முன்னேற்றம் என்பது என்ன?
பெரும் ஆலைகளைப் பரப்பும் சிந்தனை - நவீனமாக, முன்னேற்றமாக, அறிவியல் பூர்வமாக இருப்பதாகப் பரவலாகக் கருதப் படுகிறது. பலரும் இக்கருத்தையே வலியுறித்தி, நூற்பாலைகளையும், நவீன அரிசி ஆலைகளையும் தடை செய்வதையோ, குறைப்பதையோ பிற்காலத்திற்குச் செல்வதாகக் கூவுகின்றனர். எனவே எது முன்னேற்றம், எது அறிவியல் சார்ந்தது என்று சற்று சிந்திப்பது நலம் பயக்கும்.
இன்று பாமர மக்கள் எதை வேண்டுமானாலும் நம்பத் தயாராய் இருக்கின்றனர் - தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தால். பரப்புரைமை என்பதே ஒரு விஞ்ஞானம் ஆகி தனி மனித சிந்தனை என்பதே மழுங்கி விட்டது. பள்ளி, கல்லூரிகளில் கற்றுத் தரப்படும் பாடங்கள் கூட செரிமானம் ஆகாத அரை வேக்காட்டு உண்மைகளைப் பரப்புவதாக ஆகி விட்டது. சரியாகப் புரிந்து கொண்டால் எல்லா கிராமத் தொழில்களுக்கும் அறிவியலே அடிப்படை ஆகும். மேலும் அறிவியல் ஆய்வுக்கும், பயன்பாட்டிற்கும் முழுமையான வாய்ப்பு கிராமத் தொழில்களிலேயே கிடைக்கிறது என்பதும் தெளிவாகும்.
அறிவியல் என்பது என்ன?
அறிவியல் மனிதனின் படைப்பல்ல. அசைக்க முடியாத விதிகளின் அடிப்படையில், நன்கு பண்படுத்தப்பட வழிகளில் இயற்கை இயங்குகிறது. இவ்விதிகளை மனிதன் புரிந்து கொண்டு அதை ஒரு அறிவு சார்ந்த முறைமையாக வகுக்கும் பொழுது நாம் அதை அறிவியல் என்கிறோம். எனவே அறிவியல்பூர்வமானது என்று எந்த ஒரு வழிமுறையைச் சொல்ல வேண்டுமானாலும் அது இயற்கையின் அனைத்துக் கூறுகளுடனும் ஒத்ததாக இருக்க வேண்டும். நாம் இயற்கையில் இருந்து விலகிப் போகும் அளவு நாம் அறிவியல் இழந்தும் போகிறோம். மனிதன் இயற்கையின் இயக்கத்தை அறைகுறையாகப் புரிந்து கொண்டு, அவ்வறிவைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்தி இயற்கையின் போக்கில் இருந்து தடம் மாறலாம். ஆனால் அத்தகைய நெறிமாற்றம் இறுதியில் அழிவுக்கே கொண்டு விடும் - ஏனெனில் மனிதனும் இயற்கையின் ஒரு பகுதியே.