தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மேம்பாடும் நீடித்த மேம்பாடும் - பாமயன்


வளர்ச்சி (growth), மேம்பாடு (development), நீடித்த மேம்பாடு (sustainable development) என்ற சொல்லாடல்கள் இன்று கூர்ந்து உற்று நோக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன. வளர்ச்சி என்பதை எப்படி வேண்டுமானாலும் நாம் விளக்கப்படுத்திக் கொள்ள முடியும். ஏதாவது ஒன்று வளர்ந்து கொண்டே சென்றால் அதை வளர்ச்சி என்று நேரடிப் பொருள் கொள்ள முடியும். அதாவது ஒரு குழந்தை நாளும் பொழுதும் உடல்ரீதியாக வளர்வதை வளர்ச்சி என்கிறோம். அதே சமயம் உடலில் தோன்றி வளரும் ஒரு கட்டியையும் வளர்ச்சி என்றே குறிப்பிடுகிறோம். வளர்ச்சி எந்தத் திசையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. வளர்ச்சி நேர்முறையாகவும் இருக்கலாம், எதிர்முறையாகவும் இருக்கலாம். இதற்கு அடுத்ததாக நாம் மேம்பாடு எனப்படும் சொல்லாடலைப் பார்ப்போம். எந்த ஒரு வளர்ச்சியும் நன்மை பயப்பதாக இருப்பதாக இருந்தால் அதை மேம்பாடு என்று குறிப்பிடலாம். ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி மற்றும் ஆன்ம வளர்ச்சி ஆகிய முழுமையான வளர்ச்சியை மேம்பாடு என்று குறிப்பிடலாம். இது சமூக மேம்பாடு, சூழலியல் மேம்பாடு ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

இந்த மேம்பாடு நீடித்த வகையில் அமைவதாக இருந்தால் அதை நீடித்த மேம்பாடு என்று குறிப்பிடலாம். ஒரு மேம்பாட்டுச் செயல்பாடு இன்றைய தலைமுறைகளின் தேவைகளை நிறைவு செய்வதோடு எதிர்காலத் தலைமுறைகளின் தேவைகளையும் நிறைவு செய்வதாக இருக்க வேண்டும். இந்த நீடித்த தன்மைதான் இன்றைய தேவையாக உள்ளது.

இன்றைய பொருளியல் உலகம் ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பற்றிக் கணக்கிடும்போது அதை ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அடிப்படையாக வைத்துக் கணக்கிடுகிறது. இந்த உள்நாட்டு உற்பத்தி என்பது பெரும்பாலும் பணத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு மரத்தை வெட்டி விற்று அதைப் பணமாக மாற்றினால் அது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியாகக் கணக்கிடப்படும். அதே சமயம் ஒரு மரத்தை நட்டு வளர்த்தால் அது உள்நாட்டு உற்பத்திக் கணக்கில் வராது. ஓர் ஏரியை மூடிவிட்டு அதில் வணிக வளாகங்கள் போன்ற கட்டுமானங்களைக் கட்டினால் அது உள்நாட்டு உற்பத்திக் கணக்கில் வரும். ஆனால் ஒரு ஏரியை வெட்டி அதில் நீரைச் சேமித்து வைத்தால் அது உற்பத்திக் கணக்கில் வராது. இதுபோல் ஆற்றுமணலைச் சுரண்டி விற்றால் வருமானமாகக் கருதப்படும், அந்த ஆற்று மணலைச் சேமிக்க முயல்வது வருமானத்தில் வராது. இப்படிப்பட்ட முரண்பட்ட குறியீடுகளைக் கொண்ட நமது பொருளியல் கோட்பாடுகள், நீடித்த தன்மையற்றதாக உள்ளன.

உற்பத்தி முறையை எடுத்துக்கொண்டால் தீர்ந்துபோய்விடக் கூடிய ஆற்றல் ஆதாரங்களான நிலக்கரி, பெட்ரோலியம் போன்றவற்றை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறார்களோ அவர்களே பணக்காரர்கள் என்ற கருத்தும் உள்ளது. ஆனால் இவை மிக விரைவில் தீர்ந்துபோவது மட்டுமல்லாம் பிற வாழ்வாதரங்களையும் அழிக்கும் வகையில் இருப்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம். மரங்கள் வெட்டப்படுவதால் காடுகள் தமது தன்மையை இழந்து மண் அரிமானத்தை ஏற்படுத்துகின்றன. மரங்கள் என்பவை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கும் தன்மை கொண்டவை. ஆனால் இவற்றின் சமநிலையை அழிக்கக் கூடிய வகையில் அழிக்கப்படும்போது சிக்கல் உருவாகிறது. இப்படியாக அளவற்று வளங்களை அழிப்பதற்கு இந்த பெட்ரோல், நிலக்கரி போன்றவை உதவியாக இருக்கின்றன. மனித, விலங்கு ஆற்றல்களைக் கொண்டு ஒரு காட்டை விரைவாக அழித்துவிட முடியாது. ஆனால் இன்று உருவாகியுள்ள தொழில்நுட்பங்கள் ஒரு காட்டை சில நாட்களில் அழித்துவிட முடியும். இதேபோல ஆறுகளில் கொட்டப்படும் வேதியக் கழிவுகள் உயிருள்ள ஆற்றைச் சாகடித்துவிட முடியும். கடல் வாழ் உயிரினங்களைக் கொன்றொழிக்க முடியும். பெரும் கப்பல்களைக் கொண்டு கடலின் சின்னஞ்சிறு குஞ்சுகளையும் முட்டைகளையும் அரித்து எடுத்து அழித்துவிட முடியும். இந்த நுகர்வு வெறி, அனைத்தும் ஒரு சிலர் கைகளில் குவிக்கும் முறைதான் இன்று கோலோச்சுகிறது.

வேளாண்மை சாகுபடி முறைகளில் கூட நம்மைப் போன்ற பண்டைய நாடுகளின் விளைவிப்பு முறைக்கும், தொழில்மய வேளாண்மை முறைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அமெரிக்காவில் வேதிய முறை வேளாண்மையில் சாகுபடி செய்யப்படும் ஒரு கிலோ போதுமைக்கு அவர்கள் செலவிடும் ஆற்றல் 3000 கிலோ கலோரிகளுக்கும் மேல். அதாவது, விதைப்பது, உரமிடுவது, கொல்லிகளைச் தெளிப்பது போன்ற யாவையும் எந்திரங்களைக் கொண்டு செய்கின்றனர். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் எந்திரங்களின் எரிபொருள் விலையைக் கணக்கில் கொண்டால் இந்த அளவு வருகிறது. ஆனால் இந்திய உழவர்கள் கோதுமை சாகுபடிக்கு வெறும் 800 கிலோ கலோரி ஆற்றலைத்தான் பயன்படுத்துகின்றனர்.

ஒரு கிலோ கோதுமையில் உள்ள ஆற்றல் ஏறத்தாழ 3000 கிலோ கலோரி என்பது மற்றும் ஒரு கணக்கு. ஆனால் ஒரு கிலோ கோதுமையை விளைவிக்கப் பயன்படுத்தும் ஆற்றலும் ஏறத்தாழ அதே அளவு இருக்கும்போது அது ஒரு திறன் மிக்க சாகுபடி முறையாக இருக்காது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் விளைவிக்கப்படும் முறையே உண்மையில் திறன் மிக்கதும் சூழலை நாசப்படுத்தாததுமாக இருக்கும். அதே சமயம் இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்கள் மிகுந்த மானியங்களோடு உலகச் சந்தைக்கு வருகின்றன. குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் விளையும் பருத்திக் ஆகும் செலவு மற்ற எல்லா நாடுகளையும்விட மிக அதிகமானது. ஆனால் அந்த நாடுகள் மிக அதிகமான வேளாண் மானியங்களைக் கொடுத்து உலகச் சந்தையில் இறக்குகின்றன. இதைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பல நாடுகளின் உழவர்கள் வீழ்ச்சியைச் சந்திக்கின்றனர். இந்தியப் பருத்தி உழவர்களும் இந்த முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்படும் எந்த வளர்ச்சியும் மிக விரைவில் அழிய நேரிடும். பணம் என்பது நேரடியாக நுகரக் கூடிய ஒரு பொருளல்ல. ஒரு பயன்பாட்டுப் பொருள் மிக அரிதாகப் போய்விடுமேயானால் அதை வாங்க நாம் அளவற்ற பணத்தைக் கொடுக்க வேண்டியதாகிவிடும். எடுத்துக்காட்டாக தண்ணீர் என்பது பணப்பொருளாக மாறிவிட்டால் அதுவும் அரிய பொருளாக ஆகிவிட்டால் (இன்று அப்படி ஆகி வருகிறது) அதை விலை கொடுத்து வாங்கும்போது பணம் அந்த இடத்தில் வெற்றுத் தாளாக ஆகிவிடுகிறது. இதன் மூலம் பணத்தைக் குவித்துக் கொண்ட ஒரு சிலருக்கே பொருள் கிடைக்கும் நிலை ஏற்படும்.

இது தண்ணீருக்கு மட்டுமல்ல எல்லாப் பொருளுக்கும் பொருந்தும். இன்றைய பொருளியல் கோட்பாடுகள் முற்றிலும் ஒரு சிலரின் கைகளில் பணத்தைக் குவிக்கச் செய்யும் முறையையே வலியுறுத்துகின்றன. தொழில்நுட்பங்களும், புதிய எந்திரங்களும் பலரின் கைளில் இருந்த உற்பத்தியையும், வலிமையையும் ஒரு சிலரின் கைகளுக்குக் கொண்டு செல்கின்றன. இந்தியா போன்ற மக்கள் தொகை நிறைந்த நாடுகளில் மக்களால் செய்யப்படும் உற்பத்திக்கு மாறாக எந்திரங்களால் செய்யப்படும் உற்பத்தி முறை மிக மோசமான வேலையின்மையை ஏற்படுத்தும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org