தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அக்கரை பார்வை - 17

தசாவதானி தேபல்தேப் - 2

தேபல் தேப் அவர்களின் சாதனைக‌ளையும், தனி ஒரு மனிதராக‌ 900க்கும் மேற்பட்ட நெல் வகைகளை அவர் சேமித்து பாதுகாத்து வருவதையும், கண்டோம். இவர் தனது இயற்கை பயணத்தை திரு. மாதவ் காட்கில் என்னும் தலை சிறந்த அறிவியலாளரின் கீழ் தொடங்கினார். அவர் சூழலியலிலும், குறிப்பாக‌ மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்ப்பன்மையம் பற்றிய ஆய்விலும் ஆழ்ந்த அறிவும் அக்கறையும் கொண்டவர். அவருடன் பணியாற்றியதை ஒரு பெரும் பேறாக கருதுகிறார். தேபல் தேப் மனித இன வல்லுனராக (anthropologist) வடிவெடுத்ததும் அப்படி ஒரு நிகழ்வுதான். கர்நாடகாவில் மங்களூருக்கு அருகில் கடற்கரை கிராமங்களில் மீனவர்களிடையே ஆராய்ச்சி செய்கையில், எப்படி வழி வழியாக மீன் பிடி திறன் மற்றும் பழக்கங்கள் வந்தன என்று நுணுக்கமாய் ஆய்ந்தார். எவ்வாறு ஒவ்வொரு பிரிவும் (அவர்கள் பின் வந்தவர்களாயின் வேறு விதமாகவும், முதலில் வந்தவர்கள் ஒரு விதமாகவும்) வலை வீசுவதில் கூட வித்தியாசமாய் இருந்தனர். ப‌ல்காலமாய் அங்குக் குடியுள்ள பிரிவினர், மிகவும் கடினமான முறையில் தலையின் மேலிருந்து சுழற்றி எறிகிறார்கள் என்றும் அதன் பின் வந்த குழுக்கள் வேறு மாதிரி எறிகிறார்கள். அப்படி அவர்கள் எறியும் விதத்திலிருந்தே எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்று கண்டு விட முடியும் என்றார்.

மேலும் பல மனித இன ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர், பின்னர் மனிதரையும் சுற்று சூழலையும் உற்று நோக்கும் அறிவியலாளரான இவர் செய்யும் பெரும் பங்களிப்புகள் பல. அவற்றில் ஒன்று தான் இவர் எழுதிய புத்தகம். 'Beyond Developmentality' (“மேம்படுத்துதல் சிந்தனையும் தாண்டி') என்னும் மிகவும் அருமையாக‌ பெயரிடப்பட்ட இந்த புத்தகம் உலக அரங்கில் உயர்வாக போற்றப்பட்டது. சுற்று சூழல், உயிர் பன்மயம், சூழலியல் (ecology), பற்றி விரிவாக பேசும் இந்த புத்தகம், development என்னும் வளர்ச்சி மாயையை உரித்துக்காட்டுகிறது. அந்த வளர்ச்சி எப்படி மேற்கூறிய அனைத்தையும் (சுற்று சூழல், பன்மயம், போன்றவை) பாதித்து அழிவை நோக்கி எடுத்து செல்கிறது என்பதையும், எப்படி இன்றைய 'முதலாளிகளும்', அரசியல்வாதிகளும், பொருள் மற்றும்அழிவையும் கண்டு கொள்ளாமல் இயற்கையை அழிக்கிறார்கள் என்று விளக்குகிறார். கடல், ஆறு, மலை, மண் போன்றவை காசால் வாங்கவோ அளக்கவோ இயலாதவை, இவற்றிலிருந்து நாம் எடுத்துக்கொண்டே இருப்பது எவ்வளவு ஆபத்து என்றும் சுரங்கம் போன்ற கேடான தொழில்நுட்பங்களின் ஆபத்தான பின் விளைவுகள் எல்லாம் விளக்கப்படுகின்றன.

வளர்ச்சி என்னும் மாய மான், புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதை போல், நாம் மேலை நாட்டவரை பார்த்து போட்ட தவறான வேடம். அதனால் கிராமப்புற இந்தியா அழிந்தது. இயற்கை (வளங்கள்) ஒரு சிலரின் கொள்ளை லாபத்திற்காக மட்டுமே சூறையாடப்பட்டது. லாப வெறி, தனி மனித பேராசை, நுகர்வு பொருளாதாரமும், கிராமப்புற இந்தியாவின் இனிய வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தையும் காவு வாங்கியது என்கிறார். நதி போன்ற பொது சொத்துக்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான வாழ்வாதாரங்கள் இன்று சில‌ தொலை நோக்கற்ற லாபங்களுக்காக பறிக்கப்படுகின்றன என்கிறார்.

இந்த புத்தகத்திற்காக உலக அளவில் பல பெரும் தலைவர்களும் பெரும் அறிஞர்களும் வெகுவாக இவரை பாராட்டி உள்ளனர். இப்படி உற்று நோக்கியதன் விளைவு, தேபல் அவர்கள் நமது பாரம்பரிய பழக்கவழக்கங்க‌ளை அறிந்து அவற்றை மேலும் மெருகேற்றி பிரபலப்படுத்துகிறார். அப்படித்தான் விவசாயிகளிடம் கற்ற நம் பாரம்பரிய நெல் வகைகளும் அவற்றின் பல நற்குணங்க‌ளையும் மேலும் அவற்றை போற்றி பாதுகாக்கும் வழி முறைகளையும் இப்படி ஒரு அற்புதமான நெல் பாதுகாப்பு மையமாக அமைக்கிறார் தேப் அவர்கள்.

சமுதாயத்தை உற்று நோக்கும் பொழுது, அருமையான, இயற்கையுடன் இசைந்து, பொறுப்பாக, சுற்று சூழலை மதித்தும் அழிக்காமலும் வாழும் தோங்ரியா கோந்த் போன்ற பழங்குடியின‌ரை சந்தித்து அவர்களது வாழ்முறையிலிருந்தும் பல மனித இன படிப்பினைகளை பெறுகிறார். அவர்களிடையே மறைந்து வரும் சில பழக்கங்களையும் மீட்க உதவுகிறார். இப்படி பழங்குடியினருடன் சேர்ந்து இவர் பணியாற்றும் பொழுது தான் அந்த அழகிய நியம்கிரி மலைகளை குடைந்து காசாக்க வேதாந்தா என்னும் கொடிய பன்னாட்டு அரக்கன் வந்தான். உலகெங்கும் கையூட்டு கொடுத்துக்கொடுத்தே இயற்கையை சூறையாடும் இந்த கொடிய கும்பனியின் வேடத்தை உரித்து இங்கு அந்த வேதாந்தாவின் வெறியாட்டத்திற்கு ஒரு தற்காலிக நிறுத்தம் கொணருவதில் இவருக்கும் பங்கு உண்டு.

இப்படித்தான் பல ஆண்டுகளுக்கு முன் 1979இல், இவர் கர்நாடகத்தில் ஆராய்ச்சி பணி புரிந்து கொண்டிருந்த பொழுது, ஹரிஹர் பாலி ஃபைபர் என்னும் நிறுவனத்திற்கு வேண்டிய மூங்கில் கழிகளை 1000 கிலோ 80 பைசா என்ற அடிமாட்டு விலையில் கொடுத்து வ‌ந்தனர் காட்டிலாக்கா அதிகாரிகள் என்பதை கண்டறிந்தார். அதே சமயத்தில் கிராமத்தவருக்கும் பழங்குடியினருக்கும் 1000 கிலோ ரூ.1000 என்று விற்ற‌னர்! இவர்கள் மிகவும் குறைந்த அளவு மூங்கிலே வாங்குவார்கள் - கூடை மற்றும் பாய் போன்றவை வேய்வதற்கு. அதற்கு இவர்களுக்கு இந்த அதிக விலை, நம் அரசாங்க இலாகாவில்! இதை எதிர்த்து இவர் போராடிய பொழுது, அவர்கள் உடனே அந்த கம்பனிக்கு விலையை 80 பைசாவிலிருந்து 80 ரூபாய் என்று உயர்த்தி, 100 மடங்கு உயர்த்தி விட்டதாக இந்த விஷயத்தை முடித்து விட்டனர், இது ஒரு அரசு துறையின் கேவலமான போக்கை சித்தரித்தாலும், இவரது போராட்ட குணத்தை எடுத்துக்காட்டுகிறது.

சென்ற இதழில் குறிப்பிட்ட பொய் வழக்கு போல் பல இன்னல்கள் வந்தாலும், தேபல் தேப் அவர்கள், 900க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதிலிருந்து கொஞ்ச‌மும் மாற மாட்டார் என்பது உறுதி. இவரைப்பார்த்து பலரும் இது போன்று நமது பாரம்பரிய விதைகளை பராமரித்தும், அப்படி முடியாதவர்கள், இந்த விதைகளையே விளைவித்தால், அன்னிய மற்றும் பெரும் கம்பனிகளிடமிருந்தும் விதையையும் விவசாயத்தையும் காப்பாற்ற முடியும். சமீபத்தில் ஒரு பன்னாட்டு விதை நிறுவனம் இவரிடம் உவர்நிலத்திலும் உப்பு நீரிலும் விளையக் கூடிய நெல் ரகம் இருக்கிறதா என்று கேட்டு ஒரு கடிதம் எழுதியது. இவர் அதைத் தர மறுத்ததோடன்றி , 'விதை என்பது பொதுச்சொத்து, பாரம்பரிய ரகங்களில் இருந்து புது விதைகளை உற்பத்தி செய்து அவற்றைத் தனியார் மயமாக்கி லாபம் சம்பதிப்பது மிகக் கேடான செயல்' என்று அந்த நிறுவனத்தைக் கடுமயாகச் சாடி ஒரு பதில் கடிதம் எழுதினார்.

விவசாயிகளுக்காக விவசாயிகலின் சொத்தான பாரம்பரிய விதைகளை பாதுகாது வரும் நம் விதை வீரர், தேபல் தேப் அவர்கள், ஓவ்வொரு வருடமும் , நம் நாட்டு ரகங்களை பாதுகாக்கும் முறைகளை பற்றியும் இந்த ரகங்கள் பரவவும், பன்னாட்டு கம்பனிகளின் கைக்கலிக‌ளிடம் சிக்கிடாமலும் இருக்க, இந்தியா முழுவதிலிருந்தும் விவசாயிகளுக்கு, 2 முதல் 7 நாட்களுக்கு விதைப் பெருக்கப் பயிலரங்கம் (Land races seeds workshop) நடத்துகிறார். நடவு, பூக்கும் சமயம் மற்றும் அறுவடை சமயங்களில் பங்கேற்குமாறு இதை வடிவமைக்கிறார். இவ்வருடம் தாளாண்மை இதழின் சார்பாக நண்பர் ஜயகுமார் இப்பயிலரங்கத்தில் கலந்து கொள்கிறார். அடுத்த வருடம் முதல் தாளாண்மை முன் கூட்டியே அந்த செய்திகளை அச்சிடும்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org