சிறுதானியங்கள் என்று குறிப்பிடப்படும் அருந்தவசங்களான தினை, வரகு, குதிரைவாலி, சாமை, காடைக்கண்ணி போன்றவை இன்று மக்களிடம் புதியதொரு வாய்ப்பைப் பெற்று வருவதைக் காண முடிகிறது. தமிழகமெங்கும் மரபுசார் உணவுத் திருவிழாக்கள் என்ற பெயரில் இந்த அருந்தானியங்களின் சமையல் களைகட்டி வருகிறது. தானியம் என்ற சொல் 'தான்யா' என்ற வடமொழி அடிப்படையான சொல் என்றும், தவசம் என்பது தூய தமிழ்ச் சொல் என்றும் மொழியறிஞர் பாவணர் குறிப்பிடுவார். சங்க இலக்கிய காலத்தில் தினையும் வரகும் பிற அருந்தவசங்களும் மக்களிடம் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்திருந்ததைக் காண முடிகிறது. உணவு என்றாலே அது வரகும், தினையும், கொள்ளும், அவரையும்தான் என்று அடித்துச் சொல்லுகிறார் புலவர். 'கருங்கால் வரகே இருங்கதிர்த்தினையே சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கல்லது உணாவும் இல்லை' (புறநானூறு: 335) என்று மாங்குடிக் கிழாரினால் உயர்த்திக் கூறப்படும் வரகு, தினை போன்ற தவசங்கள் தமிழகத்தின் வானவாரி (மானம்பாரி) நிலத்தில் விளைந்து மிகுந்த பயனைத் தந்தவை. பல ஆண்டுகளாக வெறுத்து ஒதுக்கப்பட்டு புறக்கணிப்பட்ட இவை பல பன்னாட்டு கம்பணிகளால் ஊட்ட மாவுகளிலும், பானங்களிலும் சேர்க்க விரும்பி வாங்கப்படுகின்றன. தினை பற்றி சங்க இலக்கியம் 73 இடங்களில் குறிப்பிடுகிறது. தினைக்கு இறடி, ஏனல், இருவி என்ற பெயர்களும் உண்டு. காடைக்கண்ணியும் குதிரைவாலியும் இதற்குள் அடங்குமா? என்ற வினாவிற்கான விடை ஆய்விற்குரியது. ஏனெனில் மக்களிடம் புழக்கத்தில் உள்ள குதிரைவாலி பற்றி சங்க இலக்கியம் பதிவு செய்தாகத் தெரியவில்லை. 'மரங்ககொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய பிறங்குகுரல் இறடி' (குறுந் 214) என்ற குறுந்தொகைப் பாடல் மரங்களை அப்புறப்படுத்தி கொத்தி (துளர்ந்து) விட்டு இறடியை விதைத்த செய்தியைக் கூறுகிறது. இதேபோல அகநானூற்றின் 288, 388ஆம் பாடல்கள், நற்றிணையின் 386ஆம் பாடல் மரங்களை வெட்டி எரித்து அதில் வேளாண்மை செய்த பண்டைய முறையைக் கூறுகிறது. இதன் மூலம் கலப்பைகளின் தோற்றம் குறிஞ்சி நிலத்தில் இல்லை என்று தெரிகிறது. ஆனால் புறநானூற்றில் பாரியின் மறைந்த செய்தியைக் கூற வந்த கபிலர் புழுதிபட உழுத செய்தியைக் கூறுகிறார். இது கலப்பையின் வரவாக இருக்கலாம். பூழி மயங்கப் பல உழுது வித்தி (புறம் 120) உழாமல் விதைக்க தினை வயல் பற்றியும் புறநானூறு கூறுகிறது. உழாதுவித்திய பரூஉக்குரல் சிறுதினை - புறம் - 163 தினைப் புனம் காப்பதும், பரண்களில் இருந்து பாடுவதும், காதனைச் சந்திப்பதும் பண்டைத் தமிழர்களின் பண்பாட்ட நிகழ்வுகள். குறிஞ்சிப் பாட்டின் பாடுபொருளே இதுதான். சங்கரதாஸ் சுவாமிகள் குறிஞ்சிப்பாட்டையே வள்ளி திருமணம் என்ற நாடகமாக ஆக்கினார். தினைக் கதிர் அறுத்த தாள்களைக் கொண்டு கூரை வேய்ந்தனர். 'இருவி வேந்த குறுங்கால் குரம்பை' என்று குறிஞ்சிப்பாட்டு 153 ஆம் வரி குறிப்பிடும்.
வரகு என்ற தவசம் சங்க இலக்கியத்தில் 29 இடங்களில் குறிக்கப்படுகிறது. கவையாக விரிந்து காணப்படும் வரகை 'கவைக் கதிர் வரகின்யாணர்ப் பைந்தாள்' என்று அகநானூறு குறிக்கிறது (அக 59) வரகு முல்லை நிலத்தில் விளைந்ததை குறுந்தொகை குறிக்கிறது. முல்லை பாலையான நிலத்தை பதிவு செய்யும் இப்பாடல் 'செவ்விகொள் வரகின் செஞ்சுவல் கலித்த' (குறு 282) என்று கூறுகிறது. எனவே கபிலர் பாடலும் முல்லை பற்றியே இருக்கலாம் என்ற ஐயத்திற்கு இட்டுச் செல்கிறது.
தவசங்களைப் பொருத்த அளவில் நஞ்சை (நன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் புஞ்சை (புன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் பொதுவாகப் பிரிக்கப்படுகின்றன. ஆறுகள், குளங்களின் வழியே நீரைப் பெற்று உறுதியான பாசன வசதியைக் கொண்ட நிலங்களை நஞ்சை நிலங்கள் என்று கூறலாம். இங்கு விளையும் தவசங்கள் மிகுந்த நீரை எடுத்துக் கொண்டு அதிக அளவு விளைச்சலைக் கொடுக்கும். நெல், கோதுமை சிறிதளவு மொக்கைச் சோளம் எனப்படும் மக்காச் சோளம் ஆகியன நஞ்செய்க்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு பன்னெடுங்காலமாக விளைவிக்கப்படுகின்றன. வீறிய விதைகள் எனப்படும் ஒட்டு விதை ஆராய்ச்சியும் இந்த பயிரினங்களில்தான் நடந்தேறியுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுமைக்கும் பெருமளவு உணவை வழங்குவது வானவாரி வேளாண்மைப் பயிர்களே. குறிப்பாக இந்தியாவில் 65 விழுக்காடு உணவு வானவாரி நிலப்பரப்பில் இருந்தே கிடைக்கிறது. அதாவது இந்தியாவில் மொத்த உணவு தவச விளைச்சல் பரப்பான 142 பேராயிரம் (மில்லியன்) எக்டேர் பரப்பளவில் 85 பேராயிரம் எக்டேர் அதாவது 65 விழுக்காடு நிலத்தில் உணவு தவசங்கள் விளைகின்றன2. வானவாரி நிலங்களுக்கே உரிய பயிரான புஞ்சைத் தவசங்களான சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக் கண்ணி போன்றவை மிகக் குறைந்த மழைநீரில் வளர்ந்து விளைச்சல் தருபவை. இவற்றில் கூட வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக் கண்ணி ஆகிய ஐந்தும் அருந்தவசங்கள் (னீவீஸீஷீக்ஷீ னீவீறீறீமீts) என்று அழைக்கப்படுகின்றன. உண்மையில் இவை சிறு தவசங்களன்று, பெருமைக்குரிய தவசங்களாகும். ஏனெனில் இவற்றில் இருக்கும் ஊட்டங்கள் மிகச் சிறப்பானவை. மிகக் குறைந்த நீர், மிக எளிய தொழில்நுட்பம், மிகக் குறைந்த இடுபொருள் செலவு, மிக அதிக ஊட்டம் என்று எல்லாவகையான சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கும் இந்தச் தவசங்களை மிகக் கேவலமாக நமது வேளாண் அறிவியலாளர்களும், அரசுத் துறையும் புறக்ணித்துள்ளன. குறிப்பாக ஒரு கிலோ நெல் விளைவிக்கத் தேவைப்படும் நீர் 1550 லிட்டர்கள், அதேபோல ஒரு கிலோ கோதுமை விளைவிக்க 750 லிட்டர்கள் நீர் தேவைப்படுகிறது. ஆனால் புஞ்சைத் தவசங்களுக்கு இதில் 10 ஒரு பங்கு நீர் கூடத் தேவையில்லை. பெரிய அணைகள் தேவையில்லை. காடுகளும் பழங்குடிகளும் அழிய வேண்டியதில்லை. ஒரு கிலோ தினை சாகுபடி செய்ய எவ்வளவு நீர் தேவைப்படும் என்ற ஆய்வு கூட இல்லை என்பதுதான் வேடிக்கை. பசுமைப் புரட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டவை இந்த புஞ்சைப் பயிர்களே. குறிப்பாக நெல்லையும் கோதுமையையும் குறிவைத்த ஆராய்ச்சிகள் நடந்தேறின. அத்துடன் அரிசிச் சோறு உண்பேதே உயர்ந்த பண்பாடு என்ற பரப்புரையும் விரிவாக்கப்பட்டது. குறிப்பிட்ட மேட்டுக்குடி மக்களின் உணவாக இருந்த அரிசி யாவருக்குமான உணவாக மாற்றப்பட்டது. பள்ளி உணவுத் திட்டம், பொது வழங்கல் திட்டம் என்று யாவற்றிலும் அரிசியும் கோதுமையுமே கொடுக்கப்பட்டன. ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள், சாகுபடிக்கான ஒதுக்கீடுகள் என்று அளவற்ற பணம் முதலீடு செய்யப்பட்டது. இதன் விளைவாக மக்களின் பயன்பாட்டில் இருந்து முற்றிலுமாக புஞ்சைத் தவசங்கள் ஒதுங்கியது. பழங்குடி மக்கள் 'நாகரிகம்' தொடாத பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் மட்டுமே இவற்றின் பயன்பாடு எஞ்சியுள்ளது. தமிழகத்தில் நாமக்கல், தருமபுரி, மதுரை போன்ற மிக அரிதான இடங்களில் மட்டுமே சாமை குரைவாலி தினை போன்றவை பயராகின்றன. மதுரைப் பகுதியில் விளைவித்த தவசங்களை விற்றுவிட்டு நியாய விலைக் கடைகளில் ஒரு ரூபாய் அரிசி வாங்கிச் சமைக்கின்றனர். இப்படிக் புறக்கணிக்கப்பட்ட தவசங்களால் ஏற்பட்ட சூழலியல், திணையியல், பொருளியல், பண்பாட்டியல் கேடுகளைக் இதுவரை யாரும் கணக்கில் கொள்ளவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.
முதலில் புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தவசங்களால் நீரின் பயன்பாடு அதிகமானது, காரணம் அந்த இடத்தில் வீறிய விதைகள் வந்து அமர்ந்தன. இவை அதிக உப்பு உரம், அதிக நீர் என்ற முறையில் உருவாக்கப்பட்டவை. அதன் பிறகு மண்ணின் வளம் பல்வகைப் பயிர்ச் சாகுபடியால் பாதுகாக்கப்பட்டு வந்தது, அதாவது தினை, வரகு போன்றவற்றைத் தனியாக சாகுபடி செய்யமாட்டார்கள், அத்துடன் பல பயறு வகைகள், காய்கறிகள் என்று கலப்புப் பயிர் சாகுபடியைச் செய்வார்கள், இதனால் பயறுவகைப் பயிர்கள் மண்ணில் வெடியம் (நைட்ரசன்) என்ற தழை ஊட்டத்தை சேமிக்கும். இதன் விளைவாக மண் வளம் காக்கப்படும். ஆனால் பசுமைப் புரட்சி முன் வைத்த ஓரினச் சாகுபடி (னீஷீஸீஷீநீuறீtuக்ஷீமீ) என்பது முற்றிலும் வேதி உப்புக்களை அடிப்படையாகக் கொண்டதும் வெளியிடு பொருள்களுக்கு வழிகோலியதும் ஆகும். எனவே மண் வளம் தொடர்ந்து குறைந்து கொண்ட போகும். இதற்கு எவ்விதமான பாசன வசதியும் தேவையில்லை. பெய்யும் மழையே போதுமானது. காடைக்கண்ணி (நீஷீனீனீஷீஸீ னீவீறீறீமீt) என்றொரு தவசம், இன்றைய தலைமுறையினர் இதைப் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். இது அறுபது நாளில் அறுவடையாகின்றது. ஒன்று அல்லது இரண்டு மழை போதும். மிகவும் சிறப்பான ஊட்டங்களைக் கொண்டது. (ஊட்டப் பட்டியல் பார்க்க). மண்ணின் வளத்தைப் பெருக்குவதில் அடுத்தாக திணையவியல் நோக்கில் பார்த்தால் புஞ்சைத் தவசங்கள் பெருமளவு வைக்கோல்களைக் கொடுப்பவை, இதனால் கால்நடைகளுக்கான உணவு உறுதி செய்யப்பட்டுவிடுகிறது. எண்ணற்ற பறவையினங்கள் இந்தச் தவசங்களை உண்டு வாழ்வதோடு அங்கு வரும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று பூச்சிக்கட்டுப்பாட்டிற்கும் உதவுகின்றன. ஆனால் மக்காச்சோளச் சாகுபடியிலோ, சீமைக் கருவேல் மரத்திலோ பறவைகளுக்கான உணவு கிடைப்பதில்லை. பல்வேறு வகையான பயிர்கள் ஒரு நிலத்தில் பயிரிடப்படும் உயிரியல் பன்மயம் (ஙிவீஷீபீவீஸ்மீக்ஷீsவீtஹ்) இப்போது மறைந்துவிட்டது. இதன் மூலம் பல்வேறு சூழலைத் தாங்கி வளரும் பயிரினங்கள், நுண்ணுயிர்கள் போன்றவை மறைந்துவிட்டன. வெப்பமண்டல வானவாரி நிலத்தில் உயிர்மக் கூளத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் பெருமளவு கரிமத்தை மண்ணில் நிலைநிறுத்த முடியும். இந்த கரிம அகப்படுத்தல் (சிணீக்ஷீதீஷீஸீ sமீஹீuமீstக்ஷீணீtவீஷீஸீ) காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளில் ஒன்றாக முன்னுரைக்கப்படுகிறது. புஞ்சைத் தவசங்கள் உள்ளூர் பொருளியலில் மிக முதன்மையான பங்கை வகிக்கின்றன. உணவிற்கான பணமும் உழைப்பும் உள்ளூரிலேயே சுழன்று வருகிறது. வெளிச்சந்தைக்கு இவை போவதில்லை. இப்போது தினை, சாமை போன்ற தவசங்களும் சந்தைக்குப் புறப்படுவதை என்னவென்று சொல்வது. இந்தப் பயிர்களுக்கு வெளியிடு பொருட்களான உப்பு உரங்களோ பூச்சிக்கொல்லிகளா தேவையில்லாததால் பணம் வெளியேறுவதில்லை. அதுமட்டுமல்ல புஞ்சைத் தவசங்கள் மிகச் சிறந்த ஊட்டங்களைக் கொண்டவை. குறிப்பாக குதிரைவாலி எனப்படும் தவசம் நார் ஊட்டத்தைப் பொருத்த அளவில் கோதுமையைவிட 6.8 மடங்கு கூடுதல் கொண்டுள்ளது, அத்துடன் அரிசியைவிட 13 மடங்கு கூடுதல் கொண்டுள்ளது. தினை என்ற தசவம் அரிசியைவிடக் கூடுதல் புரதம் என்னும் முந்தூனைக் கொண்டுள்ளது. இரும்பு ஊட்டம் குதிரைவாலியில் கோதுமையைவிட 5.3 மடங்கு கூடுதலாக உள்ளது, அரிசியைவிட 10 மடங்கு கூடுதலாக உள்ளது. இதேபோல பல ஊட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நமது மருத்துவர்களின் பரிந்துரை வரகரிச் சோறுதான்! இந்திய/தமிழக குமுக வரலாற்றில் மக்களின் சிந்தனைப் போக்கில் பெரிய மாற்றம் நிகழ்த்தப்பட்டது. இது வெறும் வேளாண்மையோடு மட்டும் தொடர்புடையது அல்ல, மொழி நிறம், சாதி என்று பல தளங்களிலும் பெரும்பான்மை அடித்தட்டு மக்களுக்குப் புறம்பான சில மேட்டுக்குடிகளின் பண்பாட்டை நிலைநிறுத்தும் முயற்சி நடந்தேறியது. கருங்கால் வரகு அல்லது பிற உணவே இல்லை என்று கூறிய பண்டை மரபுக்கு மாறாக 'நித்தம் நித்தம் நெல்லுச்சோறு' என்று ஏங்க வைக்கும் சூழல் ஏற்பட்டது. கருப்பாக இருக்கும் பனைவெல்லமான கருப்பட்டி இழிவாக மாறி வெள்ளை நிறத்து 'சீனி' உயரிய பொருளாக மக்களால் அணுக வைக்கப்பட்டது. தமிழில் பேசுவது எழுதுவது இழிவானது என்றும், ஆங்கிலத்திலும் பேசுவது எழுதுவது சிறந்தது (அன்று சமஸ்கிருதத்தில்) என்றும் உணர்த்தப்பட்டது. பெயரிடலில் கூட கருப்பாயி என்று பெயரிடுவது இழிந்தது என்றும் சியாமளா என்று பெயரிடுவது உயர்ந்தது என்றும் ஆக்கப்பட்டது. ஆனால் கருப்பாயி என்ற தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்புதான் சியாமளா என்று எத்தனை மக்கள் நினைத்தனர். கருப்பு என்பது அழகு என்று ஆண்டாள் காலம் வரை இருந்த கருத்து தலைகீழாக மாற்றப்பட்டது. பொருள் வளம், ஊடக வலு, சிந்தனைத் திறம் என்ற எல்லா ஏந்துகளையும் கையில் வைத்துக் கொண்டு ஒரு பெரும் பண்பாட்டு மாற்றத்தைய நிகழ்த்த முடிந்தது. அதில் ஒன்றுதான் நெல்லரிசியின் மீதான கவர்ச்சி. நெல்லின் மீது நமக்கு எந்தவிதமான வெறுப்போ அருவருப்போ கிடையாது, ஒவ்வொரு வேளாண் காலநிலை மண்டிலத்திற்கு (கிரீக்ஷீஷீ-நீறீவீனீணீtவீநீ ஞீஷீஸீமீ) ஏற்றவாறு உணவுப் பொருள்கள் அங்குள்ள மக்களுக்கு உணவாகின்றன. தமிழகத்தில் இன்றைய பிரிப்பின்படி ஏழு வேளாண்மைக் காலநிலை மண்டிலங்கள் உள்ளன. இவை காவிரி வடிநிலம் முதல் விருதுநகர் கோவில்பட்டி கரிசல் நிலம்வரை பல கூறுகளாக உள்ளன. இவற்றில் விளையும் உணவுப் பொருள்கள் அவற்றிற்கே உரிய தனித்தன்மை கொண்டவை. ஆற்று வடிமுகப் பகுதியில் வாழ்ந்த மக்கள் பெரிதும் நெல்லை உண்டு வாழ்ந்தனர். இவர்களது உணவையே மற்ற அனைவருக்குமான உணவாக மாற்றும் பொழுதுதான் சிக்கல் தோன்றியது. இதன் நிறை குறை பற்றிய ஆய்வேதும் இன்றி இந்த பரப்புதல் நடந்தறியது. நெல்லையும் தினையையும் பறிமாறிக் கொண்ட நிலை மாறி நெல் மட்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இந்தப் பின்புலத்தில்தான் நெல்லரிசிச் சோற்றின் மீது நமக்கு ஏற்பட்ட ஈர்ப்பை உற்று நோக்க வேண்டும். நெல்லை அரைத்து அரிசியாக்க சாதாராண அலை முதல் புதித (னீஷீபீமீக்ஷீஸீ) ஆலைகள்வரை வந்துவிட்டன. புஞ்சைத் தவசங்களை இன்றும் குத்திப் பிரிக்க வேண்டிய நிலை உள்ளது. மிகக் குறைவாகவே அரவை ஆலைகள் உள்ளன. அரிசியைவிட கோதுமை இப்போது முதலிடத்திற்கு வந்துவிட்டது. தமிழத்தில் விளையாத (மிக அரிதாக) கோதுமை இன்றை தமிழத் தேசிய உணவாக மாறியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. கோதுமைக்கு அரசு கொடுக்கும் உதவித் தொகை நெல்லுக்குக் குறைவு, அதைவிட புஞ்சைத் தவசங்களுக்கு இன்னும் குறைவு.
கோதுமையை உணவாக மாற்றும் உணவுப் பண்ட ஆராய்ச்சிகள் மிக அதிக அளவில் நடக்கின்றன. நீங்கள் தொலைக்காட்சி வழியே வரும் உணவுப் பண்ட நிகழ்ச்சிகளில் (மக்கள் தொலைக்காட்சியில் வரும் கை மணம் தவிர்த்து) பலவும் கோதுமையை முதன்மைப்படுத்தியே வருகின்றன. நாட்டின் இறையாண்மை பற்றி நாம் பலவும் பேசுகிறாம், ஆனால் உணவு இறையாண்மை பற்றி நாம் யாரும் கவலைப்படுவதில்லை. உணவு உறுதிப்பாடு (யீஷீஷீபீ sமீநீuக்ஷீவீtஹ்) என்பது வேறு உணவு இறையாண்மை (யீஷீஷீபீ ஷிஷீஸ்மீக்ஷீமீவீரீஸீtஹ்) என்பது வேறு. உணவு உறுதிப்பாபட்டைப் பொறுத்த அளவில் ஏதாவது ஓர் உணவைப் பெறுவதற்கான உறுதிப்பாடு என்ற அளவில் மட்டுமானது. வெளிநாட்டில் இருந்துகூட உணவை இறக்குமதி செய்து கொடுத்துவிட முடியும். ஆனால் உணவு இறையாண்மை என்பது உணவை விளைவிக்கும் நிலத்திற்கான உறுதிப்பாடு, அதற்கான நீருக்கான உறுதிப்பாடு, விதைபோன்ற மரபீனி வளத்திற்கான உறுதிப்பாடு அத்துடன் உணவுக் கொள்கைகளில் உழவர்களின் பங்கேற்பிற்கான உறுதிப்பாடு என்ற யாவற்றையும் உள்ளடக்கியது. இப்போது என்ன உணவை நான் உண்ண வேண்டும் என்று தீர்மானிப்பது நானாக இல்லை. யாரோ சிலர் எனக்கான உணவை முடிவு செய்து அனுப்புகின்றனர். தஞ்சையில் விளையும் நெல் நடுவண் அரசின் பொதுத்தொகுப்பிற்கான கிடங்கிற்கு மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்கு பயணமாகிறது. பின்னர் அங்கிருந்து நியாயவிலைக் கடைக்காக மறுபடி தஞ்சையில் உள்ள சிற்றூருக்கு வந்து சேரும். இதற்குள் அது சீர் கெட்டு ஏழை மக்களின் தலையில் கட்டப்படும். இதேபோலவே கோதுமையும். எனது ஊருக்கு அருகில் விளையும் ஊட்டம் மிக்க வரகையும், குதிரைவாலியையும் என்னால் உண்ண முடியாமல் ஆக்கும் இந்த மறைமுக சூதாட்டத்தை என்னவென்பது? எனது நிலத்தில் எதை விளைவிக்க வேண்டும் என்பதையும் நான் எந்த வகையான உணவை உண்ண வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் ஆற்றல் ஒருவருக்கு இருக்குமேயானால் அதுதான் உணவு இறையாண்மை. தமிழகத்தைப் பொதுவான ஓர் உணவு மண்டலமாக மாற்றி அதன் பிறகு வேளாண்மை திணை மண்டிலங்களுக்கு ஏற்ற உணவு மண்டலங்களைப் பிரித்து உணவு விளைவிப்பும், பகிர்வும் இருக்குமேயானால் பெருமளவு உணவுச் சிக்கல்களைக் களைய முடியும். உணவு இறையாண்மை என்ற கருத்து வலுப்படும்போது சிறப்புப் பொருளியல் மண்டிலங்கள் என்பவை கேள்விக்கு உள்ளாகும். உணவு இறையாண்மையை நாம் இழந்துவிட்ட காரணத்தால் பல நூறு பயிர்களுக்குமேல் மக்களின் உணவாக இருந்த நிலை மாறி இன்று அரிசி, கோதுமை என்ற இரண்டே நமது உணவின் 90 விழுக்காட்டை நிறைவு செய்து வருகிறது. ஆக நமது உணவுப் பன்மயமும் குலைந்துவிட்டது. புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தவசங்கள் இன்று புதியதொரு சந்தையைப் பெற்று வருகிறது. குறிப்பாக நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவுகளால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு காரணம் தீட்டிய வெள்ளை அரிசி என்பதும் இன்றைய மருத்துவ உலகம் கூறும் முடிபுகள். இதற்கு மாற்றாக இருப்பவை தினை, சாமை, வரகு போன்ற புஞ்சைத் தவசங்கள். எனவே இன்று நகர்புற மேட்டுக்குடி மக்களுக்கான உணவாக இது மெல்ல மெல்ல மாறி வருகிறது. ஒரு காலத்தில் உடல் உழைப்பாளிகளின் உணவாக இருந்து மேட்டுக்குடிகளால் புறக்கணிக்கப்பட்ட இவை இன்று உடலுழைப்பாளிகளால் மறக்கப்பட்டு மேட்டுக் குடிகளின் 'ரெசிப்பி' யாக மாறி வருவது ஒரு வரலாற்று முரண்! அதைவிட இந்த புறக்கணிப்பட்ட தவசங்கள் ஹார்லிக்ஸ், போர்விட்டா போன்ற நலன்மிகு குடிப்புகளின் வழியாக பெரும் விலையில் பணக்காரர்களின் சாப்பாட்டு அறைகளில் அரங்கேறுவது அதைவிடவும் வேடிக்கை.