தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பாரம்பரிய உணவுத் திருவிழா - நாச்சாள்

நாம் மறந்து போன தமிழர் பாரம்பரியத்தையும் தமிழர் கலாசாரத்தையும் மீட்டெடுத்து, இன்றைய இளைய சமுதாயத்தினரும் அன்றைய மூத்த இளைஞர்களைப் போல் என்றும ஆரோக்கியமாகவும், இளமை, சுறுசுறுப்பு, பக்குவம் என்று தங்களை மேன்மைப் படுத்திக் கொண்டு நம் வாழ்வியலை திரும்பிப் பார்க்க வைக்க இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா அவர்களின் ஆசியுடன் 'பிரபஞ்சம்' என்ற சென்னையை சேர்ந்த தன்னார்வ அமைப்பு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சியில் பல வாழ்வியல் பயிற்சிகளையும் ஆர்வமுள்ள இளைய சமுதாயத்தினருக்கு கொண்டு சேர்க்கிறது. இயற்கை விவசாயப் பயிற்சி, இயற்கை வாழ்வியல் பயிற்சி, இயற்கை முறையில் வீட்டுத் தோட்டம், மருந்தில்லா இயற்கை மருத்துவம், சிறுதானிய செய்முறைப் பயிற்சி, தமிழர் (நம்) உணவின் ரகசியம் என்று பல விழிப்புணர்வுப் பயிற்சிகளை தமிழ்நாட்டில் பல இடங்களில் நடத்திவருகிறது.

இதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கும் நமது அடையாளங்களை நினைவூட்ட வேண்டிய தேவையைப் புரிந்து கொண்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள அண்ணா ஜெம் பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி ஞாயிறு அன்று பிரபஞ்சம் அமைப்பு பிரம்மாண்டமான பாரம்பரிய உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த உணவுத் திருவிழாவில் கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகள், குறுந்தகடு, புத்தக வெளியீடு, பலகுரல் விருந்து, இயற்கை விளைபொருள் கண்காட்சி மற்றும் விற்பனை என்று பல அம்சங்கள் கொண்டு இருந்தது. 23 வகை பாரம்பரிய சிறுதானிய, இயற்கை முறை தமிழர் உணவுகள் சுரேஷ் கண்ணன் - நாச்சாள் குழுவினரால் விருந்தாக்கப் பட்டிருந்தன‌.

உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 'உன்னுள் உணவு' என்ற கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்படிருந்தது. நம் அனைவருக்கும் நாள்தோறும் உணவு அவசியப்படுகிறது. உணவு என்பது உடலில் இயக்கத்திற்கும் உயிர் வாழ்வதற்கும் சக்தியை கொடுக்கக்கூடியது. இன்றோ உணவு சக்தியை கொடுப்பதற்கு பதிலாக பலவிதமான உடல் ரீதியான மற்றும் மனரீதியான அசௌரியங்களை ஏற்படுத்துகிறது. அதுமட்டும் இல்லாமல் உணவு என்பது நம் வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் பல பரிமாணங்களில் தொடர்பு கொண்டுள்ளது என்றும், அவற்றின் முக்கியத்துவத்தையும் பல அறிஞர்களும், பிரபலங்களும் இந்த கருத்தரங்கில் எடுத்துக் கூறினார்.

கும்பகோணம் தினேஷ், வானகம் சென்னை ஒருங்கிணப்பாளர் ஜகதீஷ் , அன்பழகன் மற்றும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ராதா கிருஷ்ணன் அய்யா நம்மாழ்வாரின் கனவுகளை நினைவாக்கும் நாள் வெகுதூரமில்லை என்று வந்தவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

வானகத்தின் ஒருங்கிணப்பாளர் எங்கல்ஸ் ராஜா 'உணவும் மருந்தும்' என்பதில் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். உணவு எவ்வாறு உடலுக்கும் நோய்க்கும் மருந்தாக உள்ளது என்றும் நல்ல ஆரோக்கியத்திற்கு உணவின் அவசியத்தையும் கூறினார். மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு ஞானி சங்கரன் அவர்கள் 'உணவும் உயிரும்' என்பதில் தனது வாழ்வியல் அனுபவத்தை மேற்கோள் கட்டி உயிருக்கு உணவு எவ்வாறு உதவுகிறது என்று தனது பாணியில் கூறினார். தொடர்ந்து 'உணவும் அறிவியலும்' என்பதில் இன்றைய காலகட்டதில் உணவு அறிவியல் மாற்றத்தால் எவ்வாறு நஞ்சாகப் போனது என்றும், இயற்கையை ஒருபோதும் செயற்கை ஈடு கட்ட முடியாது என்று கும்பகோணம் பேராசிரியர் சுவாமிநாதன் விளக்கினர்.

உணவும் குடும்பங்களும்' என்பதில் குடும்பங்களில் உணவால் ஏற்படும் குடும்ப பிணைப்பையும் அதன் அவசியத்தையும், வீட்டில் பெண்கள் சமைப்பதன் முக்கியத் துவத்தையும் 'பிரபஞ்சம்' அமைப்பின் நிறுவனரும், 'ருசியின் ரேகை', 'மாடியில் மண்வாசனை' ஆசிரியருமான நா. நாச்சாள் எடுத்துரைத்தார். 'இனிப்பு' குறும்படத்தில் இயக்குனரும், எழுத்தாளருமான செந்தமிழான் 'உணவும் கலாச்சாரமும்' என்பதில் நமது வாழ்வியல் சடங்குகளின் முக்கியத்துவம் அதனோடு உணவின் தொடர்பு போன்றவற்றை பற்றிப் பேசினார். கருத்தரங்கின் இறுதியில் சமன்வயா ராம் அவர்கள் அரசியலிலும் வாழ்வியலிலும் உணவு எவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றும் வியாபார உலகின் மூலம் உணவில் அடிப்படையே நஞ்சாகப்போனது என்றும் அவற்றை சீர் செய்யும் முறையையும் விளக்கினார்.

மாலையில் கரகம், பறை, தப்பு என்று தமிழர் கலைகளை மீட்டெடுக்கும் ஒரு சிறு முயற்சியாக கொருக்குப்பேட்டை குழந்தைகள் வந்தவர்கள் கண்களுக்கு விருந்து படைத்தனர்.

நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் சமூக தொண்டாற்றிவரும் நகைச்சுவை நடிகரும், பல குரல் சக்ரவர்த்தியுமான திரு தாமு (ஓட்டேரி நரி) அவர்களின் பலகுரல் விருந்து அமைத்தது. இதில் அவர் உணவினை எவ்வாறு போற்றப்பட வேண்டும் என்பதை பலகுரல் நகைச்சுவை பாணியில் விருந்தளித்தார்.

தமிழர் பாரம்பரிய உணவு திருவிழாவில் 23 வகை சிறுதானிய, இயற்கை உணவுகள் மிகவும் சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும், வந்தவர்களுக்கு அமுது கிடைக்கும் என்ற வகையில் சோழிங்கநல்லூரை சேர்ந்த சுரேஷ் கண்ணன் - நாச்சாள் தயாரித்த உணவு அமுதாக அமைந்தது. 23 வகை தமிழர் உணவின் பட்டியலும் அதன் மருத்துவ குணத்தையும் தெரிந்து கொள்வோம்.

மாப்பிள்ளை சம்பா இடியாப்பம் - நாட்டு காய்கறி கூட்டாளம் (மாப்பிளை சம்பா அரிசி என்றும் இளமையுடனும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும், நார் சத்து கொண்ட அரிசி)

ஐந்தரிசி பொங்கல் - கல்யாண பூசணி சாம்பார் (வரகு, சாமை, தினை, குதிரைவாலி, பனிவரகு என்ற ஐந்து அரிசியால் ஆன பொங்கல், அலாதி சுவை கொண்டது)

நாட்டுக் கம்பு தேங்காய் புட்டு (புரதம், இரும்பு சத்து கொண்டது)

கருங்குறுவை இனிப்பு பொங்கல் (இந்தியன் வயாகரா என்று அழைக்கப்படும் அரிசி கருங்குறுவை)

தினை நாட்டு மல்லி சோறு (புரதம், இரும்பு மற்றும் நார் சத்து கொண்டது)

பிரண்டை வடாம், எள்ளு துவையல், குதிரைவாலி கூட்டாஞ்சோறு, சாமை தயிர் சோறு, பலா பிரட்டல், இயற்கை பீட்ரூட் ஊறுகாய், வரகு ஊன்சோறு, பப்பாளி பொரியல், பழக்கலவை, இனிப்பு மனோகரம், சோள வடை, இயற்கை புடலை கறிப்பொதி, இயற்கை வெற்றிலை, கருவேப்பிலை அமுது, வில்வம் நீர்.

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org