தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கற்பதும் கசடும் - வழிப்போக்கன்


கல்வி என்பது இன்றியமையாதது என்றும், அடிப்படைக் கல்வி என்பது எண்ணும், எழுத்தும் என்றும் தற்காலக் கல்வியின் நோக்கம் பொருள் ஈட்டுவதே என்றும் நாம் சென்ற கட்டுரைகளில் கூறினோம். இப்போது பாடத் திட்டங்கள் எவ்வாறு வெற்றியை நோக்கிச் செலுத்தப் படுகின்றன ,அதற்கென‌ அறியாச் சிறார்கள் எவ்வாறு அம்பாகப் பயன்படுகிறார்கள் என்றும் மனம் வலிக்கப் பேசினோம். ஆனால் இதெற்கல்லாம் முற்பட்ட, மிக அடிப்படையான ஒரு கேள்வியை நாம் கேட்காவிடில் நம் தேடல் வெறும் உழக்கில் கிழக்கு மேற்குப் பார்த்த கதையாகி விடும்.

அது கல்விக்கும் எழுத்திற்கும் என்ன தொடர்பு என்று ஆராய்வதுதான். நாம் அனைவருமே பொதுவாக அறிவு என்றால் எழுதப் படிக்கக் கூடிய திறமையில் தொடங்குவது என்றுதான் எண்ணுகிறோம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்று பள்ளிகளில் ஆனா, ஆவன்னா என்று பாடங்களைத் துவங்குகிறோம். (ஆனால் உண்மையில் நல்ல கல்வி என்றால் குழந்தைகளுக்கு நிறையப் பாடல்களைச் சொல்லிக் கொடுத்து நினைவாற்றலை வளர்த்து விட்டுப் பின்னர்ப் பல வருட மொழிப் பயிற்சிக்குப் பின்னரே எழுத்தைக் கற்றுத் தர வேண்டும்). ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சியைக் குறிப்பிடும்போது அதன் படிப்பறிவு விழுக்காட்டையே குறியீடாகக் கொள்கிறோம். இது எவ்வளவு தூரம் உண்மையான ஊகம் என்பதையும் நாம் ஆராய வேண்டும். பண்பாடுள்ள மனிதன் அதன் பின்னர் எழுத்தைப் பயன்படுத்தலாம் என்ற கருத்துடைய அரிஸ்டாட்டில், எழுத்தறிவிற்கும், பண்பாட்டிற்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

உலகின் மிகப் பெரும் அறிவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் கிரேக்க ஞானி சாக்ரடீஸ் எழுதப் படிக்கத் தெரியாதவர்! அவரின் சீடர் பிளேட்டோ அவரை எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளச் சொன்னபோது அவர் மறுத்து விட்டாராம். எழுதத் தெரிந்து விட்டால் பின் சிந்தனை சோம்பல் கொண்டு விடும். நினைவாற்றல் மழுங்கி விடும். நம் உள்ளத்தில் தைப்பதை மட்டுமே நாம் அழியாமல் நினைவில் வைத்திருக்கிறோம். எனவே நாம் எதையெல்லாம் அவசியம் என்றும், அறிவு என்றும் கருதுகிறோமோ அதையெல்லாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பது அவரின் வாதம்.

ஆராயப்படாத வாழ்வு வாழத் தகுதியற்றது என்பது சாக்ரடீஸின் கோட்பாடுகளில் ஒன்று; அதே போல், ஆராயப்படாத அறிவு கற்கத் தகுதியற்றது என்பதையும் அவர் வலியுறுத்தினார். சாக்ரடீஸின் நண்பர் டெல்ஃபி என்னும் கோவிலில் பூசாரியாக இருந்தவர். அக்கோவிலில் ஆருடம் சொல்லும் நபரிடம் அவர் “உலகிலேயே சாக்ரடீஸை விடப் பெரிய அறிஞர் உண்டா ” என்று கேட்டதற்கு அவ்வசரீரி (Oracle), “இல்லை” என்று பதிலளித்ததாம். நண்பரும் இதை சாக்ரடீஸிடம் வந்து கூறி விட்டார். சாக்ரடீஸ், மிகவும் வியப்புற்று “நான் எழுதப் படிக்கத் தெரியாதவன்; வெறும் போர் வீரன். எத்துணை பெரிய அறிஞர்கள் கிரேக்கத்தில் இருக்கிறார்கள் .நான் அந்த அசரீரியைப் பொய் என்று நிரூபித்துக் காட்டுகிறேன்” என்று கிளம்பி கணித மேதைகள், சிந்தனையாளர்கள், அறிவியல் வல்லுநர்கள், மதத் தலைவர்கள், தத்துவ ஞானிகள் என்று ஒவ்வொருவராகச் சந்தித்து அவர்களுக்கு என்ன தெரியும் என்று கண்டறிந்தாராம். இறுதியில் அவர் இவ்வாறு கூறினார்: “எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது எனக்குத் தெரியும். இவர்களுக்கெல்லாம் ஒன்றுமே தெரியவில்லை, ஆனால் நிறையத் தெரிந்து கொண்டு விட்டதாக மார்தட்டிக் கொண்டு நடக்கிறார்கள். அவ்வகையில் பார்த்தால் நான் இவர்களை விடவும் அறிஞன்தான். அசரீரி சொன்னது சரிதான்!” என்ற முடிவுக்கு வந்தாராம்.

அவ்வாறு சாக்ரடீஸ் எல்லோருடனும் வாக்குவாதம் செய்து அவர்களின் அறியாமையை வெளிக் கொண்டு வரும் விவாதங்களைப் பின்னாளில் பிளேட்டோ “சாக்ரடீஸின் வசனங்கள்” (Dialogues of Socrates) என்ற தலைப்பில் பல நூல்களாக வெளியிட்டார். பிளேட்டோ இளைஞனாய் இருந்ததால், சாக்ரடீஸிற்குப் பின் அவரின் அறிவு அழிந்துவிடும் என்று அஞ்சி, அவர் பேசும் பொழுதெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்வாராம். இதை மிகவும் நையாடிய சாக்ரடீஸ், “உண்மை அதன் வலிமையாலேயே நிலைத்திருக்கும் அதைத் தாங்குவதற்கு ஏதும் முட்டுக்கோல்கள் தேவையில்லை” என்பாராம். [நான் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரிடம், அவர் சாதாரணமாகப் பேசுவதிலேயே ஏகப்பட்ட செறிவான கருத்துக்கள் இருப்பதைக் கண்டு வியப்புற்று, “ஐயா நான் ஒரு இளைஞனைப் பணிக்கமர்த்தி உங்களுடன் கூடவே இருக்கச் சொல்கிறேன். நீங்கள் பேசுவதை எல்லாம் அவர் குறிப்பெடுத்துக் கொள்ளட்டும். உங்களுக்குப் பின் வரும் சந்ததிக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றேன். அவர் சிரித்துக் கொண்டே “நான் யார் யாரிடம் பேசுகிறேனோ அவரவர் தம் நினைவில் பதிப்பெடுத்துக் கொண்டால் இது அழியாதல்லவா ?” என்று மறுத்து விட்டார். அப்போது அது எனக்குப் புரியவில்லை; இப்போது ஓரளவு விளங்குகிறது.]

கலை என்பதும், இலக்கியம் என்பதும், புராணங்களும், வேதங்களும் எல்லாமே வாய்வழியாகக் குரு சீட ம‌ரபில் வந்தவையே. நம் நாட்டின் இரு பழம் மொழிகளான தமிழ், சமஸ்கிருதம் இரண்டுமே எழுத்துக்கு முற்பட்டவை.(எழுத்து என்றால் நினைவில் பதிக்காமல் ஓலை, தோல் போன்ற வெளிப் பொருட்களில் பதிப்பதைக் குறிப்பிடுகிறோம்). வடமொழியிலே, நல்ல மாணாக்கனைப் பற்றிக் கூறும்போது அவனுக்குத் தேவையானவை கேட்டல், நினைவில் பதித்தல், அடிக்கடி நினைத்துப் பார்த்தல் (சிரவணம், மனனம், ஸ்மரணம்) ஆகிய குணங்களைக் குறியீடாகச் சொல்கின்றனர். ஔவையும் “வெண்பா விருகாலிற் கல்லானை” என்று இருமுறை கேட்டதுமே வெண்பா மனதில் பதியாதவன் வீண் என்கிறாள். Oral tradition என்று சற்றும் புரிதலின்றி ஆங்கிலத்திலே அழைக்கப்படும் வாய்வழிக் கல்வியானது எளிதில் நினைவில் நிற்கவேண்டும் என்பதற்குத்தான் செய்யுள் வடிவமே உருவாக்கப் பட்டது. இசையுடன் இருந்தால் இன்னும் எளிதாய்ப் பதியும் என்பதால் பண்ணும், தளையும், சீரும் எல்லாம் கண்டு பிடிக்கப் பட்டன. ஒரு மொழியின் தொன்மையும், அதன் அறிவின் ஆழமும், வரலாற்றைக் கடந்த வயதும் எல்லாம் அதன் யாப்பிலக்கணத்தை ஆராய்ந்தால் புலப்பட்டு விடும்.

வடமொழியிலும், தமிழிலும் மிகவும் ஆழ்ந்த புலமை கொண்ட ரமண மகரிஷி, ஒரு முறை, “வடமொழியில் மிகவும் கடினமான யாப்பு ஆரிய விருத்தம் எனப்படுவது. அது பெரும் பண்டிதர்களையும் இடறிவிடும். ஆனால் வெண்பா இயற்றுவது அதையும் விடக் கடினமானது - தமிழ் யாப்பில் அதை ஒரு புலி எனலாம்” என்றிருக்கிறார். தமிழில் மோனை, எதுகை இரண்டுமே நினைவாற்றலுக்கு உறுதுணையாய் இருக்கவே இயற்றப்பட்டவை. இவை தவிர அந்தாதி என்பதும் ஆயிரக்கணக்கான‌ பாடல்களை எளிதாய் நினைவு கொள்ளும்படி ஒன்றின் இறுதி அடுத்த பாடலின் துவக்கமாக அமைகிறது. அபிராமி அந்தாதியும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் சிறந்த எடுத்துக்காட்டுக்கள் - திருவாய்மொழியில் உள்ள 1012 பாடல்களும் அந்தாதியாகவே அமைத்துள்ளார் நம்மாழ்வார்.

பண்டைய ஐரோப்பிய மொழிகளான கிரேக்கம், லத்தீன் இரண்டிலும் தமிழ், வடமொழி இவற்றைப்போல் யாப்பிலக்கணம் மிகவும் இறுக்கமானது. இம்மொழிகள் எழுத்துக்கு முற்பட்டவை. சமீபத்திய மொழிகளான ஆங்கிலம் போன்றவற்றில் இக்கட்டுப்பாடுகள் குறைவே. ஏனெனில் இம்மொழிகள் எழுத்துக்குப் பிற்பட்டவை. கேட்போர் ரசித்தாலும் அதை நினைவில் கொள்ள வேண்டிய தேவை ஏற்படாத இலக்கியங்கள் இவை. பழந்தமிழில் மருத்துவம், கலை, கணிதம், சரித்திரம், வான சாத்திரம் போன்ற அனைத்துமே செய்யுட்களாக உள்ளவைதான். வாய்வழி மரபாய் நினைவாற்றல் மூலம் தழைத்தவைதான். எடுத்துக்காட்டாக தேவாரப் பாடல்களைப் பாடும் சைவ மரபினரை ஓதுவார் என்றே அழைக்கின்றோம். தூய தமிழில் வேதம் என்பதற்கு ஓத்து (ஓதப்படுவது) என்றே பெயர். இச்சொல்லாடல்கள் யாவும் எழுத்தில்லாமலே மிக உயர் கல்வியும், பண்பாடும், அதன் பின்னர் நாகரிகமும் வளர்ந்துள்ளன என்பதையே காட்டுகின்றன‌.

எழுத்தறிவைக் கல்வியாகக் குழப்பிக் கொள்ளும் தற்கால மானுடத்தைப் பற்றி ஆனந்த குமாரசாமி “எழுத்தறிவு என்னும் பூதம்” (The Bugbear of Literacy) என்ற கட்டுரையில் மிகவும் அழகாக ஆராய்ந்துள்ளார். அவர் தன் கட்டுரையில் “இரண்டு காரணங்களுக்காக நமக்கு எழுத்தறிவு இன்றியமையாததாகி விடுகிறது. (1) இயந்திரமயமாக்கப் பட்ட நம் சமூகத்தில் படிப்பு, எழுத்து, கணக்கு ஆகிய மூன்றையும் கற்ற மனிதர்களால்தான் உற்பத்தியை இயக்கவும், லாபம் ஈட்டச் செய்யவும் முடியும். (2) தொழிலில் திறமை (skill) என்பதற்கும் அறிவிற்கும் (wisdom) சற்றும் தொடர்பு இல்லாமல் இருப்பதால் பண்பாடு என்பதற்கான வாய்ப்பு நாம் நன்னூல்களைப் படிப்பதால் மட்டுமே சற்றேனும் எஞ்சியிருக்கின்றது! இதற்காகவும் நமக்கு எழுத்தறிவு அவசியம் ஆகிறது.” என்று பொருளீட்டுவதே முழுநேர வாழ்வாகி விட்ட நம் இயந்திரமய நாகரிகத்தை நகைச்சுவையுடன் நையாடுகிறார்.

கல்வியைப் பற்றிய நேர்மையான தேடல் கொண்ட எவருக்குமே இக்கட்டுரை மிக இன்றியமையாத ஒன்று. வாணிபத்துக்காக பல அயல்நாடுகளுக்கும் சென்று அங்குள்ள பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை அழித்து, அங்குள்ள மக்களுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானியம் போன்ற மொழிகளைக் கற்றுக் கொடுத்து, இயற்கை வளங்களைச் சூறையாடி விட்டு அவர்களைக் கூலிகளாகவும், குமாஸ்தாக்களாகவும் மாற்றும் “நவீன நாகரிகங்களை” அவர் கடுமையாகச் சாடித் தோலுரித்திருக்கிறார்.

“நாம் பழங்குடியனரைச் சுரண்டுவதோடு மட்டுமன்றி அவர்களுக்குக் கல்வியும், நாக‌ரிகமும் கற்றுத் தருகிறோம் என்று கிளம்பும் பொழுது, நாம் அவர்கள் மேல் ஆழமான, பெரும் அழிவைத் தரக் கூடிய காயங்களை ஏற்படுத்துகிறோம் - இது கொலையை விடக் கொடுமையானது, ஏனெனில் நாம் அழிப்பது அவர்கள் உடலை அல்ல, மனத்தையும் நினைவுகளையும். கல்வி என்பது எப்போதுமே உருவாக்குவது அல்ல; அழிப்பதே. அது அறிவை அழிக்கிறதா அல்லது அறியாமையை அழிக்கிறதா என்பது கற்பிப்போனின் மடமையையோ, ஞானத்தையோ சார்ந்தது” என்று துவங்குகிறார்.

அடுத்த கட்டுரையில் நாம் எழுத்தறிவு என்பது பூதமா அல்லது போதமா என்று ஆனந்த குமாரசாமியுடன் சேர்ந்து , தொடர்ந்து தேடுவோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org