தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உணவும் உரிமையும் - 2 - சரா

“உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” என்கின்றது நமது பழம் நூல். சென்ற இதழில் எவ்வாறு உணவின் உரிமை அமெரிக்காவில் பறிக்கப்படுகின்றது என்பதைப் பார்த்தோம். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், உங்கள் பண்ணையில் பால் உற்பத்தி செய்து அதை நீங்கள் மட்டும்தான் குடிக்கலாம், அதுவும் பண்ணையிலேயே - வேறு ஒருவருக்கு அதைக் கொடுக்கும் உரிமையோ வேறு இடத்திற்குக் கறந்த பாலைக் கொண்டு செல்வதோ சட்டப்படி குற்றம். “என் உடல் நலனுக்கு இந்த உணவை நான் சாப்பிடலாம்” என்று உங்களுக்கு ஒரு அரசின் நிலைப்பாட்டிற்கு மாற்றான ஒரு கருத்து இருந்தால் அது 'தவறு' என்றும், 'சட்டப்படி குற்றம்' என்றும் கருதப்படலாம். தெரிவுகளில் தலையாய நாடு (nation of choice) என்று பரவலாகக் கருதப்படும் அமெரிக்காவில், அடிப்படை உரிமைகளைத் தெரிவு செய்யும் உரிமை மிக மிகக் குறைவு என்பது நம்மை வியப்பில் ஆழ்த்தலாம் - ஆனால் உண்மை நிலவரம் அதுதான்.பாதுகாப்பான உணவு என்பது பெரும் நிறுவனங்களால் பதப்படுத்தப்பட்டு வருவதே என்பது போல் எண்ணற்ற சட்ட திருத்தங்கள் அங்கு செய்யப்பட்டு விட்டன.

இப்போது இன்னுமும் கூட மோசமான பல புதிய சட்டங்களை இந்த நாட்டின் அரசாங்கம் இயற்றி உள்ளது தெரிய வந்துள்ளது. உங்கள் வயல்களை நீங்கள் நிழற்படமெடுக்க (photo) அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். பன்றி, மாடு, ஆடு, கோழி ஆகியவற்றின் இறைச்சிகளைப் பெருவாரியான மக்கள் தினப்படி உண்கின்றனர். இவ்விறைச்சிகள் அனைத்தும் பெரும் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு cold storage எனப்படும் குளிர்பதனக் கிடங்குகளில் வைக்கப்பட்டுப் பின் நுகர்வோரால் பல நாட்கள் கழித்து வாங்கப் படுகின்றன. 95 சதவீத‌த்திற்கு மேல் எல்லா இறைச்சிகளும் பெரு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு சூப்பர் மார்க்கெட் என்கின்ற சில்லறை வணிகக் கடைகளில் விற்கப் படுகின்றன. இந்நிறுவனங்களுக்கு இறைச்சி தயாரிப்பதற்காகப் பெரிய பெரிய மிருகப் பண்ணைகள்(animal farm) உள்ளன. இம்மிருகப் பண்ணைகளில் மிருகங்கள் நடத்தப்படும் விதங்களையும் அவை படும் சித்திரவதைகளையையும் சில ஆண்டுகளுக்கு முன்னால், பலர் படம் எடுத்து KFC, McDonalds போன்ற பல மிகப்பெரிய சிற்றுண்டி நிறுவனங்களில் உபயோகப்படுத்த பட்ட இறைச்சி எத்தகைய இடங்களிலிருந்து வருகின்றது என்று பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த பண்ணைகளில் மிருகங்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களையும் அவற்றிற்கு அளிக்கப்படும் மருந்துகளையும் கண்டு பலரும் இந்த சிற்றுண்டிகளுக்கு செல்வதையே நிறுத்தி விட்டனர்.

இது வெளி வந்தவுடன் ஒரு நல்ல அரசாயிருந்தால் என்ன செய்ய வேண்டும்? மிருகக் கொடுமைகள் சட்டப்படி தவறு, அவை தண்டிக்கப் பட வேண்டியவை என்று அல்லவா சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்? ஆனால் பெரும் நிறுவனங்களின் நிழலில் வாழும் அரசியல்வாதிகளோ மிருகப் பண்ணைகளைப் படம் பிடிப்பது சட்ட விரோதம்; அவ்வாறு படம் எடுப்பவர்கள் தீவிரவாதிகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப் படுவார்கள் என்று சட்டம் இயற்றி விட்டது. இப்படி யாரேனும் படமெடுத்தால், அவர்களை, “தீவிரவாதிகள்” என்றே அரசாங்கம் தீர்மானித்து, தீவிரவாதிகளின் மேல் எடுக்ககூடிய நடவடிக்கைகல் இவர்களின் மேலும் எடுக்கப்படும் என்று சட்டம் இயற்றி உள்ளது!

'பிணம் தின்னும் சாத்திரம்' என்று சென்ற தாளாண்மை இதழின் தலையங்க கட்டுரைபோலே, இவை அனைத்தும் பேய் ஆட்சி செய்வதற்கான அறிகுறிகளாகவே தெரிகின்றது.

சரி வயல்களையும் தோட்டங்களையும் படமெடுக்க என்ன தடை? என்று நாம் கேட்கலாம்…படமெடுத்து அதன் மூலமாக விதை விற்கும் நிறுவனங்களை நஷ்ட இடு கேட்க்கும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, இதனால் இவர்கள் படமெடுக்க அனுமதி மறுக்க படுகின்றது

அதாவது, தனியார் நிறுவனங்களை எதிர்த்தோ, அல்லது அவர்களின் லாபம் சம்பாதிப்பதை எதிர்த்தோ செயல்படுபவர்களை, இந்த நாடு தீவிரவாதிகள் என்று குறிப்பிடுகின்றது. அத்தகைய நிறுவனங்களினால் மக்களின் உணவு உண்ணும் உரிமை மிகவும் குறுகி, அவர்களுக்கு ஒரு மிருககாட்சி சாலையில் உள்ள மிருகத்தை விட குறைந்த உரிமையே இருப்பினும் அந்த உரிமையை, இந்த அரசாங்கம் கண்டுகொள்ள மறுப்பது, இங்கு 'ஜனநாயகம் உள்ளதா?' என்று கேள்வி எழுப்பும் விதத்தில் உள்ளது.

இத்தகைய ஒரு தேசத்திற்கு நமது படித்த இளைஞர்களையும், யுவதிகளையும், பெரிய அளவில் ஏற்றுமதி செய்வதை நாம் என்று நிறுத்தப்போகின்றோம் என்று தெரியவில்லை

சிலருக்கு தோன்றலாம் - 'இந்த அளவிற்கு ஒரு அரசாங்கம் தனது மக்கள் எந்த விதத்திலும் உணவினால் நோய்வாய்ப் படாமல் பார்த்துகொண்டால் நல்லது தானே?' என்று. அமெரிக்கா நிச்சியமாக நோய்கள் இல்லா நாடாக இருந்தால் அப்படி நாம் எண்ணுவது நியாயமாய் இருக்கலாம். ஆனால் நிலைமையோ தலை கீழ்…இந்த நாட்டில், இன்று பிறக்கும் குழந்தைகளில் ஆறில் ஒரு குழந்தை, பிறப்பிலேயே வளர்ச்சி குறைந்து பிறக்கின்றது. 1940 களில் இங்கு பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் நான்கு தடுப்பூசிகள் போடா பட்டன (நம் நாட்டில் இன்று ஏறத்தாழ 5-6 ஊசிகள் போடவேண்டும் என்று அரசாங்கம் நிர்ணயித்துள்ளது), ஆனால் இன்றோ, 14 விதமான தடுப்பூசிகள், 49 முறை குழந்தைகள் 6 வயதை அடையும் முன் போடப்படுகின்றது. இது எத்தகைய மாற்றம்? முன்னேற்றம்? .

நிலமும் நீரும் கெட்ட பின்னே, மருந்தே உணவாகவும், உணவை நஞ்சாகவும் உட்கொள்ளும் காலம் வரும்; அமெரிக்கர்கள் இதற்க்கு ஒரு எடுத்து காட்டாக விளங்கு கின்றனர்

உணவில் இந்த அளவில் தேவையில்லா தொழில் நுட்ப மாற்றங்களை எப்படி, எதற்காக ஏற்படுத்தினர்? இந்த தனியார் நிறுவனங்களுக்காக இவர்கள் ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பு, பிணம் தின்னி சாத்திரங்கள் நேற்று முளைத்தவையா என்று கேட்டால், இல்லை. இது தொடர்ந்து வளர்ந்து வரும் ஒரு ஆழ்ந்த சதி என்று இத்தகைய தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒருவரின் எழுத்துக்களே நிரூபிக்கின்றன

மேலும் வரும்…

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org