தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - டாக்டர் நிவேதிதாமனிதா

இயற்கையின் உயரிய படைப்பு மனிதன். மனிதனின் உடல்திறனும்,மூளை திறனும் அளவற்றது. இயற்கை நெறியில், இயற்கை சூழலில் இயற்கை உணவில், இயற்கை வாழ்வியலில் இருந்தபொழுது மனிதனுக்கு உயிரோட்டமுள்ள தூய காற்று, நீர், உணவு ,இருப்பிடம் இலைகளால் வடிகட்டிய கதிரவன் ஒளி, இயல்பான உழைப்பு, உயரிய பண்புள்ளம் எல்லாம் கிடைத்தது. எனவே எங்கும் மா முனிவர்களும், ஞானிகளும், அறச்செம்மல்களும், மேதைகளும் நிறைந்து காணப்பட்டனர். அமைதியும் மகிழ்ச்சியும் சூழ்ந்திருந்தது. வேதங்களும், உப நிடதங்களும், அறநெறி நூல்களும் நித்தம் நிறைவேற்றப்பட்டன.

ஆனால் இன்றோ அதே மனிதன் தன்னுடைய வேலைகளை கூட தானே செய்ய இயலாமல், விரும்பிய உணவை உண்ண இயலாமல் சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, கேன்சர், சிறுநீரககோளாறு என பலபல வாழ்நாள் நோய் களையும், கண்ணுக்கே தெரியாத நித்தம் தோன்றி மறையும் கிருமிகளையும் கண்டு பீதியில் வாழ்ந்து வருகிறான். எந்த நோய் எப்பொழுது வருமோ என்ற அச்சத்தில் முகமூடிகளையும், தடுப்பூசிகளையும் ஆட்கொல்லி மருந்துகளையும் விழுங்கிக்கொண்டு குழப்பத்தின் உச்சியில் மனநோயாளியாக நாட்களை கடத்திக்கொண்டுள்ளான்.

ஏன் இந்த மாற்றம்? ஏன் இந்த பயம்?

இயற்கையிலிருந்து மனிதன் மாறிவிட்டான். இயல்பும் மாறிவிட்டது. தேவைக்கு மீறிய நுகர்தலினாலும், இயற்கையை தன்வயபடுத்த முயன்றதலினாலும், பொருளாதாரமே அனைத்துக்கும் அடிப்படை ஆகிவிட்ட காரணத்தினாலும், சான்றோர்களின் வழிகாட்டுதல் இன்மையினாலும் அவசரகதியினாலும் இலக்கில்லாமல் ஓடும் மனிதனது வாழ்க்கை மனதிலும், சுற்றுபுறத்திலும் மாசுக்களை உருவாக்கி மனம் மிகவும் அழுத்தப்பட்டு பல நோய்கள் உருவாக ஆதாரமாகிவிட்டது.

மெக்காலே கல்வியின் பயனாக தொன்மை மிகுந்த தாய்நாட்டு கலாச்சாரமும், பண்பாடும், கல்வி முறைகளும், கலைகளும் தொழில்நுட்பங்களும், மருத்துவமும் மறுக்கப்பட்டது, மறக்கப்பட்டது. சூரியனை சூழ்ந்த மேகம் போல இன்று இவை விலக தொடங்கி விட்டது.

இயற்கை வேளாண்மைப் பயிற்சி முகாம்கள், இயற்கை வாழ்வியல் கருத்தரங்குகள், சுற்றுச்சூழப் விழிப்பு முகாம்கள், சான்றோர்களின் சத்சங்கங்கள், இயற்கை மருத்துவத் தேடல்கள் என இயற்கையை நோக்கிய பயணம் துவங்கி விட்டது. அதன் ஒரு அம்சமாக இயற்கை மருத்துவத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம் என்பது இயற்கையாகவே உடலில் உள்ள சக்தியைக் கொண்டும், யோகாசனம் , பிராணாயாமம் போன்ற பயிற்சிகளின் மூலமாகவும் ஆரோக்ய வாழ்க்கையை அளிக்கும் ஒரு அற்புத, தெய்வீக, ஒப்புயர்வற்ற மருத்துவ முறை ஆகும்.

நம் நாட்டு இயற்கை மருத்துவத்தின் அடிப்படை

(1) உடல் தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும், அதன் இயல்பை அறிந்து இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தும்போது அனைத்து விதமான நோய்களையும் சரிசெய்து கொள்ள இயலும், மேலும் நோயே வராமலும் தடுக்க இயலும்,

(2) கழிவுகளின் தேக்கமே நோய் கழிவு நீக்கமே அதற்கான சிகிச்சை

(3) நோய் ஒன்றே, பல அல்ல .

உடலின் இயல்பு

உடலானது பல்வேறு உறுப்புகளாலும், உறுப்புகள் திசுக்களாலும் செல்களாலும் ஆனது. செல் உடலின் அடிப்படை, செல்களின் ஒட்டு மொத்த தேவை உணர்வுகளின் மூலம் வெளிப்படுகிறது. செல்களுக்கு சக்தி தேவைப்படும் போது பசி உணர்வு ஏற்படுகிறது. நீர் தேவைப்படும் போது தாகம் எடுக்கிறது. தேவையை பூர்த்தி செய்யும் போது உடல் நலத்தோடு, முழு சக்தியோடு இருக்கிறது. இதையே நம் முன்னோர்கள் “பசித்துப் புசி” என்றனர். பசித்திருக்கும் போது அனைத்து உறுப்புகளும் உணவை எதிர்பார்த்திருக்கும். ஜீரணத்திற்கு தயாராக அமிலங்களையும் பிற சுரப்புகளையும், உமிழ்நீரையும் சுரந்திருக்கும். கொடுக்கப்படும் உணவு முழுமையாக ஜீரணிக்கப் பட்டு, சத்துக்கள் உட்கிரகித்து செல்களின் தேவையை பூர்த்தி செய்யும். தேவை அற்றவை கழிவுகளாக வெளியேற்றப்படும். மாறாக பசியில்லாத போது ஜீரண உறுப்புகள் தயாராக இல்லாதபோது உண்ணும் உணவு எளிய உணவாகவே இருப்பினும் ஜீரணிக்காமல் நீண்ட நேரம் வயிற்றில் தங்கி புளித்து போகும். இது கழிவு தேக்கத்திற்கு வழி வகுக்கும்.

தாகத்திற்கு தண்ணீர்

தாகம் -செல்களில் வெப்பமிகுதியால் ஏற்படும் நீர் தேவை. அப்பொழுது நீர் அருந்தும் போது செல்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு குளிர்ச்சி ஏற்படுகிறது. மாறாக குளிர்பானங்கள், உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கி செல்களை சுருங்கச்செய்யும். காலப்போக்கில் உறுப்புகள் சுருங்கி நிரந்தர வாழ்நாள் நோய்களை ஏற்படுத்தும்.

ஓய்வு

ஓய்வின் போது உடலின் இயக்க சக்தி, ஜீரண சக்தி போன்றவையும் ஒருங்கிணைந்து உடலின் பழுதுபட்ட செல்களை சீர் செய்ய பயன்படுகிறது. ஓய்வில்லாமல் வேலை செய்யும் ஒருவர் விரைவில் நோய்வாய்படுவதையும், நோய்வாய்பட்டவர் ஓய்வெடுத்தால் குணமாவதையும் கண்கூடாக காணலாம்.

இயற்கையோடு இயைந்த வாழ்வு

உடல் பஞ்சபூதங்களால் ஆனது. பஞ்சபூதங்களின் உயிராற்றல் செறிவே உடலின் உயிராற்றல். உயிராற்றல் மிகும்போது உடல் முழு சக்தியோடு இயங்குகிறது. உயிராற்றல் மிகுந்த மரங்களின் காற்றை சுவாசிக்கும் போது, சூரிய ஒளியால் செறிவூட்டபட்ட இயற்கை வேளாண் முறையில் விளைவித்த கனிகள், கொடிகாய்களை உண்ணும்போதும் காற்றும், சூரிய ஒளியும் பட்டு ப்ராணன் மிகுந்த மண்பானை நீரை பருகும்போது, மண்ணோடும், நீரோடும் காற்றோடும், வானோடும் உடல் உறவாடும் போதும் உயிராற்றல் அதிகரிக்கிறது. இதன் மூலம் உடல் தன்னை தானே சரிசெய்து கொள்கிறது.

கழிவு தேக்கம் -நோய் கழிவு நீக்கம் -ஆரோக்யம்

தினமும் நாம் சுவாசிக்கும் காற்றில் அருந்தும் உணவில் ,பருகும் நீரில், பயன்படுத்தும் தினசரி பொருட்களான பற்பசை, சோப்பு, பாத்திரம் தேய்க்க, தலை குளிக்க, துணி துவைக்க என பயன்படுத்தும் ரசாயன‌ங்களின் மூலமாகவும் வேளாண் பொருட்களில் உள்ள ரசாயண உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மூலமாகவும், குடிநீரில் பயன்படுத்தும் குளோரின் போன்ற வேதிபொருட்களாலும் உடலின் இயல்பை மீறுவதாலும், கழிவுகள் தேங்குகின்றன.

இக்கழிவுகள்:

வெளி சுவாசத்தின் மூலமும்

தோலின் வழியே வியர்வையாகவும்

சிறுநீரகத்தின் மூலம் சிறுநீராகவும்

மலக்குடல் மூலம் மலமாகவும்

வெளியேறுகின்றன. இவ்வாறு வெளியேறாமல் உடலில் தங்கும் போது விஷவாயுக்கள் அவற்றிலிருந்து உருவாக ஆரம்பித்து அவை இரத்தத்தின் மூலமாக உடல் எங்கும் பரவ ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு உறுப்பும் ஊட்டச்சத்தை பெறுவதற்கு பதிலாக கழிவுளைப் பெறும் போது செயலிழக்க ஆரம்பிக்கிறது. இதுவே நோய். எனவே கழிவு தேக்கமே நோய். அது எந்த உறுப்பில் அதிகம் சேர்கிறதோ அவ்வுறுப்பை மையப்படுத்தி அந்நோய்க்கு பெயரிடுகிறோம்.

(உம்). தொண்டையில் கழிவு தேக்கம், நிகழும் போது அக்கழிவை உண்ண கிருமிகள் வருகின்றன. அக்கிருமிகளை அழிக்க உயிராற்றல் போராடுகிறது. அதன் விளைவாக டான்சில் என்ற தற்காப்பு உறுப்பு வீக்கம் அடைந்து கிருமிகளை உள் நுழையாமல் தடுத்து உணவு குழாய்,வயிறு,குடல் போன்ற உள்உறுப்புகளை காக்கிறது. டான்சில் வீக்கம் ஒரு தற்காப்பு அமைப்பு. இதன் பெயர்(டான்சிலைட்டிஸ்) நோயாக கருதப்படுகிறது.

இதைச் சரி செய்ய வேண்டுமாயின் தேங்கியுள்ள கழிவை நீக்க வேண்டுமே தவிர உறுப்பை வெட்டியெடுப்பது முறையாகாது. இதனால் தான் பின்னாளில் (வாயில் காப்பாளனாக இருந்த டான்சில் என்ற உறுப்பை எடுப்பதால்) மலட்டு தன்மை, வயிற்றில் தீராத புண், புற்றுக் கட்டிகள், மேலும் அறுவை சிகிச்சையின் போது கொடுக்கும் மயக்க மருந்து, ஆண்டிபயாடிக்ஸ் போன்ற மருந்துகளால் மூளை நரம்புகள் திறன் இழத்தல், ஆண்டிபயாடிக்ஸ் எதிர்ப்புதன்மை வளர்தல் (Antibiotic Resistance) இதனால் உயிராற்றல் குறைக்கப்பட்டு வாழ்நாள் நோயாளிகளாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்நிலையே உண்மையில் நோய், இதைப்போலவே ஆர்த்ரைடிஸ் என்ற நோய் குறிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்டோரில் முக்கால் பங்கு இந்நோயால் வருந்துபவர்களாக உள்ளனர்.

ஆர்தோ-இணைப்பு (Joints) மூட்டு கழிவு மூட்டுகளில் தேக்கம் கொள்ளும் போது அதை வெளியேற்ற உயிராற்றல் பேராடுகிறது. அதன் விளைவாக மூட்டுகளில் வீக்கம் ஏற்படுகிறது. இதற்கு ஆர்த்ரைடிஸ் என்ற பெயர். சூட்டுகின்றனர். இதற்கு கழிவுகளை நீக்குவதே சரியான முயற்சியாக இருக்கும். மாறாக வலி நிவாரண மாத்திரைகள் மேலும் மேலும் கழிவுகளை உண்டுபண்ணி நிரந்தர பழுதை ஏற்படுத்தி விடுகின்றன. இவையே நோய்.

இதே போல்தான் ஒவ்வொரு நோயும், உடல் தன் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் தவிக்கும் போது தான் நோய் உருவாகிறது.

இதற்கு இரண்டு காரணங்களைக் கூற முடியும்,

உயிராற்றல் குறைந்து போயிருத்தல் கழிவுகள் வெளியே இயல்பாக வெறியேற்ற இயலாத அளவு கடுமையாக நாட்பட்டதாக இருத்தல் இவ்விரண்டு காரணங்களையும் இயற்கை மருத்துவம் சரி செய்கிறது. கழிவு நீக்க சிகிச்சைகளும், உயிராற்றல் கூட்டும் முயற்சிகளுமே இயற்கை மருத்துவம்

கழிவு நீக்க சிகிச்சைகள்

பழங்காலத்தில் வாழ்க்கை நெறியாகவே நமது முன்னோர்கள், இதைச்செய்து வந்தனர். ஆறு மாதத்திற்கொரு முறை பேதி எடுத்துக் கொள்வர். இதில் மலக்குடல் மட்டுமின்றி முழு ஜீரண மண்டலமும் சுத்தம் செய்யப்படும். வருடம் ஒரு முறை பாதயாத்திரை செல்வார்கள். தொடர்ந்து நடப்பதன் மூலம் தோல் துவாரங்கள், நுரையீரல் சுத்தம் செய்யப்படுகிறது. கோவில் சென்று அருவியில் நீராடும் போது உடல் சூடு முதல் அனைத்து அசௌகர்யங்கள் முதல் மன அழுத்தம் வரை அனைத்து வியாதிகளும் விடுபடுகின்றன.

இத்தகு பயிற்சிகளையே முறையாக, இயற்கை மருத்துவத்தில் செய்கிறோம்.

கழிவுநீக்க உறுப்புகள் சிகிச்சை முறைகள் சுவாச பாதை உபவாசம், நீராவி பிடித்தல், மண்பட்டி போடுதல் , ஜல தேத்தி கிரியை ப்ராணாயமம் தோல் எண்ணெய் மசாஜ், அதிர்வு (Vibrator) மசாஜ், நீராவி குளியல், மண்குளியல், வாழை இலை குளியல், சூர்ய வண்ணக்குளியல் சிறுநீரகம் செயற்கை அருவி குளியல் (Jet bath) , இடுப்பு குளியல், தொட்டி குளியல், முதுகு தண்டு குளியல், முழு உடல் குளியல் ஜீரண பாதை (மலக்குடல்) எனிமா, லகு சங்க ப்ரக்சாலனா க்ரியா, வாமன தோத்திகிரியா, இயற்கை உணவுகள் கல்லீரல் கல்லீரல் சுத்திகரிப்பு சிகிச்சை மனது மனதை இதமாக்கும் சில வாசனை /பூக்கள் கொண்டு செய்யப்படும் சிகிச்சைகள் (அரோமா சிகிச்சை) யோகா பயிற்சிகள், மற்றும் சத்சங்கம் (உரையாடல்கள்) பஜனைகள்.

இயற்கை மருத்துவம் எவ்வித பக்கவிளைவு இல்லாதது. எளிமையானது. சிக்கனமானது. சுற்று சூழலுக்கு உகந்தது. அனைத்திற்கும் மேலாக நமக்குள் இருக்கும் மருத்துவரை, மருந்து தொழிற்சாலையை நமக்கு உணர்த்தி ஆரோக்யமான வாழ்விற்கு வழிகாட்டுகிறது. இயற்கை வாழ்வியல் தவறியபோது இயற்கை மருத்துவத்தின் மூலம் மீண்டும் நமது பாரத தேசத்தை சோலைகள் மிகுந்ததாக மாற்றுவோம்.

இயற்கையோடு இயைந்து இன்பமாக வாழ்வோம்.

பத்மசூ£¤யா, இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை 14/28,கண்டியகவுண்டன்புதூ£¢ கண்ணமநாயக்கனூ£¢ (அஞ்சல்) உடுமலைப்பேட்டை. தொலைபேசி நெ.9367522111 இ.மெயில்.drnivebnys@ gmail.com.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org