தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா


சென்ற கட்டுரையில் நவீன பொருளாதாரக் கொள்கைகளில் உள்ள தவறுகளைப் பார்த்தோம். மையப் பொருளாதாரம், மெய்வருத்தாக் கூலி, இயந்திர உற்பத்தி, பெரு நிறுவனங்கள் வலுப்படுதல், ஆற்றல் பற்றாக்குறை, ஊடக வலு ஆகியவை இத்திட்ட வரைவின் அடையாளங்கள். தனி மனித அந்நியத் தன்மை, உடல் , மன நலக்கேடுகள், உறவுகள் சிதறல் , குற்றங்கள் பெருகுதல், இயற்கை வளங்கள் அழிதல், கடன் பெருகுதல், எங்கும் எதிலும் ஒரு வியாபார நோக்கு ஆகியவை இதன் விளைவுகள். இப்போது நம் நாட்டு மக்களைப் பார்த்தால், ஐ.நா சபையின் அங்கமான UNDP வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 29.8% மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அடிப்படைத் தேவைகளுக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதே நேரம், கடைநிலைச் சம்பளத்திற்கும் (கீழ் 10%), மேல்நிலைச் சம்பளத்திற்கும் (மேல் 10%) உள்ள வருமான வேற்றுமை கடந்த 20 ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆகி விட்டது. (6 லிருந்து 12 மடங்கு ஆகி விட்டது). எனவே இந்த தாராள மயமாக்கல் உற்பத்தியைப் பெருக்குவதை விட, ஏழைகளின் உற்பத்தியைத்தான் அதிகமாகப் பெருக்கிக் கொண்டிருக்கிறது.

இவற்றைச் சரி செய்து, ஒரு தெளிவான, நிலைத்தன்மை உடைய பொருளாதாரக் கொள்கை வரைவது எப்படி, அதற்குத் தடையாய் உள்ளவை என்ன‌ என்று இக்கட்டுரையில் காண்போம். அதற்கு முன், நாம் கேட்க வேண்டிய கேள்வி: ” இப் புதிய பொருளாதாரக் கொள்கையின் இலக்குகள் என்ன? எதை அடைந்தால் இது வெற்றி என்று கூறுவோம்?” . இது சற்றுக் கடினமான கேள்வி. முதலில் எல்லோருக்கும் அடிப்படைத் தேவைகள் கிட்ட வேண்டும். “வயிற்றுக்குச் சோறிட வேண்டும் , இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்” என்று நம் முண்டாசுக் கவிஞன் சொன்னது போல் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். இது ஒரு சோசலிச/பொதுவுடைமை நோக்கு. ஆனால் பொதுவுடைமை என்பது உலகெங்கிலும் தோற்றுக் கொண்டிருக்கிறது. தனியுடைமைதான் வென்று கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டில், தனியுடைமை கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. எனவே அடிப்படைத் தேவைகள் பெற ஒரு சாரார் போராடிக் கொண்டிருக்கையில், கீழ் நடுத்தர‌ மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் , மேல் மக்களாகவும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் இப் பொருளாதாரக் கொள்கை வாய்ப்பு அளிக்க வேண்டும். சைக்கிள் வைத்திருப்போன், பைக் வாங்கவும், அது உள்ளவர் கார் வாங்கவும் ஆசைப்படக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

உள்ளடக்கிய வளர்ச்சியை (inclusive growth) விரும்பும் நம் திட்ட வரைவு, முதலில் எளியோர்களுக்கு உதவுவதாகவும், பின்னர் நடுத்தர‌ மக்களுக்கு உதவுவதாகவும் அதன் பின்னரே பணக்காரர்களுக்குச் சாதகமாகவும் இருக்க வேண்டும். எனவே அடிப்படைத் தேவைகளான உணவு, குடிநீர், உடை, இருப்பிடம் ஆகிய அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும்படிச் செய்தல் வேண்டும். அதன் பின்னர் மின்சாரம், சாலை வசதி, கல்வி, மருத்துவம்; அதன் பின்னரே மோட்டார் வாகனங்கள், அலைபேசி போன்ற வசதிகள். இவற்றை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம். ஏழைகள் கிராமங்களிலேயே அதிகம் இருப்பதால், நம் பொருளாதாரக் கொள்கை கிராமங்களை வலிமையானதாய் மாற்றுமாறு அமையெ வேண்டும். கிராமங்களில் சிறுதொழில்கள் பெருகி வேலை வாய்ப்பு உருவானால், கிராமத்து இளைஞர்களை கிராமத்திலேயே இருத்துவது மட்டுமன்றி, நகரத்து இளைஞர்களும் கிராமத்தில் வேலை வாய்ப்புத் தேடி வரும்படி செய்யலாம். இதனால் வீங்கும் நகரங்கள் சற்றுக் குறைந்து, வசிப்பிடம், சுகாதாரம், குடிநீர், காற்று போன்ற நகரத்துப் பிரச்சினைகள் குறையும். இதைக்கருத்தில் கொண்டு நம் பொருளாதாரக் கொள்கை இருக்க வேண்டும்.

அடிப்படைத் தேவைகள்

உணவு

உணவு மிக அடிப்படையான தேவை. இன்று வளர்ந்த நாடுகளில், உணவு என்பது பெருநிறுவனங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப் படுகிறது. பையில் அடைக்கப்பட்டு வீட்டின் குளிர்பதனப் பெட்டியை எட்டும் வரை ஒவ்வொரு உணவும் பயணிக்கும் தூரம் மலைக்க வைக்கக் கூடியது. நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்காய் அதில் செலுத்தப்படும் நஞ்சுகளும் மிகக் கொடியவையே. எனவே, உணவில் நாம் மிகவும் முக்கியமான‌ மாற்றம் ஒன்றைப் பரிந்துரை செய்கிறோம். உணவு புதியதாகவும், அண்மையில் உற்பத்தி ஆவதாகவும், அதிகம் பயணிக்காததாகவும், பாதுகாப்பான‌தாகவும் இருப்பது முக்கியம். இதற்கு வழியாக‌, உணவுப் பயண‌ வரி என்ற ஒன்றை அரசாங்கம் இட வேண்டும். 100 கிலோ மீட்டருக்குள் பயணம் செய்த உணவுக்கு ஏதும் வரி இல்லை. அதற்கு மேல் உணவு பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் மின்சாரக் கட்டணம் போல் வரி கூடிக் கொண்டே போக வேண்டும். உதாரணமாக - 1 முதல் 100 கி.மீ = 0%. 100 முதல் 200 கி.மீ = 5%. 200 முதல் 500 கி.மீ = 10%. 500 கி.மீக்கு மேல் = 25%. வெளிநாட்டு இறக்குமதி உணவு = 100% !

இவ்வாறு செய்தால், பெரும் உணவுத் தொழிற்சாலைகள் கட்டுப்படி ஆகாமல், சிறு , அண்மைத் தொழிற்சாலைகளாக மாறி விடும். உணவு இறக்குமதி என்பது மிகுந்த விலையுள்ளதாய் மாறி உள்ளூர் உணவு கைக்கெட்டியதாய் மாறும். உதாரணமாக, உள்ளூரில் அரிசி ஆலை இருந்தால், 15 ரூபாய்க்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 25 ரூபாய்க்குத் தரமான அரிசி கிடைக்கும். இப்போது 12 ரூபாய்க்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 40 ரூபாய்க்கு மேல் அரிசி விற்கிறது.

வேளாண்மை

இயற்கை வேளாண்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப் பட வேண்டும். எல்லா மானியங்களையும் முற்றிலும் ஒழித்து விட வேண்டும். இன்று நாட்டில் வீணாக்கப்படும் 1 லட்சம் கோடி ரூபாய் உர மானியமானது, இறுதியில் 12 பெரும் செல்வந்தர்களை மட்டுமே சென்று சேர்கிறது என்று ஒரு ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது. எனவே மானியம் என்பது கொழுத்தவர்களை மேலும் கொழுக்க வைக்கும் கண்கட்டு வித்தையே. விதை என்பது பொதுச் சொத்தாக வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உழவர் சேவை மையங்கள் அவ்வக் கிராம இளைஞர்களைக் கொண்டு உருவாக்கப் பட வேண்டும். அவற்றில், இயற்கை உரங்கள், தொழில்நுட்பம், மூலிகைப் பூச்சி விரட்டிகள், விதைகள் அனைத்தும் இருக்க வேண்டும்.

உணவுப் பொருட்கள் விளைப்பதற்கு மட்டுமே இலவச மின்சாரம் தரப்பட வேண்டும். வாழை, கரும்பு, மஞ்சள் போன்ற பணப் பயிர்கள் விளைப்பவர்களுக்கு (மீன் குட்டைக்கு விதிப்பது போலவே) மின்கட்டணம் விதிக்கப் பட வேண்டும். ஒவ்வொரு கிராமமும் தன் நில அளவில் 30 விழுக்காடு பரப்பை, மரங்கள் மற்றும் ஏரி போன்ற நீர் சேகரிப்பு அமைப்புக்களுக்காய் ஒதுக்க வேண்டும். 10 விழுக்காடு கால்நடை மேய்ச்சலுக்காய் ஒதுக்க வேண்டும்.

உடை

இது இப்போது நம்நாட்டில் பெரிய பிரச்சினை என்று சொல்லும் அளவில் இல்லை. ஒரு ஆண்-பெண் இருவரும் சேர்ந்து தினக் கூலியில் ரூ.600 ஈட்டலாம். 6-10 உடைகள் வாங்க 10 நாள் வேலை செய்தால் போதுமானது. எனினும், கைத்தறி, கதர் போன்ற கிராமப் புறத் தொழில்கள் வளரும் அளவு நாம் பிற உடைகளுக்கு வரி விதிக்க வேண்டும். இங்கும் இறக்குமதி செய்யும் உடைகள் கடுமையான வரிக்கு உட்படுத்தப் பட வேண்டும்.

குடிநீர்

இப்போது பெரும்பாலான கிராமங்களில் இது பெரும் பிரச்சினையே. இதற்கு அரசு நிலத்தடி நீரைப் பெரும் தொட்டிகளுக்கு ஏற்றி அங்கிருந்து குழாய் மூலம் விநியோகம் செய்கிறது. ஆஸ்திரேலியாவில் செய்வது போல், மழைநீரைப் பெரும் அணைகளில் சேகரித்து அவற்றை விநியோகம் செய்தால் பெருமளவு குடிநீர்த் தேவையை நிறைவு செய்யலாம். சராசரி வருட மழைநீர் 1000 மி.மீக்கு மேல் பெற்றிருக்கும் நாம் நீர் நிர்வாகம் செய்வதில்தான் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். இது பற்றிச் சரியான ஆய்வும் அதற்கு நேர்மையான , சேவை உள்ளம் கொண்ட நிபுணர் குழுவும் தேவை. நிலத்தடி நீரை மாசுபடுத்தும், வீணாக்கும் பெரும் தொழிற்சாலைகளை அறவே ஒதுக்க வேண்டும்.

இருப்பிடம்

இது ஒரு மிக முக்கியமான தேவை. ஆனால் கிராமங்களில் பெரும்பாலான மக்கள் அழகிய மண்வீடுகளில் மிகச் சுத்தமாக வசித்து வருகிறார்கள். திறந்த வெளியில் மலம் கழிப்பதைக் கண்டு நகரத்துள்ளோர் முகம் சுழித்தாலும், ஒவ்வொரு கிராமத்திலும் அக்கழிவிடங்கள் ஊரின் வெளியில் உள்ளன. அர‌சு, குடிசை மாற்று வாரியம் என்பதைக் கை விட்டுவிட்டு அனைத்து வீடுகளையும் “குடிசைகளாக மாற்றும் வாரியம்” ஒன்றை அமைத்தால் நம் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற, ஆற்றல் தேவை குறைந்த வீடுகள் உருவாக்கலாம். ஊடகங்கள் மூலம் சிமென்ட் வீடுகளே சிறந்தது என்று மக்களை மூளைச் சலவை செய்யாமல், மண், கீற்று, ஓடு போன்ற தொழில்நுட்பங்களில் ஆழ்ந்த ஆராய்ச்சிகள் செய்து, கச்சா வீடுகளுக்கும், கான்கிரீட் வீடுகளுக்கும் இடைப்பட்ட தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்து நடைமுறைப் படுத்த‌ வேண்டும். கழிப்பிடங்களுக்கு காந்தி ஆய்வு செய்தது போல் வார்தா முறை மக்குக் கழிப்பிடங்கள் (composting toilets) பற்றி ஆராய வேண்டும் .

நகரத்து ஏழைகள்

சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏராளமான மக்கள் குடிசைகளிலும், பிளாட்பாரங்களிலும் வசிக்கிறார்கள். கிராமங்களை விட நகரங்களில் ஏழ்மை அதிகமாக உள்ளது. இதை ஒரு திட்ட வரைவால் சரி செய்ய இயலாது. நகர‌த்தில் உள்ளவர்களுக்கு கிராமங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதே ஒரு நல்ல , நீண்டகாலத் திட்டமாகும். 'கெடு முன் கிராமம் சேர்' என்பது தாளாண்மையின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. காந்திஜியின் கிராம சுயராச்சியம் நோக்கியே நம் திட்ட வரைவு இருக்க வேண்டும். தன்னிறைவான கிராமங்கள் உள்ள நாட்டில், நகரங்களுக்கு அதிகம் வேலையில்லை என்பதே கசப்பான உண்மை!

இரண்டாம் கட்டத் தேவைகள்

அடிப்படைத் தேவைகள் நிறைவடைந்தபின் நம் அடுத்த கட்டத் தேவைகள் கவனிக்கப் பட வேண்டும். இதில் சாலை வசதிகள், போக்குவரத்து, மின்சாரம் ஆகியவை அடங்கும். அதன் பின்னர் கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் வரும். அதன் பின்னர் பொழுதுபோக்கு. எல்லாவற்றிற்கும் மேலாக வேலைவாய்ப்பு இன்றியமையாதது. இதைக் கடைசியில் பார்ப்போம்.

சாலை மற்றும் போக்குவரத்து

இதில் தமிழகம் பல மாநிலங்களைக் காட்டிலும் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாகப் பேருந்து சேவையில் தமிழ்நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதில் புதிதாய்ச்செய்வதற்கு ஒன்றுமில்லை. சாலைக் கட்டுமானப் பணிகளில் உள்ள ஊழலைக் குறைத்தால் மட்டும் போதும். பேருந்துக்களை அதிகரித்தும், நவீனமாக்கியும் பொதுப் போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும். பேருந்து நிலையங்களைச் சுத்தம்செய்து அங்குள்ள கட்டணக் கழிப்பிடங்களை சீராய் நிர்வகிக்க வேண்டும்.

மின்சாரம்

ஆற்றல் என்பது தற்போது அடிப்படைத் தேவை ஆகி விட்டது. முன்னர் நம் தாளாண்மையில் அரசு அவர்கள் “அணு உலைக்கு மாற்று நம்மிடம் உள்ளது” என்றொரு சிறப்புக் கட்டுரை எழுதினார். மிருக மற்றும் தாவரக் கழிவுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதையும், காற்றாலைகள் மற்றும் சூரியக்கதிர் மூலம் மின்சாரம் தயாரிப்பதையும் நாம் தீவிரமாய் ஆராயந்து செயல் படுத்த வேண்டும். அணு மற்றும் அனல் மின்நிலையங்களைப் படிப்படியாகக் குறைத்து விட வேண்டும். ஆற்றல் தேவை குறைவாய் உள்ள சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கல்வி

இது ஒரு ஆழ்ந்த தேவை. சரியான கல்வி முறை என்பது எல்லோரையும் வேலைகளுக்குத் தயார் செய்யும். ஆனால் இப்போது யாருமே வேலைக் கல்வி கற்பதில்லை. ஐ.டி.ஐ, தச்சு, தையல் போன்ற வேலைக் கல்விகளுக்கு வாய்ப்பும் இப்போது சரியாக இல்லை. எல்லோருமே பொறியியல் படித்து எல்லோருமே மென்பொறியாளர் ஆகி எல்லோருமே அமெரிக்கா சென்று விடுவதாகத்தான் நாம், ஆட்டு மந்தை போல் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். வருடம் 1.5 முதல் 2 லட்சம் பொறியியலாளர்களைத் தமிழகம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது . ஆனால் அதில் 10% பேருக்குக் கூட வேலை கிடைப்பதில்லை. நம் கல்வி முறை அடியோடு சீர்திருத்தப் பட வேண்டியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதைச் சீர் திருத்துவது எப்படி என்பதில்தான் எல்லோருக்கும் குழப்பம். குமரப்பா சொன்னது போல் இப்போது கிராம மலர்ச்சிக்கு உடனடித் தேவை கிராமத்தில் சிறுதொழில் முனைவோர்தான். சிறுதொழிலுக்கான இடைப்பட்ட தொழில்நுட்பங்களும் (intermediate technology), நடைமுறைப்படுத்தப் படக் கூடிய மேலாண்மைக் (management) கல்விகளும் இப்போது அவசரத் தேவை.

இவை வாயில் நுழையாத ஆங்கிலப் பெயர்களுடன் பயில்வதை விட, எளிய தமிழில் (அவ்வம் மாவட்டத் தாய்மொழியில்), கலைச் சொற்கள் அகராதிகளுடன் கிராமங்களிலேயே சொல்லித் தரப் பட வேண்டும். நிதி நிர்வாகம், இடர் நிர்வாகம், கணக்கு எழுதுதல், சந்தைப்படுத்துதல், பொருளியல், வாணிபம் போன்ற அங்கங்களில் நடைமுறைக்குத் தேவைப்படும் அறிவை ஒரு நடைமுறைக் கல்வியாக நடத்த வேண்டும். மிகவும் சூட்டிகையாக இருக்கும் மாணவர்களுக்குத் தேவையான நிதி உதவியை அரசின் வங்கிகள் கடனாக அளிக்க வேண்டும். அரசில் உள்ள திறமையான அதிகாரிகள் இவ்விளைஞர்களை வழி நடத்தும் பொறுப்பைப் பகுதி நேரப் பணியாக‌ ஏற்க வேண்டும். ஒரு திறமையான இளைஞனை உருவாக்கினால், அவன் ஒரு சிறு தொழில் அதிபர் ஆனால், கிராமத்தில் 100 வேலைகளை அவன் உருவாக்குவான். அடுத்த ஐந்தாண்டில் 30 கோடி வேலைகளை உருவாக்கும் பொறுப்புள்ள அரசாங்கம் அந்நிய முதலீட்டுக் காத்திருந்தால் அதோகதிதான். இன்று இந்தியாவில் உள்ள 4 லட்சம் கிராமங்களிலும் கிராமத்திற்கு ஒன்றிரண்டு இளைஞர்கள் வீதம் அடையாளம் கண்டு அவர்களைத் தொழில்முனைவோராக்குவதுதான் மிக எளிமையான , சாத்தியமான திட்டம்.

இந்தியாவில் உள்ள விளைநிலங்களை, இயற்கை வளங்களை எப்படிக் காப்பது, அவற்றுடன் இயந்த வளர்ச்சியை எப்படி இடைப்பட்ட தொழில்நுட்பம் மூலம் செயலாக்குவது, இதற்குத் தேவையான நிதி, காலம் மற்றும் மனித வளம் நம்மிடம் உள்ளதா என்பதை வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org