தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

காசேதான் கடவுளடா - பரிதி


[கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிகம் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள் குறித்த விளக்கமும் பிறமொழிப் பெயர்ச் சொற்களின் ஆங்கில வடிவமும் இறுதியில் தரப்பட்டுள்ளன.கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ள : thiru.ramakrishnan@gmail.com]

அனுமதி இல்லாமல் மரம் வெட்டி அல்லது கானுயிர்களை வேட்டையாடிக் கையும் களவுமாகப் பிடிபட்டு ஊடகங்களில் அவமானப்படுத்தப்படுபவர்களைப் பார்த்திருக்கிறோம். உழவர்கள் தம் பயிர்களைச் சேதப்படுத்தும் மயில்களைக் கொன்றதற்காகத் தண்டிக்கப்பட்டதைக் குறித்துப் படித்திருக்கிறோம். பேருந்து நெரிசலில் பணம் திருடுவோர் உள்ளிட்ட பல “சில்லறைத்” திருடர்களுடைய ஒளிப்படங்கள் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன. அத்தகைய சமயங்களில் சட்டமும் அதன் காவலர்களும் தம் கடமையைச் சரிவரச் செய்கின்றனர்; சட்டத்திற்குப் புறம்பாக நடப்பவர்கள் தண்டனை பெறுகின்றனர்.

ஆனால், நீங்கள் ஒரு பெரிய நிறுவன உரிமையாளரெனில் பல நூறு ஏக்கர் பரப்பில் உள்ள இயற்கைக் காடுகளை அழித்து, பல்லாயிரம் மக்களை அவர்களுடைய வாழ்வாதாரங்களில் இருந்து துரத்தி ஆலை அமைத்துப் பணம் சம்பாதிப்பதற்கு வழியுண்டு! அதற்கு வேண்டிய உதவிகளை அரசுத் துறைகள் செய்து தரும். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுக் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். 'சிந்தால் நிறுவனக் குழுமம்' சுமார் 1,700 கோடி டாலர் (சுமார் 1,02,000 கோடி ரூபாய்) சொத்து மதிப்புடையது. 'சிந்தால் எஃகு மற்றும் ஆற்றல்' என்பது அந்தக் குழும நிறுவனங்களில் ஒன்று. அதன் மதிப்பு சுமார் 356 கோடி டாலர் (சுமார் 21,360 கோடி ரூபாய்). இந்நிறுவனம் இந்தியாவின் மூன்றாவது பெரிய எஃகு உற்பத்தியாளர். பல இரும்பு மற்றும் நிலக்கரிச் சுரங்கங்களுக்கு உரிமை பெற்றது. 2013 மார்ச் இறுதி நிலைமைப்படி, இந்த மாபெரும் நிறுவனத்தில் 59 விழுக்காட்டுப் பங்குகளை சிந்தால் குடும்பத்தினர் தம் கைவசம் வைத்துள்ளனர் 22 விழுக்காடு பங்குகள் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் கையிலும் 7 விழுக்காடு பங்குகள் சுமார் ஒரு லட்சம் சிறிய முதலீட்டாளர்களிடமும் உள்ளன. மீதமுள்ள 12 விழுக்காடு பங்குகள் பிற பங்குதாரர்களிடம் உள்ளன.

இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் பல மாநிலங்களிலும் வெளி நாடுகள் பலவற்றிலும் சுரங்கங்கள், ஆலைகள் உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. 2014 சனவரி 21 நிலவரப்படி 'சிந்தால் எஃகு மற்றும் ஆற்றல்' நிறுவனத்தில் 7,488 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களில் 299 பேர் பெண்கள், ஐந்து பேர் மாற்றுத்திறனாளிகள்.

இதன் முதன்மை உரிமையாளரான நவீன் சிந்தால் (வயது 44) அண்மையில் நடந்த தேர்தலுக்கு முன்னர் வரை இரண்டு முறை அரியானா மாநிலம் குருச்சேத்திரத் தொகுதியின் காங்கிரச் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் மீதும் முன்னாள் அமைச்சர் தாசரி நாராயண ராவ் மீதும் கருப்புப் பணப் புழக்கத்தில் ஈடுபட்டதாக இம்மாதம் ஐந்தாம் தேதி அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது பிர்லா குழுமம், நடுவண் நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஆகியோரும் வேறு சில அரசு அதிகாரிகளும் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். 2008-இல் நிலக்கரிச் சுரங்க உரிமங்களை நிறுவனங்களுக்குத் தந்ததில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் தாசரி நாராயண ராவ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் ராம்சந்தி-யில் 150 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி கிடைக்கக்கூடிய சுரங்கம் ஒன்றின் உரிமம் உபரி ஈட்டிவரும் அரசு நிறுவனமான 'கோல் இந்தியா வரை.' நிறுவனத்திற்கு மறுக்கப்பட்டு மேற்படி சிந்தால் குழும நிறுவனத்திற்கு 2009-இல் வழங்கப்பட்டது. (இது தவிர 180 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி வளமுள்ள இரண்டு சுரங்கங்கள் வேறிரண்டு தனியார் நிறுவனங்களுக்குத் தரப்பட்டன. இம்மூன்றின் மொத்த மதிப்பு சுமார் 2,00,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும்.) சுரங்கங்களை நிறுவனங்களுக்கு ஒதுக்குவதற்கான இறுதித் தேதி முடிந்த பிறகு மேற்படி உரிமங்கள் வழங்கப்பட்டன. அதில் சட்ட மீறல்கள் இருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டின. சிந்தால் உள்ளிட்ட பதினெட்டு நிறுவனங்களுக்கான நிலக்கரிச் சுரங்க உரிமங்களை ரத்து செய்யுமாறு 2012 செப்டம்பர் 15 அன்று அமைச்சர்கள் குழு பரிந்துரைத்தது. அவை 2014 பிப்ரவரி 18 அன்று ரத்து செய்யப்பட்டன.

முன்னதாக, சத்தீச்கட் மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நிலக்கரிச் சுரங்க உரிமம் சிந்தால் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் உள்ள பல ஊர்களைச் சேர்ந்த மக்களை ஒன்றுதிரட்டிப் போராடி 2011-இல் அந்த உரிமங்களை ரத்து செய்யவைத்தார் ரமேச் அகர்வால் எனும் 56 அகவை நிரம்பிய சூழல் ஆர்வலர். அதன் விளைவாக அவர் 2012 சூலை மாதம் அடையாளந் தெரியாதவர்களால் சுடப்பட்டு அறுவை சிகிச்சையின் பலனாக உயிர் பிழைத்தார். அந்தத் தாக்குதலில் முடமாக்கப்பட்ட அவர் இன்றும் இயல்பாக நடக்க முடிவதில்லை. இவ்வாண்டுக்கான உலகின் மிகவுயர்ந்த சூழல் விருது (கோல்ட்மேன் சூழல் விருது) பெறும் ஆறு பேரில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்ட வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் சிந்தால் குழும நிறுவனம் ஒன்றை மூடக்கோரி 2013 சூன் மாதம் டெல்லி ஓக்லாப் பகுதி மக்கள் போராடினார்கள். இந்த நிறுவனம் அமைக்கப்படுவது குறித்த முன்னீடு 2005 மார்ச் மாதம் வெளியாகிற்று. அப்போது முதல் 'நச்சுக் கண்காணிப்புச் சேர்க்கை' ('டாக்சிக்ச் வாட்ச் அலையன்ச்') எனும் அமைப்பு அதற்கெதிராகப் போராடிவருகிறது. அந்நிறுவனம் சூழலைப் பெருமளவில் பாதிக்கும் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்தது.

ஒடிசா மாநிலத்தில் தாகுரானி இரும்புத் தாதுச் சுரங்கங்களைப் பயன்படுத்துவதில் சிந்தால் நிறுவனம் இயற்கைச் சூழல் காப்புச் சட்டங்களை மீறியது குறித்து விசாரிக்குமாறு இந்த ஆண்டு சனவரியில் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஒடிசா அரசுடன் கள்ளக்கூட்டுச் சேர்ந்து மக்களுக்கு 8,100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சரி, குறிப்பாக இந்த நிறுவனத்தைப் பற்றி நாம் ஏன் இங்கு எழுதுகிறோம் என்கிறீர்களா? சில ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்.

திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலை ஆகியவற்றைக் கவர்ந்துகொள்வதற்கு இந்த நிறுவனம் பத்தாண்டுகளாக முயன்றுவருகிறது. இம்மலைகளில் உள்ள கற்பாறைகளில் 47 விழுக்காடு இரும்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் 2008-ஆம் ஆண்டு அறிவித்தார். அது தொடர்பான ஆய்வுகளில் 'தமிழ்நாடு இரும்புத் தாதுச் சுரங்க நிறுவனம்' (சுருக்கமாக, தஇதாசுநி) ஈடுபட்டிருந்தது. அந்த மலைகளில் சுரங்கந் தோண்ட அனுமதிக்கப்பட்டால் 810 ஏக்கர் பரப்பிலும் சேலம் மாவட்டம் கஞ்சமலையில் 635 ஏக்கர் பரப்பிலும் இருந்த இயற்கைக் காடுகள் அழியும். திருவண்ணாமலைக் காடுகளில் மட்டும் சுமார் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் மரங்கள் வெட்டப்படவேண்டியிருக்கும்.

இந்தத் திட்டத்தை எதிர்த்து ஞானேச்வரன் எனும் வழக்குரைஞர் சென்னை உயர்நீதி மன்றத்தில் 2008-ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தார். 'நடுவண் அதிகாரம்பெற்ற ஆணையம்', சூழல் மற்றும் கான்வளத் துறை அமைச்சகம் இரண்டும் இந்தத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததை ஞானேச்வரன் சுட்டிக்காட்டினார். அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இயற்கைக் காடுகள் அழிவதுடன் அரியவகை உயிரினங்கள் பலவும் இல்லாதொழிந்துவிடும் என்பதையும் சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் நீராதாரமும் காற்றும் மோசமாக பாதிக்கப்படும் என்றும் அவர் எடுத்துரைத்தார். இன்னொரு முதன்மையான செய்தி என்னவெனில் தஇதாசுநி என்பது தமிழக அரசின் பொது நிறுவனம் போன்று தோன்றினாலும் அதில் ஒரு விழுக்காட்டுப் பங்குதான் அரசுக்கு உள்ளது. மீதமுள்ளது நாம் மேலே பார்த்த சிந்தால் நிறுவனத்திடம் உள்ளது. (தமிழக அரசும் சிந்தாலும் ஏப்ரல் 2005-இல் தஇதாசுநி-ஐப் பதிவு செய்தன.) அந்த ஒரு விழுக்காட்டுப் பங்கையும் தமிழக அரசு (2008-இல் இருந்து) அடுத்த மூன்று ஆண்டுகளில் விற்றுவிடுவதாகப் புரிதல் இருந்தது. ஆகவே, இயற்கையையும் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிப்பதன் மூலம் கிடைக்கும் பலன் முழுக்கத் தனியார் நிறுவனத்துக்கே போகும் என்றும் ஞானேச்வரன் வாதிட்டார்.

இந்தத் திட்டம் குறித்து முழுமையாக ஆராயுமாறு உச்ச நீதி மன்றம் நடுவண் அதிகாரம்பெற்ற ஆணையத்தைப் பணித்தது. அந்த ஆணையம் 2009 சூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் இருந்து சில பகுதிகள் வருமாறு:

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த காடுகள் வெகுவாக பாதிக்கப்படும்; அப்பகுதி மக்களுடைய வாழ்வாதாரம் அழியும், மாநில அரசு தனியார் நிறுவனத்திற்கு வளம் சேர்க்கும்.

தனியார் நிறுவனத்திற்கு உதவுவது அரசின் உட்கிடக்கை (மறைமுக நோக்கம்).

சுமார் 2,000 எக்ட்டேர் (5,000 ஏக்கர்) பரப்புள்ள இந்தத் திட்டப்பகுதி பாதுகாக்கப்பட்ட காடுகள் நிறைந்தது. அருகில் உள்ள 150 சிற்றூர்களின் விளைநிலங்கள் அதைச் சுற்றிலும் உள்ளன. இதைத் தவிர இப்பகுதியில் வேறு காடுகள் இல்லை. இந்த மலைகளில் செடி கொடி மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. அந்தக் காடுகள் இதுவரை வனத் துறையினராலும் ஊர் மக்களாலும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்தக் காடுகள் தாம் சுமார் மூன்று லட்சம் மக்களுடைய குடிநீர் மற்றும் வேளாண் நீர்த் தேவைகளை நிறைவு செய்கின்றன. இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதியில் சுரங்கத் தொழில் நடத்த அனுமதிக்கப்பட்டால் நீர் வளமும் காற்றும் கெடும். மக்களுடைய நலமும் கண்டிப்பாகப் பாதிக்கப்படும்.

மேலும், அரசுத் துறைகளின் அனுமதி பெறும் வேலைகள் அனைத்தையும் தஇதாசுநி செய்கிறது. இதனால் கிடைக்கும் பலன் முழுவதும் தனியார் நிறுவனத்திற்கே கிடைக்கும். அந்நிறுவனத்திற்குச் சந்தை விலையைக் காட்டிலும் குறைவான விலையில் தாதுப் பொருள் கிடைப்பதற்கே இத்திட்டம் வழிவகுக்கும். ஆதலால், இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்குவது பொது நலனுக்கு உகந்ததாக இராது. இந்தக் காரணங்களால் அந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுக்கவேண்டும்.

மேற்கண்ட காடுகளில் ஒரு பகுதி சப்பான் அரசின் நிதி உதவியோடு தமிழக அரசால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அசுரத்தனமாக வளர்க்கப்பட்டுவிட்ட நிறுவனங்கள் இத்தகைய தோல்விகளைக் கண்டு மனந்தளர்வதில்லை. இப்போது தஇதாசுநி மீண்டும் அந்த மலைகளை அழிப்பதற்கு முயற்சி செய்கிறது. முன்பு கேட்டிருந்த 325 எக்ட்டேர் கானக நிலங்களுக்கு மாறாக இப்போது 23 எக்ட்டேர் கானக நிலம் மட்டும் போதும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த விண்ணப்பத்தின் பேரில் 2014 பிப்ரவரி முதல் கிழமையில் நடுவண் அதிகாரம்பெற்ற ஆணையத் தலைவர் செயக்கிருச்ணன் கவுத்தி-வேடியப்பன் மலைப்பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினார். சிந்தால் நிறுவன அதிகாரிகள், வனத் துறை அதிகாரி கல்யாணசுந்தரம், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்தத் திட்டம் அனுமதிக்கப்பட்டால் சாத்தனூர் அணையில் இருந்து பெருமளவில் நீரை எடுத்துக்கொள்ளும். சுரங்கக் கழிவு நீர் நிலத்தடி நீரின் தன்மையை மிகப் பெரிய அளவில் பாதிக்கும். இக்காரணங்களால் மக்களின் நீராதாரம் கடுமையாக பாதிக்கப்படும்; ஆதலால் வேளாண்மை ஒழிந்துவிடும் என்கின்றனர் இப்பகுதி மக்கள். ஒரு ஏக்கர் நிலத்தைக் கூட இந்த நிறுவனத்திற்குத் தரக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

சில அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோருடைய உறுதுணையோடு இயற்கையைச் சூறையாடிப் பொதுச் சொத்துகளைக் கொள்ளையடிக்கும் முதலாளிகள் அந்தக் கொள்ளையில் மிகச் சிறு பங்கினைச் செலவிட்டுத் தம் களங்கத்தை மறைத்துக் குமுகத்தில் நல்ல பெயர் சம்பாதித்துக்கொள்கின்றனர்.

நவீன் சிந்தால் அமெரிக்காவின் டெக்சாச் மாநிலம் டல்லச் நகரிலுள்ள பல்கலைக் கழகத்தில் மேலாண்மைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். அந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கு 2011-ஆம் ஆண்டு சுமார் ஒன்றரைக் கோடி முதல் இரண்டரைக் கோடி அமெரிக்க டாலர் நன்கொடை தந்துள்ளார். அதன் விளைவாக அந்தக் கல்லூரி 'நவீன் சிந்தால் மேலாண்மைக் கல்லூரி' என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. சாத்தான் வேதம் ஓதுகிறது: 2008-ஆம் ஆண்டு சூன் 10 அன்று முதலீடு, சூழல் மாற்றம் குறித்த ஒன்றிய நாடுகளவையின் கூட்டமொன்றில் சூழல் மாற்றங்களைக் குறித்து ஆராய்ச்சி செய்வதன் முதன்மை குறித்து நவீன் சிந்தால் பேசினார். சூழல் மாற்றம் குறித்த அக்கறை இனிமேல் நிறுவனங்களின் குமுகப் பொறுப்பாக மட்டும் கருதக்கூடிய ஒன்றல்ல என்றார் “உலக மக்கள் ஒவ்வொருவருடைய தேவையையும் ஈடு செய்வதற்கேற்ற வளம் இப்புவியில் உள்ளது. ஆனால் அவர்களுடைய பேராசையை ஈடு செய்யமுடியாது” எனும் காந்தியின் மேற்கோளை அவர் அந்தக் கூட்டத்தில் முன்வைத்தார்.

அம்மணத்தை மறைக்க உதவும் (போலி) நாட்டுப்பற்று:

மக்களை முட்டாள்களாக்க முயலும் நவீன் சிந்தாலின் உத்திகளில் சிலவற்றை இனிக் காண்போம்.

 1. இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் புகை பிடிப்பதை 2004 சூலை முதல் நிறுத்துவதில் முன்னின்று போராடி வென்றவர்களில் இவரும் ஒருவர்.
 2. இந்தியாவிலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் சுங்கவரி விலக்களிக்கப்பட்ட கடைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு நன்மை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். செப்டம்பர் 2005 முதல் அக்கடைகளில் ரூபாயைப் பயன்படுத்த முடிந்தது.
 3. இந்தியக் கொடியைப் பெருமையுடன் பறக்க வைப்பதற்கு ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமை வாங்கித் தந்த முயற்சியைத் தொடங்கி வைத்து அதற்காகப் போராடியவர் இவர். அது குறித்த உச்சநீதி மன்ற ஆணை வெளிவந்தபின் இவ்வாண்டு மார்ச் 7 அன்று இந்தியாவிலேயே மிக உயரமான கொடிக்கம்பத்தில் (207 அடி உயரம்) இருந்து மிகப் பெரிய இந்தியக் கொடியை (60 அடி அகலம், 90 அடி நீளம், 35 கிலோ எடை உள்ளது) பறக்கவிட்ட பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது.
 4. மக்கள் தொகையை நிலை நிறுத்துதல், மக்கள் நலம் மற்றும் கல்வி, பெண்கள் விடுதலை, சூழல் காப்பு ஆகியவற்றில் இவர் ஆர்வம் உடையவர் என்றும் கூறப்படுகிறது. என்னே இவருடைய நாட்டுப் பற்றும் சூழல் பற்றும்!
அருஞ்சொற்கள்
 • மெட்ரிக் டன் 1000 கிலோ
 • அகவை 'வயது' என்பதன் தமிழ் வடிவம்
 • அரியானா haryana
 • உபரி 'லாபம்' என்பதன் தமிழ் வடிவம்
 • உரிமம் license
 • ஒடிசா odisha
 • ஓக்லா okhla
 • குருச்சேத்திரா kurukshetra
 • கோல் இந்தியா வரை. coal india limited
 • கோல்ட்மேன் சூழல் விருது the goldman environmental prize
 • சத்தீச்கட் chhattisgarh
 • சப்பான் japan
 • சிந்தால் எஃகு மற்றும் ஆற்றல் வரை. jindal steel and power limited
 • சிந்தால் நிறுவனக் குழுமம் jindal group of companies
 • சூழல் மற்றும் கான்வளத் துறை அமைச்சகம் ministry of environment and forests
 • செயக்கிருச்ணன் p v jayakrishnan
 • ஞானேச்வரன் s. gnaneswaran
 • டல்லச் dallas
 • டாக்சிக்ச் வாட்ச் அலையன்ச் toxics watch alliance
 • டெக்சாச் texas
 • தமிழ்நாடு இரும்புத் தாதுச் சுரங்க நிறுவனம் (தஇதாசுநி) tamil nadu iron ore mining company (timco)
 • தாகுரானி இரும்புத் தாதுச் சுரங்கம் thakurani iron ore mines
 • தாசரி நாராயண ராவ் dasari narayana rao
 • நடுவண் அதிகாரம்பெற்ற ஆணையம் central empowered committee
 • நவீன் சிந்தால் naveen jindal
 • நவீன் சிந்தால் மேலாண்மைக் கல்லூரி the naveen jindal school of management
 • முன்னீடு proposal
 • ரமேச் அகர்வால் ramesh agarwal
 • ராம்சந்தி ramchandi coal block
 • ராய்கட் raigarh -
மேற்கோள்கள்
 • http://www.vinavu.com/2014/04/29/vivimu-opposes-jindal-project-in-thiruvannamalai/
 • https://en.wikipedia.org/wiki/Jindal_Steel_and_Power
 • http://www.dnaindia.com/india/report-green-nobel-winner-ramesh-agrawal-awaits-unravelling-of-plot-to-kill-him-in-chhattisgarh-in-2012-1983875
 • http://www.business-standard.com/article/companies/govt-cancels-coal-blocks-of-18-companies-114021701444_1.html
 • http://www.toxicswatch.org/2013/06/okhlas-eco-sensitive-zone-violated-by.html
 • http://archive.indianexpress.com/news/cec-gets-sc-order-to-look-into-jindal-steel-and-power-violations/1218162/ Financial Express, 2014 சனவரி. 14
 • http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/iron-ore-with-47-iron-content-available-in-tiruvannamalai-hills/article1304841.ece (2008 சூலை 22)
 • http://www.thehindubusinessline.in/2008/04/17/stories/2008041751760200.htm
 • http://mobiletoi.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=8§id=edid=&edlabel=TOICH&mydateHid=28-11-2009&pubname=Times+of+India+-+Chennai&edname=&articleid=Ar00802&publabel=TOI (2011 நவ. 28)
 • http://sanhati.com/articles/1065/
 • http://indiatogether.org/recommend?rt=Article&rid=2110 (2009 அக். 21)
 • http://www.livemint.com/Companies/CCwdE7MUnDCb761mbB9rYO/SC-panel-rejects-TNJindal-mining-project.html? (2009 ஆக. 18)
 • http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/timco-reapplies-for-mining-licence/article5666655.ece (2014 பிப். 08)
 • http://www.thehindubusinessline.com/news/jindals-quest-for-iron-ore-in-tn-enters-the-final-phase/article5735945.ece (2014 பிப். 28)
 • http://www.tehelka.com/cbi-books-congress-mp-ex-mos-coal-in-fresh-fir-in-coal-scam/
 • http://economictimes.indiatimes.com/industry/indl-goods/svs/metals-mining/coal-scam-ed-files-money-laundering-case-against-ex-mos-rao-naveen-jindal/articleshow/34694393.cms
 • http://www.thehindu.com/business/management-school-in-us-named-after-naveen-jindal/article2521066.ece
 • https://www.utdallas.edu/news/2011/10/7-13181_Hasan-Pirkul-Dean-of-the-Naveen-Jindal-School-of-M_article-wide.html
 • http://news.oneindia.in/2008/06/10/indian-mp-makes-appeal-at-un-on-climate-environment-1213168190.html
 • https://en.wikipedia.org/wiki/Naveen_Jindal
 • http://www.facebook.com/sharer.php?u=http://archivev.asianage.com/delhi/jindal-hoists-india-s-largest-tricolour-cp-456
 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org