடுத்த ஆண்டு எவ்வளவு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும், அவர்கள் எங்ங‌னம் சட்டையணிய வேண்டும் என்றும் பல வாழ்க்கை முறைகளை பணக்கார நாடுகளில் அமர்ந்து சிந்தித்து முடிவு செய்து அதன் விளைவாக வங்கி வழங்கும் கடனை நிர்ணயிக்கின்றனர். இந்த உலகளாவிய நிறுவன‌ங்கள் பெரும் தொழிற்சாலைகளின் கலையில்லா உற்பத்திப் பொருட்களைத் தங்கு தடையின்றிக் ‘குறைந்த செலவில்’ விற்கும் வ‌ணிகப் பற்றுதலினால்தான் இத்தகைய கடன்களை அளிக்கின்றன. இத்தகைய கடன்களே நமது ஏழை மக்களின் வாழ்வாதாரத் திட்டங்களாக மாறுகின்றன; அதனால், இந்த “வல்லுனர்”களின் “சிந்தனைத் தெளிவுகள்” நமது மக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் காரணிகளாக மாறிவிட்டன.

இத்தகைய சிந்தனைகள் இந்தியாவில் ஊடுருவியுள்ள ஜாதி சார்ந்த எண்ணப்போக்கிலான‌ அரசாங்க அதிகாரிகளின் வாயிலாக அமல்படுத்தப் படும்பொழுது இன்னமும் கேவலமான போக்கையே ஏற்படுத்துகின்றன‌. சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கத்துடன் நெருங்கிச் செயல்படும் ஒரு வனவியல் விஞ்ஞானி ஒரு முறை கூறியது நினைவிற்கு வருகின்றது. ஒரு முறை வனப்பாதுகாப்பு குறித்த ஒரு உலகளாவிய திட்டத்தின் கீழ், ஆப்பிரிக்க தேசங்கள் சிலவற்றில் வனப்பாதுகாப்பு எவ்வாறு சிறப்பாக அமல் படுத்தப்படுகின்றன என்று நேரடியாகச் சென்று தெரிந்துகொள்ள வனத்துறைக் காவலருக்கான சலுகை அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தைக் குறித்த ஆலோசனை தில்லியில் நடைபெறும் பொழுது உயர் அதிகாரி, “அந்த நாடுகளுக்கெல்லாம் நானே போனதில்லை, எப்படி எனது துறையின் அடிமட்ட அளவில் பணிபுரியும் ஒரு சாதாரண காவலருக்கு இந்த சலுகை?” என்று வினவினாராம். அவர் அந்த சலுகையை பயன்படுத்திக்கொண்டு குடும்பத்துடன் அந்த நாட்டிற்க்கும் சென்று திரும்பினார் என்று சொல்லத் தேவையில்லை!

(தொடரும்…)
 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org