தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பாரம்பரிய‌ நெல் திருவிழா - அனந்து

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் புளியங்குடியைச் சேர்ந்த தமிழகத்தின் முன்னோடி இயற்கை விவசாயியான‌ திரு.கோமதிநாயகம் அவர்கள் சென்னையில் ஒரு சொற்றுரை ஆற்றும் பொழுது, “ஒரு நெல் நட்டால் நூறு நெல் ஆகிறது; இன்னும் ஏன் உயர் விளைச்சலுக்கு ஆசைப்பட வேண்டும். விவசாயத்தில் ஆசைக்கு இடமுண்டு, பேராசைக்கு அல்ல” என்று இயற்கை விவசாயத்தைப் பற்றியும் நவீன விதைகளைப் பற்றியும் பேசினார். அவ்வுரையால் பெரிதும் தாக்கம் ஏற்படுத்தப் பட்ட இயற்கை விவசாய நண்பரொருவர் தற்சார்பு வேளாண்மையை ஆதரித்து இவ்வாறு ஒரு வெண்பா எழுதினார்.

ஒருநெல் விதைக்க ஓராயிரம் நெல்லாம்

இருந்தும் விதை மோகம் ஏனோ - எருவும்

விதையும் மருந்தும் வீட்டிருந்தே கொண்டால்

எதையும் வெல்லாதோ ஏர்

( ஒற்றை நாற்று முறையிலே ஒரு நெல் ஓராயிரம் நெல்லைத் தாண்டி விளைவதை அவர் குறிப்பிடுகிறார்.)

விதை என்பது உழவின்/உயிரின் அடிப்படை. அதை நாம் இழந்தோமானால் எல்லாமே இழந்து விடுவோம்.

வரகு சாகுபடியைப் பற்றி எழுதும் பொழுது ஜெய்சங்கர் எப்படி விதையை விற்க விவசாயி மறுத்து விட்டார் என்றும் வாங்கிய விதையை ஒன்றரை மடங்கோ இரண்டு மடங்கோ அறுவடைக்குப் பின் தந்து விட வேண்டும் என்றும் கூறியதைக் குறிப்பிட்டிருந்தார். இறையாண்மை, உயிர்ப்பன்மையம் என்றெல்லாம் மேடைகளில் நீட்டி முழக்கும் நாம் செயலில் பின்தங்கி இருக்கிறோம்; தேபல் தேப் போன்ற செயல்வீரர்கள் அமைதியாக விதைகளைப் பாதுகாத்து வருகின்றனர். அந்த வரிசையில் தணல் இயக்கமும், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழிநடத்துதலில் திருத்துறைப்பூண்டி திரு.ஜெயராமனும் இணைந்து கிரியேட் என்னும் அமைப்பில் நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல்ரகங்கள் பலவற்றைப் பாதுகாத்து வருகிறார்கள். அவற்றை உழவர்களுக்குப் பண்ட மாற்று முறையில் கொடுத்துப் பெருக்கி வாங்கிச் சேமித்தும் வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆதிரங்கத்தில் கட்டியமேடு என்னும் கிராமத்தில் இந்த விதை சேமிப்பாளர்களும், சிரியேட் அமைப்பாளர்களும் மேலும் பலரும் கூடி ஒரு பாரம்பரிய நெல் திருவிழா நடத்துகிறார்கள். இந்த ஆண்டு அங்கே சென்ற அனுபவம் எனக்கு மிக இனியது.

திருத்துறைப்பூண்டியிலிருந்து ஆதிரங்கத்திற்குப் பேருந்தில் செல்லும் பொழுதே சில விவசாயிகளை பார்க்கிறேன்! அவர்கள் அங்கு கட்டிமேடு கிராமத்தில் கிரியேட் ஜெயராமன் அவர்களின் விதைப்பண்ணைக்கே செல்கிறார்களென்பது பேச்சுக் கொடுத்த‌ போது தெரிந்தது. மேலும் கட்டிமெடு கடைத்தெரு பேருந்து நிலயத்திலிருந்து நடந்து செல்கையில் பல விவசாயிகளும் தோளிலோ தலை மீதோ நெல் மூட்டைகளை சுமந்துக்கொண்டு வந்து அதனை கொடுத்து பதிவு செய்துக்கொள்கின்றனர். இவர்கள் கடந்த வருடம் எடுத்துச்சென்ற விதையிலிருந்து எடுத்த நெல்விதைகளை இங்கு மீண்டும் கொடுக்கின்றனர்.

இந்த நெல் பரிமாற்றம் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் நடைபெறுவதை காண மிகவும் மகிழ்ச்சியாக‌ இருந்தது. ஒவ்வொரு வருடமும் இங்கு வந்து விதையை பண்ட மாற்று முறையில் கைமாற்றிக்கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே தான் இருக்கிறது!

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், தமிழ் நாடு வேளாண் பல்கலைகழக துணை வேந்தர் மரு. ராமசாமி, ஓய்வு பெற்ற நீதிபதி திரு சடையாண்டி, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ரவிசங்கர், தனல் ஸ்ரீதர், அரச்சலூர் செல்வம், காவிரி தனபாலன், மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் 60 நாள் முதல் 180 நாள் வரை உள்ள பாரம்பரிய நெல் வகைகள் மாற்றிக்கொள்ளப்பட்டது. இவற்றில் பல வறட்சி, வெள்ளம், மழை போன்ற இயற்கை சீற்றங்களை தாங்கி வளரக்கூடியவை. உவர் நிலத்தில், கடற்கரை ஓர நிலங்கள் போன்ற கடினமான சூழலிலும் வளரக்கூடிய ரகங்களும் இருந்தன.

உற்பத்தி முதல் சந்தை படுத்துதல் வரை பல்வேறு குழுக்களாக அமைக்கப்பெற்று பல வல்லுனர்களால் கலந்துரையாடலும், அனுபவம் வாய்ந்த விவசாயிகள் தங்கள் அனுபவங்களை பகிர்தலும் நடை பெற்றது. சிலர் விவசாயிகுழுக்கள் அமைத்து producer company பற்றிய கலந்துரையாடலில் இருந்தனர்.

இந்த நெல் திருவிழா நடைபெற்ற 25ம் தேதி உலகெங்கும் விதை மற்றும் மரபீனி மாற்று விதை வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் மொன்சன்டோவை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. 300க்கும் மேற்பட்ட இடங்களில் எல்லா கண்டங்களிலும் நடத்தப்பட்ட இந்த “march against monsanto” என்னும் உலகளவிய எதிர்ப்பு போராட்டம் பற்றி நம்மாழ்வார் அவர்கள் மிக அழகாக விளக்கி எப்படி நம் விவசாயிகளை பாதிக்கும் என்றும், வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் எப்படி அழிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மரபீனி மாற்று விதை பற்றிய சந்தேகங்களும் கேள்விகளும் எதிர்ப்பாளர்களும் விவசாயிகள் மட்டும் எழுப்பவில்லை, உலகெங்கிலும் பல அறிவியலாளர்களே பல ஆராய்ச்சிகள் செய்தும் பல ஆய்வுகளை நடத்தியும் வெளியிட்டுள்ள 400க்கும் மேற்பட்ட அறிவியலாளர்களின் குறிப்புகளை கவிதா குருகந்தி அவரகள் தொகுத்துள்ளார்கள். அது ஒரு புத்தக வடிவில் இப்பொழுது வந்துள்ளது. அதனை தணல் இயக்கத்தின் ஸ்ரீதர் அவர்கள் வெளியிட நம்மாழ்வார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மாநிலமெங்கிருந்தும் 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பல விவசாயி குழு தலைவர்கள் எல்லாம் வந்திருந்து சிற்ப்பித்தனர்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org