தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பாரம்பரிய நெல் ஒரு பணப்பயிரே - ஜெயக்குமார்


முன்னுரை

பொதுவாக விவசாயிகளிடையே நெல் விவசாயத்தைப் பற்றி, “அது மிகுந்த வேலைப்பளுவைக் கொண்டது; லாபம் குறைவானது; ஆட்தேவை அதிகமானது ” என்பது போன்ற கருத்துக்கள் நிலவி வருகின்றன. இவையனைத்தையும் மீறித் தமிழ்நாட்டில் 51% விளைநிலம் நெல் விளைச்சலுக்குப் பயன்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நெல்லை விற்பனை செய்வது மிக எளிது; குறைந்த விலையாயினும் அதை உடனே காசாக்கி விடலாம். இரண்டாவது நெல்லில் எப்போதுமே ஒரு குறைந்த பட்ச வருவாய்க்கு உத்திரவாதம் உண்டு. கடைமடைப் பாசனப் பகுதியான தஞ்சை , நாகை, திருவாரூர் போன்ற வெள்ளம் தேங்கும் களிமண் பூமிகளில் நெல், கரும்பு, தென்னை மரம் போன்ற பயிர்களைத் தவிர வேறு பயிர்கள் மிகக் கடினமே. எனவே அங்கு நெல் விளைவிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. எனினும் வடிகால் வசதி கொண்ட பல பகுதிகளிலும் பிற பயிர்களைப் பயிரிடாமல் விவசாயிகள் நெல்லை நாடுவது அதை விற்பது மிக எளிது என்பதால்தான்.

விலையையோ, இடுபொருட் செலவையோ மேலாண்மை செய்ய இயலாத நெல் விவசாயி, விளைச்சலை அதிகப் படுத்துவதே வருவாய்க்கு ஒரே வழியாக முயற்சிக்கிறான். தவிர, இயற்கை விவசாயத்தில் நெல்லின் மகசூல் குறைந்து விடும் என்றும், அதிலும் பாரம்பரிய ரகங்களை நட்டால் விளைச்சல் இன்னும் குறைந்து விடும் என்றும் பரவலாக நம்பப் படுகிறது. இதனால் விளைச்சலுக்கு ஆசைப்பட்டு வீரிய ஒட்டு ரகங்கள், உயர் விளைச்சல் ரகங்கள் என்று ஏமாந்து, விதைக்கும் அதன் விளைவாய் வேதி இடுபொருட்களுக்கும் விவசாயிகள் செலவழித்துக் கொண்டே போவதால் நெல் விவசாயியும் கடனில் சிக்கிக் கொள்கிறான். ஆனால் இந்நிலைமை உருவாவது உழவர்களின் அறியாமையினால் மட்டுமே. பாரம்பரிய நெல்ர‌கங்கள் இடுபொருட் செலவைக் குறைப்பது மட்டுமன்றி, இயற்கை வேளாண்முறையில் பயிர் செய்தால் நல்ல விலைக்கு விற்கலாம் என்று 2 கட்டுரைகள் முன்னரே எழுதியிருந்தோம். இதன் தொடர்ச்சியாகப் பாரம்பரிய ரகங்களில் சாதனை விளைச்சல் கண்டு வரும் படித்த, இளைஞரான ஸ்ரீராம் என்னும் விவசாயியைப் பற்றிய கட்டுரை இது. பாரம்பரிய நெல் ஒரு பணப்பயிரே என்பதில் இனிமேலும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை!

SVR பண்ணை

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்காவில் உள்ள கதிராமங்கலம் என்ற கிராமத்தில் உள்ளது இந்த SVR பண்ணை. இந்தப் பண்ணையில் சுமார் ஐம்பது ஆண்டு காலமாக செயற்கை மற்றும் வேதி உரங்களைக் கொண்டு நெல் மற்றும் கரும்பு பயிர் செய்யப்பட்டு வந்தது. 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பண்ணை ஒரு பாரம்பரிய வேளாண் மிராசுக் குடும்பத்தின் சொத்தாகும். நிலத்தைப் பகிராமல் அண்ணன், தம்பி அனைவரும் கூட்டுக் குடும்பமாக நிர்வாகம் செய்து வந்தனர். 1973 முதல் இன்று வரை இப்பண்ணையின் வரவு செலவுகள் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பண்ணை ஸ்ரீராம் மற்றும் அவரின் தந்தையின் மேற்பார்வையால் தற்போது விவசாயம் செய்யப்பட்டு வரப்படுகிறது .

நண்பர் ஸ்ரீராம் இளங்கலை வணிகவியல் ( Bcom) முடித்த பிறகு MFM (Master of Finance Management) முடித்து சென்னையில் ஒரு நிறுவனத்தில் 1994 ஆம் ஆண்டு சேர்ந்து 2002 வரை வேலை செய்தார்.

“நாங்கள் எல்லோரும் கல்லூரியில் படித்தோம், வீட்டில் வழக்கமான செலவினங்கள் எல்லாம் நடந்தேறின. சுப காரியங்கள் மற்றும் அனைத்துக் குடும்பச் செலவுகளும் இந்தப் பண்ணையில் நெல் வேளாண்மை செய்துதான் நிறைவேற்றப் பட்டன. 1973 முதல் 1994 வரை எந்தக் கடனோ, பற்றாக்குறையோ இன்றி நன்றாக இருந்தோம். ஆனால் 2002ல் பார்த்தால் எங்களுக்கு 20 லட்சம் வங்கிக் கடன் ஆகி விட்டது! அப்போது நாங்கள் பலரும் வேலையில் இருந்ததால் அனைவரும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டுக் கடனை அடைத்தோம். நிலத்தை விற்று விடலாம் என்று குடும்பத்தின் அனைவரும் முடிவெடுத்தனர். எனக்கு இந்த முடிவு சற்றும் ஏற்காததால் சென்னையில் நான் 1994 முதல் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டுக் கதிராமங்கலத்திற்கு வந்தேன். வந்து மூன்று வருடம் விவசாயம் நன்றாக இருந்தது போல் இருந்தது. ஆனால் 2008ல் மீண்டும் எங்களுக்கு 20 லட்சம் கடன் ஆகி விட்டது. 50 ஏக்கரில் நாங்கள் நெல் பயிர் செய்கிறோம். வேதி விவசாயத்தில், ஒரு வருடத்திற்குப் பன்னிரண்டு லட்ச ரூபாய் எங்கள் பண்ணைக்குச் செலவு நிதியாகத் (working capital) தேவைப் படுகிறது. இப்போது மூன்று வருடமாக முற்றிலும் இயற்கை வேளாண்மை செய்கிறோம். வருடம் 5 முதல் 6 லட்சம் ரூபாய் உரம், பூச்சி மருந்தில் மிச்சமாகிறது. கடன் இல்லாமல் இருக்கிறோம்” என்று உணர்ச்சியுடன் கூறினார் திரு.ஸ்ரீராம்.

2002 முதல் 2012 வரை உள்ள 11 ஆண்டுகளில் 65 ஏக்கரில் செயற்கை விவசாயமே செய்து வந்தார். தனது வயல்களில் வண்டி, டிராக்டர் செல்ல ஏதுவாக சாலை அமைத்தும், பி.வி.சி பாசனக் குழாய்கள் பூமிக்கு அடியில் அமைத்தும் (Pipe Line) சுமார் 10 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.

விவசாயத்தில் கடன் எப்படி வ‌ருகிறது அதற்கு எப்படித் தீர்வு காண்பது என்று யோசித்துள்ளார் நண்பர் ஸ்ரீராம். அதன் பிறகு வரவு - செலவு கணக்குப் பார்க்கும் பொழுதுதான் அவருக்குத் தெளிவாகப் புரிந்தது. சாகுபடி செலவிற்கும் நெல் அல்லது கரும்பை விற்று வரும் வரவுக்கும் இடைவெளி லாபத்தில் இல்லாமல் நஷ்டத்தில் இருந்துள்ளது. செயற்கை விவசாயம் செய்தலில் உரக்கடைகளுக்கு மட்டுமே ஆண்டு ஒன்றுக்கு சுமார் 6, 000, 00 முதல் 7, 000, 00 ரூபாய் கொடுப்பதாகவும் மிகுந்த மனவேதனையுடன் கூறினார். கரும்பைப் பொருத்தவரை ஏக்கருக்கு 30 டன் மட்டுமே விளைவதாகவும், சாகுபடி செலவு போக ஏக்கருக்கு 5000 வரை நஷ்டம் வ‌ருவதாகவும், நெல் சாகுபடியைப் பொருத்தவரையில் ஆட்கூலி மற்றும் உரச்செலவு செய்யும் அளவிற்கு கூட விளைச்சலும் இல்லை அதற்குத் தகுந்த விலையும் இல்லை என்பதால் ஏக்கருக்கு ரூபாய் 2000 வரை நஷ்டமும், உயர் விளைச்சல் வரும் போகங்களில் ஏக்கருக்கு ரூபாய் 5000 வரை மட்டும் கிடைப்பதாகவும் கூறினார். இது மட்டுமில்லாமல் மண்ணின் தன்மையும் நாளுக்கு நாள் மோசமாகிறது என்பதையும் உணர்ந்துள்ளார்.

2012 ம் வருடம் தாளடி பருவத்திலிருந்து பண்ணையை முழுவதுமாக இயற்கை விவசாயத்திற்கு மாற்ற முடிவு செய்து இன்று வரை பல ஆராய்ச்சிகளை செய்தும் வருகிறார். இயற்கை முறையில் பாரம்பரிய நெல்லான கிச்சிலி சம்பா, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், குள்ளக்கார், கவுனி, தேங்காய்ப்பூ சம்பா, இலுப்பைப்பூ சம்பா போன்ற நெல் ரகங்களை கீழ்கண்ட நான்கு முறையில் செய்து பார்த்துள்ளார்.

(i) அடர் நடவு

இந்த முறையில் 8 அடி பட்டம் போட்டு சாதாரண நடவு முறையில் செய்வது. இதற்கு நாற்றாங்கால் அளவு 8 சென்ட் /ஏக்கர், விதையளவு 40 கிலோ / ஏக்கர் என்ற விகிதத்தில் தேவைப்படும். இதற்கு கிராமங்களில் கலந்த நடவு என்றும் கூறுவதுண்டு. இந்த முறையில் நடும் போது நாற்றடி மற்றும் நடவு ஆட்கள் செலவு அதிகமே. இந்த முறையில் நடவு செய்வதால் பயிர்கள் நெருக்கமாகவும் தூர்கள் அதிகம் இல்லாமலும் இருக்கும். இதனால் பூச்சி,நோய்களின் தாக்குதலும் அதிகமாக இருக்கும். காரணம் பயிர் நெருக்கமாக இருப்பதால் சூரிய வெளிச்சம் பயிரின் இடையில் செல்வது மற்ற முறைகளை விட அடர் நடவு முறையில் மிகவும் குறைவே. இதனால் பயிர்கள் அதிகம் வளர்ந்து கதிர் முற்ற முற்ற சாய்ந்து விடுவதும் வழக்கமே. இந்த முறையில் சாகுபடி செலவும் அதிகம். விளைச்சலும் குறைவே. இந்த முறையில் 15 cm * 15 cm இடைவெளியும் ஒரு சதுர மீட்டருக்கு 44 குத்துகளும் இருக்கும்.

(ii) தொடர் நடவு

தொடர் நடவு முறை என்பது வரிசை வரிசையாக நடவு செய்வது. வரிசக்கு வரிசை 30 cm இடைவெளியும், பயிர்களுக்கு இடையில் 22.5 cm இருக்கும்.ஒரு சதுர மீட்டருக்கு 15 தூர்கள் மட்டுமே இருக்கும். இந்த முறையில் 8 சென்ட் நாற்றாங்கால் மற்றும் 15 முதல் 20 கிலோ விதை நெல் போதுமானது. இந்த முறையில் நடவு மற்றும் நாற்றடி ஆட்கள் அடர் நடவை விட 30 - 40 % குறைவே. இடைவெளி அதிகம் இருப்பதால் தூர்கள் அதிகம் பிடித்து விளைச்சலும் சற்று கூடுதலாகும். கோனோ வீடர் கொண்டு வரிகளில் களைகளைக் கட்டுப்படுத்தலாம். இந்த முறை பாரம்பரியமாக சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்கிறது வரலாறு.

(iii) இயந்திர நடவு
இந்த முறை இயந்திரம் மூலம் நடவு செய்து. தொடர் நடவு முறையில் அமையும். இதன் இடைவெளி இயந்திரம் என்பதால் சற்றும் இடைவெளி மாறுபடாது. ஏக்கருக்கு 15 கிலோ விதை நெல் இருந்தால் போதுமானது. இடைவெளி சரியாக இருப்பதால் கோனோவீடர் கொண்டு களை எடுக்க ஏதுவாகும். இயந்திரம் நாற்றுகளை மேலாகஜெயக்குமார்வே நடுவதால் தொடர்நடவை விட தூர்கள் அதிகமாக இருக்கும். மகசூலும் 20% வரை அதிகமே.

(iv) ஆலங்குடி பெருமாள் நடவு முறை

மேற்கண்ட மூன்று நடவு முறைகளை விட இந்த நடவு முறை சற்று வித்தியாசமானது.

திருந்திய நெல் சாகுபடி என்ற ஒற்றை நாற்று முறையில் இருந்து மேம்படுத்தப் பட்ட முறை இது. கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி என்ற ஊரைச் சேர்ந்த நெல் விவசாயியான திரு. பெருமாள் என்பவர் இம்முறையில் பல வருட ஆராய்ச்சிக்குப் பின் பல சீரிய நுட்பங்களைப் புகுத்தியுள்ளார். நாற்றுக்களுக்கு இடையில் இடைவெளி அதிகரிப்பது மட்டுமே இதன் கூறு அல்ல. விதைத் தேர்வு, நாற்றங்கால் தயார் செய்தல், வயல் தயார் செய்தல், நடவு என்று அனைத்தையும் உள்ளடக்கிய முறை இது.

விதைத் தேர்வு

ஒரு ரகத்தை நடவு செய்ய விதை சேகரிப்பில் திரு.பெருமாள் மிகுந்த கவனிப்பைச் செலுத்துகிறார். முதலில் அந்நெல் விளைந்துள்ள வயலில், நல்ல திரட்சியான, சற்றும் நோயற்ற, திடமான நெல்மணிகள் உள்ள கதிர்களை மட்டுமெ கையால் அறுத்து, அவற்றை வைக்கோலுடன் சேகரித்து வைக்கிறார். அதன் பின்னர் அக்கதிர்களைக் கையால் கசக்கி உதிரும் திரண்ட மணிகளில் இருந்து விதை எடுக்கிறார். அதன் பின்னர் அவ்விதைகளை 4ம் எண், 3ம் எண் அதன் பின் 2ம் எண் சல்லடை கொண்டு சலிக்கிறார். இதனால் சிறு நெல்மணிகள் புறந்தள்ளப் படு கின்றன. அதன் பின் எஞ்சும் மிக ஆரோக்கியமான விதைகளை, நடவின் பொழுது உப்புக்கரைத்த நீரில் விதை நேர்த்தி செய்கிறார். (மிதக்கும் விதைகள் ஒதுக்கப் படுகின்றன). அதன் பின்னரே அவை நாற்றங்காலை எட்டுகின்றன!

ஒரு ஏக்கர் நிலம் நடுவதற்கு 3 சென்ட் மட்டுமே நாற்றாங்கால் தேவைப்படுகிறது. நாற்றங்கால் நன்கு உழப்பட்டுப் பழஞ்சேறாகப் பத்து நாள் கிடந்த பின், 3 சென்ட் நிலப்பரப்பில் கால் கிலோ மட்டுமே விதை தெளிக்கப் படுகிறது. விதைத் தேர்வில் செய்த உழைப்பின் பலனாக 100% முளைப்புத் திறன் எட்டப்படுகிறது. நாற்றுக்கள் மிகுந்த இட வசதி இருப்பதால் சீறிக் கிளைத்து 15 நாளில் 10-12 தூர் விட்டு வீரியமாக வளர்கின்றன.

14 - 17 நாட்களில் நாற்றுகளை பிடுங்கி நடவு செய்யவேண்டும். நாற்றுகளைப் பிடுங்கும் போதும் தரமான நாற்றுகளை மட்டும் பார்த்து பிடுங்க வேண்டும். நடவு வயலை பொருத்தவரை விதை விடுவதற்கு முன்பே நடவு வயலை உழவு செய்து சமன் செய்து வைத்திருக்கவேண்டும். 15 நாள் நாற்றுகளை பறித்து 50 செ.மீ x 50 செ.மீ என்ற முறையில் ஒரு சதுர மீட்டருக்கு நான்கு குத்துகள் இருக்கும்படி நடவு செய்தல் வேண்டும். (ஒரு ஏக்கருக்கு 16000 நாற்றுக்களே தேவை! ) 15 ம் நாள் நாற்றுகள் சுமார் 25 - 30 cm உயரம் இருக்கும். நடவு வயலை பார்க்கும் பொழுது 8 - 10 நாற்றுகள் நட்டாற்போல் காட்சியளிக்கும். ஆனால் அது ஒரு விதை நெல்லிருந்து வந்த ஒற்றை நாற்று தூர் வெடித்து அப்படி தோற்றமளிக்கும். இந்த முறையில் நடும் போது அதிக இடைவெளி மற்றும் சூரியஒளி பயிர்களுக்கு நன்கு கிடைப்பதால் ஒவ்வொரு குத்திலும் பயிரின் தூர்கள் சுமார் 80 முதல் 120 வரை இருக்கும். மற்ற முறைகளைவிட இந்த முறையில் சாகுபடி செலவும் குறைவே. பெண் ஆட்கள் மூலம் நாற்றைப்பறித்து நடவு செய்துவிடலாம். மகசூலைப் பொருத்தவரையில் மற்ற முறைகளைவிட இந்த முறையில் 20 - 30% அதிகமே! செலவும் 20 முதல் 40% குறையும். நல்ல மகசூல் கிடைக்கும்.

வருவாய்

நம் தமிழ்நாட்டில் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 1200 கிலோ மட்டுமே. பாரம்பரிய ரகங்களை, இயற்கை வேளாண்மையில், பெருமாள் முறையில் நடவு செய்து சீரகச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, தூய மல்லி போன்ற ரகங்களில் 1800 கிலோ முதல் 2100 கிலோ வரை மகசூல் எடுத்துள்ளார் ஸ்ரீராம். இவரிடம் நெல் கிலோ 30 முதல் 35 ரூபாய் என்று இயற்கை அங்காடிகள் வைத்துள்ளவர் வாங்கிச் செல்கின்றனர். வேதி வேளாண்மையில் ஏக்கருக்குப் பதினைந்தாயிரம் வரை செலவு செய்து கொண்டிருந்த இவர் இப்போது ஒரு ஏக்கருக்கு 9000 மட்டுமே செலவு செய்கிறார். லாப நட்டக் கணக்குகளை வாசகர்களின் கணிப்பிற்கே விட்டு விடுகிறோம்!

இவரின் நண்பரும் பல ஆண்டுகளாக இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருபவரும் ஆன திரு. அசோகன் அவர்கள் சிறு, குறு நெல் விவசாயிகள் எவ்வாறு இம்முறைகளால் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது என்று சில திட்டங்களை வைத்திருக்கிறார். அவரை அடுத்த இதழில் அறிமுகம் செய்கிறோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org