சீன அரசு ஒரு நவீன திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. உலகிலேயே சீனாவில்தான் மிக அதிகமான சிறு கிராமங்கள் உள்ளன. அங்குள்ளோர் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தங்கள் விளைச்சலைத் தாங்களே உண்டு, தன்னிறைவுடன் , தற்சார்புடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் எல்லோரும் தற்சார்புடன் இருந்தால் வளர்ச்சி அடைவது எப்படி? பொருளாதாரமும், நகரமயமாக்கலும், நுகர்ச்சியும் இல்லாவிடில் மேம்படுத்துவது எப்படி? காணி நிலத்தில் தற்சார்புடன் வாழும் உழவன் வேலையில்லாதவன் அல்லவா? வேலை செய்வதுதானே வளர்ச்சியின் அறிகுறி?. இவ்வாறு மிக நவீனமாக யோசிக்கும் சீன அரசு, 25 கோடி மக்களைக் கிராமங்களில் இருந்து வலுக்கட்டாயமாக நகரங்களுக்கு இடம் பெயர்க்கும் ஒரு பெரும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
1980களில் நம் இந்தியாவைப் போலவே 70 சதம் சீன மக்கள் கிராமங்களில் வாழ்ந்தனர். இப்போது அது 53 சதம் ஆகி விட்டது. சீன அரசு 2025க்குள் 70 சதம் மக்கள் நகரங்களில் வாழ்ந்து வேலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. இதற்கு அரசு சொல்லும் காரணமோ பெரும் வியப்பு! “புது நகரவாசிகள் உருவானால், கட்டிடத் தொழில், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை, வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற பல துறைகளில் வளர்ச்சி உண்டாகும். தற்போது அவர்கள் தங்கள் உற்பத்தியைத் தாங்களே உட்கொண்டு, நுகர்ச்சியே இல்லாமல் இருக்கிறார்கள்”
என்னே பொருளாதாரத் தொலைநோக்கு! வாழ்விற்கு வளர்ச்சியா, வளர்ச்சிக்கு வாழ்வா? பொருளாதார வளர்ச்சி என்பது மிக அவசியமான ஒன்று என்றும், அதனை எதிர்த்து யாரும் கேள்வியே கேட்கக் கூடாது என்றும் எல்லோருமே முடிவு செய்து விட்டார்கள். உலகில் வளர்ச்சி தேவை இல்லை; இருக்கும் வளங்களைச் சமமாகப் பகிர்ந்துகொள்வதுதான் தேவை. வளர்ச்சி என்று நாம் சொல்வது வலுத்தோர் மேலும் வலுக்கும் வழிதான். இளைத்தோரைப் புறக்கணித்து , அவர்களை ஏறி மிதித்து, அவர் ரத்தம் உறிஞ்சி வளர்வது என்ன வளர்ச்சி? “மருத்துவத் துறையின் வளர்ச்சி குறைந்து வருகிறது; எனவே விஞ்ஞானிகள் புதிய வியாதிகளைக் கண்டு பிடிக்க வேண்டும்” என்ற கதைதான்!
நம் பொருளாதார மேதையான மன்மோகன் சிங்கும், அவரின் வலக்கரமான மான்டேக் சிங் அஹ்லுவாலியாவும், புதிய பாரதத்தின் வளர்ச்சிக்கு திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள். மன்மோகன் சிங் பல கூட்டங்களில் வெளிப்படையாகவே, “விவசாயிகள் வேறு தொழில் செய்ய வேண்டும்”, ” விவசாயத்திலிருந்து மக்களை இடம்பெயர்ப்பது நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை” என்றெல்லாம் தன் பொருளாதார நுண்ணறிவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஒரு நல்ல திட்டம் என்பது அதன் செயல் பாட்டினைத் தெளிவாக விளக்க வேண்டும்; இல்லையென்றால் அது திட்டம் அல்ல - வெறும் கனவுதான். யார் விவசாயம் செய்வது, யார் நகர வேலைகளுக்குப் போவது என்று யார் முடிவு செய்வது? 4300 கோடி ரூபாய் முதலீட்டில் குஜராத்தில் ஆரம்பிக்கப் படும் போர்டு மோட்டார் நிறுவனம், 4300 பேருக்கு மட்டுமே வேலை கொடுக்கிறது. 25 கோடிப்பேருக்கு வேலை கொடுக்க வேண்டுமானால் எத்தனை கோடி கோடி ரூபாய் வேண்டும். அரசிடம் அப்பணம் இருக்கிறதா? லாபத்தைக் கருதிச் செய்யப் படும் அந்நிய முதலீட்டாருக்கு நம் ஏழைகள் மேல் என்ன ஆர்வம் இருக்க இயலும்? இவ்வளவு இயந்திரத் தொழிற்சாலைகளை நடத்தத் தேவையான ஆற்றல் நம்மிடம் உள்ளதா? வீடுகளுக்கே மின்சக்தி இல்லாத சூழலில் இயந்தரமயமாக்கல் சாத்தியமா? எந்தக் கேள்விகளுக்குமே விடை கூறாத பொருளாதார நிபுணர்களைத் திட்டமிடும் பணியில் யார் அமர்த்தினர்?
காந்தியும் குமரப்பாவும் கூறிய கிராம சுயராச்சியத்தை வளர்க்காவிடினும், ஒரு அடிப்படைத் தெளிவுடன் திட்டமிடுவது மிக நன்று. மேலை நாடுகளை அப்படியே காப்பியடிப்பது திருமூலர் சொன்னதுபோல்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழுமாறே.