தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம் - தமிழில் அமரந்தா


மக்களின் துயர நிலை

கடந்த சில மாதங்களில் நமது நாட்டில் தொலைதூர இடங்களுக்குப் பயணம் செய்து ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்தேன். எல்லா இடங்களிலும் மக்கள் உணவுக்கும் தண்ணீருக்குமான பற்றாக்குறை குறித்தே கவலை தெரிவித்தனர். எங்கு சென்றாலும் இதே துயரக் கதையைத்தான் கேட்க முடிந்தது. உணவுக்கும் தண்ணீருக்கும் தாங்கள் படும் பாட்டைப்பற்றிக் கடந்த சில வருடங்களாகவே மக்கள் கூறி வருகிறார்கள். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவுமே முழுமையான பயனைத் தரவில்லை. இயற்கை நமக்கு அளித்துள்ள வளங்கள் அனைத்தும் வணிகப்பண்டங்களாக மாற்றப்படுவதை நாங்கள் எதிர்த்து வருகிறோம். இன்று தண்ணீர் விற்பனைப் பண்டமாகி விட்டது. பல இடங்களில் மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்குகிறார்கள். இத்தகைய பற்றாக்குறைகளுக்கு இயற்கையில் ஏற்படும் மாற்றங்களைக் காரணமாகக் கூறுகின்றனர். இயற்கையோடு போராடி வெல்லக்கூடிய ஆற்றல் இல்லாத மனிதன் பயனற்றவன். இத்தகைய இயற்கை மாற்றங்கள் அண்மையில் ஏற்பட்டவை அல்ல. நவீன வழிமுறைகள் பின்பற்றப்படும் இக்காலத்தில் கூட ய‌தார்த்த நிலைமைகளைக் கண்டு நாம் திகைத்துப் போகிறோமெனில், இந்த நிலைமையை என்னவென்று சொல்ல?

கடந்த காலத்தில் காடுகளை வளர்த்தும் குளங்களை வெட்டியும் கிணறுகளைத் தோண்டியும் நீர் சேமிக்கப்பட்டது. போதிய மழை பெய்யாத இடங்களுக்கு வாய்க்கால்கள் ­மூலம் நீர் திருப்பிவிடப் பட்டது. காவிரியிலும் கங்கையிலும் நதிக்கரை ஓரங்களில் மக்கள் வாழ்ந்த தொன்மையான பகுதிகளில் நீரை சேமித்து வைக்க பல வழிமுறைகள் கையாளப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. அத்தகைய நீர் சேமிப்பிடங்களில் இன்று சேறும் சகதியும் நிரம்பியுள்ளன. நான் பல கிராமங்களுக்குச் சென்று வந்தேன். அவற்றுள் ஒரு கிராமத்தில் மட்டும் குளம் பெரியதாக இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு குளம் முழுவதிலும் மார்கோஸா மரங்கள் வளர்ந்திருந்தன. போர்க்காலத்தில் நூற்றுக்கணக்கான மார்கோஸா மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. இன்று சேறும் சகதியும் படிந்து குளத்தின் ஆழம் குறைந்துள்ளது. முன்பிருந்ததை விட நான்கு அல்லது ஐந்தடி ஆழம் குறைந்துள்ளது. இயற்கையை மனிதன் சூறையாடிய நூற்றுக்கணக்கான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. இன்று நாம் எதிர்கொள்கின்ற மோசமான நிலை குறித்து ஆச்சரியப்பட ஏதுமில்லை.

போட்டியை அடிப்படையாகக் கொண்ட நவீன பொருளாதார அமைப்பு கட்டாயமாக கிராமங்களில் திணிக்கப்பட்டுள்ளது. அதனால் கிராமங்களில் மக்கள் வாழ்வதற்கு உகந்த சூழலோ, வாய்ப்புகளோ இல்லை. இதனால் கிராமத்தில் தலைவர்களாக உருவாகியிருக்கக்கூடிய பலரும் வசதியான வாழ்க்கையைத் தேடி நகரத்திற்கு ஓடிவிடுகிறார்கள். இதனால் கிராமங்க‌ளில் தலைமைப்பண்புக் குறைவு ஏற்படுகிறது. கிராமத்திலுள்ள மக்களால் ஒன்றுபட்டு கூட்டாக பிரச்சனைகளுக்குத் தீர்வுகான முடியவில்லை. இதுவே இன்று கிராமப்புறங்களில் நிலவும் மோசமான நிலைமைக்குக் காரணம்.

சமூ­கத் திட்டங்களின் கீழ் பணப் பயிர்களுக்கென அதிக நிலம் ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு செய்யாமல் முறையாகத் திட்டமிட்டு உணவுப் பயிர்களை விளைவித்தால் தண்ணீர் பிரச்சனை தீரும். கூடவே பெருமளவு உணவுப் பற்றாக்குறையும் தானாகவே தீர்ந்துவிடும். மழைக் காலத்தில் கிடைக்கும் மொத்த மழைநீரில் 95 விழுக்காடு வீணாக கடலில் கலக்கிறது. எஞ்சியுள்ள மழைநீர் வண்டல் மண் படிந்த ஆழமற்ற குளங்களில் சேர்ந்து குறுகிய காலத்திலேயே ஆவியாகிறது. இந்த மழைநீர் இழப்பு வருந்தத் தக்கது. திட்டமிட்ட காடு வளர்ப்பும், இருக்கின்ற குளங்களை ஆழப்படுத்தி அவற்றில் மழைநீரைச் சேமிப்பதுமே இப்பிரச்சனைக்குத் தீர்வாகும்.

இத்திட்டம் வேலையற்ற நாட்களில் கிராம மக்களுக்குத் தொடர்ச்சியான வேலையைத் தருவதோடு அவர்கள் தமக்குத் தாமே உதவியாக இருக்கவும் பயன்படும். இன்று பஞ்ச நிவாரணத்துக்கென ஒதுக்கப்படும் நிதி தார்ச்சாலைகள் போடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாள் வேலைக்கு ஆண்களுக்கு 12 அணாவும் பெண்களுக்கு 4 அணாவும் பஞ்சப்படியாகத் தரப்படுகிறது. இந்தச் சாலைகள் பெரும்பாலும் வாகன உரிமையாளர்களுக்கே பயன்படுகிறது. சாலைகள் தேவையானால் அவற்றை உருவாக்க முறையான முழுமையான சாலையைத் தரவேண்டும். பஞ்சப்படியாகத் தரக்கூடாது. கிராமத்திற்குப் பயன்படும் வேலைகளுக்கு கூலியைக் குறைத்துக் கொடுப்பதை வேண்டுமானால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். குளங்களை ஆழப்படுத்துதல், கிணறுகள் தோண்டுதல், தூர் வாருதல் போன்ற வேலைகள் கிராமத்திற்குப் பயன்படுபவை. சாலைகளுக்குத் தார் போடுவதை எவ்வகையிலும் நாம் கிராமத்திற்கான வேலையாக ஏற்றுக் கொள்ள முடியாது. நான் பல இடங்களில் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளுக்காக ஞாயமற்ற முறையில் சுரண்டப்படுவதையே பார்க்கிறேன். இத்தகைய சுரண்டலை தாங்கள் வழங்கும் பேருதவியாக கருதுவதுதான் வேதனையானது !

மாவட்ட வாரியங்கள் அரசுத் துறைகளில் எத்தகைய உணர்வுடன் மக்களுக்குப் பணியாற்ற வேண்டுமென்பதை கற்றுக் கொள்ள வேண்டும். இது மட்டுமின்றி இத்தகைய மக்கள் பணிகளில் ஒப்பந்தக்காரர்களுக்கு இடைத்தரகர்கள் செய்கின்ற நிர்வாக முறைகேடுகள் மலிந்துள்ளன. பஞ்சமும் தண்ணீர் பற்றாக்குறையும் அரசு ஊழியர்களின் கொடுங்கோன்மையை அதிகரித்துள்ளன.

குளங்கள் தூர்வாரப்பட்டு எடுக்கப்படும் வண்டல்மண்ணால் தரிசு நிலங்களை நிரப்பி அவற்றை உணவு உற்பத்திக்குப் பயன்படுத்த முடியும். தற்போது ஒவ்வொரு கிராமத்திலுள்ள குளங்களில் ஒரு சில வாரங்களுக்கே கூட நீரைத் தேக்கி வைக்க முடியவில்லை. நாம் விளைநிலங்களாகப் பயன்படுத்தாமல் வீணாக்குகிறோம். நம்மிடம் நீர் சேமிப்பிற்கான நீர்த் தேக்கங்களுமில்லை. உற்பத்தி நிலங்களுமில்லை. இவற்றில் ஏதாவதொன்று கிராமங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதோடு, அது முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட வேண்டியதும் அவசியம். மின் உற்பத்திக்காகப் பெரிய நீர்த் தேக்கங்களைக் கட்டுவதற்குப் பதிலாக, குளங்களைத் தூர்வாரி மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். நீர் இருப்பை அதிகரிக்காமல் வெறுமனே கிணறுகளை ஆழப்படுத்தி மின்சார நீர் இறைப்பான்களைப் பொருத்துவதால் எந்தப் பயனுமில்லை. நான் பார்த்தவரையில் நீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான அரசுத் திட்டங்கள் மோசமாக திட்டமிடப்பட்டு, தொடர்ச்சியற்றும் முறையாக ஒருங்கிணைக்கப்படாமலும் செயல்படுத்தப்படுகின்றன. நீர்ப்பாசனத் துறையும் அதில் பொறுப்பில் உள்ளவர்களும் தமது முக்கியமான கடமையை உணரச் செய்ய வேண்டும். கடமை தவறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான மக்களின் இழப்பிற்கும் அழிவிற்கும் நேரடிக் காரணமாகி விடுவார்கள்.

(கிராம உத்யோக் பத்திரிகா, ஜுலை 1953)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org