தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நாகையில் நம்மாழ்வாரின் நினைவேந்தல் - ஜெயக்குமார்


டெல்டா மாவட்ட வேளாண்மையை பாதுகாப்பதற்காக போராட்ட களத்தில் இன்னுயிர் நீர்த்த ஐயா. நம்மாழ்வாரின் நினைவேந்தல் மற்றும் இயற்கை உழவர்களின் ஒருங்கிணைப்பு மாநாடு, தமிழக இயற்கை உழவர் இயக்கத்தின் தலைவர் , திரு. அ. அம்பலவாணன் அவர்களின் தலைமையில், சென்ற மாதம் டிசம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள எலந்தங்குடி கிராமத்தில் நடை பெற்றது. இம்மாநாட்டை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்ததன் பெருமை திரு. அல்லீஸ் பாக், திரு. கிரியேட் ஜெயராமன் ஆகியோரையே சேரும்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரையாற்றிய முனைவர் சுல்தான் இஸ்மாயில், ரெங்கநாதன், பாம‌யன், ஆர். ஜெயச்சந்திரன், நக்கீரன் போன்றவர்கள் விவசாயிகளுக்கு எளிதாய்ப் புரிகின்ற வகையில் பல கருத்துகளை மாநாட்டில் மேடையில் கூறினார்கள். சுல்தான் இஸ்மாயில் அவர்கள் மண்ணின் தன்மை,வயது,வாசனை போன்றவற்றையும் நுண்ணுயிர்களின் பெருக்கத்தைப்பற்றியும், அதன் பயன்களையும் பற்றியும் மிகத்தெளிவாக விளக்கினார்.

மண்ணின் வயதைப்பற்றி கூறும் போது பாறைகளுக்கு மட்டும் தான் வயது உண்டு எனவும், பாறையிலிருந்துதான் மண்வகைகள் உருவாவதாகவும், அந்த பாறை அமிலப்பாறை (acid rock) என்றால் அதிலிருந்து வரும் மண் அமிலத் தன்மை கொண்டதாகவும், (acidic soil), காரப் பாறை (alkaline rock) என்றால் அதிலிருந்து காரத்தன்மை (alkaline soil) உருவாகிறது எனக் கூறினார்.

அமில நிலங்களில் காரத்தன்மை கொண்ட பயிர்களும், கார மண்களில் அமிலத்தன்மை கொண்ட பயிர்கள் நன்றாக வளரும் எனவும், மண் வகையை அறியாமல் விவசாயிகள் அவரவர் விரும்பிய பயிர்களை வளர்க்கும் போதுதான் அதற்கு ஏற்ற நுண்ணூட்டம் மற்றும், உரம் தேவைப்படுகின்றது, எனவே மண்ணின் வகையை முதலில் அறியவேண்டும் என்றார். மண்ணில் இரசாயன‌ உரத்தைக் கொட்டும் போது மண்ணின் தன்மை மாறி மிகவும் கடினமாகும். அதனால் தண்ணீரின் தேவை அதிகமாகிறது. “உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான்” எனவும், மண்ணின் செரிமானத்தன்மை (அ) மட்கு தன்மை நன்றாக இருக்க வேண்டும், மட்கக்கூடியப் பொருள் இலைகள், வைக்கோல் போன்றவைகளை மண்ணில் போட்டால் எவ்வளவு சீக்கரம் மட்குப் பொருளாக மாறுகிறதோ அந்த அளவு மண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கமும் அதிகமாக இருக்கும். மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் உணவிற்கு மண்ணின் மேல் அடுக்குகளில் விரைவாக மக்கக்கூடிய பொருள்களை அவ்வப்போது கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். [ பசுந்தாள் உரச்செடிகள் (தக்கைபூண்டு, சணப்பு, சீமைஅகத்தி,கொளிஞ்சி) - பசுந்தழை உரம் (மரக்கிளைகளில் உள்ள தழைகளை வெட்டிப்போடுதல், வேம்பு, கிளிரிசிடியா, போன்றவை) - மக்கிய மாட்டுச் சாணம் போன்றவை]

விவசாயிகள் மண்ணில் போடும் எந்த இடுபொருளும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கே தவிர பயிர்களுக்கு இல்லை எனவும் தெளிவாகக் கூறினார். மண்ணிற்கு வாசனையைத் தருவது மண்ணில் உள்ள ஒரு வகை நுண்ணுயிர்தான் (Actinomycetes) என்றார். மண்ணின் வளத்தைவிட மண்ணின் 'நலம்' நன்றாக இருக்கவேண்டும். மண்ணில் வளரும் எந்தப் பயிரும் மொத்த எடையில் மூன்று சதவிகிதம் (3%) தான் மண்ணிலிருந்து எடுத்துக்கொள்கிறது எனத் தெளிவாக கூறினார்.

பாமயன் சங்க இலக்கியங்களில் ஆரம்பித்து இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் அறுபது ஆண்டுக்கு முன் இருந்த வாழ்க்கை முறையும், 18 மற்றும் 19 ம் நூற்றாண்டின் விவசாய முறைகளையும் எடுத்துரைத்தார்.50 ஆண்டுகளுக்கு முன் நெல் (அரிசி) வசதியுள்ளவர்களின் உணவாகவும், சிறுதானியங்கள் உழவர்களின் உணவாகவும் இருந்தது. இன்று அரிசியின் விலையைவிடச் சிறு தானியங்களின் விலை அதிகமாயிற்று. காரணம் நோய்கள் அதிகமாக வருவதுதான். அதுமட்டுமல்லாது கால்நடைகளின் பெருமைகளையும் மிகத்தெளிவாக கூறினார். பாரம்பரிய மாடுகள் தான் மண்ணின் நுண்ணுயிர் பெருகக் காரணம். உயர்ரக மாடுகளின் சாணிகளில் நுண்ணுயிர் மிகவும் குறைவே. அதுமட்டுமல்லாது நாட்டு மாடுகளில் நோய்த் தாக்குதல் இருப்பதில்லை. ஜாதி மாடுகளில் நோய்கள் தாக்குவதால் அதிக அளவு தடுப்பூசி மற்றும் உயிரிக்கெதிரிகள் (antibiotic) பயன்படுத்தப் படுவதால் மாட்டின் குடல்களில் இருக்கும் நுண்ணுயிர்கள் இறந்துவிடுவதாகவும் கூறினார். ஜல்லிக்கட்டு பற்றிக் கூறும் போது அந்தக் காலங்களில் நாட்டு மாடுகளில் நல்ல வீரியமுள்ள காளைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக தான் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டை முன்னோர்கள் தோற்றுவித்தார்கள் என்றார்.

மதுராந்தகத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் உயிராற்றல் வேளாண்மையைப் (biodynamic farming) பற்றி விளக்கினார். விவசாயிகள் அனைவரும் நேரம், காலங்களைப் பார்த்துப் பயிர் செய்வது நல்லது எனவும் பஞ்சாங்கத்தின் பயன்களைப்பற்றியும் விளக்கினார். விதைகளை விதைப்பதற்கு வளர்பிறை உகந்தாகவும் மேல்நோக்கு நாட்களில் மண்ணிற்கு மேல் வளரும் பயிர்களையும், கீழ் நோக்கு நாட்களில் மண்ணிற்கு கீழ் விளையும் பயிர்களையும் பயிர் செய்யலாம் எனவும் கூறினார். பூச்சிகளைக்கட்டுப்படுத்த பூச்சி விரட்டி அடிக்கும் போது அமாவாசைக்குப் பிறகு மூன்று நாள் கழித்தும் பெளர்ணமிக்கு மூன்று தினங்கள் முன்பாகவும் தெளிக்க வேண்டும் என்றார்.

மாட்டுக்கொம்பு உரத்தைப் பற்றி (cowhorn manure) விரிவாக கூறினார்: “நாட்டுப் பசுமாட்டின் கொம்புகளைச் சேகரித்து அதில் பசுங்சாணியை அடைக்க வேண்டும். அதை ஒரு அடி பூமியில் குழி எடுத்துப் புதைத்து விடவும். புதைத்த பின் காற்றுபுகக்கூடாது. ஆறு மாதம் கழித்து அதை எடுத்துப்பார்த்தால் காப்பித்தூள் போன்று இருக்கும். கொம்பை பூமியில் புதைக்கும் போது அடிப்பகுதி அடியிலும் மேல் பகுதி மேல்நோக்கியும் இருக்கவேண்டும். ஆறு மாதங்களில் வரும் கொம்பு உரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், சூரியனுக்கும் அதற்க்கும் தொடர்பு உண்டு எனவும் கூறினார். கொம்பு உரம் ஏக்கருக்கு 60 கிராம் போதுமானது என்றார். விவசாயிகளுக்கு மிகவும் வியப்பாக‌ இருந்தது. ஒரு ஏக்கர் நிலத்திற்கு 30 - 60 கிராம் பயன்படுத்தலாம் என்றார். இந்த உரத்தை 15 லிட்டர் சுத்தமான தண்ணீரில் கலந்து 1 மணி நேரம் இடது மற்றும் வலது புறமாக சுற்ற வேண்டும். கீழ்நோக்கு நாளில் மாலை வேளைகளில் பயிர் செய்வதற்கு முன்பாக நிலத்தில் தெளிக்கவேண்டும்.இப்படி தெளிக்கும் போது நிலத்தில் ஈரப்பதமும், கம்போஸ்ட்டும் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்”

வந்திருந்த எல்லோருக்கும் சுவையான‌ சிறுதானிய உணவுகள் பரிமாறப்பட்டன. விழா முழுவதும் அல்லீஸ் பாக் அவர்களின் ஒருங்கிணைந்த பண்ணையிலேயே நடை பெற்றது மிகச் சிறப்பான ஒரு நிகழ்வு.

தொடர்பிற்கு: ஜெயக்குமார் - 9962009302

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org