தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பழையதோர் உலகம் செய்வோம் - ராம்

மே 2013 , 29-30 தேதிகளில் ஆரோவில் அற‌க்கட்டளையின் கீழ் இயங்கும் இயற்கை விவசாயப் பயிற்சி மையத்தில் “உயிர்ப்பன்மயமும் இயற்கை விவசாயமும்” என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பயிலரங்கில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஆரோவில்லைச் சார்ந்த பன்மயம் நிறைந்த காடான பிச்சாண்டிகுளம் காட்டில் இந்தப் பயிலரங்கு துவங்கியது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த‌ ஜாஸ் ப்ரூக்ஸ் என்னும் இயற்கைப் பாதுகாவலர், முதலில் பன்மயத்தைக் காப்பதின் முக்கியத்துவத்தைக் குறித்தும், 30 ஆண்டுகளாகத் தான் நட்டு வளர்த்த காட்டைக் குறித்தும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். “சில மரங்களின் பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர, நேரில் பார்த்ததில்லை; மற்றும் சில மரங்களை தினமும் பார்க்கிறோமே தவிர அவற்றின் பெயரோ, குணமோ நமக்குத் தெரிவதில்லை; இங்கு நம் கிராமங்களில் உள்ள இத்தனை மரங்களையும், செடிகளையும் ஒரே சமயத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய விஷயம்”, என்றார், அதே பகுதியில் விவசாயம் செய்யும் ஒரு விவசாயி.

தொடர்து, 15 தலைமுறையாக நாட்டு வைத்தியம் செய்து வரும் குடும்பத்தை சேர்ந்த திரு. லோகநாதன் அவர்கள், வந்தவர்களிடம், 700 க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளை நமது பாரம்பரிய முறைப்படி எவ்வாறு மருத்துவத்தில் பயன்படுகின்றன‌ என்று விளக்கிக் கூறியபோது, வயதில் மூத்த‌ கடலூரைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர், “எனது வாழ்வில் முக்கால் பகுதியை இந்த விவரங்கள் தெரியாமல் கழித்துவிட்டேனே!” என்று வருந்தினார்.

பெப்பல் கார்டன் என்ற பண்ணையில் இருந்து வந்த, தீபிகா, எவ்வாறு பாரம்பரிய விதைகளைச் சேமிக்க வேண்டும் என்றும், அவற்றால் எந்த அளவிற்கு விளைச்சல் செய்யமுடியும் என்றும், எவ்வாறு அத்தகைய பாரம்பரிய விதைகளைக் கொண்ட காய்கறிகள் நமக்கு மேலும் உடல் நலத்தை கொடுக்கும் என்று கூறியபோது, பலரும் தங்கள் ஊர்களில் மறைந்து கொண்டிருக்கும் காய்கறிவகைகளை நினைவு கூர்ந்தனர். அவற்றின் சுவை, தரம், மறைந்து கொண்டிருக்கும் அவற்றை சமைப்பதற்கான முறைகள், என்று பல உரையாடல்கள், மதிய உணவு வரை தொடர்ந்தன.

மதியம், மற்றொரு ஆரோவில் விவசாயியான ஜெப் என்பவரின் தோட்டத்தைச் சுற்றிப்பார்த்த விவசாயிகளுக்கு மேலும் வியப்பு. “எங்க பண்ணையில், போர் போட்டு நீர் பாய்ச்சி, நெல்லு நட்டு விவசாயம் செய்து எவ்வளவு பணம் சம்பாதிக்கிறேனோ, அதைவிட, அதிக பணத்தை சம்பாதிக்கும் இந்த மனிதன், வெறும் ரெண்டு கிணற்று தண்ணீரை வைத்துப் பாசனம் செய்து, பல்வேறு விதமான பழங்கள், காய் கறிவகைகள், மற்றும் கீரைகளை கொண்டு சொட்டு நீர் பாசனத்தால் செய்கின்றார்”, என்று ஒரு பெண் விவசாயி பெருமூச்சு விட்டார்! “இவ்வளவும் இவர் இயற்கையையாய் செய்வதனால், இடு பொருட்களைப் பண்ணையிலேயே உருவாக்குகிறார், அதனால் செலவும் இல்லை” என்கிற போது, எப்படி நாம் இதை மறந்து போனோம் என்கின்ற கேள்வி எழாத மனம் இல்லை.

விவசாயி பிழைக்க வேண்டுமானால், மீண்டும் பழைய விவசாய முறைகளுக்கே மாற வேண்டும் என்பது மீண்டும், மீண்டும் பல்வேறு வடிவங்களில் நமக்குப் புலனாகிறது. விவசாயத்தை மட்டுமல்ல, வாழ்முறையும் மீட்க வேண்டும் - பழையதோர் உலகம் செய்ய வேண்டும்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org