தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


நிலம் என்னும் நல்லாள் நகும்

மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து நரேந்திரமோடி பிரதமர் ஆகப் பதவி ஏற்று விட்டார். மனமார்ந்த வாழ்த்துக்கள். கடந்த பத்தாண்டுகள் ஊழல் மலிந்து, சுரண்டலைத் தவிர வேறு செயலற்று இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியின்மேல் மக்களுக்கு ஏற்பட்ட பெரும் கசப்பே இம்முடிவுக்குக் காரணம். கூட்டணிக் கட்சிகளின் தயவு இல்லாமல் தனித்து இயங்கக் கூடிய அளவு பெரும்பான்மை உள்ளது மோடிக்கு நன்மையே. எனினும் ஊடக வலுவால் உருவாக்கப் பட்ட இந்த மோடி அலைகளின் அடியில் சற்றுச் சென்று பார்த்தால் சில அடிப்படைப் பயங்கள் தலைதூக்குகின்றன.

இன, மதக் கலவரங்களோ, மனித உரிமை மீறலோ நம் பயங்கள் அல்ல. கலவ‌ரம் செய்து ஒருவரை ஒருவர் கொன்றழிக்கவும் யாருக்கும் இப்போது மனநிலையோ, நேரமோ இல்லை. உண்மையான அச்சம் மோடியின் மேம்படுத்துதல் என்னும் பொருளாதார மாற்றங்கள்தான். நல்ல எண்ணங்களுடன், உண்மையிலேயே நாம் நல்லது செய்கிறோம் என்று நரேந்திர மோடியும் அவரின் அமைச்சர்களும் பெரும் அழிவை ஏற்படுத்திவிடக் கூடும்.

50% இளைஞ‌ர்களைக் கொண்ட புதிய பாரதம் , அரசாங்கத்திடம் வேலைகளைத்தான் முக்கியமாக எதிர்பார்க்கிறது. இன்னும் ஐந்தாண்டுகளில் 30 கோடி வேலைகள் உருவாக்க வேண்டும் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். பெரும் தொழிற்சாலைகளை நிறுவிவிட்டால், அந்நிய முதலீட்டுக்குக் கதவைத் திறந்து விட்டால் வேலைகள் உருவாகி விடும் என்று எல்லோரும் நம்புகிறோம். ஆனால் இத்திட்ட வரைவின் புள்ளி விவரங்களை யாரும் அலசுவதில்லை. மையப் படுத்தப்பட்ட உற்பத்தியில், ஒரு வேலை உருவாக்க 10 லட்சம் முதல் ஒரு கோடி வரை முதலீடு தேவைப்படுகிறது. இவை தவிர நிலம், நீர், ஆற்றல் என்று ஒரு வேலை உருவாக்கத் தேவைப்படும் வளங்கள் மிக அதிகம். பல மாநிலங்களில் வளமான நதிநீர்ப் பள்ளத் தாக்குகள், நிலத்தடி நீர் நிறைந்த விவசாய நிலங்கள், நிலம் கையகப் படுத்தும் திட்டத்தின்கீழ் பெருநிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப் பட்டு விட்டன. மையப் பொருளாதாரத்தின் மூலம் 30 கோடி வேலைகள் உருவாக்கத் தேவைப்படும் முதலீடும், இயற்கை வளங்களும் நம் நாட்டில் இல்லை என்பதே உண்மை.

ஆனால் நம்மிடம் 10 கோடி ஏக்கர் பாசன வசதி உள்ள விளை நிலங்கள் உள்ளன. அது தவிர 30 கோடி ஏக்கர் மானாவாரி விளைநிலங்கள் உள்ளன. 120 கோடி மக்களுக்கு உணவு உற்பத்தி செய்வதே ஒரு மிகப் பெரிய வேலை வாய்ப்புத்தான். உணவு உற்பத்தி அண்மைப் படுத்தப்பட்டு, உணவு பதப்படுத்துதலைச் சிறு தொழில்களிடம் ஒப்படைத்தால், இந்தப் பத்து கோடி ஏக்கர் நிலம் 10 கோடி வேலைகளை மிகச் சுலபமாக ஏற்படுத்தி விடும். மானாவாரி நிலங்களில் பருத்தி, எண்ணை வித்துக்கள், எரிபொருள் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு அண்மையில், சிறு தொழில்களால் பதப்படுத்தப் பட்டால், மேலும் 10 கோடி வேலைகள் மக்கள் ஆங்காங்கே இருக்கும் இடங்களிலேயே ஏற்படுத்தும். சிறுதொழில்களில் கவனம் செலுத்தினால், பெருநிறுவனங்களால் அரசுக்கு ஏற்படும் வரி இழப்பு, வாராக் கடன்கள், அடிமாட்டு விலைக்கோ இலவசமாகவோ விற்கப்படும் நிலம் என்று பல்லாயிரம் கோடி சலுகைகள் தேவையில்லை. விவசாயமும், கால்நடைகளும், அவை சார்ந்த சிறுதொழில்களுமே நீடித்த, நிலைத்தன்மை உடைய வேலை வாய்ப்பை உருவாக்கும். ஆற்றல், கனிமம், பிற இயற்கை வளங்கள் எல்லாம் பாதுகாக்கப் படும். ஏராளமான நதிகளையும், சிறந்த மழைவளமும், வன வளமும், நிலவளமும், கிராமப்புற மனித வளமும், கால்நடைகளும், உயிரிப்பன்மையும் உள்ள நம்நாட்டில் விவசாயத்தைப் புறக்கணிக்கும் ஒரு திட்ட வரைவு மிகவும் குருட்டுத் தன்மை கொண்டது. அழிவுக்கு ஒரு நேர்ப்பாதை இம்மையப் பொருளாதாரம். நிலத்தால் இயலாது, இயந்திரங்களால்தான் இயலும் என்று சிந்தித்தால், வள்ளுவர் சொன்னது போல்

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம் என்னும் நல்லாள் நகும்
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org