தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உணவும், உற்பத்தியும், ஊடகங்களும், உண்மையும் - பரிதி

அதிக விளைச்சல் தரவல்லது வேதி வேளாண்மையா, உயிர்ம வேளாண்மையா? அனைத்து உழவர்களும் உயிர்ம வேளாண்மைக்கு மாறினால் பஞ்சம் தலைவிரித்தாடுமா? உணவு உற்பத்தி குறித்த சில பெரிய பொய்களை மக்கள் உணராதிருப்பதற்கே இது போன்ற வினாக்களும் விவாதங்களும் பரப்பப்படுகின்றன என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. பசுமைப் புரட்சியின் அடிப்படையில் செய்யப்படும் ஆலைமயமான வேதி வேளாண்மையில் எடுக்கக்கூடிய விளைச்சலை உயிர்ம வேளாண்மையிலும் ஏறக்குறைய எட்ட முடியும் என்பதை அமெரிக்க ஒன்றிய மாநிலங்களில் ஒன்றான ஐயோவா-வில் ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர். கலிஃபோர்னியா-விலும் ஆய்வாளர்கள் அத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர். இவ்விரு ஆய்வுகளுமே பரவலான வரவேற்புப் பெற்றுள்ளன.

வேதி வேளாண்மை, உயிர்ம வேளாண்மை ஆகிய இரண்டில் எது அதிக விளைச்சல் தரும் என்பது போன்ற உரையாடல்களில் இடம்பெறுவதே மிக நுணுக்கமாகப் பரப்பப்பட்டுள்ள கண்ணி ஒன்றில் சிக்குவதற்கு ஒப்பாகும். இந்த ஆழமான, அடிப்படை உண்மையை அறியாதவரே மேற்படி ஆய்வு முடிவுகளால் உற்சாகமடைவர்!

'உலக மக்கள் அனைவருக்கும் போதுமான உணவைத் தங்களால் மட்டுமே உற்பத்தி செய்ய இயலும்' என்று அனைத்தையும் உள்ளடக்கிய ஒற்றைச் சிந்தனையைப் புகுத்தி அனைவரையும் நம்பச் செய்வதே ஆலைமயமான உணவு முறைமையில் பங்காற்றும் மான்சான்ட்டோ போன்ற பெருநிறுவனங்களின் முதன்மைச் செயலுத்தி. இதை வேறு கோணத்தில் பார்த்தால், 'வேளாண்-சூழலியல் வழிமுறைகள், சீரிய நெல் சாகுபடி, பகுதிசார் உத்திகள், குடும்ப அளவிலான சிறு குறு உழவர்களின் செயல்முறைகள், உயிர்ம வேளாண்மை, மரபீனி மாற்றப்பெற்ற விதைகளை ஒதுக்கும் வேளாண்மை போன்ற (ஆலைமயமாகாத) வேளாண் முறைமைகள் உலகுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யவே முடியாது' என்ற கருத்தைப் பரப்புவதுதான் அந்நிறுவனங்களின் குறிக்கோள்.

வேளாண் பெருநிறுவனங்கள் வேறு சில செயலுத்திகளையும் தம் கைவசம் வைத்துள்ளன என்பதில் ஐயமில்லை: தாம் மட்டுமே அறிவியல் முறையில் செயல்படுவதாகவும் தம்மைக் கேள்விக்குள்ளாக்குவோர் அறிவியலுக்கும் வளர்ச்சிக்கும் எதிரானவர்கள் என்றும் கருத்துப் பரப்புவது அவற்றில் ஒன்று. ஆனால், உலகில் தொடர்ந்து உணவுப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதைப் போக்கத் தங்களால் மட்டுமே முடியும் என்றும் அனைவரையும் நினைக்கச் செய்வது தான் பல பத்தாண்டுக் காலமாக அந்நிறுவனங்களுடைய முதன்மைச் செயலுத்தியாக இருந்துவருகிறது.

மான்சான்ட்டோ, கார்கில், சின்ஞென்ட்டா, பேயெர் போன்ற வணிகப் பெருநிறுவனங்கள், மற்றும் அவற்றுடன் நெருங்கிய உறவு பேணும் அரசுத் துறைகள், அறக்கட்டளைகள், நாட்டிடை ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் இணைய தளங்களைப் பார்வையிட்டால் அவை பின்வரும் சிக்கலை முன்னிறுத்துவதை நீங்கள் எளிதில் காணலாம்: “2050-ஆம் ஆண்டு வாக்கில் உலகில் தொள்ளாயிரம் முதல் ஆயிரம் கோடி மக்கள் வசிப்பார்கள். இவ்வளவு பெரிய மக்கட்திரளுக்குத் தேவையான உணவை யார், எவ்வாறு உற்பத்தி செய்யப் போகிறார்கள்?”

மேற்படிக் கருத்தியலைப் பரப்பும் அமைப்புகளில் அமெரிக்க வேளாண் செயலகம், ஒன்றிய அரசியத்தில் செயல்படும் தேசிய உழவர் ஒன்றியம், அமெரிக்க சோயாமொச்சைச் சங்கம், வேளாண் பெருநிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட க்ராப் -லைஃப் நாட்டிடை அமைப்பு, பில்-மெலின்டா கேட்சு அறக்கட்டளை, ராக்கஃபெல்லர் அறக்கட்டளை, நாட்டிடை மேம்பாட்டுக்கான அமெரிக்கக் குழுமம் [அமெரிக்க அரசு நிறுவனம்], [பேரரசியப் பின்னணியும் பசுமைப் புரட்சியைப் பரப்பும் குறிக்கோளும் கொண்ட] சி.சீ.ஐ.ஏ.ஆர் எனும் பன்னாட்டு வேளாண் ஆராய்ச்சி நிறுவனக் கூட்டுக் குழு ஆகியவை அடங்கும்.

'உலக மக்களுக்குத் தேவையான உணவை விளைவிப்பதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தம்மால் மட்டுமே முடியும்' எனும் கருத்தியலை இவ்வமைப்புகள் தம்மால் முடிந்த போதெல்லாம், இயன்ற வழிகளிலெல்லாம் உலகெங்கும் அரசுகளிடமும் மக்கள் நடுவிலும் பரப்பிவருகின்றன.

தேவைக்கதிகமான உணவு உற்பத்தியாகிறது என்பதுதான் உண்மையான உணவுச் சிக்கல்!

ஆனால், மேற்படி செயலுத்தி அடிப்படையில் வலுவற்றது! உலக அளவிலோ அல்லது பகுதிசார் அளவிலோ உணவுப் பற்றாக்குறை இல்லை என்பதே உண்மை. உணவுப் பற்றாக்குறை எக்காலத்திலும் இருந்ததில்லை, அநேகமாக வருங்காலத்திலும் பற்றாக்குறை இருக்கப்போவதில்லை. இந்தியா, தென் அமெரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தேவைக்கதிகமான உணவு இருப்பில் உள்ளது. ப்ரிட்டனில் (வேறு பல 'செல்வந்த' நாடுகளில் நடப்பதுபோலவே) ஏறக்குறைய பாதி உணவு ஊர்திகளுக்கான உயிரெரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. தேவைக்கு மிக அதிகமாக உற்பத்தி செய்துவிட்ட உணவுப் பொருள்களை அப்புறப்படுத்துவதற்கு இதுவும் ஒரு வழி! சீனா உணவு ஏற்றுமதி செய்கிறது.

மக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் வங்கதேசம் மட்டும் தேவைக்கதிகமான உணவுப் பண்டங்களைக் கையிருப்பில் வைத்திருக்கவில்லை. உணவில் தன்னிறைவு பெற்றுவிட்டதாக அந்நாட்டரசு சொல்கிறது. அப்படியில்லை என்கிறது ஒன்றிய நாடுகளவையின் உலக உணவுத் திட்டம். நாட்டுக்குத் தேவையான நெல்லை உற்பத்தி செய்ய வங்கதேச உழவர்களால் முடியும். ஆனால், சந்தையில் நெல் விலை மிகக் குறைவாக இருப்பதாலும் தேக்க நிலை நிலவுவதாலும் அவர்கள் போதுமான அளவு நெல் சாகுபடி செய்வதில்லை என்பதுதான் உண்மை.

ஆதிக்க அமைப்புகளில் சில கூட அவ்வப்போது உண்மையை ஒப்புக்கொள்வதுண்டு! 1400 கோடி மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியாவதாகவும் தேவையைக் காட்டிலும் இது மிக அதிகம் என்றும் உலக வைப்பகக் கழகம் ஆலோசனைக்கு அழைத்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வேளாண் பெருநிறுவனங்கள் தொடர்ந்து பரப்பிவரும் கூற்று பொய்யானது!

உண்மையை மீட்டெடுத்தல்

உணவுச் சிக்கல் குறித்த [புனைவான] அச்சங்கள்தாம் தம் தொழில் வளர்ச்சிக்கு மிக முதன்மையானவை என்ற பெருநிறுவனங்களின் செயலுத்தி சரியெனில், உணவுச் சிக்கல் நிலவுகிறது எனும் பொய்யினை ஒழிப்பதுதான் ஆலைமயமான வேளாண்மையை எதிர்ப்போர் செய்யவேண்டிய செயலாகும்.

இதை யாரெல்லாம் அறிந்திருக்கவேண்டும்? தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, தக்க சான்றுகளுடன் மேற்கண்ட பொய்யை அம்பலமாக்குவது யாருடைய கடமை? அது, வேதி நச்சுகளும் மரபீனி மாற்றப்பெற்ற பயிர்களும் இல்லாத, நிலைத்த வேளாண் முறைகளை விரும்புவோர், உலகிலுள்ள நீர் நிலைகள் அனைத்திலும் மீண்டும் நன்னீர் ஓடவேண்டும் என நினைப்போர், சூழல் கேடுகள் அனைத்தும் பழங்கனவாகவேண்டும் என்போர், ஊரகப் பொருளாதாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க நினைப்பவர்கள், பண்பாடு, உயிரியல், வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் பன்மயம் நிலவவேண்டும் என்று விரும்புவோர் ஆகிய அனைவருடைய கடமையும் ஆகும்.

உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன; உணவுப் பண்டங்கள் உயிரெரிபொருள் உருவாக்கத்துக்கென எரிக்கப்படுகின்றன அல்லது வீணாகக் கொட்டப்படுகின்றன; விளைபொருள்களின் விலைகள் வீழ்ச்சியடைவதால் உழவர்கள் வேளாண்மையைக் கைவிட்டு நகர்ப்புறங்களுக்கும் சேரிகளுக்கும் படையெடுக்கின்றனர் [அல்லது தற்கொலை செய்கின்றனர்]; தேவையைக் காட்டிலும் மிக அதிக அளவில் உற்பத்தியாவதுதான் இவையனைத்துக்கும் காரணம்.

உற்பத்தித் திறன் (அல்லது, விளைதிறன்) எவ்வளவு என்பது குறித்து உழவரல்லாத பிறர் முதன்மை தருவதே வேளாண் பெருநிறுவனங்களின் கண்ணியில் உழவர்கள் வீழ்வதற்கு ஒப்பானது. உலக உணவு உற்பத்தியை முற்றிலும் ஆலைமயமாக்கும் செயல்திட்டம் இன்னும் முழுமையடையவில்லை. இருப்பினும், அந்த வேளாண் முறைமை இப்போதே மிகப் பெரிய அளவில் காடழிப்பு, நீர்நிலைகள் மாசுபடல், பவளப் பாறைகள் அழிதல், பசுங்குடில் வளி வெளியாதல், உயிரினங்களின் வாழிட அழிப்பு, ஆறுகளும் ஓடைகளும் தம்மியல்பு இழத்தல், [தேவைக்கதிகமான உணவு உற்பத்தியானபோதும்] உணவுப் பற்றாக்குறை நிலவுதல், பல கோடிப்பேர் இடம்பெயர்தல், நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்தை எட்டுதல், மக்கள் நோய்வாய்ப்படுதல் ஆகியவற்றுக்குக் காரணமாக உள்ளது. எனவே, வேளாண்மையில் ஆலைமயமாதலைத் தடுத்து ஒழிக்காவிடில் நம் புவிக்கோள் உயிர்வாழத் தகுதியற்றதாக விரைவில் மாறிவிடும் என்பது மிகையன்று.

எனவே, உணவு தொடர்பான இயக்கமொன்றுக்குத் தக்க செயலுத்தி வரையவேண்டுமானால் அது எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது தெளிவு. வேதி நச்சுகள் மிக ஆபத்தானவை என்பதைப் பொதுமக்கள் ஏற்கெனவே அறிவர். உயிர்ம வேளாண்மையில் விளையும் உணவுப் பண்டங்கள் உயர்தரமானவை என்பதையும் அவை சூழலுக்கு இயைந்தவை என்பதையும் அவர்கள் அறிவார்கள். மரபீனி மாற்றப்பெற்ற பயிர்கள் ஆபத்தானவை, போதுமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை, அவற்றை [சந்தைப்படுத்துகையில் நுகர்வோருக்கு நன்கு தெரியும்வண்ணம்] அடையாளப்படுத்தவேண்டும் ஆகிய அனைத்தையும் மக்கள் அறிவார்கள். அதனால் தான் உலகெங்கும் ஆள்வோர் உயிர்ம வேளாண் விளைபொருள்களைத் தேடி வாங்கி உண்கின்றனர்.

ஆனால், நச்சுகள் நிறைந்த இத்தகைய உணவை உற்பத்தி செய்தால் தான் உலக மக்கள் அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்கும் என்ற பொய்யைப் பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். இது வேளாண் பெருநிறுவனங்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறு முதலைக் கண்ணீர் வடிக்கும் பெருநிறுவனங்கள் பசி, பட்டினி ஆகியவற்றைப் பூச்சாண்டி காட்டி அச்சுறுத்துவதை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்த முடிந்தால் தேவைக்கதிகமாகப் பெருமளவில் உணவு உற்பத்தி செய்வதற்கெனச் சூழலுக்கும் நம் நலனுக்கும் எதிரான தொழில்நுட்பங்களையும் வேதிப்பொருள்களையும் வேளாண்மையில் பயன்படுத்தவேண்டியதில்லை எனும் உண்மையும் வெளிப்பட்டுவிடுகிறது. (பூச்சி மருந்துகள் எனப்படும்) வேதி உயிர்க்கொல்லிகளும் எதிர்பாராத கடும் விளைவுகளை உண்டாக்கவல்ல மரபீனி மாற்றம் போன்ற உயர் உயிரித் தொழில்நுட்பங்களும் வேளாண்மையில் தேவையில்லை என்கிற உண்மையும் வெளியாகிவிடும்.

எனவே, தேவைக்கதிகமான உணவு உற்பத்தியாகிறது என்பதை உலகெங்கும் மக்களிடையே பரப்புவதே நம் தலையாய குறிக்கோளாக இருக்கவேண்டும். பசி, பட்டினி எனும் போலியான அச்சுறுத்தல்களை முன்வைப்பவர்களைப் பொதுமக்கள் பகடி செய்து அவர்கள் நாணி ஓடி ஒளியச் செய்யும் நிலை வரவேண்டும்.

மக்களிடையே பிரிவினை உண்டாக்கிக் குழப்புதல்

மாந்த நலம் பேணுவோர், உணவு உற்பத்தி மற்றும் வழங்கல் துறைகளில் உள்ள பணியாளர்கள், சூழலியலாளர்கள், கானுயிர் காப்போர், குமுக மேம்பாட்டுக்காகப் பாடுபடுவோர் ஆகிய அனைவருமே வேதியியல் உயிர்க்கொல்லிகளை வெறுப்போரே. மேலும், இவர்களில் யாரும் இயல்பாக வேளாண் பெருநிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதுமில்லை. அந்தப் பெருநிறுவனங்கள் வெற்றிகரமாகப் பரப்பியுள்ள “உணவுப் பற்றாக்குறை” எனும் பொய் தான் மேற்கண்ட அனைத்துத் தரப்பினரையும் அச்சுறுத்தி நம் அனைவருக்கும் நலந்தரும் பின்வரும் தீர்வினை முடக்கி வைத்துள்ளது:

சிறு குறு உழவர்கள் வேதி நச்சுகளைப் பயன்படுத்தாமல் செய்யும் வேளாண்மையே அனைவருக்கும் நல்ல சத்தான உணவு தருவதற்குப் போதுமானது; அதனை மீட்டெடுத்துப் பரப்புவதே இப்போதைய அவசரத் தேவை.

பெருநிறுவனங்களின் பொய் எந்த அளவுக்கு வலிமை வாய்ந்ததாக உள்ளது என்பதை நினைக்கையில் வியப்பு மேலிடுகிறது:

சில தொண்டு நிறுவனங்கள் அந்தப் பெருநிறுவனங்களுடன் நெருக்கமான உறவு பேணுகின்றன.

வேறு சில தொண்டு நிறுவனங்கள் காடுகளை அழித்துச் செய்யப்படும் ஆலைமயமான வேளாண் விளைபொருள்களுக்கு “நிலைத்த வேளாண் விளைபொருள்கள்” என அடையாளம் வழங்குகின்றன. இவற்றைக் காட்டிலும் மோசமாக,

உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதாகச் சொல்லப்படும் ஆலைமயமான வேளாண் முறைதான் மண் வளம் குறைதல், நிலத்தடி நீர் அருகுதல், வளமிக்க மேல்மண் அரிப்பு, சூழல் மாற்றங்கள், வேதியியல் நச்சுகள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைதல் போன்ற கடும் இன்னல்களுக்கு முதன்மைக் காரணியாக உள்ளது என்பதை மறைப்பதற்கும் மேற்படி பொய்யே உதவுகிறது.

வேளாண்மையில் பெருநிறுவனங்களின் கட்டுப்பாடு என்பது நம் அனைவரின் உணவு உரிமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது, உணவு இறையாண்மையை ஒழிக்கிறது, சூழலைப் பெருமளவு மாசுபடுத்துகிறது, ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்துகிறது, நிலங்களைப் பறித்துக்கொண்டு சிறு குறு உழவர்களைச் சேரிகளுக்குத் தள்ளுகிறது.

இதற்கு நேரெதிராக, [சிறு குறு உழவர்களின்] குடும்பப் பண்ணைகள் சூழலைக் காக்கின்றன, நுகர்வோர் உடல்நலனைப் போற்றுகின்றன, நிலைத்த வேளாண்மைக்கு வழிசெய்கின்றன, பண்பாடு மற்றும் உயிரியல் பன்மயத்தைக் காக்கின்றன.

வேளாண்மை இயந்திரமயமாகாவிட்டால் உலகம் பசி, பட்டினி, பஞ்சங்களை எதிர்கொள்ளும் எனும் பெருநிறுவனங்களின் “பொய் பரப்புதல்” 1940-களிலேயே தொடங்கிவிட்டது. வேதியியல் மற்றும் [கன்னெய] எண்ணெய் நிறுவனங்களின் சார்பில் அமெரிக்காவின் ராக்கஃபெல்லர் அறக்கட்டளை மெக்சிக்கோ நாட்டில் இந்தத் திருப்பணியைத் தொடங்கிற்று. இதுவே காலப்போக்கில் “அசைக்கமுடியாத” உண்மையாக உலகெங்கும் பரப்பப்பட்டு. பசுமைப் புரட்சிக்கு நியாயம் கற்பித்தது. இப்போது அதே பொய்யானது, இரண்டாம் பசுமைப் புரட்சி என்றும் பசுமை மாறாப் புரட்சி என்றும் புது வடிவமெடுத்து அதிகாரிகள், அரசியல்வாணர்கள், பல வேளாண் ஆய்வாளர்கள், ஊடகத் துறையினர் ஆகியோரால் தொடர்ந்து உலகெங்கும் பரப்பப்படுகிறது.

சிறு குறு உழவர்களை அடித்தளமாகக் கொண்ட உயிர்ம வேளாண்மை உலகுக்குப் போதுமான உணவு தர வல்லது என்ற உண்மையை 2007-ஆம் ஆண்டு வெளியான உலகளாவிய ஆய்வு முடிவுகள் மீண்டும் பறைசாற்றின. ஆனால் அதற்கு இதுவரை மக்களிடையே போதுமான அறிமுகம் கிட்டவில்லை.

உணவு உற்பத்தி தொடர்பான உண்மையை மக்களிடையே பரப்ப விழைவோர் கீழ்க்காணும் இரண்டையும் செயல்படுத்தவேண்டும்.

1. உணவு உற்பத்தி மற்றும் வழங்கல் முறைமை குறித்த அனைத்து அடிப்படைத் தரவுகளையும் குறித்த புரிதலை அடையவேண்டும். இதற்கு மேற்கோள்கள் 1, 2 ஆகியன நன்கு உதவும்.

2. நம் பார்வையை மாற்றிக்கொள்ளவேண்டும். குறிப்பிட்ட சில உயிரினங்களை அழிவில் இருந்து காத்தல், அரசியல் துறையில் சில குறிப்பிட்ட வெற்றிகளை ஈட்டுதல் உள்ளிட்ட பருண்மையான குறிக்கோள்களை மட்டும் நாம் வைத்திருந்தால் போதாது. பொதுமக்களுடைய மன நிலையின் உட்கிடக்கையை உணரவேண்டும்.

“மக்கள் தொடர்புப்” பணிகளுக்கு (அதாவது, தமக்குச் சாதகமான கருத்துகளை மக்கள் மனங்களில் விதைப்பதற்கு) நிறுவனங்கள் பெருமளவு பணம் செலவழிக்கின்றன. மக்களுடைய உணர்வுகளும் நம்பிக்கைகளுமே அவர்களுடைய செயல்பாடுகளையும் நடத்தையையும் நெறிப்படுத்துகின்றன என்பது மக்கள் தொடர்புத் துறைகளின் அடிப்படைக் கோட்பாடு. எனவே அந்த உணர்வுகள், நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறித்து ஆய்ந்தறிவதும் அவற்றைத் தம் நலன்களுக்கேற்ப மாற்றுவதும் பெருநிறுவனங்களில் உள்ள மக்கள் தொடர்புத் துறைகளின் தலையாய பணிகள்.

“என்னுடைய இந்தச் செயல் நியாயமானதா?”, “இதை நான் செய்தால் எனக்கு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?” என்பது போன்ற வினாக்கள் ஒருவருடைய மனத்தில் எழுவதற்குக் காரணமாக இருப்பது மனிதருடைய தர்க்கத் திறன். அவர்கள் உணராத வகைகளில் மக்கள் தொடர்புத் துறைகள் இந்தத் திறனைத் தம் நிறுவனங்களின் நலனுக்கேற்ப மாற்றியமைப்பதன் மூலம் மக்கள் தமக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய செயல்களையும் செய்வதற்கு அவர்களை அணியப்படுத்தமுடியும்.

உணவு முறைமையைப் பொருத்தவரை, பெருநிறுவனங்களுடைய நலனுக்குச் சாதகமாக மக்களுடைய சிந்தனைகளையும் விருப்புவெறுப்புகளையும் திசை திருப்புவதற்குத் தேவையான வகையில் [நடப்பு நிலைமைக்கு மாறானதொரு] எதார்த்தத்தை உருவாக்கவேண்டும் என்பதைப் பெருநிறுவனங்களின் மக்கள் தொடர்புத் துறைகள் 1940-களிலேயே உணர்ந்தன. அதன் விளைவுதான் மெக்சிக்கோ நாட்டில் [புனையப்பட்ட] “பசிப்பிணி”யும் அதனால் பெரும் இன்னல்களைக் குமுகம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்கிற அச்சுறுத்தலும். அவற்றை உள்வாங்கிக் கொண்ட மக்களைப் பொருத்தவரை, பஞ்சத்தைப் போக்குவதற்குப் பெருநிறுவனங்கள் முன்வைத்த வாதங்கள் (ஆலைமயமான வேளாண்முறைமை) “இயல்பான, சிறந்த” தீர்வாகத் தெரிந்தன.

தமக்குச் சாதகமான “எதார்த்தங்களை” உருவாக்குவதோடு மக்கள் தொடர்புத் துறைகளின் வேலை முடிந்துவிடுவதில்லை. புதிய எதார்த்தங்களுக்குத் தாங்கள் முன்வைக்கும் தீர்வுகள் அறிவியல் அடிப்படை கொண்டவை, அவையே மக்கள் எதிர்கொண்டுள்ள புதிய இன்னல்களைப் போக்க வல்லவை என்கிற கருத்தியலை அரசுத் துறைகளிலும் மக்கள் நடுவிலும் பரப்பவேண்டும். மேலும், வெவ்வேறு வகைகளில் மக்களைப் பிரித்தாள்வதற்கான சூழ்ச்சிகளைச் செய்யவேண்டும்; அரசாங்கத்தையும் முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தையும் மக்கள் முழுமையாகச் சார்ந்திருக்கச் செய்யவேண்டும்; ஊடகத் துறையினர், அறிவியலறிஞர்கள் ஆகியோரில் தமக்கு விலைபோகக்கூடியவர்கள் அல்லது தம்மை நம்புபவர்களை நடுநிலையாளர்களாக மக்கள் முன் நிறுத்தவேண்டும்.

இவை போன்ற பல செயலுத்திகளைப் பெருநிறுவனங்கள் கையாண்டு தம் குறிக்கோள்களை எட்டுகின்றன. சுருங்கச் சொன்னால், தம்மிடம் உள்ள மாபெரும் ஆற்றல்களையும் தாம் திரட்டிவைத்துள்ள அறிவையும் கவனமாகப் பயன்படுத்துவதன் மூலம் பெருநிறுவனங்கள் தம் குறிக்கோள்களைச் சாதித்துக்கொள்கின்றன. பெருவாரியான மக்கள் உண்மை நிலைமையை உணராதவரை அந்நிறுவனங்களின் விருப்பப்படி மக்கள் நடக்கிறார்கள்.

ஆலைமயமான வேளாண் முறைமையின் தீமைகளைக் குறித்து விளக்கிச் சொல்வதற்குப் பல நல்ல தன்னார்வ அமைப்புகள் உள்ளன. ஆனால் அவற்றின் செயல்பாடுகள் சொல்லத்தக்க அளவு வெற்றி ஈட்டவில்லை. இது ஏன் என்பதை வேளாண் பெருநிறுவனங்கள் நன்கு உணர்ந்துள்ளன. மக்கள் நலனில் அக்கறையுள்ள நாம் தான் இன்னும் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை: பசி, பட்டினிக்குக் காரணம் உணவு இறையாண்மை மக்களிடம் இல்லாததுதானேயன்றி, உற்பத்திக் குறைவு காரணமேயன்று.

இதை நாமும் உணர்ந்து அனைத்துப் பொதுமக்களுக்கும் உணர்த்தாதவரை, 'பசுமைப் புரட்சி உள்ளிட்ட ஆலைமயமான வேதிவேளாண் முறைமையை முழுமையாகப் பின்பற்றினால்தான் பசி, பட்டினி, பஞ்சம் ஆகியவற்றை ஒழிக்க இயலும்' என்று பெருநிறுவனங்கள் பரப்பியுள்ள பொய் நம் மீது தொடர்ந்து ஆட்சி செலுத்தும்.

எனவே, உணவு உற்பத்தி, வழங்கல், பெருநிறுவனங்களுக்கு ஏதுவான அரசியற் பொருளாதாரம், சூழல் மாசுபாடு, மக்கள் தொகை, பசி, பட்டினி ஆகியவை குறித்த உண்மைகளை மக்கள் உணரச் செய்வது தான் நம் தலையாய பணியாக இருக்கவேண்டும். அதில் நாம் வெற்றியடையும் போது பசி, பட்டினி, பஞ்சம் ஆகியன மட்டுமன்றி, நீர்ப் பற்றாக்குறை, மண் வளம் குன்றுதல், வேளாண்மையால் நேரும் சூழல் மாசு உள்ளிட்ட வேறு பல இன்னல்களும் மறையும்.

பெருநிறுவனங்களுடனான நம்முடைய இந்தப் போரில் எந்தப் பக்கம் வெற்றியடையும் என்பது தான் மனித குலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்!

அயல்மொழிப் பெயர்ச்சொற்கள்


1.“மக்கள் தொடர்புப்” பணி “public relations”
2.அமெரிக்க ஒன்றிய மாநிலங்கள் the united states of america
3.அமெரிக்க சோயாமொச்சைச் சங்கம் the american soybean association
4.அமெரிக்க வேளாண் செயலகம் the US farm bureau
5.ஆலைமயமான வேதி வேளாண்மை industrialized, chemical farming
6.உணவு இறையாண்மை food soverignty
7.உயிர்ம வேளாண்மை organic agriculture
8.உலக வைப்பகக் கழகம் the world bank institute
9.ஐயோவா iowa
10.ஒன்றிய அரசியத்தில் செயல்படும் தேசிய உழவர் ஒன்றியம் the UK national farmers union
11.ஒன்றிய நாடுகளவையின் உலக உணவுத் திட்டம் the UN world food program
12.கலிஃபோர்னியா california
13.கன்னெயம் petroleum
14.கார்கில் cargill
15.க்ராப் -லைஃப் நாட்டிடை அமைப்பு croplife international
16.சி.சீ.ஐ.ஏ.ஆர் எனும் பன்னாட்டு வேளாண் ஆராய்ச்சி நிறுவனக் கூட்டுக் குழு CGIAR (the consultative group on international agricultural research)
17.சின்ஞென்ட்டா syngenta
18.நாட்டிடை ஆராய்ச்சி நிறுவனங்கள் international research organizations/institutions
19.நாட்டிடை மேம்பாட்டுக்கான அமெரிக்கக் குழுமம் the US agency for international development
20.பசுங்குடில் வளி greenhouse gases (GHG)
21.பில்-மெலின்டா கேட்சு அறக்கட்டளை the bill and melinda gates foundation
22.பேயெர் bayer
23.ப்ரிட்டன் britain
24.மரபீனி மாற்றப்பெற்ற பயிர்கள் genetically modified crops
25.மான்சான்ட்டோ monsantp
26.ராக்கஃபெல்லர் அறக்கட்டளை the rockefeller foundation

நன்றி: Jonathan Latham, “How the Great Food War Will Be Won”, Independent Science News, 14 January 2015, http://truth-out.org/news/item/28540-how-the-great-food-war-will-be-won, http://www.independentsciencenews.org/environment/how-the-great-food-war-will-be-won/ மேற்கோள்கள்: 1. Colin Tudge, “Good Food for Everyone Forever”, http://www.colintudge.com/ 2. J. Collins, et al., “World Hunger: Twelve Myths”, http://smallplanet.org/books/world-hunger-twelve-myths

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org