ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் கோடையின் வெப்பத்திலும், வறட்சியிலும் வாடிக்கொண்டிருக்கும் வைகாசி மாதம் இது. மழை வராதா என்ற ஏக்கம் அனைவர் மனதிலும் தோன்றுகிறது. “வான் மழை இல்லையென்றால் வாழ்வுண்டோ” என்று பாரதியைப் போல் ஏங்குகிறோம். மழை வருவதற்கு முன்னால் அழகிய பறவைக்குரல் ஒன்று நம்மை உற்சாகப் படுத்துகிறது. அதுதான் அக்கோ குயில் அல்லது பருந்து குயில் என்று பெயருடைய மழை வேட்கும் குயில்.
Hierococcyx varius என்ற பல்லுடைபடும் பெயரால் படித்தவர்களால் அழைக்கப்படும் இப்பறவைக்கு ஆங்கிலத்தில் Common Hawk-Cuckoo என்று பெயர். இதன் ஏங்கும் குரலும் இறைஞ்சும் ஓசையும் பல மொழிகளில் இதற்குப் பல பெயர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்தியில் இதன் பெயர் “பியா கஹா?” (எங்கே என் காதலன்); வங்க மொழியிலோ “சோக் கெலோ” (என் கண்ணே போச்சு!); மரத்தியில் “பாவோஸ் ஆலா” (மழை வருது); ஆங்கிலத்தில் Brain Fever (மூளைக் காய்ச்சல்). இந்தியாவில் இவை இமயமலை முதல் குமரி வரை வாழ்கின்றன. காடுகளில், வயல்களில், மரங்கள் அதிகமுள்ள இடங்களில் வசிக்கின்றன. புறாவின் உடல் அளவுள்ள இவை (35 cm ) சாம்பல் நிறத்தில் பார்ப்பதற்கு வல்லூறு போன்று இருக்கும். ஆண் பெண் ஒரே நிறத்தில் இருக்கும் பூச்சிகளையும், புழுக்களையும் உண்ணும் இவை , கம்பளிப் பூச்சிகளை விரும்பி உண்ணும். கம்பளிப்புழுவில் தோலில் உள்ள முள்ளை எடுத்து விட்டு விழுங்கும்!