மாடல்ல மற்றையவை
தொற்று வியாதிகள்
இந்த மாதம் தொற்று வியாதிகள் பற்றி தெரிந்து கொள்ளலாமா! தொற்று வியாதிகள் சுத்தமான, சிறந்த பராமரிப்பும், கவனிப்பும் உள்ள கொட்டகையை “பெரும்பாலும்” அண்டுவதில்லை. ஆனால், ஆரோக்கியமான, எதிர்ப்பு சக்தி நிறைந்த பசுக்களை தொற்று வியாதிகள் “எப்போதும்” பீடிப்பதேயில்லை. இயற்கைச் சூழலில், இயன்றவரை இயற்கை உணவை உண்டு வாழும் நாட்டு பசுக்களுக்கு தடுப்பு ஊசி போன்ற பராமரிப்பு ஏதும் இன்றியே தொற்று நோய்கள் வராமல் இருப்பதை நானும் பார்த்திருக்கிறேன். பிறர் சொல்லியும் கேட்டிருக்கிறேன். இருந்தாலும், உங்கள் பண்ணையில் உள்ள பசுக்களுக்கு தொற்று வியாதிகள் வந்து விட்டால் என்ன செய்வது? முதலில் தொற்றும் நோய் கண்ட மாட்டை அல்லது மாடுகளை தனியாக பிரித்து (முடிந்தவரை மற்ற மாடுகள் உள்ள தொழுவத்திற்கு வெளியே) கட்டவும். பல சமயம் கிருமிகள் கோமியத்தின் முலமும் சாணியின் மூலமும் கூட பரவ வாய்ப்புள்ளது. எனவே, அவசியமானால் நோய் கண்ட மாடுகளின் சாணம், கோமியம் ஆகியவற்றை குழி தோண்டி புதைத்து விடவும். மேய்க்க அனுப்பும் போதும் அவற்றை தனியாகவே கட்டவும். தண்ணீர் மற்றும் தீவனம் அளிப்பதும் அப்படியே. சில தொற்று வியாதிகள் வேகமாக பரவக் கூடியவை, சில மெதுவாக பரவக் கூடியவை. எப்படி இருந்தாலும் தொற்று நோய்களுக்கு சரியான சிகிச்சை, உரிய நேரத்தில் அளிக்காவிட்டால் மாடுகள் இறக்கும் வாய்ப்பு அதிகம். மேலும், உங்கள் பண்ணையில் உள்ள மற்ற மாடுகளையும் அது பாதித்து பெரும் சேதம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தவறி வியாதி கண்ட மாடு இறந்து விட்டால் அந்த மாட்டின் வாய், மூக்கு, காது, ஆசன வாய் போன்றவற்றை கிருமி நாசினி வைத்து பஞ்சால் அடைத்து பிறகு வெகு தொலைவில் எடுத்துச் சென்று புதைக்கவும். வண்டியில் கொண்டு சென்றால் வண்டி மற்றும் அந்த மாட்டை கட்டியிருந்த இடம் ஆகியவற்றையும் சுத்தமாக கிருமி நாசினி கொண்டு கழுவி விடவும்.
ஒரு விஷயத்தை நினைவு படுத்திக் கொள்ளவும். தொற்று வியாதிகள் பெரும்பாலான நேரங்களில் கட்டுத்தறியிலேயே கட்டி உள்ள மாடுகளையே அதிகம் பாதிக்கும். வெளியில் சென்று நல்ல புற்களை மேய்ந்து வரும், உடற்பயிற்சி உள்ள மாடுகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.
சரி, சில வியாதிகளையும் அவற்றை எவ்வாறு கையாள்வது, தடுப்பது மற்றும் சரி செய்வது என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வோமா?
1. பால் காய்ச்சல்:
முதலில் இது கிருமிகளால் ஏற்படும் ஒரு தொற்று வியாதி அல்ல. இப்போது பால் காய்ச்சல் வரும் விகிதம் அதிகமாகி வருவது, நாம் மாடுகளுக்கு அதிக பாலுக்காக, அதிக புரதம் உள்ள உணவு அளிப்பதும், அதிக பால் கறவையை விரும்புவதுமே காரணம். எனவே தான் இதனை பால் காய்ச்சல் என்று அழைக்கின்றனர் போலும்! இந்த பெயரில் மற்றொரு மறை பொருளும் உள்ளது. இந்த நோய் வந்த மாடுகளுக்கு காய்ச்சல் இருப்பதில்லை. எனினும் இதை ஏன் காய்ச்சல் என்று அழைக்கிறோம். இந்த, “பால் அதிகம் வேண்டும்” என்ற காய்ச்சல் மனிதர்களுக்கு தான் ஏற்படுகிறது. அதுவும், ‘என் மாடு இவ்வளவு கறந்தது!’ என்று பெருமை பேசுவதை கேட்டு பொறாமைப்படும் மனிதர்கள் மூலம் இது ஒரு தொற்று வியாதியும் கூட!! பால் காய்ச்சல், குறைவாக கறக்கும் மாடுகளை பாதிப்பதேயில்லை. ஜெர்சி மற்றும் கலப்பின பசுக்களை அதிகம் தாக்குகிறது. உடல் எடை அதிகம் உள்ள மாடுகளுக்கும் பால் காய்ச்சல் வர வாய்ப்பு அதிகம். அதற்கு முக்கிய காரணம் அவற்றின் அதிக பால் உற்பத்தியால் உடலில் உள்ள கால்சியம், ஹார்மோன்கள் ஆகியவை பாதிப்பு ஏற்படுத்தும் அளவில் வெளியேறுவதே.
சரி… பால் காய்ச்சல் பொதுவாக கன்று ஈனப்போகும் தறுவாயில் உள்ள மாடுகளையோ அல்லது புதிதாக கன்று ஈன்ற மாடுகளையோ தான் அதிகம் தாக்குகிறது. மூன்றாவது கன்று ஈனும் போதிலிருந்து, அதிக பால் கறக்கும் மாடுகளுக்கு, பால் காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. இந்த காய்ச்சல் வந்த மாடுகள் ஆரம்பத்தில் முன்னங்கால்களில் ஒன்றை ஒன்று, மாற்றி மாற்றி நிற்க ஆரம்பிக்கும். பிறகு நிற்க இயலாமல் உட்கார்ந்து விடும். மாட்டின் உடல் சூடு குறைந்து காணப்படும். காதுகளை தொட்டு பார்த்தால் சில்லென்று இருக்கும். இதனுடன் சேர்த்து அஜீரணமும் காணப்படும். மாடு நாக்கை வெளியில் தொங்க போடும். முதலில் உட்கார்ந்த மாடு மெதுவாக தலையை பின் புறமாக முதுகை பார்த்து சாய்க்கும். பின்னர் தலையை தரையிலேயே சாய்த்து விடும். அதன் பிறகும் நாம் கவனிக்காமல் விட்டால் மாடுகள் இறந்தே விடும்.
பால் காய்ச்சல் வராமல் தடுக்க முதலில், அதிகம் பால் வேண்டும் என்ற ஆசையிலிருந்து நாம் வெளி வர வேண்டும். கன்று ஈனப்போவதற்கு ஒரு வாரம் முன்பே அதிக புரதம் உள்ள உணவை அதாவது பால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவை குறைக்கவும். அதிக கால்சியம் உள்ள உணவையும் குறைக்கவும். உடலால் உறிஞ்சிக்கொள்ள இயலாத அளவு கால்சியம் உணவில் இருந்தால், அது உடலில் உள்ள மற்ற கால்சியத்தையும் சேர்த்துக் கொண்டு வெளியேறி விடும். மாடுகளுக்கு தாது உப்புக்கள் அதிகம் உள்ள புற்களையும் எளிதில் செரிக்கக் கூடிய வைக்கோலையும் அதிகம் அளிக்கவும்.
பால் காய்ச்சல் வந்து விட்டால் என்ன செய்வது? மாடுகள் நிற்க இயலாமல் உட்கார்ந்து விட்டால் அதன் பின்னால் நிறைய வைக்கோலை போட்டு அமர்ந்த நிலையிலேயே இருக்கச் செய்யவும். பக்கவாட்டில் படுக்க விட வேண்டாம். வெல்லம் மற்றும் உப்பை தண்ணீரில் கரைத்து அருந்தச் செய்யவும். இதன் மூலம் இரத்தத்தில் தாதுக்கள் கலந்து தெம்பு ஏற்படும். ஆனால் சிறிது நேரமாகும். எனவே, மாடு சற்று தெம்புடன் காணப்பட்டால் உடனே எழுப்ப முயற்சிக்க வேண்டாம். அமர்ந்த நிலையிலேயே இருக்கச் செய்து தானாக எழுந்திருக்கும் வரை காத்திருக்கவும். அதுவரை புரதம் இல்லாத உணவை அளிக்கவும். இந்த கரைசல் மூலம் தெம்பு ஏற்படவில்லையானால், மாடு பக்கவாட்டில் படுக்கும் அளவிற்கு மோசமாக இருந்தால் கால்நடை மருத்துவரை அழைக்கவும். அவர் உடனடி வைத்தியமாக பாட்டிலில் கால்சியம் ஏற்றி மாட்டை தேற்றிய பிறகு, பால் உற்பத்தியை அந்த மாட்டிற்கு குறைக்கும் நோக்கில் உணவு அளிக்கவும். அந்த மாட்டின் உடல் கூற்றினால் தாங்க இயலாத அளவிற்கு நாம் பால் உற்பத்தி செய்யும் உணவை வழங்கி வந்துள்ளோம் என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி மேலாண்மை செய்யவும்.
2. வெளி ஒட்டுண்ணிகள்:
ஒட்டுண்ணிகள் என்பது மாட்டின் உடல் மீது அமர்ந்து கொண்டு அதன் இரத்தத்தை உறிஞ்சி உண்டு வாழும் உயிரிகள். மாட்டு ஈ, கொம்பு ஈ, பேன், உண்ணி ஆகியவை நாம் பொதுவாக பார்க்கும் ஒட்டுண்ணிகளாகும்.
இதில் மாட்டு ஈ என்பது வீட்டு ஈக்களைப் போலவே இருக்கும். ஆனால், அதை விட மூன்று அல்லது நான்கு மடங்கு பெரியதாக இருக்கும். இவை பொதுவாக மாடுகளின் கால்களிலும், அடி வயிற்றுப் பகுதியிலும் அமர்ந்து கடித்து இரத்தத்தை உறிஞ்சும். இந்த ஈக்களின் கடி மாட்டிற்கு மிகுந்த வலியை உண்டாக்கும். அதிக அளவில் ஈக்கள் இருந்தால் அதிக இரத்தம் வீணாகும், வலியும் இருக்கும். இதனால், மாடுகளின் இயல்பு நிலை பாதிக்க வாய்ப்பு உண்டு.
கொம்பு ஈ என்பது வீட்டு ஈக்களை விட பாதி அளவு இருக்கும். இவை கூட்டம் கூட்டமாக மாட்டின் முதுகு, திமில் ஆகிய இடங்களில் அமர்ந்து தொடர்ந்து இரத்தத்தை உறிஞ்சும். மாடுகளின் மேல் இவை தொடர்ந்து கடிப்பதனால் ஏற்படும் தொல்லையை சமாளிக்க மாடுகள் தலையாலும், வாலாலும் அடிக்கடி அவற்றை ஓட்டிக் கொண்டிருக்கும். மிக அதிக அளவில் பாதிப்பு இருந்தால் மாடுகளின் மேய்ச்சல் தடைப்பட்டு உணவு உட்கொள்ளும் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. மற்றபடி, சாதாரண ஈ கூட மாட்டின் முகங்களில் கண் பீளை, சளி அகியவற்றின் மீது மேயும். இவை இரத்தம் உறிஞ்சவில்லையானாலும் கூட மற்ற இடங்களிலிருந்து தொற்று வியாதிகளை பரவச் செய்யும்.
எல்லா ஈக்களையுமே மாடுகளை அடிக்கடி குளிப்பாட்டுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். அதிக அளவில் பாதிப்பு இருந்தால், முதலில் சிட்ரொனெல்லா எண்ணெயை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐம்பது மில்லி எண்ணெய் என்ற அளவில் கலந்து மாட்டின் மேல் கைத்தெளிப்பன் மூலம் தெளித்து, பின்னர் ஒரு துணியால் மாட்டின் உரோமம் சாய்ந்திருப்பதற்கு எதிர்புறம் துடைத்து விடலாம். பேன்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று, கடிப்பது மற்றொன்று உறிஞ்சுவது. இவை இரண்டுமே மாடுகளை தாக்குகிறது. இவை தோலில் அரிப்பையும் எரிச்சலையும் உண்டாக்கும். அதிக பேன் தாக்கப்பட்டுள்ள மாடு சரியாக உணவு உட்கொள்ளாது. பேன்களை கட்டுப்படுத்த வேப்பெண்ணெயை தடவி விடலாம். வேப்பிலையை அரைத்தும் பூசலாம்.
உண்ணிகள் மாடுகளின் உடலில் எந்த பாகத்தில் வேண்டுமாலும் இருந்து இரத்தத்தை உறிஞ்சும். இவை, சிறியதாக இருக்கும்போது தாவரங்களின் மேல் இருந்து கொண்டு, மாடுகள் மேயும் போது அதன் உடலில் ஏறிக் கொள்ளும். இவற்றின் மூலம் அதிக இரத்த விரயம் ஏற்படும். மேலும், மற்ற தொற்று கிருமிகளையும் மாட்டின் உடலில் செலுத்தி விடும். அதிக உண்ணிகள் உள்ள இடங்களில் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அதிக அளவில் உண்ணிகள் உடலில் இருந்தால் மாடுகளுக்கு உண்ணிக் காய்ச்சலும் வரக் கூடும். இந்த நோய் கண்ட மாடுகள் தலையை தொங்க போட்டபடி நிற்கும். காய்ச்சல் அதிகமாக இருக்கும். சில மாடுகளுக்கு இரத்தக் கழிச்சலுமிருக்கும். சில மாடுகள் சாணம் போடாமலும் இருக்கும். பின்னங்கால்கள் வலு இழந்ததுபோல் நடுங்கும். கோமியம் கருப்பு, பழுப்பு அல்லது சிகப்பு நிறத்தில் இருக்கும். சரியாக கவனிக்காமல் விட்டால் மாடுகள் விரைவாக இறக்கவும் கூடும்.
மாடு சாணம் போடாதிருந்தால் விளக்கெண்ணெய் ஐம்பது கிராம், ஆளி விதை எண்ணெய் இருபத்தைந்து கிராம் கலந்து உள்ளுக்கு கொடுக்கவும். காய்ச்சல் குறைய எட்டு பல் பூண்டை தண்ணீரில் இட்டு கொடுக்கவும். நிலவேம்பு (சிறியா நங்கை) பொடியை கொடுத்தாலும் காய்ச்சல் குறையும். காய்ச்சல் போன பிறகும் கூட மாடுகள் பல நாட்களுக்கு மெலிந்தே காணப்படும். உடல் தேற சோம்பு, நிலவேம்பு (சிறியா நங்கை), ஏலக்காய், ஓமம் எல்லாம் சம அளவில் தூள் செய்து தீவனத்துடன் கலந்து அளித்து வந்தால் உடல் தேறும்.
உண்ணிக்காய்ச்சல் வந்து விட்டால் குணப்படுத்துவது கடினம். எனவே, வராமல் தடுப்பது முக்கியம். மாடுகளின் மேல் உண்ணிகள் இருக்கின்றனவா என்பதை அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். சிறிய அளவில் இருந்தால் நமது கையாலேயோ அல்லது ஒரு கொக்கியைக் கொண்டோ எடுத்து நசுக்கி விடவும். நாட்டு மாடுகளுக்கு உரோமம் அதிகம் இருக்காது. எனவே, உண்ணிகள் இருக்கின்றனவா என்று கவனிப்பது சுலபம். கலப்பின பசுக்களுக்கு உரோமம் அதிகம் இருப்பதால் உண்ணிகள் இருந்தாலும் அவை இரத்தம் குடித்து பெரிதாகும் வரை கண்ணுக்கு தெரியாது. இந்த உண்ணிகள் நம் மீது ஏறி கடித்து விட்டால் நமக்கும் இடுப்பைச் சுற்றி பொரிப்பொரியாக சிவப்பு தழும்புகள் ஏற்பட்டு அரிப்பும் இருக்கும். உண்ணிகள் அதிகம் இருந்தால் உண்ணிச் செடி என்று அழைக்கப்படுகிற லாண்டானா (Lantana Camara) என்ற செடியின் இலையை பயன்படுத்தலாம். இது பொதுவாக எல்லா பகுதிகளிலும் வேலி போன்று வளர்ந்திருக்கும். செடியில் முள் இருக்கும் என்பதால் இலையை மட்டும் எடுத்து மாட்டுக் கொட்டகையில் மாடு படுக்கும் இடத்தில் பரப்பி விடவும். மாடு இலையை நசுக்கி அதன் மீது படுக்கும் போது வரும் இலையின் வாடைக்கு உண்ணிகள் ஓடி விடும். அப்படியும் உண்ணிகள் குறையவில்லையானால் மாட்டின் மீது இலேசாக வேப்பெண்ணெய் தடவி விடலாம். அதிகம் தடவினால் மாட்டின் உடலில் உள் சூடு அதிகரிக்கும். எனவே, இலேசாக இருக்குமாறு பல முறை தடவி கட்டுப்படுத்தவும். சில நாட்கள் கவனிக்காமல் விட்டு மாட்டின் மீது கணக்கற்ற உண்ணிகளை காண நேர்ந்தால் உடனே சரி செய்ய ஒரு நஞ்சை பயன்படுத்தலாம். பூட்டாக்ஸ் (Butox) என்ற நஞ்சை அதன் குப்பியில் குறித்துள்ள அளவிற்கு தண்ணீர் கலந்து மாட்டின் மீது கைத்தெளிப்பான் மூலன் தெளிக்கவும். உண்ணிகள் உடனே செத்து கீழே விழும். அவற்றை உடனே அப்புறப்படுத்தவும். மேலும், இது ஒரு நஞ்சு என்பதால், முகம், கண் ஆகிய இடங்களில் தெளிக்க வேண்டாம். மாடுகள் உடலில் தெளித்த இடத்தை ஒரு மணி நேரத்திற்காவது நக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
ம்ம்ம்..இந்த மாதம் இரண்டு நோய்களைப்பற்றித்தான் பார்க்க முடிந்தது. இன்னும் தகவல்களுடன் வரும் மாதங்களில் சந்திப்போமா!