தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - பரிதி


(சென்ற இதழ்த் தொடர்ச்சி)

ஆனால், கூலிச் செலவைக் குறைப்பதுதான் மொத்தச் செலவைக் குறைப்பதற்கு முதன்மையான வழி. அமெரிக்க ஒன்றிய மாநிலங்கள் ப்ரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றுத் தனி நாடாக உருவாகிய காலத்தில் அது சிறு குறு உழவர்கள் நிறைந்த நாடாக இருக்கும் என்று தாமசு செபர்சன் பாவனை செய்திருந்தார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை அந்த நாடு அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது? அந்நாட்டு மக்கள் தொகையில் சுமார் ஒரு விழுக்காட்டினர்தாம் நிலத்தில் முழு நேரப் பணியாற்றுகின்றார்கள். (அதைவிட அதிகப் பேர் அந்நாட்டுச் சிறைகளில் வாடுகின்றனர்.) ப்ரிட்டனில் நிலைமை ஏறக்குறைய அதுபோலத்தான் உள்ளது. மனித ஆற்றல் அதிகம் தேவைப்படும் வேளாண் முறை பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்குச் செலவினம் மிக்கது என்பதுதான் இப்போது பரவலாக அறியப்பட்டுள்ள மந்திரமாக உள்ளது.

வெறித்தனமாகக் கூலிச் செலவைக் குறைப்பது 'செயல்திறனை' அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. செயல்திறன் என்பது பணத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அளவிடப்படுகிறது. ஆனால், வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில் இயல்பாக இருக்கவேண்டிய நுணுக்கங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்படுவதால் உயிரியல் செயல்திறன் பெருமளவு குறைந்துவிடுகிறது.

மேலும், வேலையாள்களைக் குறைப்பதன் மூலம் செயல்திறனை அதிகரிக்கலாம் என்பது போலியானது: அமெரிக்கா எப்போதுமே வெளியாள்களைக் கொண்டு தன் வேளாண்மையைத் தாங்கிப்பிடித்துவந்துள்ளது. முதலில் ஆப்ரிக்காவில் இருந்து அடிமைகளாகப் பிடித்துவந்த கருப்பின மக்களைக் கூலிகளாக வைத்திருந்தனர். பின்னர் அது சட்டப்படி தடைசெய்யப்பட்டதால் மெக்சிகோ நாடு மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள போர்ட்டோ ரிக்கோ பகுதி ஆகியவற்றில் வாழும் மக்களையும் அவர்களைப் போலவே சட்ட உரிமைகள் ஏதுமற்ற பிறரையும் கூலிகளாக வைத்துள்ளனர். அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதால் எந்த நேரத்திலும் அவர்களை நாடு கடத்திவிடமுடியும். இப்போது ப்ரிட்டனும் அமெரிக்க வழியைப் பின்பற்றி ப்ரெசீல், ரொமேனியா, போலந்த் நாட்டு மக்களைப் பண்ணைக் கூலிகளாகப் பணியமர்த்துகிறது. (போலந்த் நாட்டு மக்கள் அடிக்கடி ப்ரிட்டானியக் கூலி குறைவெனக் கூறி அங்கு கூலிக்கு வர மறுத்துவிடுகின்றனர்.) அமெரிக்காவில் நடப்பதைப் போலவே இவர்களும் ப்ரிட்டனில் சட்டப்படியான உரிமைகள் இல்லாமல் அல்லலுறுகின்றனர்.

இப்படியாக, ஏறத்தாழ இருநூறாண்டுக்காலம் நடைமுறையில் இருந்த குமுகச் சீர்திருத்தங்கள் ஒரே அடியில் ஒழித்துக்கட்டப்பட்டுள்ளன. சொல்லப்போனால், ப்ரிட்டனின் பொருளாதாரம் முழுவதுமே போலியானது. அது இப்போதைக்குத் தாக்குப்பிடிப்பதற்கு ஒரே காரணம் ப்ரிட்டானியர்கள் உலகில் பெரும்பாலானவர்களைக் காட்டிலும் செல்வ வளம் மிக்கவர்களாக இருப்பது தான்; அந்த வளத்தைக் கொண்டு அவர்கள் தாம் செய்ய விரும்பாத வேலைகளைச் செய்வதற்கு அயல் நாடுகளில் இருந்து கூலித் தொழிலாளர்களையும் தமக்கு வேண்டிய நுகர்பொருள்களையும் இறக்குமதி செய்துகொள்கின்றனர். ப்ரிட்டானியர்களுடைய செல்வ வளத்துக்குக் காரணம் அந்த நாடு தானூறு ஆண்டுகள் உலகில் பல பகுதிகளைத் தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தது தான். மேலும், இரண்டு உலகப் போர்களிலும் வெற்றி பெற்ற அணிகளின் பக்கம் அந்த நாடு இருந்தது. ஆனால், இந்த சமனற்ற நிலை - ஒருவேளை அது நியாயம், நீதி ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்புக்கொள்ளக்கூடியதாகவே இருந்திருப்பினுங்கூட - தொடர்ந்து நீடிக்கமுடியாது. அது நிலையற்றதும் மிக மோசமானதுமாகும். வேளாண்மையும் அந்த மோசத்தில் ஒரு பகுதியாகிவிட்டது.

மேற்குலக வல்லரசு நாடுகளின் அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள், பல்வகை வல்லுநர்கள் ஆகிய அதிகார வர்க்கம் உலக நாடுகள் அனைத்தையும் எல்லாத் துறைகளிலும் தங்களைப் பின்தொடருமாறு ஊக்குவிக்கின்றது. உலக மக்களில் பெரும்பாலானோர் வாழும் மூன்றாமுலக நாடுகளில் அறுபது விழுக்காடு மக்கள் - இந்தியாவில் அறுபது கோடிப்பேர் -நிலத்தைச் சார்ந்து வாழ்கின்றனர். இந்தியாவும் ப்ரிட்டனைப் போலச் செய்தால் குறைந்தது ஐம்பது கோடி மக்கள் வேலை இழப்பார்கள். (இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகையைக் காட்டிலும் மிக அதிகம். அமெரிக்காவின் மக்கள் தொகையைக் காட்டிலும் ஏறக்குறைய இரண்டு மடங்கு!) ஆனாலும், இது 'முன்னேற்றம்' என்று கருதப்படுகிறது.

இத்தகைய 'முன்னேற்றத்தை' முன்வைக்கும் ஆர்வலர்கள் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு மாற்றுத் தொழில் துறைகளில் வேலை வாய்ப்புக் குறித்துப் பேசுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பத் துறை அத்தகையது. ஆனால், கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற பல பத்தாயிரக் கணக்கானோருக்கு மட்டுமே அத்துறையில் வேலை கிடைக்கும்; லட்சக் கணக்கான பொதுமக்களுக்கு வேலை கிடைக்காது. சுற்றுலாத் துறையில் வாடகை மகிழுந்து ஓட்டுநர்கள், விடுதிகளில் எடுபிடிப் பணியாளர்கள் போன்ற வேலைகள் சிலருக்குக் கிடைக்கும். அவர்களுடைய ஊதியம் மிகக்குறைவு. மேலும் அவர்கள் தாம் குடியிருக்கும் தொலைதூரச் சேரிப் பகுதிகளில் இருந்து அதிகாலையிலேயே நகர்களில் உள்ள பணியிடங்களுக்குப் பேருந்துகள் மூலம் கொண்டுவந்து விடப்படுவார்கள்; நாள் முழுக்க அடிமைப் பணி செய்யவேண்டும். வேளாண்மையில் இருந்து துரத்தப்படும் குடும்பங்கள் சேரிகளில்தான் தஞ்சமடைவார்கள். ஆப்ரிக்காவில் பாலியல் தொழிலும் கூலிப்படையில் சேர்வதும் வளர்முகமாக இருக்கின்ற தொழில்கள். பேங்க்காக் நகரில் நடனக் கன்னியராகப் பணியாற்றும் பெண்கள் உழவுக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்; அவர்கள் அவ்வப்போது ஊர்ப் புறங்களில் வாழும் தம் குடும்பங்களுக்குச் சிறிதளவு பணம் அனுப்புகிறார்கள். இதுதான் [முதலாளி வர்க்கம் முன்வைக்கும்] 'முன்னேற்றம்'!

உண்மையில், வேளாண்மையும் அது சார்ந்த வாழ்முறையுந்தான் எக்காலத்திலும் பெரும்பாலான மக்களுக்கு ஏற்றவை. செறிவான மனித உழைப்பு அதிகம் தேவைப்படுகின்ற பாரம்பரிய வேளாண்மையை ஒழிப்பதில் பெரும்பங்கு ஆற்றிய ப்ரிட்டன் முதலிய நாடுகள் வெகுவேகமாக அதை மீண்டும் கட்டமைக்கப் பாடுபடவேண்டும். இப்போது மேற்குலக நாடுகள் முன்வைக்கும் 'முன்னேற்றம்' என்பது ஒரு பெருந்துயரமே.

மொத்த உள்நாட்டு உற்பத்தி எனும் அளவீட்டை நோக்கிய பொருளாதாரம்

'முன்னேற்றம்' என்பது இப்போது பெரும்பாலும் 'பொருளாதார முன்னேற்றத்தையே' குறிக்கிறது; அதுவும் 'வளர்ச்சி' என்ற பொருள்படுகிறது; நடைமுறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியையே (மொஉஉ) இது குறிக்கிறது. ஆனால் அரை நூற்றாண்டுக்கு முன்னரே பொருளாதார வல்லுநர்கள் சிலர் சுட்டிக்காட்டியதைப் போல, இந்த அளவுகோலுக்கும் மாந்த நலவாழ்வுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. சொல்லப்போனால், இவ்விரண்டுக்கும் தொடர்பே இல்லை. மொஉஉ அதிகரிக்க அதிகரிக்கப் பணக்காரர்கள் மேன்மேலும் பணக்காரர் ஆகின்றனர்; ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர். மேலும், மனித இனத்தின் பெரும்பகுதி சார்ந்திருக்கிற வேளாண் அடிப்படையைத் தகர்ப்பதன் மூலம் மொஉஉ-வை அதிகரிக்க உதவும் வழிமுறைகள் மாந்த நல்வாழ்வைக் கேள்விக்குரியதாக்குகின்றன. சிதைக்கப்பட்ட அறிவியல்

தம் அறிவியல் முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் இல்லாவிடில் உலகமே பட்டினி கிடக்கவேண்டும் என்று வேளாண் அறிவியலாளர்களும் அவர்களுக்கு ஆதரவு தரும் அரசியல்வாணர்களும் தற்பெருமைப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நல்ல அறிவியல் எப்போதும் பயன் தரும் என்பது சரி. வேளாண் அறிவியல் பல வழிகளில் வெற்றிவாகை சூடியுள்ளது என்பதும் சரிதான். நமக்கு வேளாண் அறிவியல் தேவை. ஆனால் வரலாற்றைத் தொலைநோக்கில் பார்த்தால் (இப்படிப் பார்ப்பது தற்காலத்தில் பெருமைக்குரியதாகக் கருதப்படுவதில்லை) என்ன தெரிகிறது? குறைந்தது பத்தாயிரம் ஆண்டுகளாக வேளாண்மை ஒரு செய்தொழிலாகவே [கைத்தொழிலாக] பெரும்பாலும் இருந்துள்ளது; அதுவே வெற்றிகரமாகவும் செயல்பட்டுள்ளது. இத்தகைய உறுதியான அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்டதால்தான் வேளாண் அறிவியலும் வெற்றிபெற்றுள்ளது என்பதே உண்மை. அந்த அடித்தளத்தை அடியோடு மாற்ற முனைவது, அதுவும் இவ்வளவு வேகமாக மாற்றுவது, வடிகட்டிய முட்டாள்தனமே.

பொதுவாகவே அறிவியல் தன் வழியைத் தொலைத்துவிட்டாற் போலத் தெரிகிறது. அறிவியல் என்பது உண்மையைக் காப்பதாக இருக்கவேண்டும் - குறைந்தது, குறிப்பிட்ட வகைகளான உண்மையையாவது காக்கவேண்டும். அறிவியல் கண்டுபிடிப்புகள் உயர் தொழில்நுட்பமாக மாற்றப்படுகையில் அவை மாந்தகுலத்துடன் நட்புப் பேணவேண்டும். ஆனால், உண்மை நிலை என்ன? 1970-களில் தொடங்கி, வர வர அதிகமாக, அரசுகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் குற்றேவல் செய்யும் சாதனமாக அறிவியல் தொழில்நுட்பம் மாறிவிட்டது. ஏனெனில், இப்போது பெருந்தொழில் நிறுவனங்கள் அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குச் சம்பளம் தருகின்றன. தம் சொத்தை மேன்மேலும் அதிகரிக்கவல்ல தொழில்நுட்பங்களை (அத்தகையவற்றை மட்டும்) உருவாக்கும் ஆய்வுகளுக்குப் பெருநிறுவனங்கள் பணம் தருகின்றன. இவ்வாறு அறிவியல் சிறைப்பட்டுள்ளது.

இந்தப் போக்கின் தீமைகள் மருத்துவத் துறையில் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. வயதான பணக்காரர்களைப் பீடிக்கும் உடல்நலத் தொந்தரவுகள் மீது குவிக்கப்படும் மருத்துவ ஆய்வுக் கவனம் ஏழைகளை மிக மோசமாகப் பாதிக்கும் உயிர்க்கொல்லி நோய்கள் மீது செல்வதில்லை.

இதே போக்கு பெரிய அளவில் வேளாண் துறையிலும் நிலவுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் தொழில்நுட்பங்கள் பல லட்சக்கணக்கான சிறு குறு உழவர்களின் ஆற்றலைப் பிடுங்கி ஒரு சில பெருநிறுவனங்களின் கையில் கொடுத்துள்ளன,. நவீன வேளாண்மை மக்களுக்கு உணவு வழங்குவதற்காக வடிவமைக்கப்படவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கும்பணிகள் மிக அதிக அளவில் பணம் சம்பாதிப்பதற்காகவே அது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், உலகை ஆளும் வல்லரசாக ஆக [அல்லது அந்நிலையைத் தக்கவைத்துக்கொள்ள] விரும்பும் அரசியல் ஆற்றல்களுக்கு உகந்த கருவியாகவும் தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன.

மக்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வது நவீன வேளாண்மையின் நோக்கமும் வடிவமைப்பும் அன்று என்பதால் மக்களுக்குப் போதுமான உணவு கிடைக்காதிருப்பதில் வியப்பில்லை. '[ஒரு சிலரிடம்] செல்வ வளம் குவிந்தால் அது படிப்படியாக அனைவரையும் சென்றடையும்; அதனால் அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்கும்' என்ற வாதம் நகைப்புக்குரியது. ஆனால், பெரிய பதவிகளில் உள்ளோரில் பலர் இதை நம்புகிறார்கள் போலுள்ளது. அப்படி நம்பவில்லையெனில் அவர்களுடைய செயல்பாடுகளுக்குக் காரணமே Unable to connect to the Internet Chromium can’t display the webpage because your computer isn’t connected to the Internet. இல்லை. சிக்கலில் இருந்து மீள்வது எப்படி?

இப்போதைய செயலுத்திகள் அழிவை உண்டாக்குகின்றன. ஆனால், [அதற்குக் காரணமான] மேலிடங்களில் உள்ளவர்கள் தீய எண்ணங்களைக் கொண்டவர்கள் என்பதைவிட அறியாமையிலும் தவறான புரிதலிலும் இயங்குகின்றார்கள் என்பதே முதன்மையானது. அத்தகைய உயர்நிலைகளில் இருப்பவர்கள் இந்த அளவு அறியாமையில் மூழ்கியிருக்கலாகாது. தெரிந்துகொள்ளாதிருத்தல் என்பது கண்டுகொள்ளாதிருப்பதற்கு ஒப்பானது.

அனைத்து மக்களும் சிந்திக்கவேண்டும். இதுதான் உண்மையான மக்கள்நாயகம். ஆனால், நடைமுறையில் ஒரு சில அறிவாளிகள் மட்டுமே ஆழமாகச் சிந்திக்கிறார்கள். மக்களுடைய சிந்தனைகள் செயல்பாடுகளாக மாற்றம் பெறவேண்டும். உழவர்கள், வணிகர்கள், கணக்காளர்கள் எனச் சிந்தனைகளை நடைமுறைப்படுத்துபவர்கள் தேவை. வேறெவரையும் விட, வேளாண்மை எப்படிச் செய்யவேண்டும் எனும் செயல்முறை அறிவும் பட்டாங்கும் கொண்ட சிறு குறு உழவர்கள் அவ்வாறு நடைமுறைப்படுத்துபவர்களாகப் பெரும் எண்ணிக்கையில் இருக்கவேண்டும். சிக்கலில் இருந்து மீள்வதற்குத் தேவையானவற்றைக் குறித்து இனிக் காண்போம்.

(அடுத்த இதழில் முடியும்)
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org