தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


இம்மாத நாயகர் வரிசையில் நாம் சந்திக்கவிருக்கும் சுஜாதா மகேஷ் தம்பதியரிடம், அவரது பண்ணைக்கு செல்லும் வழியை அறிந்து கொண்டோம். சென்னையின் தற்போதைய நிலையை எண்ணியவாறே, சற்றே கனத்த மனதுடன், சென்னை தாம்பரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் புகைவண்டியில் பயணப் பட்டோம்.

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் உள்ள கண்டமங்கலம் ஊராட்சியில் உள்ள சின்ன பாபு சமுத்திரம் என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார்கள் சுஜாதா, மகேஷ் தம்பதியர்கள். இருவரும் சென்னைப் பெருநகரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இருவரது பெற்றோர்களுக்கும் வேளாண்மையோ, கிராமத்து வாழ்க்கையோ அறிமுகமற்றவை.

மகேஷ் பள்ளி பருவ‌முதலே ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தவர். அவர் சென்னையில் கல்லூரியல் கணிதவியல் பயிலும் போது விளையாட்டில் மேலும் கவனம் செலுத்தி தமிழ்நாட்டு அளவில் தன்னை உயர்த்திக் கொள்ளலாமா அல்லது மேற்படிப்புப் பாதையைத் தொடரலாமா என்ற கேள்வி எழுந்தது. முடிவில் அவர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் மென்பொருளியலில் மேற்படிப்பு படித்து இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமொன்றில் பணியில் அமர்ந்தார். சில வருடங்களில் நிறுவனத்தில் தொழில் முறையில் பதவி உயர்வு, பொருளாதார வளர்ச்சி, வெளி நாடு செல்லும் வாய்ப்பு போன்ற வெளிநோக்கு விடயங்களில் முன்னேறினார். இவ்வாறான புற உயர்வுகள் அவருக்கு பெரிய மன நிறைவைத் தரவில்லை. மாறாக மென்பொருள் பணியின் அழுத்தமும், அப்பொய்யான வேகமும் அவரை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டின.

சுஜாதா எல்லா நகரத்து மத்திய தர குழந்தைகளைப் போல ஆங்கிலப் பள்ளிகளில் பயின்று, கல்லூரியில் பொறியியல் பட்டப் படிப்பு படித்தார். அப்பாதையின் வழக்கமான தொடர்ச்சியாக, மகேஷ் பணியாற்றிக் கொண்டிருந்த அதே மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். அவரது மனமும் வெகு விரைவிலேயே ஒரு தேடல் நிலைக்கு வந்தது. அவருக்கும் இந்த அர்த்தமற்ற வேகம், நொடியில் மாறும் நாகரீகங்கள், நல்ல சிந்தனைகளை ஊக்குவிக்காத இயந்திர வாழ்க்கை யாவும் ஒரு வெறுமையையே அளித்தன.

இவ்வாறு சித்தமொத்த இருவரும் பணி நிமித்தம் சந்தித்த போது ஏற்பட்ட கருத்துப் பரிமாற்றத்தில் நல்ல நண்பர்களாயினர். பின் பெற்றோர்கள் ஆசியுடன் திருமணம் புரிந்து கொள்ள முடிவு செய்தனர். அச்சமயம், அனைவரும் வியக்கும் வண்ணம் இருவரும் தம் நிறுவனத்திலிருந்து விலகினர். பணியை உதறி விட்டு திருமணத்திற்கு பிறகு நான்கு மாதங்கள் இந்தியாவெங்கும் சுற்றுப் பயணம் செய்தனர்.

சுஜாதா அதைப்பற்றி பேசுகையில், “அந்த நான்கு மாதங்களும் நாங்கள் இலக்குகளோ நேரக்கட்டுப்பாடோ இல்லாமல், குறைந்த விலையுள்ள சாலையோர உணவகங்களில் உண்டு, அதிக வசதிகள்ளற்ற விடுதிகளில் தங்கி, புகை வண்டி அல்லது பேருந்துகளில் முன் பதிவு ஏதுமின்றி, பொருளாதாரத்தில் தாழ்ந்த மக்களுடன் பழகி வாழ்ந்தோம். அந்த காலம், எங்களுக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்தது.” என்று கூறினார்.

அதன் பின் இருவரும் சென்னை திரும்பி சில மாதங்கள், புதுச்சேரியை அடுத்துள்ள ஆரோவில் அமைப்பில் உள்ள பெர்னார்டு என்னும் இயற்கை மற்று சுற்று சூழல் விஞ்ஞானியிடம் தன்னார்வ பணியில் ஈடு பட்டனர். பிறகு 'சாதனா வனம (Sadhana Forest)' என்னும் மரம், வனம் உருவாக்கும் ஓர் அமைப்பில் எட்டு மாதங்கள் மரம் வளர்க்கும் பணியில் தன்னார்வப் பணியாளர்களாக வாழ்ந்தனர்.

மகேஷ், மிக எளிமையாக‌ கூறுகிறார் :

” நாங்கள் கிராமத்துக்கு நகர்ந்து இயற்கை விவசாயம் செய்ய வேண்டும், சுற்று சூழலை பாதிக்காமல் வாழ வேண்டும் என்று தொடக்கத்தில் எண்ணவில்லை. எது செய்யக் கூடாது என்பது பற்றி தெளிவாக இருந்தோம். நகரத்தில் பகட்டு மிகுந்த வாழ்க்கையை ஒதுக்குவதில் உறுதியாய் இருந்தோம் - அவ்வளவே. எனக்கு தனியாக பல எண்ணங்கள் இருந்தன. ஒரு வன விலங்கு சரணாலயத்தில் சாரணராக / வழிகாட்டியாக‌ அல்லது ஒரு விளையாட்டுப் பயிற்சியாளனாக ஆகும் எண்ணத்தையும் பரீசிலித்தேன். என்னுடைய வெவ்வேறுவிதமான பணி விருப்பங்களில் அடிப்படையாக ஒரு ஒற்றுமை துலங்கியது. யாவும் அலுவலகச்சிறைக்கு அப்பாற்பட்டவை, உடலுழைப்பு தொடர்பானவை. சுஜாதா அவர்களும் அவ்வாறே எண்ணினர். ஆரோவில்லில் சுமார் ஒரு வருட காலம் பெர்னார்ட், அவிராம் (சாதனா வனம் நிறுவனர், இயக்குனர்) ஆகியோருடன் வசித்த காலத்தில் எங்கள் வழி இயற்கை வேளான்மையே என்று கண்டு கொண்டோம்.” அதன் பின் கணவன் மனைவி இருவரும், தமிழ்நாடெங்கும் இயற்கை விவ்சாய வட்டத்தில் உள்ள பல நண்பர்களைச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கை முறை, அவ்வட்டாரத்தின் பயிர்கள் ஆகியவற்றைப் பற்றி அடிப்படை அறிவைப் பெற்றார்கள். அதனூடே, சுமார் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலம் தேடும் படலுமும் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அச்சமயத்தில், புதுச்சேரியில் வசிக்கும் அவர்களது நண்பர் முரளி தனக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஆறு ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அவருடைய மற்ற அலுவல்களால் அவரால் அவ்விடத்தில் ஏதும் விவசாயம் செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார். நம் நாயகர் தம்பதிள் அவரிடம் இருந்து மூன்று ஏக்கர் நிலத்தை வாங்கி தம் இயற்கை வேளாண்மைத் தேடலைத் துவங்கினார்கள்.

சுஜாதா, நண்பர் முரளியின் ஆதரவையும் அவர் அளித்த ஊக்கத்தையும் நன்றியுடன் நினைவு கூர்கிறார். “முரளி யாரும் வழக்கமாய் செய்யாத ஒரு சிறப்பான கொடையைச் செய்தார். அவருடைய நிலத்தில் நல்ல வளமான, கிணறு வசதி உள்ள பாகத்தை எங்களுக்கு கொடுத்தார். அந்த நல்ல மனம் எங்களை கூடுதல் பொறுப்புக்கு உள்ளாக்கியது. மேற்கொண்ட வாழ்க்கைப்பாதையில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்ற உறுதியைக் கொடுத்தது.”

கடந்த மூன்று நான்கு வருடங்களாக இவர்களது கிராமத்து வேளாண்மை / தற்சார்பு வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் பல் பயிர் வேளாண்மை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். பற்பல பாரம்பரிய நெல் வகைகளை தேடிக் கொணர்ந்து விளைவிக்கிறார்கள். தமக்கு தேவையான சிறுதானிய‌ங்களை அவர்களே பயிரிட்டுக் கொள்கிறார்கள். சிறு காய்கறித் தோட்டம் ஒன்று அமைத்திருக்கிறார்கள். குறைந்த அளவு எள், நிலக்கடலை போன்ற எண்ணெய் விதைகளையும் சாகுபடி செய்கிறார்கள். அவர்களது பண்ணையில் இருக்கும் மூன்று தென்னை மரங்களில் இருந்து தேங்காயை உலர வைத்து கொப்பரை எடுக்கிறார்கள். இவற்றையெல்லாம் அருகில் உள்ள செக்கில் எண்ணெயாக்கிக் கொள்கிறார்கள். தம் தேவைக்கு அதிகமானவற்றை சென்னையில் வசிக்கும் தம் பெற்றோர், நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அரிசியை (அதிகமாக பயிரிட‌ப்படுவதால்) சென்னையில் உள்ள சில இயற்கை அங்காடிகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.

நகர வாழ்க்கைக்கே பழகிய உங்கள் பெற்றோர்கள் இந்த ஏற்பாட்டைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று வின‌வினோம். பெரும்பாலும் மக்கள் நகரத்தில் குளிர் பதனம் செய்யப்பட்ட, காட்சிக்கு அழகாகத் தோன்றும், பெரும் நிறுவனங்களில் தம் குழந்தைகள் பணி செய்வதே பெருமையாய் எண்ணுகிறார்கள். அதுவே சிறந்த நிலையாக வெவ்வேறு ஊடங்கள் வழியாய் நமக்குத் திணிக்கப் படுகிறது. இது போன்ற உண்மையைத் தேடும், தற்சார்பை நாடும் இளைஞர்களுக்கு உரிய மதிப்போ சிறு அங்கீகாரமோ கிடைப்பதில்லையல்லவா.

சுஜாதா பதிலளித்தார். “உங்களுடைய ஐயம் வழக்கமானதே. ஆனால், எங்கள் இருவரது பெற்றோர்களும் மிகவும் பாராட்டுகிறார்கள். அவர்களால் இங்கு எங்களுடன் வசிக்க முடியவில்லை என்பதைத் தவிர, அவர்கள் எங்கள் முடிவுக்கு முழு ஆதரவு தான். இங்கு இடையிடயே வந்து தங்கி தங்களால் உடலுக்கியன்ற வரை வேளாண் வேலைகளில் உதவி செய்வார்கள். முக்கியமாக நடவுக் காலங்களில் இங்கு வருவதை மிகவும் விரும்புவார்கள். அந்த வகையில், அவர்களின் மனமார்ந்த‌ ஒப்புதலும் எங்களுக்கு ஒரு பக்கத்துணையே. நாங்கள் எடுத்த முடிவுகள் சுயநலமானவையே. நாங்கள் நலம் எது என்பதில் தெளிவாக இருப்பதால் எங்கள் சுயநலம் யாருக்கும் கெடுதல் செய்வதில்லை அவ்வளவே!”

சுஜாதா மகேஷ் இருவரும் அண்டை வெட்டுவது, நாற்றடிப்பது, களையெடுப்பது, அறுப்பது, தூற்றுவது என்று எல்லா வேலைகளையும் ஆட்களுடன் இணைந்து செய்கிறார்கள். இவர்களின் ஆர்வத்தைக் காணும்போது இது வெறும் நாசுக்கான தேடல் அல்ல என்பது புலப்படுகிறது.

தா: இங்குள்ள மக்கள் உங்களோடு எவ்வாறு பழகுகிறார்கள்? நீங்கள் இன்னும் சென்னை வாசிகளாகவே கருதப் படுகிறீர்களா?

ம: ஆரம்பத்தில் நாங்கள் அவ்வளவாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. ஏதோ செல்வம் படைத்தவர்கள், ஒரு பொழுதுபோக்கிற்காக இங்கு வந்து வசிக்கிறோம் என்று எண்ணினர். சில துடுக்குக் காரர்கள், நாங்கள் விளைவித்த பயிரிலேயே கூட தம் கால்நடைகளை மேய விட்டனர். நாளடைவில் எங்கள் இலக்கு இதுதான் எனப் புரிந்த பின்னர், ஒரு வித இடையூறும் இல்லை.இன்னும் சொல்லப் போனால், சுஜாதா அவர்கள் இங்குள்ள மூதாட்டிகளுக்கு ஒரு செல்லப் பெண்ணாகவே ஆகி விட்டார். அவர் தொடக்கத்தில் ஒற்றை நாற்றங்கால் முறையில் தான் நாற்று நட வேண்டும் என்று சொன்ன போது, அவர்கள் எல்லோரும் சிரித்து விட்டார்கள். ஆனால் சுஜாதாவின் உறுதி அப்பெண்மணிகளை மாற்றி விட்டது. இப்போது அவர்கள் மற்ற இடங்களில் நாற்று நடவுக்கு செல்லும் பொது, ஒற்றை நாற்றங்கால் முறையின் சிறப்புகளைப் பற்றி பேசுகிறார்கள். மொத்தத்தில் இக்கிராம மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டோம்.

நம் நாயகர் தம்பதிகளுடன் பல மணித்துளிகள் பேசிக் கொண்டிருந்தோம். அவர்களின் உலகம் மகிழ்ச்சி நிறைந்து காணப்படுகிறது. குறைகளை பொருட்படுத்தாத, இயல்பான அன்புடன் இருக்கிறார்கள். நாம் முதல் முறை சந்தித்த போதும், நீண்ட நாட்கள் பழகிய நண்பர்களைச் சந்திப்பது போல் ஒரு நேசம் தோன்றுகிறது. சென்னையில் இருந்து புறப்பட்ட போது இருந்த மன இறுக்கம் அறவே இல்லை. இயற்கையோடு வாழும் இவ்வாழ்வில் ஒரு புது நம்பிக்கையுடன் மீண்டும் சென்னைக்கு பயணப் படுகிறோம்.

தொடர்பிற்கு: செம்மல் - 9994447252; மகேஷ் - 9962065464

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org