தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

மரங்கொத்தி

மரங்கொத்தியில் பலவகைகள் உண்டு. அதில் நாம் அன்றாடம் காணக் கூடிய பறவை இதுவே. இதன் கீ.. கீ.. என்று கரையும் குரலை வைத்து இதனை எளிதில் அடையாளம் கொள்ளலாம். மரத்தில் அழகாய்ச் சாய்ந்த வாட்டில் ஒயிலாய் இவை பூச்சிகளை வேட்டையாடும். கழுத்தைத் திருப்பி அங்கும் இங்கும் இவை பார்ப்பது கண்ணுக்குப் பெரும் விருந்து.

தோற்றம்:

மைனா அளவில் (28 முதல் 30 செ.மீ வரை) இருக்கும். ஆண்களுக்குச் சிகப்புக் கொண்டையும், பெண்களுக்கு அதில் கருப்புக் கோடுகளும் இருக்கும். கழுத்தின் அடியில் வெள்ளை நிறத்தில் கட்டம், கட்டமாக இருக்கும். முதுகில் அரக்கும்,சிகப்பும், மஞ்சளும் கலந்த ஒரு மின்னும் வண்ணம் தெரியும் மிக அழகிய பறவை இது. மூக்கு ஊசி முனையைப் போல் கூர்மையாக இருக்கும்

காணும் இடம்

இந்தியாவைத் தவிர, சுமத்திரா, சாவா, பாலி, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இவற்றைக் காணலாம். சிறிய காடுகளில், புதர்களில், வயல் வெளிகளில் உள்ள மரங்களில் தென்படும். தென்னை. தேக்கு, வாழை, பலா, கொய்யயா, நெல்லி போன்ற மரப் பட்டைகளை உரித்துப் பூச்சிகளை உண்ணும்.

உணவு

எறும்பு, கரையான், புழுப் பூச்சிகள், சிறிய தேள், பூரான், கரப்பான் பூச்சிகள் போன்றவற்றை உண்ணும். சிலசமயம் பழங்களையும் கொத்தி உண்ணும்.

இனப்பெருக்கம்

மர வங்குகளில்தான் கூட்டை அமைக்கும். தானாகக் கொத்திக்கொத்தி வங்கு அமைக்கும். பட்டுப் போன பனை தென்னை மரங்களில் கூடு அமைக்க விரும்பும். இது மரத்தின் தண்டுகளில் பொந்து அமைக்கப் பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும்.

2 முதல் 5 முட்டைகள் இடும். முட்டைகள் தூய வெண் நிறத்தில் இருக்கும்; இது இருட்டான கூட்டிற்குள் முட்டைகளைக் காண எளிதாக்கும். 11 முதல் 14 நாட்கள் அடை காக்கும். 18 முதல் 30 நாட்களில் கூட்டைவிட்டுக் குஞ்சுகள் பறந்து விடும். இனப்பெருக்க காலம் தை முதல் வைகாசி வரை.

சிறப்புச் செய்திகள்

கூடு கட்டும் காலத்தில் மரங்களைத் துளையிட சுத்தியலால் தட்டுவது போல் தொடர்ந்து தட்டும். இதனால் ஏற்படும் அதிர்வுகளைச் சமாளிக்க இதன் மூளை சற்றுச் சிறியதாகவும், மண்டை ஓடு கடினமான எலும்பு உடையதாகவும் அமைந்துள்ளது!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org