மாடு என்ற தமிழ் சொல்லுக்கு செல்வம் என்றொரு பொருள் உண்டு. பண்டைக்காலத்தில் ஒருவருடைய செல்வச் செழிப்பு அவரிடம் உள்ள மாடு கன்றுகளின் எண்ணிக்கையையும், ஊட்டத்தையும் வைத்தே சொல்லப்பட்டது, இரு மன்னர்களுக்கிடையில் போர் ஏற்பட்டால் ஒரு மன்னர் இன்னொருவருடைய ஆநிரை-மாடுகளை கவர்ந்து செல்வது போரின் ஆரம்பமாக கருதப்பட்டது. வழிபாடுகள், யாகங்கள் ஆகியவற்றை மாட்டு கொட்டகைகளில் வைத்து செய்வது சிறப்பாக இருந்தது. பசு லட்சுமியின் அம்சமாக போற்றப்பட்டது. இப்போது உள்ள சிமெண்ட் மற்றும் ‘பிளாஸ்டிக் டைல்ஸ்’ தரைகளுக்கு முன்னால் இருந்த மண் தரைகளையும், வாசல்களையும் சாணிக்கரைசலால் மெழுகுவது வழக்கம்.
உழவர்களின் வீடுகளில் மாடுகளுக்கு ஒரு தனி மரியாதை உண்டு. சாணி அவர் நிலங்களை எருவினால் வளப்படுத்துகிறது. உழவு மாடுகள் அதே நிலங்களை உழுகின்றன. வண்டி மாடுகள் அவரது உற்பத்தியை பண்ணையில் இருந்து வெளி இடங்களுக்கு எடுத்துச் செல்ல பயன்படுகிறது. இப்படி உழவர்களின் உழைப்பில் உதவி செய்யும் மாடுகளுக்கு தனியாக பொங்கல் வைத்து வழிபடுவது வியப்பில்லை அல்லவா!
இவை எல்லாம் பழங்கதைகள். இத்தனை சிறப்பு பெற்ற மாடுகளை நாம் இன்று எப்படி மதிக்கிறோம்? சிறிது எண்ணிப் பாருங்கள்…கிராமங்களில் கூட இன்று சாணியை தொடுவதற்கு அருவருப்பு கொள்கின்றனர். அதை விட ஆச்சரியமானது… சாணியின் வண்ணத்தில் வேதிப் பொடி ஒன்று வாசலில் தெளிக்க விற்பனை ஆகிறது. மாட்டு எருவிற்கு பதிலாக வேதி உரங்களும், உழவிற்கு ‘டிராக்டரும்’, ‘டில்லரும்’ பயன்படுத்தப்படுகின்றன. நமது அரசாங்கங்களும் டிராக்டர், டில்லர் போன்ற கருவிகள் வாங்க மானியம் வழங்குகிறது. ஆனால் அதே வேலையை செய்யும் உழவு மாடுகளுக்கு மானியம் கிடையாது. டிராக்டர், டில்லர் வாங்க வங்கிகளும் கடன் அளிக்கும்- மாடுகளுக்கு அம்மாதிரி கடன் வசதி இல்லை. ஏனென்றால் டிராக்டர், டில்லர் வாங்கினால் அதை இயக்க டீசலுக்கும், பராமரிக்க உதிரி பாகங்களுக்கும் மீண்டும் கம்பெனிகளை சார்ந்து தான் ஆக வேண்டும். வண்டி மாடுகள் இப்போது தேவையே இல்லை… வியாபாரியிடம் சொல்லி விட்டால் அவரே மோட்டார் வண்டி வைத்து உற்பத்தியை அள்ளிச் சென்று விடுவார், எனவே, கிராமங்களிலும் மாட்டுப் பொங்கல் ஒரு சடங்காக இருக்கிறதே தவிற உணர்வு பூர்வமாக இல்லை.
கடந்த வருடம் நான் ஒரு வேலையாக குஜராத் மாநிலத்திற்கு சென்றிருந்தேன். தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது மாடுகள் மந்தை மந்தையாக நெடுஞ்சாலையை கடந்தன. குஜராத்தின் அந்த பகுதிக்கு சொந்தமான ‘காங்ரெஜ்’ ரக மாடுகள் மிரட்டும் மிக நீண்ட கொம்புகளுடன் சாலையில் போய்க்கொண்டிருந்தன. நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் மாடுகள் கடக்கும் வரை பொறுமையாக நிறுத்தப்பட்டிருந்தது. நாங்கள் சென்ற வண்டி முதலிலும் பின்னால் லாரி உட்பட பல வண்டிகளும் நின்றிருந்தன, கடைசியாக சென்ற காளை ஒன்று எங்கள் காரை கடக்கும் போது ஏனோ நின்று காரையே பார்த்துக் கொண்டு நின்றது, சுமார் இருபது வினாடிகளுக்கு பிறகு பொறுமை இழந்த நான் ஒலி எழுப்பச் சொல்லி வாகன ஓட்டியிடம் சொன்னேன். அவரோ, 'கூடாது, ஒலி எழுப்பினால் மாடு பயந்து கொள்ளும்’ என்று சொல்லிவிட்டு இன்னும் சில வினாடிகள் மாடு தானாக கடக்கும் வரை காத்திருந்து காரை செலுத்தினார். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் பின்னால் நின்ற எந்த ஓட்டுனரும் கூட ஒலி எழுப்பாததுதான். மாடுகளின் மீது அவர்களுக்குள்ள மதிப்பையும், அன்பையும் விளக்க இந்த ஒரு சம்பவமே போதுமே!
மாட்டுப்பொங்கலை வெறும் சடங்கு ரீதியாக நடத்திக் கொண்டு மாடுகளை சாலைகளிலும், பண்ணைகளிலும் நாம் எவ்வளவு இழிவு படுத்துகிறோம் என்ற நினைவு எனக்கு சுருக்கென்று தைத்தது. மாடுகளின் மீது நமக்குள்ள மதிப்பை காட்ட சங்க இலக்கியங்களும், பழங்கதைகளுமே உள்ளன. கோசாலை நடத்தும் ஒருவர் என்னிடம் அதை நடத்த மிகவும் கஷ்டப்படுவதாக சொன்னார். மேலும் அவர் கோசாலை நடத்துவதாயிருந்தால் குஜராத்தில் நடத்த வேண்டும். யாரிடமும் கேட்காமல் மாடுகளுக்கு உணவும் மற்ற தேவைகளும் தானே வந்து விடும். மாடுகளுக்கு தானம் செய்வதை அங்கே அத்தனை முக்கிய கடமையாக நினைக்கின்றனர் என்று சொன்னதும் நினைவிற்கு வந்தது.
மாடுகளின் இன்றைய நிலைக்கு ஒரே ஒரு அடிப்படையான எண்ணத்தை மட்டும் நாம் மாற்றிக்கொண்டால் போதும். அது, மாடுகளும் உணர்ச்சி உள்ள ஓர் உயிரினம் என்பது தான். மாடுகளை பெரும்பாலானோர் வெறும் பால் கொடுக்கும் ஒரு இயந்திரம் என்ற அடிப்படையில் பார்ப்பது வெண்மைப் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட ஓர் சாபமாகும். ஒரு முறை திரு. நம்மாழ்வாரை சந்தித்த போது எனது பண்னையில் என்ன என்ன செய்கிறேன் என்று சொல்லும் போது நான் பதினெட்டு மாடுகள் வைத்திருக்கிறேன் என்று சொன்னேன். அப்போது அவர், ‘மாடு உற்பத்தி பண்ணுங்க, பால் உற்பத்தி பண்ணாதீங்க’ என்றார். அவர் சொன்னது எவ்வளவு ஆழ்ந்த கருத்து என்று இரண்டு வருடங்களாக பண்ணை நடத்தி வந்த அனுபவத்தின் மூலம் உணர முடிந்தது. ஆனால், அதை இவ்வளவு எளிமையாக ஒரே வரியில் அடைத்தது அவரது சிறப்பு. நாம் பொதுவாக மாடுகளை பால் கொடுக்கும் இயந்திரமாகவே பார்க்கிறோம் என்பதற்கு இரண்டு சான்றுகளை முன் வைக்கிறேன்.
உழவர்களிடம் மாடுகளைப் பற்றி பேசும் போது பொதுவாக என்னிடம் கேட்கும் கேள்வி - ‘உங்களிடம் உள்ள மாடுகள் எவ்வளவு கறக்கும்?’ பதில் - ‘சுமார் மூன்று முதல் ஐந்து லிட்டர் கறக்கும்’. பெரும்பாலானோர் இதன் தொடர்ச்சியாக, என்னிடம் ஒரு மாடு இருந்ததுங்க… ஒரு வேளைக்கு பதினைந்து லிட்டர் கறக்கும், பதினெட்டு லிட்டர் கறக்கும் என்று பெருமை பேசுவர். நல்ல மாடு என்பது அது எவ்வளவு பால் கறக்கிறது என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது இவர்களுக்கு. அவர்களிடம் நான் கேட்பது, ‘அந்த பசு உங்கள் வீட்டில் எவ்வளவு கன்று ஈன்றது?’. அதற்கு ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த பதில், 'அது… ஒன்றரை இரண்டு வருடம் கறந்தது… பின்னர் பால் மறந்த பிறகும் இரண்டு மாதம் சினை நிற்கவில்லை… எனவே அதை அடி மாட்டிற்காக வியாபாரியிடம் விற்று விட்டேன்’ என்பதே. பொன் முட்டை இடும் வாத்தை அறுத்த கதை தான் இது. வருடத்திற்கு ஒரு கன்று ஈனும் அளவில் மாடுகளை பராமரிப்பதே பண்ணை இலாபகரமாக இருக்க உதவும். அதிகமாக கறக்கும் மாடுகளுக்கு தீவனச் செலவும் அதிகமாக ஆகும். விவசாயத்தில் அதிக மகசூல் தரும் இரகங்களுக்கு அதிக இடுபொருள் செலவு ஆவதைப்போல் அதிக பால் தரும் மாடுகளுக்கு அதிக செலவு செய்து ஊட்டமும் தீவனமும் அளிக்க வேண்டும். பண்ணையை இலாபகரமாக நடத்த எவ்வளவு பால் என்பதை மட்டும் பார்க்காமல் எவ்வளவு செலவுக்கு எவ்வளவு பால் என்பதை பார்க்க வேண்டும்.
இரண்டாவது எடுத்துக்காட்டு - சென்னைக்கு அருகில் உள்ள ஒரு நடுத்தர பால் பண்ணை ஒன்றை பார்க்கச் சென்றிருந்தேன். சுமார் ஐம்பது எருமை மாடுகள் கொண்டது அந்தப் பண்ணை. இந்த பயணம் என்னுடைய பசுக்களுக்கு நான் ‘பீர் பொட்டு’ போட வேண்டும் என்று வற்புறுத்தியதன் பேரில் அதைப் பற்றி நான் அறிந்து கொள்வதற்காகவும் அதை சாப்பிடும் மாடுகள் எவ்வளவு பால் கறக்கின்றன என்றும் தெரிந்து கொள்வதற்காகவும் நடந்தது. அங்கு நான் கண்டவை யாவும் எனக்கு வியப்புக்கு மேல் வியப்பை அளித்தன. முதலில் ஐம்பது எருமைகள் கட்டும் தொழுவம் நாங்கள் பதினெட்டு பசுக்கள் கட்டும் தொழுவத்தின் அளவே இருந்தது. பால் கறக்க வேண்டுமானால் ஒருவர் மாடுகளின் சப்பையை பிடித்து வேகமாக ஒரு புறம் தள்ள இன்னொருவர் கிடைக்கும் சந்தில் உடனே அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டாவது எல்லா எருமைகளும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தன. நான் அறியாத சாதி என்று நினைத்து கேட்ட போது அவை சாதாரண எருமைகள் தான், வெய்யில் என்பதையே அவை அறியாது என்பதால் அந்த நிறத்தில் உள்ளது என்றனர்! மூன்றாவது, அந்த பண்ணைகளில் மூன்று வேளை பால் கறக்கின்றனர் என்பது. காலை நான்கு மணிக்கு அரை மடி பால் கறந்து அவை உணவகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதில் கொழுப்பு குறைவாக இருக்கும். பிறகு ஏழு மணிக்கு மீண்டும் ஒரு முறை முழு கறப்பு. இந்த முறை கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் என்பதால் அவை 'ஐஸ்கிரீம்’ தயாரிக்கும் பால் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு கொடுக்கப்படுகிறது. வழக்கம் போல் மாலை நான்கு மணிக்கு இன்னொரு கறப்பு மீண்டும் பால் பண்ணைகளுக்கு.
இந்தப் பண்ணையில் நுழைந்தவுடனேயே வழுக்கமான சாணி கோமியத்தின் மணத்துடன் ஒருவித புளிப்பு மணமும் கலந்து வீசியது. அது தான் நான் தேடி வந்த பீர் பொட்டின் மணம். பீர் பொட்டு என்பது பீர் தொழிற்சாலைகளில் பீர் தயாரிக்க பார்லியை நொதிக்க வைத்து பிழிந்த பிறகு கிடைக்கும் சக்கை. அதே அரை குறை நுரையுடன் அன்னக்கூடைகளில் மாடுகளுக்கு வழங்குகின்றனர். ஒவ்வொரு முறை கறப்பதற்கு முன்னும் அதே தீவனம். இது மிகவும் மலிவு என்றும் வாங்கிய பதினைந்து நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். இல்லையானால் இதை விட அதிகமாக கெட்டுப் போகுமாம். இந்தப் பண்ணையின் உரிமையாளர் என்னிடம் மாடுகளுக்கு பீர் பொட்டு போட்டால் பால் கறக்க மடியில் கை வைக்கும் போது மாடு நம்மை 'பால் தானே… முடிந்தவரை கறந்துக்கோ’ என்பது போல் பார்க்கும் என்று பெருமையாக கூறினார்.
இங்குள்ள மாடுகள் நடப்பதே இல்லை. கட்டியது கட்டியபடியே இருக்கின்றன. அப்படியானால் சினை பிடிப்பது கடினமாக இருக்குமே என்று கேட்டேன். அதற்கு அவர், நாங்கள் இங்கு சினை பிடிக்க வைப்பதே இல்லை. பால் மறக்கும் தறுவாயில் மாடுகளை ஆந்திராவில் உள்ளவர்களிடம் விற்று விடுவோம். அவை அங்கு சென்று குழுவாக மேய்ந்து கொண்டிருக்கும், சினை பிடித்து கன்று ஈன்றவுடன் பால் கறக்க மீண்டும் அவர்களிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்வோம் என்றார். கன்றுடன் சில வரும்… வந்தாலும் கன்றுகளை உடனே விற்று விட்டு கன்று இல்லாமல் கறக்க பழக்கி விடுவோம் என்று தெரிவித்தார். அப்போது தான் எனக்கும் தோன்றியது… பால் கறப்பவர் அமரவே இடம் இல்லாத போது கன்றுகளுக்கு ஏது இடம்.
மாடுகளை விட பாலின் பால் உள்ள நம் பற்றுதலே இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளின் மூலம் புலனாகிறது. இந்த முறைகள் நீடித்த இலாபத்தை அளிக்க வாய்ப்பே இல்லை. அந்தந்த குடும்பங்கள் பத்து பதினைந்து வருடங்களில் பொருள் இலாபம் ஈட்டி இருந்தாலும் மாடுகளின் இனத்திற்கும், பாலின் சுவைக்கும், தரத்திற்கும், அவற்றை பருகும் நமது ஆரோக்கியத்திற்கும் ஊறு விளைவித்தே அது சம்பாதிக்கப்பட்டது. எனவே இதை ஓர் உள்ளடக்கிய வளர்ச்சியாக கருத இயலாது.
அப்படியானால் இதற்கு மாற்று என்ன? ஒரு மாட்டுப் பண்ணையை உழவன் எப்படி தற்சார்பாக, இலாபகரமாக நடத்துவது? மாடுகளின் இரகங்களைத் தேர்வு செய்வதில் இருந்து, கொட்டகை அமைப்பது, தீவனப் பராமரிப்பு, நோய் பராமரிப்பு, கன்றுகளை வளர்த்தல் என்று ஒவ்வொரு படியிலும் சிறிது மாற்றங்களை கொண்டு வந்தால் இது சாத்தியமே. திரு. நம்மாழ்வார் எடுத்துக்காட்டியது போல் மாட்டுப் பண்ணையா அல்லது பால் பண்ணையா என்ற தெளிவு ஏற்பட்டால் போதும். தற்சார்பான, இலாபகரமான ஒரு மாட்டுப் பண்ணையை எப்படி நடத்துவது என வரும் இதழ்களில் காண்போம்.