தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தற்சார்பு வாழ்வியல் - 6

தாமே தமக்கு விதிவகையும் -சாட்சி

தற்சார்பு வாழ்வியலில் தன்னாட்சி (பூரண சுயராச்சியம் - absolute self rule) என்றால் என்ன என்று ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம். பலகோடி தனிமனிதர்களால் உருவான சமூகத்தைச் சீர் செய்ய ஒரு சில தனிமனிதர்களால் இயலுமா என்பது கேள்வி.

தற்சார்பு என்பதன் கோட்பாடு என்ன? தன் தேவைகளுக்குத் தன்னைச் சார்ந்து இருப்பது தற்சார்பு. இதில் மனிதனுக்கு உடல் ரீதியாகவும், மனம் ரீதியாகவும் இரண்டுவகையான தேவைகள் உள்ளன. உடல் ரீதியான நேர்மையான தேவைகள் எளிதாய் நிறைவுசெய்யக் கூடியவை; அடிப்படையான‌ இல்லற ஒழுக்கமும், நேர்மையான ஒரு தொழிலும் இருந்தால் நம் உடல் ரீதியான தேவைகள் எளிதில் நிறைவு பெற்று விடும். ஆனால் மனம்தான் புரியாத புதிர். மனதின் ஆசைகளுக்கு எல்லையே இல்லை ; “அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர்” என்று தாயுமானவர் எச்சரிக்கிறார். எனவேதான் எல்லா மதங்களிலும் மனத்தை அடக்கக் கூடிய துறவிகளுக்கு மிக உயர்ந்த மரியாதை அளிக்கப்படுகிறது. மனத் தேவைகளில் முக்கியமானது மனதை நெறிப்படுத்துவது. அதற்குத் தேவை ஒரு கோட்பாடும் (சித்தாந்தம்) அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அமையும் ஒரு வாழ்முறையும். வரலாற்றைப் பார்க்கும் போது மனித இனம்தான் உலக அழிவில் மிகப்பெரிய பங்கு கொண்டதென்றும், எக்காலத்திலுமே தீயவர்களும், நல்லவர்களும் கலந்துதான் இருந்திருக்கிறார்கள் என்றும் தெளிவாகும். ஆனால் வரலாற்றில் மனித இனம் மேம்படுவதற்கு வித்திட்ட அனைவரும் ஒரு அடிப்படைக் கோட்பாட்டைப் பல்வேறு வடிவங்களில் கூறியிருக்கிறார்கள்.அக்கோட்பாட்டை நாம் தற்சார்பு வாழ்வியல் என்று கூறுகிறோம்.

மகாபாரதத்தில் துரியோதனன், தான் கெட்டவன் என்று தெரிந்தும் தன்னால் அது பற்றி ஒன்றும் செய்ய இயலவில்லை என்று கூறுவதாக வரும். வைணவக் கவிஞரான நம்மாழ்வாரும் இயற்பா பெரிய திருவந்தாதி எனப்படும் தன்னுடைய வெண்பாக்களில்

இவையன்றே நல்ல, இவையன்றே தீய

இவையென்று இவை அறிவனேலும் - இவையெல்லாம்

என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே

என்னால் செயற்பால‌து என்

(எது நல்லது எது தீயது என்று தெரிந்தும் அந்தக் கட்டுக்களில் இருந்து விடுபட முடிவதில்லையே, என்னால் என்ன செய்ய இயலும்)

என்று வருந்துகிறார். ஆதி சங்கரர் தன்னுடைய விவேகசூடாமணி என்னும் நூலில் ஆன்ம சாதகனுக்கு இன்றியமையாத குணங்கள் என்று வரிசையிடும்போது, “எது நிலைப்பது (நித்தியம்) , எது நிலையாதது(அநித்தியம்) என்று பகுத்தறியும் விவேகம்” முதலிலும் அதன் பின் ” அநித்தியப் பொருட்களை விட்டொழிக்கும் வைராக்கியம்” இரண்டாவதாகவும் வரிசைப்படுத்துகிறார். கிரேக்க அறிஞர் பிளாட்டோ “எது நல்வாழ்வு?” என்ற தேடலுக்குத் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவழித்ததாகக் கூறுவர்.நம் அறிஞர் குமரப்பாவும், அரசியல் கொள்கையைப் பற்றி எழுதும் பொழுது “ஒரு நாட்டின் கொள்கை, வாழ்வைப் பற்றிய அடிப்படைச் சித்தாந்தத்தைச் சார்ந்ததாக இருந்தால் அக்கொள்கை தெளிவாக இருக்கும்” என்று எழுதியிருக்கிறார்.

வால்டனில் தோரோவும், “மனிதன் தொடர் முயற்சியால் தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ளும் திறனை விட ஒரு மிகப்பெரிய ஊக்கமூட்டும் உண்மை நான் எதுவும் அறியேன்” என்று எழுதியுள்ளார்.

ஆக இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்பொழுது, (1) நன்மை தீமை என்று இரண்டு உள்ளது (2) நாம் எவ்வளவு தீமையில் மூழ்கி இருந்தாலும் ஒரு உந்துதலுடன் மேலெழும்பி நன்மையை நோக்கிப் போவது என்ற இரண்டு சித்தாந்தங்களை நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.

எது நல்லது , எது தீயது என்ற கேள்விக்கு ஒரு ஞானி இவ்வாறு விடை கூறினார் ” உலகியலில் பார்க்கும் போது எச்செயல் துன்பத்தை உண்டாக்குகிறதோ அது தீயது; எச்செயல் துயர் துடைக்கிறதோ அது நல்லது. பூரணமாகப் பார்க்கும் போது எது உன்னை ஞானத்தின் அருகில் கொண்டு செல்கிறதோ அது நன்று; எது உன்னை ஞானத்தினின்றும் சேய்மைப்படுத்துகிறதோ அது தீது” (இதில் ஞானம் என்று ஒன்று இருப்பதாகவும் அதை நாம் நோக்கிச் செல்ல வேண்டும் என்று்ம் பொருள்படுகிறது. இதை வேண்டுவோர் ஏற்றுக் கொள்ளலாம்; இல்லையேல் விட்டு விடலாம். நம் தேடலுக்குக் கடவுள் என்பதோ,வைகுந்தம், கயிலாயம், தேவ ராச்சியம், மோட்சம், நிர்வாணம் போன்ற உருவகங்களோ தேவையற்றவை. உள்ளதை உள்ளபடி அறிவதே நம் நோக்கம்.) பகுத்தறிவு என்பது நாத்திகம் அல்ல , ஆத்திகமும் அல்ல. ஆத்திகம் மூட நம்பிக்கை என்றால், நாத்திகம் மூட எதிர்ப்பு அவ்வளவே. யார்யார்வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது தான் பகுத்தறிவு. தனிமனித வாழ்வில் மெய்ப்பொருளைக் காண்பதே நம் நோக்கம்.

சரி நன்மை என்பது என்ன, தீமை என்பது என்ன? எல்லா உயிர்களும் தன்னை இந்தப் புவியில் இருத்திக் கொள்ள மிகக் கடுமையான வன்முறையைக் கடைப்பிடிக்கின்றன. ஒரு உயிரைத் தின்றுதான் இன்னொரு உயிர் வாழ இயலும் என்பது இயற்கை நியதி. ஆனால் மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் எதுவும் தங்கள் அடிப்படைத் தேவைகளைத் தவிர வேறு எதற்கும் வன்முறையைக் கையாள்வதில்லை. மனிதன் மட்டுமே தேவைகளுக்கு அன்றி ஆசைகளுக்கும், பொழுது போக்கிற்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயத்திற்கும், ஆளுமைக்கும், சக மனிதர்களின் பொறாமையைத் தூண்டுவதற்கும் எண்ணில் வன்முறையைக் கையாள்கிறான். எனவே வன்முறையைக் குறைப்பதும் பிறர் துயர் துடைப்பதும் நன்மையான விடயங்கள் என்று கொள்ளலாம். அகிம்சையே பரம தர்மம் என்று வேதத்தில் சொல்வதும் , பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று வள்ளுவர் போற்றுவதும் இந்த நன்மையையே.

முதல் கட்டுரையில் பார்த்தது போல, சூழல்சுவட்டைக் குறைப்பது அகிம்சையின் ஒரு மிக நல்ல வெளிப்பாடு. அது மிகப் பெரிய சேவையும் கூட. இது இயற்கை வேளாண்மை, எளிய வாழ்முறை, சுயநலம் குறைந்த நடை, சமூக சேவை, அநீதி எதிர்ப்பு போன்று பல வடிவங்களில் வெளிப்படலாம். எவ்வடிவாயினும் இதன் உண்மையான உந்துதல், நம் உள்ளிருக்கும் ஒரு இனம்புரியாத‌ தேடல்தான். ஆனால், நம் உடல் ரீதியான தேவைகளைக் குறைப்பதும், சூழல் சுவட்டைக் குறைப்பதும் ஒரு துவக்கம் மட்டுமே - அதுவே முடிவாகி விடாது. சாதாரண மனிதர்களான நாம் சதா காரண காரியங்களிலேயே விடயங்களைப் புரிந்து கொள்கிறோம். நன்மை- தீமை, வினா-விடை, இன்பம்-துன்பம் எல்லாம் நமக்கு ஐம்புலனுக்கு உட்பட்ட உலகில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.

ஆனால் இந்த ஐம்புலன்களுக்கு அடித்தளமான, “சித்” என்று வடமொழியில் கூறப்படும், Consciousness என்று ஒன்று எல்லா உயிரினங்களையும் ஒரு மின்காந்த வெளிபோல் இணைக்கிறது. நாம் இருக்கும் வெளியையும், மூச்சு விடும் காற்றையும் நாம் அனைவரும் பகிர்ந்து கொள்வது போல் இந்த சித்தத்தில் நாம் அனைத்து உயிர்களும் இணைக்கப்பட்டு இருக்கிறோம். நம் ஒவ்வொருவரின் எண்ணற்ற எண்ணங்களின் தொகைதான் இந்த சித்தம். காற்றில் ஒருவர் செய்யும் மாசு எங்ஙனம் அனைவரையும் பாதிக்கிறதோ அதே போல் ஒவ்வொருவரின் மாசு படிந்த சிந்தனைகள்தான் திரளாகி ஒட்டு மொத்த உலகத் தீமைகளாக வடிவெடுக்கிறது.

இந்த சித்தம் என்கிற ஆற்றில் நம் சுயநலமான சிந்தனைகள்தான் சாக்கடை நீர்போல் கலந்து மாசு படுத்துகின்றன. எனவே மிகச் சிறந்த‌ நன்மை என்பது சுயநலமற்ற மனமே; தெளிந்த மனத்தில் குழப்பம் உருவாக்குவது இந்தச் சுயநலமே. சுயநலமற்ற எந்தச் செயலுமே ஒரு சேவைதான் -ஏனெனில் அதைச் செய்பவன் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை (தன் சுய பாராட்டுதலைக் கூட!). மகா பாரதத்தில் கண்ணன் செய்யும் எண்ணற்ற சூதுகளும், பொய்களும், கோபியருடன் குலவியதும் எல்லாம் சுயநலமற்றவை. தனக்கென்று எதுவும் அவன் செய்ததாய் சான்று இல்லை. ஆனால் தருமன் ஒரே ஒரு பொய் சொன்னதற்காய் மிகவும் வருந்துகிறான். அவனின் நேர்மை மிகுந்த தன்னினைப்பு உள்ளதாய், சுயநலமானதாய், இருக்கிறது.

கூர்ந்து கவனித்தால் பெரும்பாலான சுயநலத்தின் பின்னணியில் தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் , ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு இச்சை இழையோடும். அடுத்தவரின் மதிப்பீட்டிற்கு நாம் சாயத் தொடங்கும் பொழுதே தற்சார்பை இழக்கிறோம். உண்மையான தற்சார்பு என்பது நம் மனத்தை நாமே நிர்வகிக்கப் பழகுவதுதான். நம்மை நாமே, நம் அறிவால் மட்டும் ஆள்வது தன்னாட்சி. உலகத்தோடு ஒட்ட ஒழுகுவது எல்லோரும் செய்வது; உலக நியதிகளால் கட்டுண்டு, பொறுக்க முடியாமல், அந்தத் தளைகளை எதிர்த்து நாடோடிகள் போல் தன்னிச்சைப்படி வாழவது மரபெதிர்ப்பாளர்கள் (hippie) செய்வது - இரண்டுமே தற்சார்பற்றவை; அதனால் நிலையற்றவை. இசைவும் இன்றி, எதிர்ப்பும் இன்றி, தன் அறிவைப் பயன்படுத்தி நன்றும், தீதும் பகுத்தறிந்து, தீதை ஒதுக்கி, நன்றைக் கொள்வது உண்மையான தன்னாட்சி. ஒரு சமயம் உலகோடு ஒழுகுவது போலவும், ஒரு சமயம் மரபை எதிர்ப்பது போலவும் தோன்றினாலும், தன்னாட்சியைக் கடைப்பிடிக்கும் ஒருவன் எப்போதும் தன் அறிவிற்கு மட்டுமே செவி சாய்ப்பான்.

Inner Voice என்று காந்தி கூறியதும் , “எச்சமயத்திலும் எனக்கு உள்ள ஒரே கடமை எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை மட்டும் செய்வதே ” என்று தோரோ வால்டனில் எழுதியதும் இந்தத் தன்னாட்சியைத்தான்.

சாதாரண மனிதர்களான நமக்கு இது மிகக் கடினமானது; நம் அறிவு என்ற வாள் பயன்படுத்தாமல் மிகவும் மொக்கையாகி விட்டது. அதற்காக நாம் பின் தங்கி விடக்கூடாது. பயன்படுத்தப் படுத்த அது தன் கூர்மையைத் திரும்பப் பெறும். நான் இந்தத் தன்னாட்சியை முயற்சிக்கும், மிகவும் தடுமாறும், இடறி விழும், ஒரு சிறு குழந்தை மட்டுமே என்பதை இவ்விடத்தில் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறேன். இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் எழுதியுள்ளது அனைத்தும் என் அறிவிற்குப் புலப்பட்டு, உண்மையான தற்சார்பிற்கு இதுதான் வழி என்று தெளிந்துதான் எழுதுகிறேன்.

இந்தத் தன்னாட்சியை ஒரே ஒருவர் கடைப்பிடித்தாலும் அவரால் பல்லாயிரம் பேருக்குப் பலன் உண்டு; இருட்டறையில் ஒரே ஒரு செங்கல் தன்னைக் கரைத்துக் கொண்டு விடுபட்டால் அதன் மூலம் வரும் வெளிச்சம் அறை முழுதும் வீசும். புறந்தூய்மை நீரால் அமைவது போல் புறத்தற்சார்பு எளிமையால் அமையும்; ஆனால் வாய்மை போல் இந்தத் தன்னாட்சிதான் அகத்தற்சார்பிற்ககு வழி.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org