தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மண் பயனுற வேண்டும்

வீடென்று எதைச் சொல்வீர் - செம்மல்

சென்ற இதழில் ரமேஷ் அவர்களின் மண் இல்லத்தைப் பற்றி ஒரு சுருக்கமான முன்னோட்டத்தைக் கண்டோம். இம்முறை அவ்வீட்டின் உள்ளமைப்பு மற்றும் பயன் படுத்தப் பட்ட பொருட்களைப் பற்றி சற்றே விரிவாக அறிவோம்.

ரமேஷ் கூறுகிறார்:

தற்காலத்தில் வீடு ஒரு தகுதி / அந்தஸ்து அடையாளம் என்றாகி விட்டது. நாம் அடிப்படையான தேவைதான் வீடு என்றுணர்ந்தாலே, ஒரு மாறுபட்ட முயற்சியை மேற்கொள்ள முடியும். தேவியும் நானும் எங்கள் வீடு ஒரு சூழல் சார்ந்த (sustainability) அடையாளமாக இருப்பதே முதல் குறிக்கோள் என்பதில் தெளிவாக இருந்தோம். இதற்கான‌ சில வழிமுறைகளாவன:

  1. இயன்ற வரை கட்டுமானப் பொருட்கள் அருகிலேயே நுகரப் படுதல்.
  2. அவசியமற்ற, அழகுக்காக மட்டுமே செய்யப் படும் கட்டுமான வேலைகள் தவிர்க்க படுதல்.
  3. கிராமத்தில் உள்ள வேலையாட்களை கொண்டே வீட்டை கட்டுதல்.
  4. மின்சாரத்தையும், வீட்டிற்குள் நீர்க்குழாய்களையும் முடிந்த வரை தவிர்த்தல்.

தா: நான்காவது கருத்து, மிகவும் ஆச்சரியமளிக்கிறது!

ர: எங்கள் கிராமத்தில் வாழ்க்கை நிலத்தடி நீரையும், மழையையும் சார்ந்தே இருக்கிறது. வீட்டிற்குள் குழாய் வசதியானது, நம்மை அறியாமலே நீர் பயன்பாட்டை ஏறக்குறைய இரு மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. சூழலைச் சார்ந்த வாழ்வுமுறையின் முதல் கோட்பாடே உபயோக அளவைக் குறைத்தல் என்னும்போது, இவ்வீணடிப்பு, அதுவும் உயிர்ப்பொருளான நீரை, எங்கள் இருவ்ராலும் ஏற்க முடியாத எண்ணம். மேலும், குடம், வாளி, தொட்டிகளில் நீரைச் சேமித்துப் பயன் படுத்துகையில், தண்ணீர் செலவாகும் அளவை நிர்ணயிப்பது எளிது. (சிரித்தபடியே) - சுமக்கச் சோம்பல் பட்டு, இரண்டு செம்பு ஊற்றாமல், ஒரு செம்பிலே, கை கழுவும் வாய்ப்பும் இருக்கிறது. அடுத்து, மின்சாரம். நாம் அனைவரும் மின்சாரத்தை, காற்றைப் போல் எண்ண ஆரம்பித்து விட்டோம் என்று தோன்றுகிறது. நானும் கணினி, அலைபேசி போன்ற நவீனத்துவங்களைச் சார்ந்தே இருக்கிறேன். மின்சாரமே அற்ற வாழ்வு கண்டிப்பாக எளியதல்ல. எனினும், நான் முன்பே கூறியது போல, முயறசியற்ற வாழ்க்கை அர்த்தமற்றதே. இம்முயற்சி வெற்றிய‌டையுமா என்பதை பற்றி நான் சிந்திக்கவில்லை. நீங்கள் அடுத்த ஆண்டு என்னைச் சந்திக்கும் பொழுது, நானும் வீட்டில் மின்சார இணைப்புடன், உங்களை வரவேற்கலாம். சரி, நாம் வீட்டைப் பற்றி பேசலாம். நீர் பயன்பாடும், மின்சாரச் சிறை வாழ்க்கையும் பற்றி நாம் பிறிதொரு நாள் விரிவாக உரையாடலாம்.

ரமேஷ் வீட்டின் சுவர்கள் மண்ணில் கட்டப் பட்டிருக்கின்றன. அவர் மண், கருங்கல் மற்றும் சிமென்ட் கற்கள் இம்மூன்று பொருட்களை பரிசீலித்து, சிமென்ட் கல்லை அதன் சூழல் பாதிப்பினால் நிராகரித்து விட்டார். அவர் கிராமத்தில் இருந்து கருங்கல் உடைக்கும் இடங்கள் நாற்பது கிலோ மீட்டருக்கு மேல் தொலைவு என்பதாலும், அவர் தோட்டத்தின் மண்ணே கட்டமைப்புக்கு உகந்ததாக இருப்பதாலும், மண்ணைத் தேர்வு செய்ததாகக் கூறினார். அவருக்கு மிக்க வருத்தமான விஷயம், அவரது குளீயல் அறை, சிமென்ட் கற்களால் கட்டப் பட்டது தான். இதைத் தவிர, வீட்டின் உயரத்தை அதிகமாக்க, ஏழு அடி மண் சுவரின் மேல், இரண்டு வரிசை, சிமென்ட் கற்களால் அமைக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். வேலை ஆட்கள் மற்றும் அருகில் உள்ளோர் அறிவுரையின் படியே இந்த ஏற்பாடு என்றார். காரணங்கள், குளீயல் அறை ஈரமாகவே இருக்கும் ஆதலால், மண் சுவர் ஈரம் தாங்காமல் விழுந்து விடலாம். அவ்வட்டாரத்தில், மழைக்காலத்தில் அதிக வெள்ள பெருக்கு இருக்கும். எனவே, குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் மண் சுவர்கள் சரிய வாய்ப்பு உண்டு. அவரைப் பொறுத்தவரை. இவை எல்லாம், அவருடைய அடிப்படை சூழல் சார்புக்கு எதிரான மாற்றுவ்ழி. எனினும், இதைப் பற்றிய ஆழமான அறிதல் இல்லாததால், அவர் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டுள்ளார். நமக்கு அவரின் தீவிர சூழல் ஆர்வம் வியப்பளிக்கிறது.

அடுத்ததாக, பனையோலைக் கூரை எனறு முடிவெடுத்ததன் காரணம் பற்றிக் கேட்டோம்.

ர: நாங்கள் பனை அல்ல்து ஓடு தான் கூரைக்கு எற்றது என்றாராய்ந்து அறிந்தோம். கிராமத்தில் உள்ள நண்பர்களும், அருகாமையில் வசிப்பவர்கலளும் பனையையே பரிந்துரைத்தனர். அதன் நல்ல பலனை, நாங்கள் வீடு கட்டிய பின் உணர்ந்தோம். வீட்டின் உள்ளே சித்திரை வெயிலிலும், குளூகுளூப்பை உணரலாம். இதில் சிரிப்பூட்டும் செய்தி என்னவென்றால், பல காலமாக கிராமத்திலேயே வசிக்கும் அண்டை வீட்டார் - எங்களுக்கு பனையை அறிவுறித்தியவர்கள் - சிமென்ட் கூரை வீடுகள் (Terrace) கட்டிக் கொண்டு, கோடையில் தவிக்கிறார்கள்.

மீண்டும், கருத்தில் இருந்து விலகுவதற்கு மன்னியுங்கள் - நான் இங்கே வாஸ்து என்னும் கட்டாய கட்டிட வடிவமைப்பு பற்றி சில வரிகள் சொல்ல விருப்பப்படுகிறேன்.

எம் வட்டாரத்தில், கோடைக்காலத்தில் மேற்கிலிருந்தே நல்ல காற்று வருகிறது. இச்சிறிய இயற்கைத் தகவல், இங்கு உள்ள சிறு குழந்தைகளும் அறியும். ஆயினும், இங்கு எல்கலா வீடுகளூம் கிழக்கு வாசலும், மேற்கே சிறு ஜன்னல்களும் கொண்டே கட்டப் படுகின்றன. கூரை வேறு சிமென்ட். இந்தக் கூரை அமைப்பு நம் தட்பவெட்ப‌த்துக்கு அறவே ஒவ்வாதது. வாஸ்துவின் பெயரால், நாமே நமக்கு தீங்கு இழைத்துக் கொள்கிறோம் என்று தோன்றுகிறது. பின்னர், கோடையில் வீட்டில் மின் விசிறி இல்லாமல் இருக்க முடியாத நிலை - மின்சாரத்துக்கும் தட்டுப்பாடு. (சிரிக்கிறார்)

இந்த கட்டுமானப் பணியில் நான் ஒரு வருத்ததிற்குரிய உண்மையை கண்டேன். இப்பணியில் ஈடுபட்ட அனவருமே வயது நாற்பதை ஒட்டியிருப்பவர்களே. அவர்களுக்கும் வழிமுறையாய், வந்த சில வேலைகள் தெரியவில்லை. நாம் தொன்று தொட்டு கட்டி வாழ்ந்த வீடுகளை உருவாக்கவோ, பராமரிக்கவோ வரும் தலைமுறையினருக்கு தெரியாமல் போய் விடக் கூடும் என்பது அச்சத்தை அளிக்கிறது.

ர‌மேஷ் சூழல் பேணும் வீட்டை கட்டியதில், முழுத் திருப்தி அடையவில்லை. தாங்கள் நினைத்ததில் எண்பது விழுக்காடு மட்டுமே அடைந்ததாகக் கூறுகிறார். அவர்களது குளியல் அறையில் பீங்கான் ஓடுகள் பதித்தது, மண் சுவருக்கு வெளிப்பூச்சாக சிறிதளவு சிமென்ட் பூசியது, கை கழுவ, பாத்திரங்கள் கழுவ ஸிங்க் அமைத்தது போன்ற சூழல் விலகல்களைத் தவிர்க்க இயலவில்லை என்று உணர்கிறார். இந்த வீட்டை அவர்கள் இருவரும் ஒரு சாதாரண வாழுமிடமாக மட்டும் கருதவில்லை. அது ஒரு ஆத்ம வளர்சசிக்கான உறைவிடமாக நினைக்கிறார்கள். வெளி நாட்டில் தோற்றத்துக்குப் பகட்டான வாழ்க்கை அவர்தம் ஆத்ம வளர்சசியை சுருக்கி, ஆத்ம வீழ்ச்சியை ஏற்படுத்தியதாய் தம்பதியர் ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.

ரமேஷ், தேவி இருவரும் தம் இல்லத்தை உருவாக்கியதன் சில புள்ளி விவரங்களை அளித்தனர்:

  • கட்டுமானப் பொருள்களில் எழுபது விழுக்காடு, இருபது கிலோ மீட்டர் தொலைவுக்குளிருந்து நுகரப் பட்டது. ஆயினும், எஞ்சிய‌ முப்பது விழுக்காடு பொருட்கள் பண அளவில் ஐம்பது விழுக்காடு மதிப்பு பெறலாம்.
  • பணியாளர்கள் அனைவருமே அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்
  • மொத்த செலவில் நாற்பது விழுக்காடு, பணியாளர்கள் ஊதியத்திற்காக செலவிடப்பட்டது.
  • வீட்டைக் கட்டி முடிக்க நான்கு மாதங்கள் ஆயின.
  • ஒரு சதுர அடிக்கு ரூ.450 ஆயிற்று (1100 சதுர அடிக்கு மொத்தம் ரூ.4,70,000 ஆயிற்று).

விடை பெறுகையில், ரமேஷ் தங்களைச் சாதனையாளர்களாகக் கருத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். “எங்கள் முயற்சி மிகவும் எளிமையானது, இயல்பானது. இதைப் பற்றி நீங்கள் எழுத எண்ணியதற்கு நன்றி. இதைப் போன்றே, வாழ எண்ணும் அன்பர்களுக்கு ஒரு சிறு உந்துதலைத் தர உதவும் என்று நம்புகிறோம். இந்த அனுபவமே ஒரு கல்வி என்றும் நம்புகிறோம். இதை ஒத்த சிந்தனையுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.” என்று முடித்துக் கொண்டார்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org